இது சிக்ஸர்களின் காலம்! இறுதி அத்தியாயம் 

இன்றைய சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பந்துகள் மைதான கூரையை கடந்து சிக்ஸர்களாக பறப்பது வெகு இயல்பான செயலாகிவிட்டது.
இது சிக்ஸர்களின் காலம்! இறுதி அத்தியாயம் 

இன்றைய சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பந்துகள் மைதான கூரையை கடந்து சிக்ஸர்களாக பறப்பது வெகு இயல்பான செயலாகிவிட்டது. ஒவ்வொரு அணியிலும் ராட்சச சிக்ஸர்களை விளாசுவதென்றே பிரத்யேகமாக சில ஆட்டக்காரர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் தோனி தனது துவக்க கால அதிரடி ஆட்டத்தின் மூலமாகவே தனது இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டார். தொடர்ச்சியாக அவர் விளாசிய சிக்ஸர்களும், பல்வேறு ஆட்டடங்களை சிக்ஸர்களின் மூலமாக முடிவுக்கு கொண்டு வருவதும் என மிகச் சிறந்த 'கேம் ஃபினிஷர்' என பெயரெடுத்திருக்கிறார். அவர் மைதானத்தில் களமிறங்கியிருக்கும் தருணமெல்லாம் அரங்கத்தில், 'வீ வாண்ட் சிக்ஸர்' என்கின்ற கோஷத்தை நம்மால் கேட்க முடிகிறது.

அவரைப் போலவே, ஆஸ்திரேலியாவில் மேக்ஸ்வல், இங்கிலாந்தில் பட்லர், தற்கால தென் ஆப்பிரிக்க அணியில் மில்லர் என தங்களது சிக்ஸர்களின் மூலமாகவே அடையாளம் காணப்பட்ட பல கிரிக்கெட்டர்கள் உலகம் முழுக்க உருவெடுத்திருக்கிறார்கள். முதல் பத்து ஓவர்கள் பவர் ப்ளே என்பதால், போட்டியின் துவக்கத்தில் இருந்தே ரசிகர்கள் சிக்ஸர்களை எதிர்பார்க்க துவங்கியிருக்கிறார்கள். நிலைத்து நின்று ஆடும் நிதான ஆட்டம் இன்றைய சூழலில் வெகு சொற்ப கிரிக்கெட்டர்களுக்குதான் வாய்த்திருக்கிறது. டிராவிட் போன்ற ஆட்டக்காரர் ஒருவரை இனி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காண்பது அரிது. ஐ.பி.எல் போன்ற ஆட்ட வகைமைகளும், இளைய கிரிக்கெட்டர்களில் அதிரடியாக விளையாடக் கூடியவர்களை தெரிவு செய்வதற்கென்றே உருவாக்கப்பட்டிருக்கிறது.

துவக்க காலங்களில் வெகு அரிதாகவே இத்தகைய அதிரடி ஆட்டக்காரர்கள் அணியில் பங்கெடுத்திருப்பார்கள். பேட்ஸ்மேன்களுக்கு உகந்தாற் போல பல சலுகைகள் கிரிக்கெட்டில் புகுத்துவதற்கு முந்தைய காலத்திலேயே, அப்ரிடி போன்றவர்கள் முதல் பந்திலிருந்தே சிக்ஸர் விளாசும் இயல்பை பெற்றிருந்தார்கள். பூம் பூம் அப்ரிடி என்றே அவரை அனைவரும் அழைப்பது வழக்கம். வெகு சமீபத்தில்தான், ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசிய ஆட்டக்காரர் என்கின்ற அப்ரிடியின் சாதனையை கிரிஸ் கேயல் முறியடித்தார். 514 ஆட்டங்களில் மொத்தமாக கேயல் குவித்திருக்கும் சிக்ஸர்களின் எண்ணிக்கை 477. ரோஹித் சர்மா இந்த பட்டியலில் 349 சிக்ஸர்களின் மூலமாக ஐந்தாவது இடத்திலும், தோனி ஆறாவது இடத்திலும் இடம் பிடித்திருக்கிறார்கள்.

அதே போல, ஆறு பந்துகளில் தொடர்ந்து சிக்ஸர்கள் விளாசுவதும் கிரிக்கெட் விளையாட்டில் உச்சபட்ச சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. விரல் விட்டும் எண்ணும் அளவிலான வீரர்கள்தான் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள். 2007 உலக கோப்பை போட்டியின் போது இந்த சாதனை முதல் முதலாக சர்வதேச அளவில் நிகழ்த்தப்பட்டது. தென் ஆப்பிரிக்க வீரரான கிப்ஸ்தான் அந்த சாதனையை நிகழ்த்தியவர். நெதர்லாந்து உடனான அந்த போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் டான் வான் பன்ஜ் வீசிய ஓவரின் அனைத்து பந்துகளையும் சிக்ஸர்களாக பறக்க விட்டார் கிப்ஸ். 'முதலில் ஒன்றிரண்டு சிக்ஸர்களை விளசும்போது, 6 பந்துகளிலும் சிக்ஸர் அடிப்போம் என்று எண்ணியிருக்கவில்லை, நினைவு மயக்கத்தில் நிகழ்ந்தேறிய அற்புதத்தைப் போலத்தான் அந்த கணத்தை உணருகிறேன்’ என்று அந்த போட்டி குறித்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்தார் கிப்ஸ்.

இருபது ஓவர் கிரிக்கெட்டில் இத்தகைய சாதனையை நிகழ்த்தினார் இந்திய வீரர் யுவராஜ் சிங். இங்கிலாந்து பந்து வீச்சாளரான பிராட் வீசிய ஓவரை சிதறடித்து அபாரமான இந்த சாதனை பட்டியலில் தன் பெயரை பொறித்துக் கொண்டார் யுவராஜ் சிங். முன்னதாக, அவருக்கும் பிளிண்டாஃப்பும் சண்டை மூண்டு விட, அந்த சூட்டினை ஆறு பந்துகளிலும் சிக்ஸர்களாக பறக்கவிட்டு தணித்துக் கொண்டார். இந்திய ரசிகர்கள் அன்றைய தினத்தை கொண்டாடி தீர்த்தனர்.

தனிப்பட்ட வகையில், எனது மிக விருப்பமான கிரிக்கெட்டர் என்றால், இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் சில காலம் விளையாடிய கெவின் பீட்டர்சன்தான். அவரது வாழ்க்கையே மிகுந்த போராட்டம்மிக்கது. தென் ஆப்பிரிக்காவில் பிறந்த அவர், நிற பேதங்களால் அங்கு விளையாட இயலாமல் போக, கிரிக்கெட் விளையாடுவதற்கென்றே இங்கிலாந்தில் குடியேறினார். ஆனால், அங்கும் அவரை கிரிக்கெட் வாரியம் பாகுபாடுடன்தான் நடத்தியது. பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் மிக காத்திரமான முத்திரை இன்னிங்க்ஸ் பலவற்றை படைத்திருக்கிறார் பீட்டர்சன். இன்றளவும் அவருக்கென்று உலகம் முழுக்க இருக்கின்ற ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம். தன் வாழ்நாள் முழுக்க வெறுப்பு சூழவே கிரிக்கெட் விளையாடிய கெவின் பீட்டர்சனை நவீன காலத்தின் மிகச் சிறந்த இங்கிலாந்து வீரர் என்று கிரிக்கெட் விமரிசகர்கள் புகழுரைக்கின்றனர்.

வலது கை ஆட்டக்காரரான பீட்டர்சன், ஏபி டிவில்லியர்ஸை போலவே, முழு முற்றாக இடதுபுறமாக திரும்பி நின்று பந்துகளை எதிர்கொள்வதிலும், சிக்ஸர்களாக அவைகளை விளாசுவதிலும் கெட்டிக்காரர். எனினும், இன்றைக்கும் இவ்விரு கிரிக்கெட்டர்களும் தங்களது ஓய்வு முடிவை அறிவித்துவிட்டு, தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

பன்னெடுங்கால வரலாறு கொண்ட கிரிக்கெட் விளையாட்டில் தனித்துவம் மிகுந்த சாதனையாளர்கள் பலர் இருந்தாலும், நவீன காலத்தில் அதிக நம்பிக்கை அளிக்கின்ற பத்து கிரிக்கெட்டர்களை பற்றி மட்டும் இத்தொடரில் அறிமுகம் செய்ய முடிந்திருக்கிறது. அவர்கள் பத்து பேரும் தனிப்பட்ட வகையில், எனக்கு மிக விருப்பமான வீரர்கள். முந்தைய காலங்களில் கிரிக்கெட்டின் மீது தீவிர பற்றுக் கொண்டிருந்த ரசிகர் ஒருவருக்கு இந்த ஏழு பேரில் சிலர் அறிமுகம் ஆகாமல் கூட இருந்திருக்கலாம். அதே போல, அவரிடம் முற்றிலும் வேறான சிறந்த சிக்ஸர் மன்னர்களின் பட்டியல் இருக்கலாம். இது அவரவர் ரசனையும், தேர்வும் சார்ந்தது.

எனினும், ஒரு சிக்ஸர் விளாசப்படுகின்ற போது உண்டாகின்ற உணர்வலைகளும், பரவசமும் எல்லோருக்கும் பொதுவானதாகவே இருக்க முடியும். ஒவ்வொரு சிக்ஸர் விளாசப்படும்போதும் அரங்கத்தில் எழுகின்ற கரகோஷமும், கூச்சல் ஒலிகளும், வர்ணனையாளர்களின் உற்சாகம் தொனிக்கும் குரல்களும் பார்வையாளர்களின் மனங்களின் மெல்ல தட்டியெழுப்ப வல்லவை.

தரையில் ஊர்ந்து விரையும் பந்துகளை விடவும், இன்றைய பார்வையாளர்கள் வான் நோக்கி பார்வை உயர்த்தவே துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில், சிக்ஸர் கிரிக்கெட் விளையாட்டின் பிரத்யேகமான கூறுகளில் ஒன்று. அதுவே, ஒரு குறிப்பிட்ட வீரரை ரசிகர்களுடன் இணக்கமாக பிணைக்கக் கூடியது.

இனி வரும் காலங்களிலும் மேலும் திறன் மிகுந்த பல அதிரடி ஆட்டக்காரர்கள் உருவெடுப்பார்கள் என்பதில் மாற்று கருத்தில்லை. பூம் பூம் அப்ரிடி போலவோ, தோனியை போலவோ, ஜெயசூர்யாவை போலவோ வெகு விரைவில் ஒரு இளைய கிரிக்கெட் வீரர் அடையாளம் காணப்படுவார். தங்களது பெயரை தனித்து அடையாளத்துடன் அவர்களும் கட்டியெழுப்புவார்கள். கிரிக்கெட் விளையாட்டும், அதன் ரசிகர்களும் என்றென்றும் அவ்வாறு உருவெடுத்து வருகின்ற புதியவர்களை ஆரத் தழுவி வரவேற்க தயாராகவே இருக்கிறார்கள்.  

(நிறைந்தது)    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com