26. இசை என்னும் கண்ணால் இதயம் தொட்ட ரவீந்த்ர ஜெய்ன்!

உடலில் ஏதேனும் குறைபாடு இருந்தால், ஒரு இசையமைப்பாளரை அது பாதிக்குமா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், பீத்தோவன் பற்றி அனைவருக்குமே தெரியும்.
26. இசை என்னும் கண்ணால் இதயம் தொட்ட ரவீந்த்ர ஜெய்ன்!

உடலில் ஏதேனும் குறைபாடு இருந்தால், ஒரு இசையமைப்பாளரை அது பாதிக்குமா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், பீத்தோவன் பற்றி அனைவருக்குமே தெரியும். இருபத்து ஆறு வயதில் இருந்தே சிறுகச்சிறுக அவரது கேட்கும் திறன் அவரை விட்டுப் போய்விட்டது. அவரது சிறந்த சிம்ஃபனிகளை (உதாரணம்-Ninth Symphony), காது அறவே கேட்கும் திறன் இழந்தபின்னர்தான் அவர் உருவாக்கினார். அவரைப்போலவே, புகழ்பெற்ற பாடகரான ரே சார்லஸ், ஏழு வயதில் இருந்தே பார்வையற்றவர். ஆனாலும் பல இசைக்கருவிகளைக் கற்றுக்கொண்டு, உலகம் முழுக்கப் பேசப்பட்ட இசைக்கலைஞராக மாறினார். அவரைப்பற்றிய திரைப்படமே உண்டு. இவர்கள் இருவரைப்போல், இன்னும் பலர் - ஜாங்கோ ரெய்ன்ஹார்ட், ஸ்டீவீ வொண்டர், ஹாங்க் வில்லியம்ஸ், ரிக் ஆலன் என்று ஒரு மிகப்பெரிய பட்டியலே உண்டு.

கண்பார்வையற்ற குழந்தையாக, 1944 ஃபிப்ரவரி 28ம் தேதி இந்த்ரமணி ஜெய்ன் மற்றும் கிரண் ஜெய்ன் ஆகிய தம்பதிகளுக்கு அலிகரில் பிறந்தவர் ரவீந்த்ர ஜெய்ன். சிறிய வயதில் இருந்தே இசையில் ஆர்வம் கொண்ட குழந்தை. இதனைக் கண்டபின்னர், ரவீந்த்ர ஜெய்னின் தந்தை, பண்டிட் ஜனார்த்தன் ஷர்மா, பண்டிட் நாதுராம் மற்றும் பண்டிட் ஜி.எல்.ஜெய்ன் ஆகியோரிடம் இசைப்பயிற்சிக்கு அனுப்ப, இசையையும் நன்கு கற்றுத் தேர்ந்தான் அந்தச் சிறுவன். அலிகரிலேயே, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் பார்வையற்றோர் பள்ளியில் படித்தான் சிறுவன் ரவீந்த்ர ஜெய்ன். படித்துமுடித்த பின்னர், இசையையும் நன்கு கற்றுக்கொண்டபின்னர், அப்போதைய பம்பாய்க்கு வந்து, சிறிய குழுக்களில் பாட ஆரம்பித்தார். இதனால் அவருக்கு சிறுகச்சிறுகப் புகழ் கிடைக்க, அந்தப் புகழால் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது. நௌஷாத் போன்ற ஜாம்பவான்களுக்கு இசையில் உதவி செய்ய வாய்ப்புகள் வந்தன. ஆனால் ரவீந்த்ர ஜெய்ன் எவற்றையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இவற்றுக்குப் பதில், சொந்தமாகவே இசையமைக்கவேண்டும் என்ற உறுதியான எண்ணம் அவருக்கு இருந்தது.

ரவீந்த்ர ஜெய்னின் முதல் திரைப்படம் - ‘காஞ்ச் ஔர் ஹீரா’. இந்தப் படத்தில் முஹம்மது ரஃபி பாடிய ‘நஸர் ஆதீ நஹி மன்ஸில்’ என்பது இன்றும் பிரபலம். ஆனால் இதற்கு முன்னரே வேறொரு படத்தில் முஹம்மது ரஃபியை வைத்து இசையமைத்திருந்தாலும் (அந்தப் பாடல் இன்றுவரை வெளிவரவில்லை), இதுதான் அவரது முதல் படமாக அமைந்தது. இந்தப் படத்துக்குப் பின்னர், ‘சோர் மசாயே ஷோர்’ என்ற படம் 1974ல் வெளியானது. அந்தப் படத்தில் ‘லே ஜாயேங்கே ஜே ஜாயேங்கே தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ என்ற பாடல் சூப்பர்ஹிட் ஆனது (அதை வைத்து ஷா ருக் கான் நடித்த பிரபல DDLJ படத்துக்கும் அதே பெயர் வைக்கப்பட்டது). அதேபோல் ‘குங்ரூ கி தரா பஜ்தா ஹி ரஹா ஹூ மெய்ன்’ என்ற பாடல் இன்றும் கிஷோர் குமாருக்கு மறக்க இயலாத பாடலாக விளங்குகிறது. சசி கபூரும் மும்தாஜும் நடித்த இந்தப் படம் இன்றுவரை தொடர்ந்து பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியும் கொண்டிருக்கிறது. இதுதான் ரவீந்த்ர ஜெய்னின் முதல் சூப்பர்ஹிட் படம்.

இந்தப் படத்த்துக்கு முன்னரே, 1973ல் ‘சௌதாகர்’ என்ற திரைப்படத்துக்கு இசையமைத்துக்கொண்டிருந்தபோது ரவீந்த்ர ஜெய்னின் வாழ்க்கையில் ஒரு சோகம் நிகழ்ந்தது. அவரது இசைத்திறமையைக் கண்டுகொண்டு அவருக்கு இசையைப் பயிற்றுவித்த அவரது தந்தை மறைந்துவிட்டார். ஆனால், அந்தப் படத்தில் ‘தேரா மேரா சாத் ரஹே’ என்ற பாடலைப் பதிவுசெய்துகொண்டிருந்தபோது இந்தத் தகவல் தெரியவர, முழுப் பாடலின் ஒலிப்பதிவையும் முடித்துவிட்டுத்தான் ஸ்டுடியோவை விட்டே வெளியே வந்தார் ரவீந்த்ர ஜெய்ன். அதுதான் அவரது அர்ப்பணிப்பு. இசையின்மீது மிகுந்த மரியாதையும் பிரியமும் வைத்திருந்தவர் அவர்.

'சோர் மசாயே ஷோர்' படத்தைத் தொடர்ந்து, ‘கீத் காதா சல்’ (1975) என்ற படமும் ரவீந்த்ர ஜெய்னின் பெயரை உரக்கச்சொல்லிய படமாக அமைந்தது. அந்தப் படத்தில் சச்சின் தான் ஹீரோ. அப்போதைய காலகட்டத்தில் மிகப் பிரபலமாக விளங்கிய இளம் ஹீரோ அவர். இந்தப் படத்தைத் தயாரித்த ராஜ்ஷ்ரீ தயாரிப்பு நிறுவனம், அதைத்தொடர்ந்து அவர்களின் பல படங்களுக்கு ரவீந்த்ர ஜெய்னையே இசையமைக்க வைத்தது. அப்படங்கள் மிகவும் பிரபலமும் அடைந்தன.

கீத் காதா சல் படத்துக்குப் பிறகுதான் ரவீந்த்ர ஜெய்னின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க சம்பவம் நிகழ்ந்தது. தென்னிந்தியாவில் பாடிக்கொண்டிருந்த கே.ஜே. ஏசுதாஸ் என்ற பாடகரைக் கண்டுகொண்டு, அவரை ஹிந்திக்கு அழைத்துவந்தார் ரவீந்த்ர ஜெய்ன். இது ஒரு சாதாரணமான சம்பவமாகத் தோன்றலாம். ஆனால் அவருக்கும் யேசுதாஸுக்கும் இடையே உருவான உறவு என்பது இசை ரசிகர்களுக்குப் பல பொக்கிஷங்களை வழங்கியிருக்கிறது. போலவே, ரவீந்த்ர ஜெய்னுமே, ‘எனக்குப் பார்வை வரவேண்டும் என்று நான் விரும்புவதே, யேசுதாஸை ஒருமுறையேனும் பார்த்துவிடவேண்டும் என்பதற்காகத்தான்’ என்று சொல்லும் அளவு, யேசுதாஸின் மீது அளவு கடந்த பிரியம் வைத்திருந்தார். அதற்கேற்றவாறு, யேசுதாஸும் அற்புதமான பல பாடல்களை ரவீந்த்ர ஜெய்னின் இசையில் பாடினார். ‘சித் சோர்’ படம் வெளியானது 1975. அந்தப் படத்தில், ‘கோரி தேரா காவ் படா ப்யாரா’ பாடலை யேசுதாஸ் பாட, இந்தியாவே யேசுதாஸை அரவணைத்துக்கொண்டது. யேசுதாஸுக்கு ஹிந்திப்பாடலுக்கான தேசிய விருது அந்தப் பாடலுக்குக் கிடைத்தது. அப்படத்தை இயக்கியவர், பிரபல இயக்குநர் பாஸு சட்டர்ஜீ. இந்தியாவில் offbeat படங்கள் என்ற அற்புதமான வகையைப் பிரமாதமாக வழிநடத்திய சில இயக்குநர்களில் ஒருவர். இவர், பாஸு பட்டாச்சார்யா, ரிஷிகேஷ் முகர்ஜீ ஆகிய மூவரும் இந்தவகைப் படங்களுக்குச் செய்த சேவையைப்பற்றி அவசியம் ஒரு புத்தகம் எழுதமுடியும். அமோல் பாலேகர் மற்றும் ஸரீனா வஹாப் நடித்த சித் சோர், இந்தியா முழுதும் பேசப்பட்டது, பிரம்மாதமாக ஓடியது. ரவீந்த்ர ஜெய்ன் இந்தியா முழுக்கப் புகழடைந்தார். அந்தப் படத்தில் நான்கு பாடல்கள். நான்கையும் யேசுதாஸே பாடினார். ‘ஆஜ் செ பெஹ்லே.. ஆஜ் செ ஸ்யாதா’. ஜப் தீப் சலே ஆனா.. ஜப் ஷாம் டலே ஆனா’ மற்றும் து ஜோ மெரே சுர் மே’ என்ற மூன்று பாடல்களும், கோரி தேரா காவ் படா ப்யாரா பாடலுடன் சேர்ந்து இன்றும் பலராலும் நினைவு கூரப்படுகின்றன.

சித்சோர் படத்தைத் தொடர்ந்து, ஏராளமான படங்கள் இசையமைத்தார் ரவீந்த்ர ஜெய்ன். அத்தனையும் சூப்பர்ஹிட்கள். அவரது ‘பஹேலி’, ‘அகியோங்கே ஜரோகோ ஸே’, ‘நதியா கே பார்’, ‘பதி பத்னி ஔர் வோ’, ‘இன்ஸாஃப் கா தாராஸு’, ‘தபஸ்யா’, ‘விவாஹ்’, ‘சலாகேன்’, ‘தீவாங்கீ’, ‘சாசுரால்’ ஆகியவை அவரது சில பிரபல படங்கள்.

எப்படி யேசுதாஸ் + ரவீந்த்ர ஜெய்ன் கூட்டணி மிகப் பிரபலமோ, அப்படியே ராஜ் கபூருடன் ரவீந்த்ர ஜெய்னின் கூட்டணியும் பிரபலம். ‘ராம் தேரி கங்கா மெய்லி’ படத்தின் பாடல்களை யாராலும் மறக்க இயலாது. இதன்பின் ‘தோ ஜாஸூஸ்’ மற்றும் ‘ஹென்னா’ படங்களுக்கும் ராஜ் கபூரின் தயாரிப்பில் ரவீந்த்ர ஜெய்ன் இசையமைத்தார். இதேபோல் கிஷோர் குமார் மற்றும் முஹம்மது ரஃபிக்கும் அவர் பல பிரம்மாதமான பாடல்கள் கொடுத்திருக்கிறார்.

ஒரு காலகட்டத்துக்குப் பிறகு தொலைக்காட்சிக்குள்ளும் நுழைந்து, அங்கும் பிரம்மாதமாக இசையமைத்தார். தூர்தர்ஷனில் வெளியான ராமானந்த் சாகரின் ‘ராமாயணம்’ இவரது இசைவண்ணம்தான். இதுமட்டும் இல்லாமல், பல்வேறு ஜெய்ன் பஜன் ஆல்பங்கள், இறை ஆல்பங்கள் என்று ரவீந்த்ர ஜெய்ன் இசையில் நுழைந்து பார்க்காத இடமே இல்லை.

ரவீந்த்ர ஜெய்ன் இசை எப்படிப்பட்டது? இந்திய க்ளாஸிகல் இசையின் பாதிப்பை இவரது பல பாடல்களில் கவனிக்க முடியும். சிறுவயதில் கற்றுக்கொண்ட ஹிந்துஸ்தானி சங்கீதத்தின் பாதிப்பு அது. இதனுடன், கேட்டாலே மனம் உருகும் வகையினால் ஆன அருமையான பஜன் வகையில் ஆன பாடல்கள் இவரது முத்திரை. பஜன் என்றதும் ஆன்மீகம் என்று நினைத்துவிடாதீர்கள். ‘கோரி தேரா காவ் படா ப்யாரா’ பாடலையே உதாரணமாக எடுத்துக்கொண்டால், அதன் ட்யூன் இப்படிப்பட்டதே. கேட்டாலே மனம் மயங்கும் பஜன் போன்ற ட்யூன். இதுவேதான் அவரது ‘அகியோங்கே ஜரோகோ ஸே’ பாடலுக்கும் பொருந்தும். இந்தப் பாடலையும், வெறும் ட்யூனை மட்டும் கேட்டால் ஒரு பஜன் என்று தயங்காமல் சொல்லிவிடலாம். எவ்வளவோ இனிமையான பாடல்களை அனாயாசமாக இப்படி இசையமைத்தவர் அவர். அதேபோல், தனது எல்லாப் பாடல்களுக்கும் இவரேதான் பாடல் வரிகளையும் எழுதினார். அதுவும் அவ்வளவும் ஆழமான வரிகள்.

‘உடலில் மட்டும்தான் குறைபாடு- மனதில் அல்ல’ என்று இறக்கும் வரை உறுதியாக நம்பி வாழ்ந்தவர் ரவீந்த்ர ஜெய்ன். அவரது இசை கேட்டவுடன் மனதை சாந்தப்படுத்தும் தன்மை வாய்ந்தது. இன்றும் இந்தியாவில் நினைவு கூரப்படும் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவராக ரவீந்த்ர ஜெய்ன் இருப்பதற்கு, அவரது இந்த உறுதியான இரும்பு மனமே காரணம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com