அன்புடை நெஞ்சம்: அத்தியாயம்- எட்டு

அவள் செந்தாழங்காட்டுக்குள் நிற்கிறாள். சிரிக்கிறாள். ஆடையை வீசிநடக்கிறாள். கண்களால் பேசுகிறாள்.
Updated on
5 min read


வள் செந்தாழங்காட்டுக்குள் நிற்கிறாள். சிரிக்கிறாள். ஆடையை வீசி நடக்கிறாள். கண்களால் பேசுகிறாள். ஆனால், அவன் அருகே சென்றால் முறைக்கிறாள். ‘யார்ய்யா நீ?’ என்கிறாள்.

அவன் சிரிக்கிறான். ‘அடியே, தெரியாதமாதிரி நடிக்காதே, எனக்கு நீதான் ஜோடி’ என்கிறான்.

‘அப்படியா? யார் சொன்னாங்க?’

‘கடவுளே சொன்னார், அவர்தான் உன்னை எனக்காகத் தந்தார்’ என்கிறான் அவன்.

‘என்னை முட்டாளாக்கிட்டு ஓடிடலாம்ன்னு பார்க்காதே. அது நடக்காது, எனக்கு நீதான், உனக்கு நான்தான்.’

கொஞ்சம் அடாவடியான காதல் ஒரு ஸ்டைல். சினிமா பாணி நாயகர்களுக்கு அதிகம் பொருந்தும். அது சினிமா பாணி கதாநாயகிகளுக்கு அதிகம் பிடிக்கும்.

தந்தானே, தந்தானே, தந்தானே, ஆண்டவன் சரியான ஜோடி தந்தானே.

செந்தாழங்காட்டுக்குள்ளே நின்னுகிட்டு, நீ
சிரிச்சுச் சிரிச்சு என்னென்னவோ பண்ணிக்கிட்டு,
முந்தானையால் வீசிக்கிட்டு,
முழியாலே பேசிக்கிட்டு, என்னை
முட்டாளுன்னு பட்டா போட்டு
சிட்டாப் பறந்துபோகாதே!


பப்பாளிப்பழம்போல் நீயும் இருக்குறே, என்னைப்

பாத்துப் பாத்து ஏனோ இப்படி மொறைக்கிறே!

பட்டாடையைக் கட்டிகிட்டு, உன்

பவுசைக் காட்டி வெட்டிகிட்டு, என்னை

முட்டாளுன்னு பட்டா போட்டு

சிட்டாப் பறந்துபோகாதே!

இந்தப் பாடலை எழுதியவர் தஞ்சை ராமையாதாஸ். குறும்பாகப் பாடினாலும்,‘உனக்காகப் பொறுமையுடன் காத்திருக்கிறேன். அதைப் புரிந்துகொள்’ என்று நேசத்தோடு சொல்லி அவன் இறைஞ்சுவதைக் காட்டுகிறார்.

மானாம் பத்தினி உன்னைப் பாத்தா

மானம் பத்திக்குமா? நீ

தானா வந்தா ஜரிகை சேலை,

தாவணி தித்திக்குமா? அது

போனாப் போகட்டும் புரிஞ்சுக்கோ, என்

பொறுமையை நீ தெரிஞ்சுக்கோ, என்னை

சிட்டாப் பறந்துபோகாதே!‘

காதல் நிறைவேறுவதற்காக இப்படிக் கெஞ்சுகிற காதலன், அவள் சம்மதித்தபிறகு,களவு நேசத்தில் ஆசை வைத்துவிடுகிறான். அதாவது, ஊருக்குத் தெரியாமல் காதலிக்கிறான், அவளைத் திருமணம் செய்துகொள்வதைப்பற்றி விருப்பம் காட்டாமலே இருக்கிறான்.

அவள் நேரடியாகக் கேட்டுவிடுகிறாள், ‘என்னை எப்ப கல்யாணம் செஞ்சுக்கப்போறே?’

‘அதுக்கென்ன அவசரம்?’

‘எப்பக் கேட்டாலும் இப்படித் தட்டிக்கழிச்சா என்ன அர்த்தம்?’

‘அடியே, எனக்கு உன்மேல இருக்கிற காதலைச் சந்தேகப்படறியா?’

‘காதல்ன்னு சொன்னா இனிப்பாதான் இருக்கு. ஆனா, கல்யாணம்ன்னு வந்ததும் பேச்சை மாத்தறியே, அதான் ஏன்னு புரியலை!’

காதல் எந்தன்மீதில் என்றால்

காதில் இனிக்கிறது, தாலி

கட்டிக்கொள்ள

தட்டிக்கழித்தால், மனது

கவலைப்படுகிறது!

‘நீ என்மேல வெச்சிருக்கிற நம்பிக்கை அவ்ளோதானா?’ என்கிறான் அவன்.

‘எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரவேண்டாமா?’

’கட்டிக்கரும்பே! கனியே! உன்னைத்

தட்டிக்கழிப்பேனா? நேரம்,

காலம் பார்த்து முறையாய்ப்

பெண்ணும் கேட்டுக்கவேண்டாமோ?

நாளும் பார்த்துக்கவேண்டாமோ?’

‘இதுக்கெல்லாம் நேரம் பார்க்கணுமா? சட்டுன்னு என்னைப் பொண்ணு கேட்டு வாய்யா’ என்கிறாள் அவள். ‘கல்யாண வயசு வந்துட்டா வீட்டுல பொண்ணை வெச்சுகிட்டு இருப்பாங்களா? வேற ஒருத்தருக்கு என்னைக் கல்யாணம் பேசலாம்ன்னு வீட்டுல யோசிக்கறதுக்குள்ள நீ வந்து பேசினாதான் நாம நினைச்சது நடக்கும்!’

‘காலம், நேரம் கடந்தால் இனிமேல்,

உனக்கு நானில்லை, அன்பே,

வேலி போட்ட நிலம்போலக் காக்கத்

தாலி போடோணும், கழுத்தில்

மாலை சூடோணும்!’

‘தாலிதான் பெண்ணுக்கு வேலி’ என்று பழமை பேசுகிறாளே இந்தக் காதலி என்று எண்ணவேண்டாம். உடுமலை நாராயணகவி எழுதிய பழைய பாடல்தான் இது. ஆனால், இங்கே வரும் ‘வேலி’யின் அர்த்தம் வேறு. மற்ற யாரும் அவளைப் பெண் கேட்டு வராதபடி தடுப்பதற்கு ஒரு தாலியைக் கட்டிவிட்டால், அதுதான் வேலி என்கிறாள் அவள். காதலனும் அதை ஏற்றுக்கொள்கிறான்.

‘எண்ணம்போலே எல்லாம் நடக்கும், இனிமேல் எதுவும் தப்பாது.’

இப்படி அவன் பாடியபிறகும், அவள் முகத்தில் சோர்வு தெரிகிறது. ஆகவே, அவளைக் குஷிப்படுத்துவதற்காக இப்படிக் கேட்கிறான்:

‘இன்னும் என்ன என்ன வேணும், கேளு, நீ என்னை இப்போது!’

திருமணக் கனவில் இருக்கும் காதலி தன்னுடைய விருப்பங்களைப் பட்டியலிடத் தொடங்குகிறாள். ‘வெறுமனே தாலி கட்டினால் போதாது, நமக்கென்று ஒரு வீடு வேண்டும், குடும்பம் நடத்தத் தேவையான சவுகர்யங்கள் வேண்டும்.’

‘வீட்டைக் கட்டிக் குடித்தனம் நடத்திப்

பாத்துக்கவேணும்,

பட்டினில் மெத்தை, கட்டில் அங்கே

போட்டுக்கவேணும்.’

அவள் கட்டில் என்றதும், இவன் தொட்டிலை நினைக்கிறான். ‘நம் குழந்தையைத் தாலாட்ட நீ பாடுவதை நான் கேட்கவேண்டும்’ என்கிறான்:

‘முகத்துக்குமேலே முகத்தைவெச்சு

ஒண்ணு கொடுக்கவேணும்,

கொடுத்ததைத் திருப்பி எடுக்கவேணும், பிறகு

தொட்டில் போடவேணும்,

குழந்தையைத் தூங்கவைக்கவேணும்,

நீயும் பாட்டுப் பாடவேணும்!’

கல்யாணக் கனவுகள் எல்லாக் காதலர்களுக்கும் இருக்கும். அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதைப் பல கவிஞர்கள் விதவிதமாக எழுதியிருக்கிறார்கள், திரைப்படப் பாடல்களும் அதனைப் பதிவு செய்திருக்கின்றன.

ஆனால் எத்தனை பேசினாலும், அது நிஜமாகப்போவதற்கான அடையாளம் திருமணப் பேச்சுதான். காதலன் காதலியைப் பெண் கேட்டு வரும்போதும், அதற்குப் பெற்றோர் சம்மதிக்கும்போதும் மகிழ்ச்சி பொங்கும். அதனை ஒரு தோழி அழகாகச் சொல்வதைக் காட்டுகிறார் கபிலர். அகநானூறில் வரும் பாடல் இது.

இந்தக் காதலனும் காதலியும் நெடுநாளாகச் சந்தித்துவந்திருக்கிறார்கள்.

ஆனால், அவன் திருமணப் பேச்சை எடுக்கவே இல்லை. அதை எண்ணிக் காதலி ஏங்கிக் காத்திருக்கிறாள்.

காதலி வருந்துவதைப் பார்த்துத் தோழிக்கும் வருத்தம். அவள் முகத்தில் சிரிப்பைப் பார்ப்பதற்காக இவளும் காத்திருக்கிறாள்.

ஒருநாள், காதலன் அவளைப் பெண் கேட்டு வருகிறான். இதை அறிந்த தோழிக்கு மகிழ்ச்சி. ஓடிச் சென்று அவளிடம் விஷயத்தைச் சொல்கிறாள். ‘மழைக்காலத்துல ஊர்முழுக்கப் பித்திகம்ங்கற பூ பூத்திருக்கும். நிறைய பூத்திருக்கறதால, அதை யாரும் பறிக்கமாட்டாங்க, நல்லா மணம் வீசிக்கிட்டுச் செடியிலயே இருக்கும், அந்தப் பூமாதிரி உன்னோட குளிர்ந்த கண், அதோட தளிர்மாதிரி உன்னோட மேனி!’

‘எதுக்கு திடீர்ன்னு இப்படி ஐஸ் வைக்கறே? விஷயத்தைச் சொல்லு!’ என்கிறாள் காதலி. ‘நானே கவலைல இருக்கேன்!’

‘இனிமே உனக்குக் கவலையே வேணாம், உன் காதலன் எப்ப வருவான்னு அவனோட மலைகளைப் பார்த்து ஏங்கிகிட்டிருந்தியே, அவன் வந்துட்டான். உன் பெற்றோரைச் சந்திச்சு உன்னைக் கல்யாணம் செஞ்சுக்க அனுமதி கேட்டுகிட்டிருக்கான்.’

இதைக் கேட்டுக் காதலியின் முகம் மலர்கிறது. தோழி தொடர்ந்து சொல்கிறாள், ‘ஏய், உங்க கல்யாணம் நடக்கப்போகுதுன்னு தெரிஞ்சதும் என் மனசு எவ்ளோ சந்தோஷமா இருக்குன்னு தெரியுமா? ரொம்ப நாள் மழை பெய்யாம, நாடுமுழுக்க வறட்சி வந்து, உழவுத் தொழிலே நடக்காம, துளி பசுமை கண்ணுல படாம எல்லாரும் வருத்தத்துல இருந்த ஒரு நாட்டுல, திடீர்ன்னு பெரிய மழை பெஞ்சா எப்படியிருக்கும்! வெப்பம் தகிச்சுகிட்டிருந்த குளங்கள்ல அதுவரைக்கும் பறவைங்கதான் தங்கிகிட்டிருந்தது, ஆனா இப்போ, அங்கெல்லாம் தண்ணி நிரம்பியிருந்தா எப்படியிருக்கும்! அதைப் பார்த்து இந்த ஊரே சந்தோஷப்படுமில்லையா? அதுபோல என் மனம் இப்ப நிறைஞ்சிருக்கு!’

மலிபெயல் கலித்த மாரிப் பித்திகத்து

கொயல்அரு நிலைய பெயல்ஏர் மண முகைச்

செவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக்கண்

தளிர் ஏர் மேனி மாஅயோயே,

நாடு வறங்கூர, நாஞ்சில் துஞ்சக்

கோடை நீடிய பைதறு காலைக்

குன்று கண்டன்ன கோட்ட யாவையும்

சென்று சேக்கல்லாப் புள்ள உள்இல்

என்றூழ் வியன் குளம் நிறைய வீசிப்

பெரும்பெயல் பொழிந்த ஏம வைகறைப்

பல்லோர் உவந்த உவகை எல்லாம்

என்னுள் பெய்தத்தன்றே, சேண்இடை

ஓங்கித் தோன்றும் உயர்வரை

வான்தோய் வெற்பன் வந்தமாறே!

காதலுக்குப் பலர் பலவிதமான உவமைகளைச் சொல்லியுள்ளார்கள். அறிவுமதி அதனைச் ‘சாலை’ என்கிறார். அதுவும், ‘வேகத்தடை இல்லாத சாலை’யாம்!

வேகத்தடை இல்லாத ஒரு சாலையில் வேகமாகச் செல்லும் வாகனமொன்றைக் கற்பனை செய்துகொண்டிருக்கும்போதே, அடுத்த உவமையை முன்வைக்கிறார், ‘சாரல் மழை!’

இத்தனைக்கும் அவனுடைய சாரல் மழைபோன்ற காதல் வேகத்தை அவள் நாணக் குடையால் தடுக்கப் பார்க்கிறாள். ஆனாலும் பயன் இல்லை, மழை அவளுடைய வேர்வரைக்கும் நனைத்துவிடுகிறது.

இத்தனை மழையிலும், அவளுக்குத் தாகமெடுக்கிறது. அதை எண்ணிச் சிலிர்க்கிறாள். கை வளையல்கூட அவளைப் பார்த்துச் சிரிக்கிறது. ஆசை பசியோடு இருக்கிறது, இளமை விருந்தை எதிர்பார்க்கிறது, அதற்கு முன்னுரையாக ஒரு முத்தம் வேண்டி அவன் முகம் பார்த்து நிற்கிறாள்.

காதல்வழிச் சாலையிலே

வேகத்தடை ஏதுமில்லை,

நாணக்குடை நீ பிடித்தும்

வேர்வரைக்கும் சாரல் மழை,

தாகம் வந்து பாய் விரிக்க,

தாவணிப்பூ சிலிர்க்கிறதே,

மோகம் வந்து உயிர் குடிக்க,

கை வளையல் சிரிக்கிறதே,

ஆசை இங்கு பசித்திருக்கு,

இளமைக்கென்ன விருந்திருக்கா?

முத்தம் சிந்தச் சிந்த ஆனந்தம்தான்!

பாரதியாரின் புகழ் பெற்ற பாடல்களில் ஒன்று, ‘மூன்று காதல்’.

தலைப்பைப் பார்த்து அவசரப்படவேண்டாம். முழுப் பாடலையும் வாசித்தால் பாரதியார் சொல்லும் மூன்று காதல்கள் எவை என்று புரியும்.

முதலாவதாக, மிக இளம் வயதிலேயே காதல்வயப்படுகிறார் பாரதி. ஒரு பெண்ணைக் கண்டு மயங்கிவிடுகிறார். பள்ளிப் படிப்பில் மனம் செல்லவில்லை. அவள்மீதே ஆசையுடன் இருக்கிறார்.

அந்தப் பெண், வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பவள், மலர்ந்த முகம், கையில் வீணை, ஏடுகள், ஞானம் பொழியும் தன்மை... கலைமகளைதான் தன்னுடைய முதல் காதலி என்கிறார் பாரதியார். அதை மிகவும் ரசனையோடு விளக்குகிறார்.

பிள்ளைப் பிராயத்திலே, அவள்

பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டேன், அங்கு

பள்ளிப் படிப்பினிலே, மதி

பற்றிடவில்லை எனிலும் தனிப்பட

வெள்ளை மலர்அணைமேல், அவள்

வீணையும் கையும் விரிந்த முகமலர்

விள்ளும் பொருள்அமுதும் கண்டேன்,

வெள்ளை மனது பறிகொடுத்தேனம்மா!


ஆடிவருகையிலே, அவள்

அங்கொரு வீதி முனையில் நிற்பாள்; கையில்

ஏடு தரித்திருப்பாள், அதில்

இங்கிதமாகப் பதம் படிப்பாள், அதை

நாடி அருகு அணைந்தால் பல

ஞானங்கள் சொல்லி இனிமைசெய்வாள், இன்று

கூடி மகிழ்வம் என்றால், விழிக்

கோணத்திலே நகை காட்டிச் செல்வாளம்மா!

ஒருநாள், ஆற்றங்கரையில் கலைமகளைச் சந்திக்கிறார் பாரதியார். அவள் தரும் கவிதையை வாசித்து மகிழ்கிறார். ‘நாம் திருமணம் செய்துகொள்ளலாமே’ என்று கேட்கிறார்.

கலைமகளைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறார் என்றால், அவருக்கு எப்பேர்ப்பட்ட கலைத் தாகம் இருந்திருக்கவேண்டும்!

அவர் கேட்ட கேள்விக்குக் கலைமகள் பதில் எதுவும் சொல்லவில்லை. புன்னகை செய்துவிட்டுக் காணாமல் சென்றுவிடுகிறாள். அதன்பிறகு, அவள் நினைவிலேயே திரிகிறார் கவிஞர்.

ஆற்றங்கரைதனிலே, தனி

யானதோர் மண்டபமீதினிலே, தென்றல்

காற்றை நுகர்ந்திருந்தேன், அங்கு

கன்னி கவிதை கொணர்ந்துதந்தாள், அதை

ஏற்று மனம்மகிழ்ந்தே, ‘அடி,

என்னோடு இணங்கி மணம் புரிவாய்’ என்று

போற்றியபோதினிலே, இளம்

புன்னகை பூத்து மறைந்துவிட்டாளம்மா!

சித்தம் தளர்ந்ததுண்டோ? கலைத்

தேவியின்மீது விருப்பம் வளர்ந்து ஒரு

பித்துப் பிடித்ததுபோல், பகல்

பேச்சும் இரவில் கனவும் அவளிடை

வைத்த நினைவையல்லால், பிற

வாஞ்சையுண்டோ? வயது அங்ஙனமே இரு

பத்துஇரண்டாம்அளவும், வெள்ளைப்

பண்மகள் காதலைப் பற்றி நின்றேனம்மா!

பல ஆண்டுகள் கழித்து, பாரதிக்கு இரண்டாவது காதல் வருகிறது. ஒரு சுந்தரியைச் சந்தித்து அவளுடைய அழகுக்குத் தன்னுடைய சிந்தனையையே வரியாகக் கொடுத்துவிடுகிறார். ‘உன் பெயர் என்ன?’ என்று அவளைக் கேட்கிறார்.

‘திரு’ என்று பதில் வருகிறது.

அவளுடைய புன்னகை கவிஞர் நெஞ்சை ஈர்க்கிறது. எந்நேரமும் அவள் நினைவாகவே இருக்கிறார்.

ஆனால், இந்தத் திருமகள் காதலும் கவிஞர் மனத்தில் நீடித்து நிற்கவில்லை. அவரிடம் என்ன பிழை கண்டாளோ, அவள் அவரை விட்டுச் சென்றுவிடுகிறாள், மீண்டும் தவிப்பில் கிடக்கிறார் அவர்.

இந்த நிலையினிலே, அங்கொர்

இன்பப் பொழிலின் இடையினில் வேறொரு

சுந்தரி வந்துநின்றாள், அவள்

சோதி முகத்தின் அழகினைக் கண்டு என்றன்

சிந்தை திறை கொடுத்தேன், அவள்

‘செந்திரு’ என்று பெயர் சொல்லினாள்; மற்றும்

அந்தத் தினம்முதலா நெஞ்சம்

ஆரத் தழுவிட வேண்டுகின்றேனம்மா!

புன்னகை செய்திடுவாள், அற்றைப்

போதுமுழுதும் மகிழ்ந்திருப்பேன்; சற்று என்

முன் நின்று பார்த்திடுவாள், அந்த

மோகத்திலே தலை சுற்றிடும் காண்! பின்னர்

என்ன பிழைகள் கண்டோ, அவள்

என்னைப் புறக்கணித்து ஏகிடுவாள், அங்கு

சின்னமும் பின்னமுமா, மனம்

சிந்தி உளம்மிக நொந்திடுவேனம்மா!

காட்டுவழிகளிலே, மலைக்

காட்சியிலே, புனல் வீழ்ச்சியிலே,

நாட்டுப்புறங்களிலே, நகர்

நண்னு சில சுடர் மாடத்திலே, சில

வேட்டுவர் சார்பினிலே, சில

வீரரிடத்திலும் வேந்தரிடத்திலும்

மீட்டும் அவள் வருவாள், கண்ட

விந்தையிலே இன்பம் மேற்கொண்டுபோமம்மா!

அடுத்து, மூன்றாவது காதல். இம்முறை ராத்திரி நேரத்தில், ’கரும் பெண்மை அழகொன்று வந்தது’ என்கிறார் பாரதி. மகிழ்ச்சியோடு அருகே சென்று பார்த்தால், ‘அன்னை வடிவமடா’ என்று துள்ளுகிறார்.

ஆதி பராசக்திதான் அவள். ’இந்தப் பெண்ணின் அருள் கிடைத்துவிட்டால், உலகில் எல்லாமே கிடைத்துவிடுமே’ என்று பாரதி மகிழ்கிறார். ’இவளை நித்தம் தோத்திரம் பாடித் தொழுதிடுவோம்’ என்று நிறைவு செய்கிறார்.

பின்னொர் இராவினிலே, கரும்

பெண்மையழகொன்று வந்தது கண்முன்பு,

கன்னி வடிவம் என்றே களி

கண்டு சற்றே அருகில் சென்று பார்க்கையில்,

‘அன்னை வடிவமடா! இவள்

ஆதி பராசக்தி தேவியடா, இவள்

இன்னருள் வேண்டுமடா! பின்னர்

யாவும் உலகில் வசப்பட்டுபோமடா!’

’செல்வங்கள் பொங்கிவரும், நல்ல

தெள்ளறிவு எய்தி நலம் பல சார்ந்திடும்,

அல்லும் பகலும் இங்கே, இவை

அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று

வில்லை அசைப்பவளை, இந்த

வேலை அனைத்தையும் செய்யும் வினைச்சியை,

தொல்லை தவிர்ப்பவளை, நித்தம்

தோத்திரம் பாடித் தொழுதிடுவோமடா!’

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com