அன்புடை நெஞ்சம்: அத்தியாயம்-12

மலைப்பக்கத்திலே புலிக்கும் யானைக்கும் சண்டை.பார்ப்பதற்குக் குண்டாக இருந்தாலும், யானைக்குப் பலம் அதிகம். சில சமயம்
Updated on
5 min read


லைப்பக்கத்திலே புலிக்கும் யானைக்கும் சண்டை. பார்ப்பதற்குக் குண்டாக இருந்தாலும், யானைக்குப் பலம் அதிகம். சில சமயம் இந்தச் சண்டையில் யானை ஜெயிக்கிறது, சிலசமயம் புலி ஜெயிக்கிறது.

அன்றைக்கு யானையின் தினம். புலி தோற்றுவிடுகிறது.

அது வலிமையான புலி, சின்னக் கைகள், ஆனால் அவற்றில் நிறைய பலம், ஓங்கி அடித்தால் ஒன்றே முக்கால் டன் அடி விழும். எந்த மிருகமும் சுருண்டு விழவேண்டியதுதான்.

ஆனால் என்ன செய்ய? யானை ஜெயித்துவிட்டதே! அந்தப் புலி பதுங்குகிறது. ‘வேற எதாவது சாப்பிடக் கிடைக்குமா?’ என்று தேடுகிறது. ‘யானைக்குப் பதில் ஒரு நாய் கிடைச்சாக்கூடப் போதும்’ என்று எண்ணுகிறது.

அந்த நேரத்தில் ஓர் இளைஞன் அந்தப் பக்கமாக வருகிறான். அவன் தன் காதலியைப் பார்க்கச் செல்கிறான். புலியின் கண்ணில் அவன் பட்டால் என்ன ஆகும்!

அவன் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. தொடர்ந்து நடக்கிறான். தன் காதலியைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை அவனைச் செலுத்துகிறது.

புலிமீது அவனுக்குப் பயமில்லாமலிருக்கலாம். இப்படி ஆபத்தான ஒரு பாதையில் அவன் வருவதை அவனுடைய காதலி தாங்குவாளா? தன் காதலன் நலமாக இருக்கவேண்டுமே என்று அவள் நினைக்கிறாள்.

அதற்காக, அவனை வரவேண்டாம் என்று சொல்லிவிடலாமா?

அதுவும் சாத்தியமில்லை. தினமும் அவனைப் பார்த்தாகவேண்டும். அப்போதுதான் அவளுக்கு மகிழ்ச்சி.

பேசாமல், பகலில் சந்திக்கலாமே.

சிரமம்தான். பகலில் அவள் வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கு அனுமதி கிடைக்காதே. அந்த நேரத்தில் அவன் வீட்டுக்கு வந்தால் எல்லாரும் பார்த்துவிடுவார்களே.

ஒருநாள், அவளுடைய தாய் அவளை அழைக்கிறாள், ‘உனக்கொரு வேலை சொல்லட்டுமா?’ என்கிறாள்.

‘சொல்லும்மா!’

’நம்ம வயல்ல, தினைப்பயிர் நல்லா விளைஞ்சிருக்கு. அதைக் கொத்தறதுக்குக் கிளிங்க நிறைய வருது!’

‘சரி!’

‘இனிமே, நீ தினமும் வயலுக்குப்போய், அந்தக் கிளிங்களைக் கவனமாப் பார்த்து விரட்டணும். சரியா?’

அவள் உள்ளம் துள்ளுகிறது. புலி செய்த பிரச்னை கிளியாலே தீர்ந்துவிட்டது என்று மகிழ்கிறாள். உடனடியாக இதற்குச் சம்மதிக்கிறாள். தோழியிடம் ஓடி வருகிறாள், ‘இன்னிக்கு ராத்திரி என் காதலன் என்னைச் சந்திக்க வரும்போது, நீ அவன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்’ என்கிறாள்.

‘என்ன சொல்லணும்?’

‘இனிமே என்னைப் பார்க்க அந்த ஆபத்தான வழியில ராத்திரி நேரத்துல வரவேண்டாம்ன்னு சொல்லணும்!’

‘அச்சச்சோ, அப்புறம்? நீங்க எப்படிச் சந்திப்பீங்க?’

‘கிளிங்களை விரட்டறதுக்கு நான் தினைவயலுக்கு வருவேன், அங்கே சந்திக்கலாம்ன்னு அதையும் அவன்கிட்ட சொல்லிடு!’ என்கிறாள் அவள்.

குறுந்தொகையில் மதுரைப்பெருங்கொல்லன் எழுதிய பாடல் இது:

‘வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர்

செல்க’ என்றோளே அன்னை என நீ

சொல்லின் எவனோ தோழி! ‘கொல்லை

நெடும்கை வன்மான் கடும்பகை உழந்த

குறும்கை இரும்புலிக் கோள்வல் ஏற்றை

பைங்கண் செந்நாய் படுபதம் பார்க்கும்

ஆரிருள் நடுநாள் வருதி,

சார நாட, வாரலோ!’ எனவே.

இந்தப் பாடலில் வரும் ‘குறும்கை இரும்புலிக் கோள்வல் ஏற்றை’ என்ற வரி மிக அழகானது. புலியை வர்ணிக்கும் இதே வரியை அப்படியே கையாண்ட பிற சங்கப் பாடல்கள் உண்டு.

இன்னொரு யானை, இன்னொரு புலி.

ஆனால், இந்தமுறை சண்டையில் புலி வென்றுவிடுகிறது. யானையைக் கொன்றுவிடுகிறது.

இதனால், அந்த யானையின் துணையாகிய பெண் யானை வருந்துகிறது, புலம்புகிறது. அப்படிப்பட்ட மலைநாட்டின் தலைவன் அவன்.

தன் காதலிக்கு அவன் பலவிதமான வாக்குறுதிகளை வழங்குகிறான், ‘சீக்கிரத்துல உன்னைப் பெண் கேட்டுத் திருமணம் செஞ்சுக்குவேன்’ என்பது அவற்றில் முக்கியமானது.

ஆனால், இந்த வாக்குறுதியை அவன் நிறைவேற்றவில்லை. அதனால், அவள் வருந்துகிறாள்.

ஊருக்குள் அவர்களைப்பற்றிப் பலவிதமான பேச்சுகள் தொடங்குகின்றன. அதெல்லாம் அவளைத் துன்புறுத்துகிறது. அவனோ எதுவும் நடக்காததுபோல் இருக்கிறான்.

ஒருநாள், வழக்கம்போல் இரவு நேரத்தில் அவன் அவளைச் சந்திக்க வருகிறான். ஆனால், அவர்கள் சந்திக்க இயலாதபடி, அதற்குப் பல தடைகள், ஊர்மக்கள் இன்னும் உறங்கவில்லை.

அவள் தவிக்கிறாள், ‘குறைந்தபட்சம் அவனைச் சந்திச்சுப் பேசிகிட்டிருந்தேன், அதுவும் இந்த ஊருக்குப் பொறுக்கலையா?’ என்று எண்ணுகிறாள், ‘சீக்கிரம் தூங்கினா என்னவாம்?’ என்று யோசிக்கிறாள். ‘எங்களுக்குக் கல்யாணம் ஆகிட்டா, இப்படி ஊர் தூங்கணும்ன்னு காத்திருக்கவேண்டியதில்லையே, எப்ப வேணும்ன்னாலும் சந்திச்சுப் பேசலாமே!’ என்று எண்ணுகிறாள். தன் காதலன் வீட்டுக்கு வெளியே காத்திருப்பதைப் பார்த்துவிட்டு, தோழியிடம் பேசுவதுபோல் அவனிடம் பேசுகிறாள், ‘இந்த ஊருக்கு என்ன ஆச்சு?’

‘நான்தான் என் காதலன் சொன்ன வாக்குறுதியை நம்பி ஏமாந்தேன். தூக்கம் வராம மனவருத்தத்துல இருக்கேன்! இந்த ஊருமா காதல்வயப்பட்டிருக்கு? இது ஏன் தூங்காம இன்னும் முழிச்சுகிட்டிருக்கு?’

சீத்தலைச்சாத்தனார் எழுதிய குறுந்தொகைப் பாடல் இது:

பூநுதல் இரும்பிடி புலம்பத் தாக்கித்

தாழ்நீர் நனந்தலைப் பெருங்களிறு அடூஉம்

கல்அக வெற்பன் சொல்லின் தேறி

யாம் என்நலன் இழந்தனமே, யாமத்து

அலர்வாய்ப் பெண்டிர் அம்பலோடு ஒன்றிப்

புரையில் தீமொழி பயிற்றிய உரையெடுத்து

ஆனாக் கௌவைத்துஆகத்

தான்என் இழந்தது இவ்அழுங்கல் ஊரே?

இன்னொரு புலி. அதற்கு ரொம்பப் பசி. ஆகவே, யானையை வேட்டையாடுவதற்கு உடம்பில் தெம்பு இல்லை.

‘அதனால் என்ன? ஒரு யானைக்குட்டியை வேட்டையாடலாமே’ என்று நினைக்கிறது புலி, ‘என்னதான் சின்ன சைஸில் இருந்தாலும், அதுவும் யானைதானே?’

அப்போது, அதன் கண்ணில் ஒரு யானைக்குட்டி படுகிறது. தத்தக்கா புத்தக்கா என்று அது நடந்துவருகிறது.

அதைப் பார்த்த புலி, பலாப்பழம் தொங்கும் மரத்தின் நிழலில் ரகசியமாகப் பதுங்குகிறது. எப்போது அதன்மீது பாயலாம் என்று பார்க்கிறது.

இந்தக் காட்சியை வர்ணித்து, ‘அப்படிப்பட்ட மலைநாட்டின் தலைவன், உன் காதலன்’ என்று ஒரு காதலியிடம் பேசுகிறாள் ஒரு தோழி.

அவள் சொல்வதை வெளியே நின்று அந்தக் காதலன் கேட்டுக்கொண்டிருக்கிறான். அதன் உட்பொருள் அவனுக்குப் புரியுமா?

அடுத்த வரியில் விஷயத்தைப் போட்டு உடைத்துவிடுகிறாள் தோழி, ‘பெண்ணே, உன்னுடைய காதலன் உன்னைத் திருமணம் செய்துகொள்ள வரவில்லை, அதனால் நீ வாடியிருக்கிறாய்! ஒரு தளிர்போல மென்மையாக இருக்கும் உன் மேனி, இப்போது பறிக்கப்பட்ட தளிரைப்போல ஆகிவிட்டது. மெலிந்துபோயிருக்கிறாய். மிகவும் வருந்துகிறாய். இது சரியா?’

ஐங்குறுநூற்றில் கபிலர் எழுதிய பாடல் இது:

நெடும்புதல் கானத்து மடப்பிடி ஈன்ற

நடுங்குநடைக் குழவி கொளீஇய பலவின்

பழம்தூங்கு கொழுநிழல் ஒளிக்கும் நாடற்குக்

கொய்திடு தளிரின் வாடிநின்

மெய்பிறிது ஆதல் எவன்கொல் அன்னாய்!

புலி வேகமான மிருகம், வலிமை வாய்ந்த மிருகம் என்பதால், அதை ஆணுக்கு உவமையாகச் சொல்வது வழக்கம்.

அதேபோல், மருண்ட பார்வை, அழகிய தோற்றம் கொண்ட மான், பெண்ணுக்கு உவமை ஆகும்.

ஒரே பிரச்னை, புலி மானை வேட்டை ஆடிவிடுமே.

ஆனால், அந்தக் கதை காட்டில்தான் என்கிறார் பா. விஜய். நாட்டுக்குள், மான்தான் புலியை வேட்டையாடும். காட்டில் நடக்கும் கதை வேறு, கட்டிலில் நடக்கும் கதை வேறு!

‘புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில்,

மான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில்!’

வைரமுத்து ‘கட்டில் என்பதும் ஒரு காடுதான்’ என்கிறார். ‘கட்டில் காட்டுப் புலி’ என்று ஆணை வர்ணிக்கிறார் அவர்.

அந்தக் காதலன் தன் காதலியை ‘வெள்ளாடு’ என்கிறான். ஏன்?

‘முத்தமிடும்போது என் மீசையை மேய்கிறாயே!’ என்று சிரிக்கிறான் அவன், ‘இது என்ன புல்லா? இதில் ருசியுண்டா? ஆசை கொண்ட வெள்ளாடே, உனக்கு அவ்வளவு பசியா?’

‘நீமட்டும் என்னவாம்? கட்டில் காட்டில் புலியாகக் கலகம் செய்கிறாயே’ என்று அவன்மீது சாய்கிறாள் அவள்.

‘ஆசைப்பட்ட வெள்ளாடே,

மீசைப்புல்லை மேயாதே!

மேலும் மேலும் பசியா? என்

மீசையில் என்ன ருசியா?

கலகம் செய்வது சரியா? நீ

கட்டில் காட்டுப் புலியா?’

ஒருத்தி காதல்வயப்பட்டிருக்கிறாள். அதனால், அவளுடைய உடலில் பல மாற்றங்கள், மெலிந்துபோகிறாள், ஏக்கத்தில் வாடியிருக்கிறாள்.

இதைப் பார்த்த அவளுடைய தாய்க்குக் குழப்பம், ‘என் மகளுக்கு ஏதோ ஆகிவிட்டது’ என்று கவலைப்படுகிறாள். அவளுடைய நோயைத் தீர்ப்பதற்காக, வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்கிறாள்.

ஆனால், இதனால் அந்தப் பிரச்னை சரியாகவில்லை. அவள் இன்னும் வருத்தத்தில்தான் இருக்கிறாள்.

ஒருநாள், காதலன் அவளைப் பார்க்க வருகிறான். அவனுக்குப் புரியும்வண்ணம் நடந்ததைச் சொல்கிறாள் தோழி.

‘பெண்ணே, உன்னுடைய நோய் எதனால் ஏற்பட்டது என்று எனக்குத் தெரியும், இதைச் சரி செய்யும் வழியும் எனக்குத் தெரியும். நான் சென்று உன் காதலனிடம் பேசட்டுமா?’

‘அவனுடைய மலைநாட்டில், புலியும் யானையும் சண்டையிடுகின்றன. அதில் புலி வென்றுவிடுகிறது, ஆண் யானையை அது கொன்றுவிடுகிறது.’

‘இதனால், பெண் யானை வருந்துகிறது, நெய்தலின் பசுமையான இலை போன்ற காது கொண்ட தன்னுடைய குட்டியை அணைத்துக்கொண்டு நிற்கிறது!’

‘அப்படிப்பட்ட நாட்டின் தலைவன், அவன் உன்னைப் பெண் கேட்டு வரவில்லை. அதனால்தான் நீ இப்படி நோயில் இருக்கிறாய். இந்த விஷயத்தை நான் அவனிடம் சொல்லட்டுமா? சொன்னால் உன் துயரம் தீருமல்லவா?’

குறுந்தொகையில் நல்வெள்ளியார் எழுதிய பாடல் இது:

பெரும்களிறு உழுவை அட்டுஎன இரும்பிடி

உயங்குபிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது

நெய்தல் பாசுஅடை புரையும் அம்செவிப்

பைதல்அம் குழவி தழீஇ ஒய்என

அரும்புண் உறுநரின் வருந்தி வைகும்

கானகநாடற்கு இது என யான் அது

கூறின் எவனோ, தோழி! வேறுஉணர்ந்து

அணங்குஅறி கழங்கின் கோட்டம் காட்டி

வெறிஎன உணர்ந்த உள்ளமொடு மறிஅறுத்து

அன்னை அயரும் முருகுநின்

பொன்நேர் பசலைக்கு உதவாமாறே!

ஒரு காதலி, அவளுடைய காதல் விஷயம் இன்னும் பெற்றோருக்குத் தெரியாது.

இந்த நேரத்தில், யாரோ அவளைப் பெண் கேட்டு வருகிறார்கள். அவள் அதிர்ச்சியடைகிறாள்.

தன் காதலனைத்தவிர, இன்னொருவரை அவளால் மனத்தால்கூட நினைக்க இயலாது. ஆனால், அவன் இன்னும் அவளைப் பெண் கேட்கவில்லை. அவளாகச் சொல்வதற்கும் கூச்சம். இப்போது என்ன செய்வது?

அவளுடைய தவிப்பைப் புரிந்துகொண்ட தோழி, அவளுக்காகக் காதலனிடம் பேசுகிறாள், ‘புலியும் பன்றியும் சண்டை போட்டுப் பார்த்திருக்கியா?’

‘பார்த்திருக்கேன், அதுக்கு என்ன?’

‘புலியோட மோதும் தகுதி ஒரு புலிக்குதான் உண்டு. ஒரு பன்றி போய் அதோட மோதறது அசிங்கமில்லையா?’ என்கிறாள் தோழி. ‘உன் காதலியை மணக்கிற தகுதி உனக்குதான் இருக்கு. ஆனா, நீ அவளைப் பெண் கேட்டு வரலை, அதனால, கண்டவங்களும் வந்து அவளைப் பெண் கேட்கறாங்க. உன் காதலி வெட்கப்படறா, அவ கண்ணுல தண்ணி ஆறா ஓடுது. நீ என்ன செய்யப்போறே?’

தகுதியில்லாத பன்றிகள் சத்தமிட அனுமதிக்காமல், புலி ஆட்சி செய்யவேண்டும், அவற்றை வேட்டையாடி வெல்லவேண்டும் என்கிறாள் தோழி. ஐங்குறுநூற்றில் கபிலர் எழுதிய பாடல் இது:

சிறுகண் பன்றிப் பெரும்சின ஒருத்தலொடு

குறுக்கை இரும்புலி பொரூஉ நாட!

நனிநாணுடைமையம், மன்ற

பனிப்பயந்தன நீ நயந்தோள் கண்ணே!

இந்தப் பாடல்களைக் கவனித்தால் ஒரு விஷயம் புரியும், திரைப்படப் பாடல் வரிகளில் வரும் ‘வேட்டை’ கற்பனையானது, அது காம விளையாட்டுக்கு உவமையாகப் பயன்படுகிறது.

ஆனால், சங்கப் பாடல்களில் வரும் ‘வேட்டை’ நிஜமானது. புலி ஒரு யானையையோ நாயையோ நிஜமாகத் தாக்குகிறது, தன் வலிமையைக் காட்டிக் கொல்கிறது. அதனால், அந்த மிருகத்தின் துணை வருந்துகிறது.

இந்த வருத்தத்தை அந்தப் புலி காணப்போவதில்லை. அது தன் பசியைத் தணித்துக்கொண்டுவிட்டது, அவ்வளவுதான்.

சங்கப் புலவர்கள் இந்த இயல்பான காட்சியைக் காண்பித்து, அதன்மூலம் ஆணின் மனநிலையைச் சொல்கிறார்கள். அவனுக்குக் காதல் வேண்டும், அவன் வந்து பார்த்துவிட்டுச் சென்றபிறகு அந்தப் பெண் அனுபவிக்கும் மனோநிலையை அவன் உணர்வதில்லை. ஆகவே, காதலியோ தோழியோ அதைச் சொல்லவேண்டியிருக்கிறது.

இந்தக் காலகட்டம் மாறி, ஆணும் பெண்ணும் காதலில் சமநிலை, ஆணின் கருணையைப் பெண் எதிர்பார்த்திருக்கவேண்டியதில்லை என்கிற சூழல் ஏற்பட்டபிறகு, புலி வேட்டையாடும் உவமை கேளிக்கையான விஷயமாகிவிடுகிறது.

ஒரு காதலன், தன் காதலியைக் ‘கிளி’ என்கிறான். ’உன் உதடு சிவந்திருக்கிறதே, அதை நான் வெளுக்கட்டுமா?’ என்கிறான்.

‘எப்படி வெளுப்பாய்?’

‘என் உதடுதான் துவைக்கும் இயந்திரம்’ என்று குறும்பாகச் சொல்கிறான் அவன்.

’நான் கிளி என்பது உண்மைதான். ஆனால், நீ புலியாச்சே, உன்கிட்ட நான் எப்படி வருவேன்?’ என்கிறாள் அவள்.

‘நான் சைவப்புலி, எனக்கு இந்தக் கிளிதான் ஜோடி!’ என்று குழைகிறான் அவன்.

’அப்படீன்னா, நீ என்னோட செல்லப்புலி’ என்கிறாள் அவள், ‘உனக்கு மாமிசம் வேணுமா, என்னோட பூவாசம் வேணுமா? உண்மையைச் சொல்லு!’

இந்தத் திரைப்பாடல் வரிகள் கபிலனுடையவை:

‘பச்சக்கிளி உதட்ட

இச்சுதந்து வெளுப்பேன்!

சிங்காரச் சின்னப்புலியே, என்னைப்பார்த்து

சீறாதே செல்லப்புலியே,

பூவாசம் வேணுமா?

மாமிசம் வேணுமா? என்கிட்ட சொல்லு!’

(தொடரும்)

***

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com