வேப்பங்காயை யாராவது விரும்புவார்களா? கசப்பு நிறைந்த தாவரம் அது. இலையோ காயோ கனியோ எல்லாவற்றிலும் கசப்பு இருக்கும்.
ஆனால், அப்படிப்பட்ட வேப்பங்காயை ஒருத்தி தருகிறாள். அவளுடைய காதலன் அதை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, ‘பிரமாதம்’ என்கிறான்.
பக்கத்தில் அவளுடைய தோழி நிற்கிறாள். அவள் அவனைப் பார்த்து, ‘நல்லா யோசிச்சுச் சொல்லுங்க’ என்கிறாள்.
‘இதில் யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? மிக அருமையான பழம்’ என்கிறான் அவன். ‘நல்ல இனிப்பு!’
‘ஐயா, இது வேப்பங்காய்!’
‘அதனால என்ன? அவ கை பட்டதும் அது இனிக்க ஆரம்பிச்சுடுச்சு!’
காதல் கசப்பை இனிப்பாக்கிவிடுகிறது. அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.
சில நாள் கழித்து, அவனுக்கு இன்னொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்படுகிறது. ஆகவே, காதலியைப் பிரிந்திருக்கிறான்.
பின்னர், அவளிடமிருந்து பிரிந்து மீண்டும் காதலியிடமே வருகிறான். அவள் கோபத்தில் அவனை அனுமதிக்க மறுக்கிறாள். தோழியிடம் உதவி கேட்கிறான்.
அவள் சிரிக்கிறாள், ‘முன்னே அவ வேப்பங்காயைக் கொடுத்தாலும் இனிக்குதுன்னு சொன்னீங்க. இப்போ?’ என்கிறாள். ‘பாரியோட பறம்புமலையில இருக்கிற பனிநீர்ச் சுனையிலேர்ந்து தெளிவான தண்ணீரைக் கொண்டுவந்து, தை மாசத்துக் குளிர்நாள்ல கொடுத்தாலும், அய்யே, சுடுது, உவர்க்குதுன்னு சொல்றீங்க! நல்ல அன்புய்யா உங்களுக்கு!’
குறுந்தொகையில் மிளைக்கந்தன் எழுதிய பாடல் இது:
‘வேம்பின் பைங்காய் என்தோழி தரினே,
‘தேம்பூங்கட்டி’ என்றனிர், இனியே,
பாரி பறம்பின் பனிச்சுனைத் தெள்நீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
‘வெய்ய உவர்க்கும்’ என்றனிர்,
ஐய! அற்றால் அன்பின் பாலே!’
ஒரு காதலன், தன் காதலியைப் பார்ப்பதற்காகச் சென்றான். அவள் ஒரு பெரிய மாளிகைக்குள் இருந்தாள்.
அதனால் என்ன? அவன் மனத்திலிருந்த காதல் அவனை வளைத்தது. அந்த மாளிகையின் சுவர்மீது ஏறிக் குதித்து அவளைச் சந்தித்தான்.
பிறகு, அவர்களுக்குத் திருமணமானது. மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். இருவருக்கும் வயதானது.
இப்போது, அவள் அதே அன்புடன் அவனை அணைக்கவருகிறாள். அவனோ வெறுத்து ஒதுங்குகிறான். ‘உலக்கைமாதிரி இருக்கு உன் கை’ என்கிறான்.
இந்தக் காட்சியை விவரிக்கும் பாரதிதாசன், ‘இளமையில் இனித்ததே முதுமையில் கசந்தது’ என்கிறார் வேடிக்கையாக:
‘காதலி இருக்கும் மாளிகைக் கற்சுவர்
காதலன் கால்வைத்து ஏறிக்குதிக்க
வளைந்துகொடுத்தது ஒருநாள்! முதுமையில்
அவள் அண்டையில் அணைக்க வரும் கை
உலக்கை என்றே அவன் ஒதுங்குவான் பின்னாள்!
இளமையில் இனித்ததே, முதுமையில் கசந்தது!’
கசப்பும் இனிப்பும் நாக்கின் சுவை நரம்புகள் செய்கிற மாயமா? அல்லது, கொடுக்கிறவர் மீது இருக்கிற அன்பினால் ஏற்படுவதா?
’உன் பேரைச் சொன்னாலே,
உள்நாக்கில் தித்திக்குமே’
என்று ஒரு பாடலில் எழுதினார் நா.முத்துக்குமார்.
‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’
என்றார் பாரதியார். தேன் காதில் பாயுமா? அப்படிப் பாய்ந்தாலும் அது தித்திக்குமா?
ஆக, ‘சுவை’ என்று நாம் சொல்லும் அம்சம் வெறும் நாக்கினால் தீர்மானிக்கப்படுவதல்ல. நல்ல விஷயத்தைக் கேட்கும்போது காது இனிக்கும், கண் இனிக்கும், நெஞ்சு இனிக்கும், அதோடு நாக்கும் இனிக்கும்!
ஒரு காதலி. அவள் வேம்பம்பழத்தை உண்ணவில்லை. அதன் பூவை வெறுமனே பார்க்கிறாள். கசப்பாக உணர்கிறாள்.
அதாவது, நாக்கில் படாமலே வேப்பம்பூ கசக்கிறது. ஏன்?
அவளுடைய காதலன் அவளைப் பிரிந்து சென்றுள்ளான். ‘இளவேனிற்காலத்தில் திரும்பி வந்துவிடுவேன்’ என்று அவன் சொல்லியிருக்கிறான்.
இப்போது, இளவேனிற்காலம். அதனால், வேப்பம்பூ மலர்கிறது. ஆனால், அவன் இன்னும் வரவில்லை.
‘அவன் இல்லாம இந்த வேப்பம்பூவை நான்மட்டும் எப்படித் தனியாப் பார்த்து ரசிக்கிறது?’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்கிறாள் அவள். ஆகவே, கண்ணுக்குக் குளிர்ச்சியான வேப்பம்பூ அவளுக்குக் கசக்கிறது.
அடுத்து, அதே காதலி ‘நான் ஓர் அத்திப்பழம்’ என்கிறாள்.
பொதுவாக அத்திப்பழத்தைப் பெண்ணின் கன்னத்துக்கு உவமையாகச் சொல்வார்கள். உதாரணமாக, வாலியின் இந்த வரிகள்:
’அத்திப்பழக் கன்னத்திலே,
கிள்ளிவிடவா!’
ஆனால் இந்தப் பெண் தன்னை அத்திப்பழம் என்று சொல்லிக்கொள்வது அழகுக்காக அல்ல. கனிந்து மரத்திலிருந்து கீழே விழுந்த பழமாகத் தன்னைக் குறிப்பிடுகிறாள் அவள்.
அதாவது, ஆற்றங்கரையில் மரத்திலிருந்து பழம் கீழே விழுகிறது. அங்கே இருந்த நண்டுகள் அதன்மீது ஏறிச் சிதைக்கின்றன. அப்படிப்பட்ட நிலைமையில்தான் அவள் இப்போது இருக்கிறாளாம்.
பழத்தை நண்டுகள் சிதைப்பதுபோல, ஊரில் இருக்கிறவர்கள் அவர்களுடைய காதலைப்பற்றிப் பலவிதமாகப் பேசுகிறார்கள். அந்தச் சொற்கள் அவளை வருத்துகின்றன.
இவையெல்லாம் சரியாக வேண்டுமென்றால், அவன் வரவேண்டும், அதன்பிறகு வேப்பம்பூ இனிக்க ஆரம்பித்துவிடும். அத்திப்பழம் இன்னும் மிளிரத் தொடங்கிவிடும்!
இதுவும் குறுந்தொகைதான். பரணர் எழுதியது:
‘கரும்கால் வேம்பின் ஒண்பூ யாணர்
என்ஐ இன்றியும் கழிவதுகொல்லோ?
ஆற்றுஅயல் எழுந்த வெண்கோட்டு அதவத்து
எழுகுளிறு மிதித்த ஒருபழம்போலக்
குழையக் கொடியோர் நாவே
காதலர் அகலக் ‘கல்’என்றவ்வே.’
இன்னொரு காதலி, இவள் வேம்பம்பழத்தைப் பார்க்கிறாள், மாலை நேரத்தில் அதை நோக்கிச் செல்லும் வௌவாலைப் பார்க்கிறாள், ‘அவன் ஊர்ல மாலை நேரமெல்லாம் கிடையாதா?’ என்கிறாள்.
பக்கத்திலிருந்த தோழி, ‘ஏன் அப்படிக் கேட்கறே?’ என்று விசாரிக்கிறாள்.
‘ஒருவேளை அவன் ஊர்ல மாலை நேரம் இருந்தா, அங்கே இருக்கிற வேப்பமரத்துல உள்ள பழங்களை நோக்கி வௌவால் பறக்கும், அங்கே உட்கார்ந்து சாப்பிடும், இதையெல்லாம் பார்க்கும்போது அவனுக்கு என் ஞாபகம் வரும், என்னைப் பார்க்க வர்றதாச் சொன்ன நாள் வந்துடுச்சேன்னு நினைப்பான், சீக்கிரமா இங்கே வருவான்...’ என்று சொல்லிக்கொண்டே காதலி பெருமூச்சு விடுகிறாள், ‘இதெல்லாம் நடக்கலையே, அப்ப அவன் ஊர்ல மாலை நேரமே இல்லையோ?’
ஐங்குறுநூறில் ஓதலாந்தையார் எழுதிய பாடல் இது:
‘அம்ம, வாழி தோழி! சிறிஇலைக்
குறும்சினை வேம்பின் நறும்பழம் உணீஇய
வாவல் உகக்கும் மாலையும்
இன்றுகொல் காதலவர் சென்றநாட்டே!’
விந்தன் எழுதிய ஒரு திரைப்பாடலில், காதலர்கள் மாலைப்பொழுதை வேண்டாம் என்றே துரத்திவிடுகிறார்கள்:
‘மயக்கும் மாலைப் பொழுதே நீ போ, போ,
இனிக்கும் இன்ப இரவே நீ வா, வா!’
வைரமுத்துவின் பாடலொன்றில் பகல் வேண்டாம், இரவுதான் வேண்டும் என்கிறார்கள் காதலர்கள்:
‘தென்றல்வந்து என்னைத் தொடும், ஆஹா
சத்தமின்றி முத்தமிடும்!
பகலே போய்விடு,
இரவே பாய் கொடு!’
ஆனால், இரவு எப்போதும் இனிக்காது. காதலனோ காதலியோ அருகே இருந்தால்தான் இனிக்கும், இல்லாவிட்டால் கசக்கும். அதையும் வைரமுத்துவே எழுதியிருக்கிறார்:
‘இவன் இன்று உறங்காத ஜாதி,
படுக்கையில் பாம்பு நெளியுது,
தலையணை நூறு கிழியுது!’
இதுபோல் முரண்களை உவமையாக்குவது கவிஞர்களுக்குப் பிடித்த விஷயம். குறிப்பாக சினிமாப் பாடல்களில் காதலர்களின் வருத்தத்தை, மகிழ்ச்சியைச் சொல்ல இவற்றை எளிமையாகப் பயன்படுத்துவார்கள்.
காதலியைப் பார்த்தபிறகு, அச்சுவெல்லம் கூடக் கசப்புதான் என்று ஒரு காதலன் சொல்வதாக எழுதுகிறார் வைரமுத்து:
‘அச்சுவெல்லம் கசக்குது உன்னாலே!’
இதென்ன பெரிய விஷயம்? காதல் இன்னும் பல விஷயங்களை மாற்றிவிடும் என்கிறார் நா.முத்துக்குமார். அதற்கு வேடிக்கையான உவமைகளைப் பயன்படுத்துகிறார்.
‘காதல் என்பது காப்பியைப் போலே,
ஆறிப்போனா கசக்கும்,
காஞ்சுபோன மொளகா பஜ்ஜி
கேக்கப் போலவே இனிக்கும்!’
இதெல்லாம் சாதாரணப் பொருள்கள். காதலி அருகே இல்லாவிட்டால், குளிர்கிற நிலாவும் கசப்புதான் என்கிறார் வைரமுத்து:
‘நீயின்றிப்போனால், கசக்கும் வெண்ணிலா!’
நல்ல காதல் துணை அருகே இருந்தால் எல்லாம் இனிக்கும், இல்லாவிட்டால் மொத்தமும் கசக்கும் என்கிறார் கங்கை அமரன்:
‘சந்தனமும்
சங்கத்தமிழும்
பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம் தங்கிடும் குமுதமும்
கன்னிமகள் அருகில் இருந்தால் சுவைக்கும்,
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்!’
அந்தக் கசப்பை நன்கு காட்சிப்படுத்தும் கண்ணதாசன் பாடலொன்று இப்படிப் பல முரண்களைச் சொல்கிறது:
‘நினைக்கத்தெரிந்த மனமே, உனக்கு
மறக்கத்தெரியாதா?
பழகத்தெரிந்த உயிரே, உனக்கு
விலகத்தெரியாதா?
மயங்கத்தெரிந்த கண்ணே, உனக்கு
உறங்கத்தெரியாதா?
மலரத்தெரிந்த அன்பே, உனக்கு
மறையத்தெரியாதா?’
இந்தப் பாடலிலும் இனிப்பு, கசப்பு ஒப்பீடு உண்டு. நேற்றுவரை கனியைச் சுவைத்து மகிழ்ந்த காதலி, இன்று அதனிடம் சென்று ‘உனக்குக் கசக்கத்தெரியாதா?’ என்கிறாள்:
‘இனிக்கத்தெரிந்த கனியே, உனக்கு
கசக்கத்தெரியாதா?
படிக்கத்தெரிந்த இதழே, உனக்கு
முடிக்கத்தெரியாதா?
கொதிக்கத்தெரிந்த நிலவே, உனக்கு
குளிரத்தெரியாதா?’
நிறைவாக, இறைவனிடம் சென்று அவள் ஒரு கேள்வி கேட்கிறாள், ‘எங்களைப் பிரித்தாயே, உனக்கு இணைக்கத்தெரியாதா?’
மறுகணம், அவளுக்கு இன்னொரு யோசனை தோன்றுகிறது. இந்தப் பிரிவு ஏற்பட்டதே அவனால்தானே? அவனுக்கு என் மனம் புரிந்திருந்தால் மீண்டும் இணைந்திருப்பானே, அதற்கு வழி செய்யமாட்டாயா என்று தெய்வத்தைக் கேட்டுக்கொள்கிறாள்:
‘பிரிக்கத்தெரிந்த இறைவா, உனக்கு
இணைக்கத் தெரியாதா?
இணையத் தெரிந்த தலைவா, உனக்கு
என்னைப் புரியாதா?’
இதேபோல் முரண்களைத் தொகுத்துத் தந்த இன்னோர் அருமையான பாடலை மருதகாசி எழுதியிருக்கிறார். அதுவும் கசப்பு, இனிப்பு என்கிற திசையிலேயே போவதில் ஆச்சர்யமில்லை:
‘அடிக்கிற கைதான் அணைக்கும்,
அணைக்கிற கைதான் அடிக்கும்,
இனிக்கிற வாழ்வே கசக்கும்,
கசக்கிற வாழ்வே இனிக்கும்!’
இப்படித் தொடங்கும் பாடல் மெல்ல சுயமுன்னேற்றப் பாதையில் நுழைகிறது, அங்கேயும் இதே முரண்களைக் காட்டுகிறது:
‘புயலுக்குப்பின்னே அமைதி, வரும்
துயருக்குப்பின் சுகம் ஒரு பாதி!
இருளுக்குப்பின் வரும் ஜோதி,
இதுதான் இயற்கையின் நியதி!
இறைக்கிற ஊற்றே சுரக்கும், இடி
இடிக்கிற வானம் கொடுக்கும்,
விதைக்கிற விதைதான் முளைக்கும்,
இதுதான் இயற்கையின் நியதி!’
ஆக, இனிப்பு, கசப்பு என்பதெல்லாம் மனநிலையைப் பொறுத்து மாறுகிற விஷயங்கள். மனம் மாறினால் அவற்றின் தன்மையும் மாறும்.
பாரதிதாசனின் குடும்பவிளக்கில் நாம் ஏற்கெனவே பார்த்த ஓர் உதாரணம் உள்ளது:
‘உவப்பின் நடுவிலே ‘ஓர்
....கசப்பான சேதி உண்டு கேட்பீர்’ என்றாள்!
‘மிதிபாகற்காய் கசக்கும், எனினும் அந்த
....மேற்கசப்பின் உள்ளேயும் சுவை இருக்கும்;
அதுபோலத்தானேடி? அதனால் என்ன?
....அறிவிப்பாய் இளமானே!’ என்றான் அன்பன்.’
பாகற்காய் கசப்புதான். அதற்குள் ஒரு சுவை இருக்கும். அதுபோல, கசப்பான செய்திகளுக்குள்ளே நன்மை இருக்கும் என்று எடுத்துக்கொள்ளவேண்டும்.
‘இன்னிலை’ என்ற நூலில் இதுபற்றி ஒரு சுவாரஸ்யமான பாடல் உள்ளது:
‘துணைஎன்ப காமவிருந்து துய்ப்பார், தோமில்
இணைவிழைச்சின் மிக்குஆகார் ஆகல், புணைதழீஇக்
கூட்டும், கடுமிசையான் கட்டியில் கொண்டற்றால்
வேட்டபோழ்து ஆகும் அணி’
ஓர் ஆணும் பெண்ணும் மணம் செய்துகொள்வது எதற்காக என்றால், இருவரும் சேர்ந்து நல்ல செயல்களைச் செய்யவேண்டுமாம். முக்தியை அடைவதற்கான பணிகளில் ஈடுபடவேண்டுமாம். அதில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளவேண்டுமாம்!
அப்படியானால், இளைஞர்கள் உருவத்தைப் பார்த்து மயங்குகிறார்களே, புதுமணத் தம்பதியர் உடல்சேர்க்கையில் ஆர்வத்தோடு இருக்கிறார்களே, அதெல்லாம் தவறா?
இல்லை. அதெல்லாம் அவசியம். அவைதான் அவர்களை நெருங்கவைக்கும் என்கிறார் இந்தப் புலவர். அப்படி நெருங்கியபின், உருப்படியாக உலகுக்கு ஏதாவது செய்யத்தொடங்குவார்கள், ஒருவருக்கொருவர் துணையாக நல்லவழியில் சேர்ந்து வாழத் தொடங்குவார்கள்.
இதைச் சொல்வதற்கு அவர் பயன்படுத்தும் உவமை, கசப்பான மருந்தை இனிப்பில் தோய்த்துத் தருவது!
அதாவது, ஆணும் பெண்ணும் நல்ல விஷயங்களைச் செய்வதற்காக ஒன்றுகூடுங்கள் என்றால், யாரும் கேட்கமாட்டார்கள். ஆகவே, இனிப்புப் பூச்சுபோல இளவயது இனக்கவர்ச்சியைப் பயன்படுத்தி அவர்களை ஒருங்கிணைத்துவிட்டு, பின்னர் நல்ல வழியில் செலுத்துகிறது வாழ்க்கை!
இதையே இன்னொரு கோணத்தில் திருமந்திரம் சொல்கிறது:
‘கரும்பும் தேனும் கலந்ததோர் காயத்தில்
அரும்பும் கந்தமும்ஆகிய ஆனந்தம்
விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்
கரும்பும் கைத்தது, தேனும் புளித்ததே!’
இங்கே திருமூலர் கரும்பு, தேன் என்று சொல்வது சாப்பிடுவதையும் உறங்குவதையும்தான். ஆரம்பத்தில் அவை இனிப்பாக இருக்கும், அதுவேதான் வாழ்க்கையின் நோக்கம் என்று தோன்றும். நம் உடல் அதற்குப் பழகிவிடும். இவையெல்லாம் நிரந்தரமில்லை என்று புரிந்துகொண்டபிறகு, கரும்பு கசக்கும், தேன் புளிக்கும். இறைவனிடம் உள்ளம் செல்லும்!
பாரதியார் கண்ணன் பாட்டில் கிட்டத்தட்ட இதே வரிகள் வருகின்றன, ஒரு பெண்ணின் உள்ளக்கருத்தாக:
‘பாலும் கசந்ததடி, சகியே,
படுக்கை நொந்ததடி,
கோலக் கிளிமொழியும், செவியில்
குத்தல் எடுத்ததடி!’
என்ன ஆயிற்று அந்தப் பெண்ணுக்கு?
‘கனவு கண்டதிலே, ஒருநாள்
கண்ணுக்குத் தோன்றாமல்,
இனம் விளங்கவில்லை, எவனோ
என்அகம் தொட்டுவிட்டான்!’
அதனால், அவள் மனமே மாறிப்போனது:
‘இச்சை பிறந்ததடி, எதிலும்
இன்பம் விளைந்ததடி,
அச்சம் ஒழிந்ததடி, சகியே,
அழகு வந்ததடி!’
யார் அந்தக் காதலன்?
‘எண்ணியெண்ணிப் பார்த்தேன், அவன்தான்
யாரெனச் சிந்தைசெய்தேன்,
கண்ணன் திருவுருவம், அங்ஙனே
கண்ணின்முன் நின்றதடி!’
இதே பாரதியார் இதே கண்ணனைப் பாடிய இன்னொரு பிரபலமான வரி:
‘தீக்குள் விரலைவைத்தால், நந்தலாலா
நின்னைத் தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா!’
தீயில் வைத்த விரல் இனிப்பதாக பாரதியார் சொல்லவில்லை, இன்பம் என்றுதான் சொன்னார். அறிவுமதி அதனை ஒரு திரைப்பாடலில் அழகுற விரித்துரைக்கிறார்:
தீயில் சுடர் தொட,
இனித்திடும் அனுபவம்,
நம் காதல்!
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.