37. கேப்டன் தோனிதான் எனது நாயகன்! இப்படிச் சொன்ன முன்னாள் இந்திய கேப்டன் யார்?

இந்திய கிரிக்கெட் அணி இன்றைக்கு தரம் வாய்ந்த சர்வதேச அணியாக உருவாகியிருக்கிறது. உலக அளவில் எந்தவொரு தேசத்து அணியையும் அவர்களால் எளிதாக வெற்றி கொண்டுவிட முடிகிறது.
37. கேப்டன் தோனிதான் எனது நாயகன்! இப்படிச் சொன்ன முன்னாள் இந்திய கேப்டன் யார்?

பத்தாவது நாயகன்: மகேந்திர சிங் தோனி

இந்திய கிரிக்கெட் அணி இன்றைக்கு தரம் வாய்ந்த சர்வதேச அணியாக உருவாகியிருக்கிறது. உலக அளவில் எந்தவொரு தேசத்து அணியையும் அவர்களால் எளிதாக வெற்றி கொண்டுவிட முடிகிறது. கோலியின் தலைமையிலான இளைய இந்திய அணி தொடர்ச்சியாக பல தொடர்களை கைப்பற்றி வருகிறது. முன்காலங்களில் ஆஸ்திரேலியா எப்படி கிரிக்கெட் விளையாட்டை தன் வசம் வைத்திருந்ததோ, கிட்டதட்ட அதேயளவில் இந்திய அணி தனித்த ஆளுமையை சர்வேதச பிற அணியின் மீது செலுத்தி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து, நியூஸிலாந்து வரை அதனது சமீப கால வெற்றி படலம் தொடர்ந்தபடியே இருக்கிறது. இன்றைய தினத்தில், இந்திய அணிக்கு நிகராக எதிரணியினருக்கு மிகுதியான சவால் அளிக்கக் கூடிய வேறொரு அணியை நம்மால் முன்மொழிய முடியாது. கிரிக்கெட் வெளியில் இந்திய அணி தனி அடையாளத்துடன் கம்பீரமாக நிலைபெற்றிருக்கிறது.

இன்றைய அதன் இத்தகைய அசூரத்தனமான வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணமாக இரண்டு விளையாட்டாளர்களை நம்மால் உறுதிபட கூற முடியும். இன்றைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. தனது சீறும் குணத்தால், ஒட்டுமொத்த அணி வீரர்களையும் ஒருவிதமான பரபரப்பிலேயே இவர் வைத்திருக்கிறார். இதனால், விளையாட்டாளர்கள் தங்களது முழு திறன்களையும் தொடர்ச்சியாக உயிர்ப்புடன் வெளிப்படுத்த வேண்டியது மிக அவசியமாகிறது. ஒவ்வொரு போட்டியிலும், விளையாட்டாளர்களின் திறன்கள் கூர்ந்து அவதானிக்கப்படுகிறது. இந்திய அணிக்கு தீவிரமான பங்களிப்பை ஆற்றுகிறவர்களை ஊக்குப்படுத்தும் கோலி அதே நேரத்தில், ஃபார்ம் இன்றி தவிப்பவர்களை வெளியில் நிறுத்தி வைக்கவும் தவறுவதில்லை. ஒரு கண்டிப்பான கேப்டனாகதான் நம்மால் கோலியை உணர முடிகிறது.

கோலி ஒரு கேப்டனாக அணியை சிறப்புற வழிநடத்துவது ஒருபுறமென்றால், நல்லதொரு ஆட்டக்காரராகவும் முன்காலத்தில் இருந்தே வெகுவான பங்களிப்பை இந்திய அணிக்கு வழங்கி வருகிறார். கிட்டதட்ட அடுத்த சச்சின் டெண்டுல்கராகவும், அவரது சாதனைகளை கடக்க சாத்தியமுள்ள ஒற்றைய இந்திய விளையாட்டாளராகவும் கோலியே அடையாளப்படுத்தப்படுகிறார். நவீன கிரிக்கெட் விளையாட்டை உருவகப்படுத்தும் இந்திய முகமாக கோலியைத்தான் நம்மால் முன்னிறுத்த முடியும்.

இந்திய அணியின் இன்றைய நிலை உயர்வுக்கு காரணமான மற்றைய கிரிக்கெட் வீரர் கோலிக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தவர். கோலியில் இருந்து, ரோஹித் சர்மா, ஷீகர் தவான், ரெய்னா, ரவீச்சந்திர அஸ்வின் என பல இளைய நம்பிக்கை மிகுந்த கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் உருவெடுத்ததில் இவரின் பங்களிப்பு அதிகம் இருக்கிறது. கோலியை போல தனது கோபத்தை களத்தில் வெளிப்படுத்த விரும்பாதவர் அவர். ’மிஸ்டர் கூல்’ என்றே புனைப்பெயர் அவருக்கு இடப்பட்டிருந்தது. நிதானமும், சாதூர்யமும், பொறுப்புணர்வும் ஒருங்கே உருதிரண்ட நல்லதொரு தலைமை பண்பாளர்.

1983-ம் வருடத்தில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்றெடுத்ததற்கு பிறகு 28 வருடங்கள் கழித்து மீண்டும், இந்திய அணி உலகக் கோப்பை ஏந்திய பெருமைமிகு தருணத்தை நிகழ்த்தி காட்டியவர். மொஹ்மத் அசாரூதின், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் என இந்திய அணியின் தலை சிறந்த கேப்டன்களால் பூர்த்தி செய்ய முடியாத உலக கோப்பை கனவை, நிஜமாக்கி இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பூரிப்பில் ஆழ்த்தியவர். 2007-ம் வருடத்தில் அப்போதைய கேப்டன் ராகுல் டிராவிட் வசமிருந்த கேப்டன் பதவி இவருக்கு கொடுக்கப்பட்டது. அடுத்த நான்கே வருடங்களில் இந்திய அணியை வலுவான அணியாக கட்டமைத்து, அதனை வழிநடத்திச் சென்று அந்த சாதனையை நிகழ்த்தியவர். ”நான் பார்த்த கேப்டன்களிலேயே, இவர்தான் மிகச் சிறப்பானவர்” என சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

அதோடு, தொடர்ச்சியாக மூன்று முறை உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியின் நிலை தகர்வுக்கு, முக்கிய காரணமாக இருந்தது 2011 உலக கோப்பை போட்டித் தொடர்தான். ஆஸ்திரேலியாவின் நெடுநாளைய ஆதிக்கத்தை தகர்த்து, கிரிக்கெட் விளையாட்டில் புதிய சாம்பியன் அணிக்கான பரிசீலனையை 2011 உலக கோப்பை துவங்கி வைத்தது.  

இன்றைக்கும், ஸ்டம்புகளுக்கு பின்னால் நின்றுகொண்டு பல்வேறு ஆலோசனைகளை கோலிக்கு வழங்கிக் கொண்டிருப்பவர். பல இக்கட்டான தருணங்களில் கோலிக்கு இவரது வழிநடத்தல்கள் பேருதவி செய்திருக்கிறது. கோலி மற்றும் துணை கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இணைத்து, இவரது பெயரும் மூன்றாவது கேப்டன் என்றே வழக்கில் சொல்லப்படுகிறது. ஆடம் கில்கிரிஸ்ட், அலெக்ஸ் ஸ்டிவார்ட்  (இங்கிலாந்து),  குமார சங்ககாரா, மார்க் பவுச்சர் போன்ற தலைசிறந்த விக்கெட் கீப்பர்களின் வரிசையில் முன்னணியில் இருப்பவர். தற்போதைய நிலவரப்படி டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் போட்டி, இருபது ஓவர் கிரிக்கெட் என மூன்று பிரதான வடிவங்களிலும் அதிக ஸ்டம்பிங்களை (Stumpings) செய்திருக்கும் வீரர் இவர்தான். மிக நுணக்கமான பார்வையும் கூறுணர்வும் கொண்ட இவரது அணுகுமுறை கிட்டதட்ட போட்டி நடுவர்களின் பார்வையையும் விடவும் கூர்மையானது. ஸ்டம்புகளின் பின்னால் நின்று கொண்டு, ஒட்டுமொத்த வீரர்களையும் தன் வழியில் கட்டுப்படுத்தும் ஆளுமை குணமுடையவர்.

இந்திய அணி டெஸ்ட் போட்டியில் நம்பர் 1 நிலையை அடைய காரணமாக இருந்தவர். வெறும் 37 வயது மட்டுமே ஆகியிருக்கும் அவரது வாழ்க்கை அதற்குள் முழுநீளத் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இந்தியாவின் பல மொழிகளில் அவரது சுயசரிதை புத்தகமாக எழுதப்பட்டிருக்கிறது. போராட்டமும், வலிகளும், எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்த பொதுவெளியில் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும் சுவாரஸ்யமான வாழ்க்கை அவருடையது. ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி பகுதியில் 1981-ம் வருடத்தில், ஜூலை 7ம் தேதி பிறந்த அந்த மனிதர் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் தன் திசையில் திரும்பி பார்க்க செய்தவர். இந்தியா மட்டுமல்லாது, அயலுலகத்திலும் அவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை விரிவடைந்திருக்கிறது. பல சர்வதேச கேப்டன்கள் அவரின் சாதுர்யத்தை பின்பற்றுவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

இந்திய அணியில் அவர் ஒரு விளையாட்டார் மட்டுமேயல்ல. அவர் ஒரு மையம். வீரிய மிகுந்த ஷாட்டுகளை விலாசித்தள்ளி குறுகிய காலத்தில் தன் மீது நம்பிக்கையை உருதிரட்டிய துவக்க கால நிலையாய் இருந்தாலும், மிக கீழ் நிலையில் தனது இருப்பை பொதித்து வைத்துக் கொண்டு பிற வீரர்களின் திறன்களை வளர்த்தெடுக்கவும், மேன்மையுற செய்யவும் வழி கொடுக்கும் இன்றைய நிலையாய் இருந்தாலும், அணியில் அவர் இருக்கிறார் என்றாலே அதுவொரு பெரு மையத்தைப் போலத்தான். மிகக் குறுகிய காலத்தில் பல நம்பிக்கை மிகுந்த விளையாட்டாளர்கள் இந்திய அணியில் உருவெடுத்ததற்கு மிக முக்கியமான காரணம் இவர்தான். அவரது தலைமையில்தான் ஏராளமான இளைய விளையாட்டாளர்கள் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கிறார். கோலி போல, எந்தவொரு வீரரைப் பற்றியும் உடனடியாக தீர்மானத்துக்கு வந்துவிடுகிறவர் அல்ல அவர். அருகில் இருந்து மெல்ல மெல்ல தன்னம்பிக்கையூட்டி, வாய்ப்புகளை ஏற்படுத்தி, சீர் செய்து அவரையொரு நம்பிக்கைக்குரிய பாத்திரமாக உருமாற்றுகிறவர். உறுதியான கால்களுடன் ஸ்டம்புகளின் பின்னால் நின்று, ஒட்டுமொத்த பிற வீரர்களுக்கும், இந்திய ரசிகர்களுக்கும் நம்பிக்கை அளித்துக் கொண்டிருக்கும் அந்த முகம் மகேந்திர சிங் தோனி!     

தோள் வரையில் உருளும் முடிக்கற்றையுடன் சர்வதேச களத்தில் தனித்த ஸ்டைலுடன் அறிமுகமாகி, இன்றைக்கு மெல்ல மெல்ல தனது இருப்பை அணியின் கூட்டுழைப்பில் கரைத்துக் கொள்கின்ற நிலை வரையில் அவர் கண்டிருப்பது மகத்தான வரலாற்று பயணத்தை! துவக்கத்தில் தோனி களத்தில் இறங்குகிறார் என்றாலே ரசிகர்களுக்கு திருவிழா கொண்டாட்டம்தான். மைதானம் முழுக்க பந்துகள் சிதறி ஓடப்போவது உறுதி என்கின்ற ஒருவித கிளர்ச்சி மனதில் உண்டாகிவிடும். எத்தகைய வேகமாக வீசப்படும் பந்தாக இருந்தாலும், ஸ்டம்பை குறிவைத்து வீசப்படுகின்ற யாக்கராக இருந்தாலும் தோனியின் முன்னால் எடுபடாது. ஹெலிகாப்டர் சிக்ஸர் என்கின்ற புது வகையிலான ஷாட்டை அறிமுகப்படுத்தியதே தோனிதான். ஒவ்வொரு போட்டியிலும் ஆறேழு சிக்ஸர்களுக்கும் மேலாக அவர் விளாசித் தள்ளுவார். அன்றைய காலத்தில் தோனி போன்ற எந்தவொரு பந்தையும் மிக உக்கிரமாக அதிரடியாக விளாசித் தள்ளக்கூடிய விளையாட்டாளர் ஒருவர் கூட இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தார்களே தவிர, இவர் அளவுக்கு குறுகிய காலத்தில் பெருத்த சலனத்தையும் அதிர்வையும் உருவாக்கியவர்கள் எவரும் இல்லை. 2011-ம் வருடத்தில் உலகக் கோப்பை பெற்றிருந்த தருணத்தில் டைம் பத்திரிகை ஆதிக்கம் செலுத்துகின்ற 100 சிறந்த திறமைசாலிகளில் ஒருவராக தோனியையும் தேர்வுசெய்தனர்.

ஒரு தலைசிறந்த கேப்டனாக தோனி செயல்பாடு எந்தளவுக்கு இந்திய அணியின் நிலை உயர்வுக்கு முக்கிய காரணியாக அமைந்திருந்ததோ அதே வகையில், அவரது துவக்க கால அதிரடி ஆட்டமும், பின்காலத்திய நிதான போக்குடைய ஆட்ட வகைமையும் கை கொடுத்திருக்கிறது. 2005-ம் வருடத்தில், இலங்கை அணிக்கு எதிராக தோனி விளாசிய 183* விக்கெட் கீப்பர் ஒருவரால் ஒற்றைய போட்டியில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக நிலைத்திருக்கிறது. தோனி ஒரு அதிரடி ஆட்டக்காரராக, திறன்மிகுந்த விக்கெட் கீப்பராக, தலைசிறந்த கேப்டனாக, ஒரு தலைமை வழி காட்டிய பல்வேறு பாத்திரங்களில் இந்திய அணிக்கு பெரும்பங்காற்றியிருக்கிறார்.

‘தோனிதான் எனது நாயகன். நாங்கள் சச்சினையும் பற்றியும், சேவாக் பற்றியும் உரையாடல்களில் நிறைய பேசுவோம். ஆனால், இந்த இளைஞன், வேறு எவரை விடவும் மிகுதியான திறனுடையவர் என்பதில் மாற்று கருத்தே இல்லை’ என்கிறார் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ். ‘தோனி என்னுடன் இருந்தால், என்னால் அதிக நம்பிக்கையுடன் ஒரு போர்களத்தையே எதிர்கொள்ள முடியும்’ என்கிறார் முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரரும், இந்திய அணியின் பயிற்சியாளராக விளங்கியவருமான கேரி கிரிஸ்டன். முன் தலைமுறை கிரிக்கெட் வீரர்களில் இருந்து இன்றைய வளரும் தலைமுறையினர் வரை எண்ணற்றோரை கவர்ந்திருக்கிறார் தோனி.

‘உங்களுக்கு ஒரு கனவு இல்லையென்றால், நிச்சயமாக உங்களால் முன்னேறவே முடியாது. நிச்சயமாக நமக்கென்று ஒரு இலக்கு இருக்க வேண்டும். மெல்ல மெல்ல அதனை நோக்கி நகர வேண்டும். அதிக தன்னம்பிக்கை உடனும், விடப்பிடியான மன தைரியத்துடன்’ என்பது தோனி கூறிய வார்த்தைகளாகும். தோனியின் வரலாற்றை புரட்டுவது, நவீன இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றை புரட்டுவதைப் போலதான். 2007-ம் வருடத்தில் வெகு இயல்பாக மற்ற அணிகளைப் போலவே சாதாரணமான அணியாக இருந்த இந்தியா தோனியின் தலைமையில் எப்படி வலிமைமிக்கதாக திரண்டது என்பதையும், தோனி எவ்விதமான ஒரு நாயகனாக உருவெடுத்தார் என்பதையும் அடுத்தடுத்துப் பார்க்கலாம்.

(சிக்ஸர் பறக்கும்…)  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com