குடை பற்றி எழுத வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இருக்கவில்லை. ஆனால், பிரத்யேகமாக அறிமுகமாகியுள்ள நவீன குடையைப் பற்றி படித்தபோது குடை பற்றி தொடர்ச்சியாக யோசிக்கத் தோன்றியது. ஆனால், இது குடை பற்றியதல்ல; வடிவமைப்பு பற்றியது. வடிவமைப்பில் புதுமை செய்வது பற்றியது. புதுமை என்றால் வித்தியாசத்துக்காகச் செய்யப்படுவது அல்ல; சிறிய மேம்பாடு மூலம் நடைமுறை வாழ்க்கையில் பயன் தரக்கூடிய புதுமை. இந்தப் புதுமைகள் குடைகளுக்கு மட்டும் உரித்தானதல்ல; நாம் பயன்படுத்தும் எந்தப் பொருளுக்கும் பொருந்தக்கூடியது. இவற்றைக் குடை சார்ந்து சிந்திப்போம் வாருங்கள்.
நம் கால குடை
முதலில் போன் குடையைப் பார்த்துவிடலாம். ஆம், போன் குடை ( போன் - பிரெல்லா) எனும் பெயரில்தான் அந்தக் குடை அறிமுகமாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த கேடி டிசைன் கம்பெனி உருவாக்கி உள்ள இந்தக் குடையில் என்ன சிறப்பு என்றால், அதன் கைப்பிடி தான். வழக்கமான கைப்பிடிகள் போல அல்லாமல் இதன் கைப்பிடி ஆங்கில எழுத்தான சி வடிவில் அமைந்திருக்கிறது. ஆக, இதைக் கையில் பிடித்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை; சி எழுத்துக்குள் கையை விட்டுக்கொண்டுவிடலாம். இதனால் குடையைப் பிடிக்கமால் பிடித்தபடி கொட்டும் மழையில் நனையாமல் கைகளில் ஸ்மார்ட்போனை வைத்துக்கொண்டு குறுஞ்செய்தி அனுப்பலாம். அல்லது இணையத்தில் உலாவலாம். வழக்கமான குடைகள் என்றால் அதைக் கையால் இறுகப் பிடித்திருக்க வேண்டும். குடையைப் பிடித்தபடி போனைப் பயன்படுத்த முடியாது. போனைக் கையில் எடுத்தால் குடை காற்றில் பறந்துவிடலாம். ஆனால் போன் குடையில் இந்தக் கவலை எல்லாம் இல்லாமல், குடை பிடித்தபடி போனை இரு கைகளாலும் பயன்படுத்தலாம்.
ஒரு சின்ன புதுமைதான். ஆனால், ஸ்மார்ட்போன் யுகத்துக்குத் தேவையான புதுமை. இருப்பினும் இதை வித்தியாசமான குடை என்று சிறிது வியந்துவிட்டு ஒதுக்கிவிட முடியாது. சிலர் இதெல்லாம் தேவையா என்று கூட அலட்சியமாகக் கேட்கலாம். இது போன்ற புதுமைக் குடையால் என்ன நன்மை வந்துவிடப்போகிறது என நினைக்கலாம்.
நிச்சயமாக இந்தக் குடை, வாழ்க்கை பிரச்சனை எதற்கும் தீர்வாகிவிடப்போவதில்லை. ஆனால், விஷயம் என்ன என்றால் இது ஒற்றை விதிவிலக்கு முயற்சி அல்ல; இதுபோல வித்தியாசமான குடை முயற்சிகள் இன்னும் நிறைய இருக்கின்றன.
தலைகீழ் குடை
இவற்றில் மகத்தானது என பிரிட்டனைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர் உருவாக்கிய தலைகீழ் குடையைச் சொல்லலாம். காஸ்பிரெல்லா என்பது அந்தக் குடையின் பெயர். இந்தக் குடை பார்ப்பதற்கு சாதாரண குடை போல தான் இருக்கும். ஆனால், சற்று கவனித்தால் வழக்கமான குடையைத் தலைகீழாக கையில் வைத்திருப்பது போல இருக்கும். கூம்பு வடிவம் கைக்கு அருகே இருக்கும். குடைக் கம்பிகள் மேலே நீண்டிருக்கும். வழக்கமாக, குடையைத் திறப்பது போல தான் இதையையும் திறக்க வேண்டும் என்றாலும், கை விசைக்கு ஏற்ப குடைப்பகுதி மேலெழும்போது குடை பக்கவாட்டில் விரியாது. அதற்கு மாறாக மேல் பகுதியில் விரிந்து முழுவதுமாகப் படரும். நமக்குப் பழக்கமான குடையைத் தலைகீழ் வடிவமாக்கி இருக்கின்றனர்.
சரி, இதனால் என்ன பயன்? குடையை மூடி வைக்கும்போதுதான் இது தெரியவரும்.
இதுவரை நாம் பயன்படுத்திய எல்லாக் குடைகளையும் மழையில் பயன்படுத்திய பிறகு மடக்கி வைத்தால் அதிலிருந்து நீர் சொட்டிக்கொண்டே இருக்கும் அல்லவா? இந்தக் குடையை மூடிவைத்தால் அது உலர்ந்த தன்மையுடன்தான் இருக்கும். ஒரு சொட்டு மழைநீர் கூட கீழே விழாது. எல்லாம் அதன் வடிவமைப்பில் உள்ள மகிமை. மழையை எதிர்கொள்ளும் மேல்பகுதி மூடி வைக்கும்போது உள்ளிழுத்துக் கொள்ளப்படும் வகையில் அமைந்திருப்பதே இதற்குக் காரணம். மழை நீர் எல்லாம் உள்ளுக்குள் இழுத்துக்கொள்ளப்படும்.
இந்த வடிவமைப்பின் இன்னொரு அனுகூலம், இதை விரிப்பதற்குப் பெரிய அளவிலான இடம் தேவையில்லை; சிறிய இடத்தில் இருந்தே இதை முழுவதுமாக விரித்துவிடலாம். காரில் இருந்து குடையைத் திறக்க வேண்டும் என்றால் கார் கதவை மெலிதாகத் திறந்து குடையை நீட்டி திறந்தால் போதும்; நம் தலைக்கு மேல் ஜம்மென்று விரிந்து, மழையில் இருந்து காக்கும். இதேபோலவே தியேட்டர் போன்ற பொது இடங்களில் கூட்டத்துக்கு நடுவே இடைஞ்சல் இல்லாமல் இதை விரித்துக் கொள்ளலாம்.
தற்போதைய குடைகளில் இருக்கும் முக்கிய பிரச்னைகள் - தரை ஈரமாவது மற்றும் காரில் இருந்து இறங்கும்போது முழுவதுமாக விரிக்க முடியாமல் இருப்பதுதான் என்கிறார் ஜெனான் காசிம். இவர்தான் இந்தக் குடையின் வடிவமைப்பாளர்.
மனித இயல்பு பொருள்களை மேம்படுத்துவது, வடிவமைப்பில் ஏதேனும் குறை இருந்தால் அதைச் சரி செய்யவே எனக்குத் தோன்றும் என்று கூறும் காசிம், இந்தத் தவறான குடை வடிவமைப்பு 3,000 ஆண்டுகளாக நம்மிடம் இருக்கிறது, அதை மேம்படுத்த முடியும் என நம்புகிறேன் என்று கூறி இந்த குடையை உருவாக்கி உள்ளார்.
இதைச் சாத்தியமாக்க இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆய்வு செய்து தலைகீழாக குடை விரிவதற்கான பொறியியல் அமைப்பை வடிவமைத்துள்ளார். இதற்கான காப்புரிமையும் பெற்றிருக்கிறார்.
சைக்கிள் குடை
வடிவமைப்பில் செய்யப்படும் சிறிய மாற்றம் அல்லது புதுமை, நடைமுறை நோக்கில் எத்தகைய பலனை அளிக்கும் என்பதற்கு இந்தக் குடை அழகான உதாரணம். மேலும் ஒரு உதாரணம், நெதர்லாந்து நிறுவனமான சென்ஸ் உருவாக்கியுள்ள சைக்கிள் குடை. மழைக்காலங்களில் சைக்கிளில் செல்லும்போது குடையின் தேவையை உணர்ந்தாலும் அதைப் பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகிறோம் அல்லவா? முதலில் குடை பிடித்து நடப்பது போல சைக்கிள் ஓட்ட முடியாது. அப்படியே சமாளித்து ஓட்டினாலும் காற்று குடையை தூக்கி வீசிவிடும். இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக சென்ஸ் நிறுவனம் சைக்கிளில் அப்படியே நிலையாக பொருத்திக்கொள்ளும் குடையை வடிவமைத்துள்ளது.
இதன் புதுமையான வடிவமைப்பு காரணமாக சைக்கிள் ஓட்டுபவரின் பார்வையை மறைக்காமல் மழையில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். அதே நேரத்தில் இதன் ஏரோடைனமிக்ஸ் கோட்பாடு சார்ந்த வடிவமைப்பு காரணமாக பலமாக வீசும் காற்றினால் உண்டாகும் அழுத்தத்தைக் கூட சமாளித்து நிலையாக இருக்கும். இந்த சைக்கிள் குடையைக் கையிலும் எடுத்துச்செல்லலாம். பலமான காற்று வீசினாலும் குடையின் அமைப்பு காற்றின் விசையைத் திசைமாற்றி செயல் இழக்கச் செய்யும்.
ஆர்கமி குடை
இந்தக் குடை, நவீன நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது என்றால் ஆர்கமி குடை ஜப்பானின் புகழ் பெற்ற காகிதக் கலையை மையமாக கொண்டது. ஆர்கமி கலையில் காகிதங்களைக் கொண்டு பல அழகிய வடிவமைப்புகளை உருவாக்கலாம். அதே முறையில் அமைந்துள்ள இந்தக் குடையில் கம்பிகளோ, வேறு எந்த அமைப்பும் கிடையாது. இந்தக் குடையில் மைய கம்பி மற்றும் அதன் மீது மூடி விரியும் பகுதி மட்டுமே உண்டு. ஜஸ்டின் நாகல்பர்க் மற்றும் மேத்யூ வால்ட்மன் வடிவமைத்துள்ள இந்தக் குடை வேகமாக வீசும் காற்றையும் தாக்குப்பிடிக்கக் கூடியது. குடையை மூடி திறக்கும் சூட்சமம் கைப்பிடியில் இருக்கிறது. ஒரு பக்கம் திருப்பினால் திறக்கும், எதிர்பக்கம் திருப்பினால் மூடிக்கொள்ளும். இதற்கேற்ற வகையில் பிரத்யேகமான எடை குறைந்த பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல ஸ்டே-பிரெல்லா ஜப்பானில் வடிவமைக்கப்பட்டுள்ள குடை. முதலில் பார்த்த கொரிய குடை போல இதிலும் கைப்பிடியில்தான் புதுமை இருக்கிறது. இதன் கைப்பிடியில் ட வடிவ அமைப்பு இருப்பதால் இதை இந்த இட்த்தில் தொங்க விடுவது சுலபம் என்பதோடு, சமதளப்பகுதியில் வைத்துச்சென்றால் அப்படியே செங்குத்தாக நின்று கொண்டிருக்கும். ஜப்பானிய வடிவமைப்பாளர் ஹிரோஷி கஜிமோட்டோ வடிவமைத்துள்ள அன்பிரெல்லா தலைகீழாக திறக்கும் குடையின் இன்னொரு வடிவம். ஆனால், இதை விரிக்கும்போது இதன் கம்பி அமைப்பு முழுவதும் மேல்புறமாக இருக்கும். இதை அத்தனை நேர்த்தியானது என்று சொல்ல முடியாது. இருந்தாலும் காற்று வீச்சுக்கு ஈடுகொடுப்பது மற்றும் ஈரம் சொட்டாமல் இருப்பது இதன் சிறப்பம்சமாக இருக்கிறது.
காற்றே குடையாக
இவை எல்லாம் வடிவமைப்பு சார்ந்த முயற்சிகள் என்றால் சீனாவில் இருந்து உருவாக்கப்பட்ட ஏர்பிரெல்லா முற்றிலும் தொழில்நுட்பம் சார்ந்த புதுமையாக இருக்கிறது. இந்தக் குடையில் குடையே கிடையாது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். வெறும் கைப்பிடி அமைப்பு மட்டும்தான் இருக்கிறது. அப்புறம் எப்படி மழையில் இருந்து காக்கும் என்று கேட்கிறீர்களா? இதன் கைப்பிடியை இயக்கினால் அதிலிருந்து காற்று வெளியாகி குடை போல விரியும். இப்படிக் காற்று அமைக்கும் குடை, மழைக்கு தடுப்பாக அமையும்.
ஸ்மார்ட் குடை
வெயிலோ மழையோ மனிதர்களுக்கு குடை மிகவும் அவசியம். குடையின் அடிப்படைப் பயன்பாட்டை மீறி அதில் சின்னச் சின்னதாக போதாமைகள் இருக்கின்றன. கொஞ்சம் புதுமையாக சிந்திப்பதன் மூலம் அவற்றை எல்லாம் போக்கி, குடையை மேலும் மேம்படுத்தும் இத்தகைய முயற்சிகள் வடிவமைப்பு சார்ந்த சிந்தனையின் அருமையை உணர்த்துவதாக இருக்கின்றன. இந்தக் குடைகள் சில கருத்தாக்கமாக மட்டுமே முன்வைக்கப்பட்டவை. இன்னும் சில முன்னோட்ட வடிவில் உருவாக்கப்பட்டு இணைய நிதிதிரட்டும் மேடையான கிக்ஸ்டார்ட்டர் மூலம் ஆதரவு கோரியவை.
இவை தவிர வை-ஃபை குடையும் ஸ்மார்ட் குடையும் கூட உருவாக்கப்பட்டுள்ளன. வை–ஃபை குடை அதன் கைப்பிடி மூலம் இணையத்தைத் தொடர்பு கொண்டு வானிலை விவரங்களை தெரிவிக்கக்கூடியது. குடை கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்து மனிதர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைக்கான தீர்வை இணைய நுட்பம் மூலம் வழங்குகிறது ஸ்மார்ட் குடை. அதாவது குடையை எங்கும் மறந்து வைக்காமல் உடன் எடுத்துவர நினைவூட்டுகிறது.
இந்தக் குடையின் கைப்பிடியில், சின்னதாக ப்ளுடூத் வசதி கொண்ட அருகாமை உணரும் சிப் இருக்கிறது. இந்த சிப் உங்கள் ஸ்மார்ட்போனுடன் தொடர்பில் இருக்கும். குடையை கையில் எடுத்ததுமே இந்த அம்சம் விழித்துக்கொள்ளும். அதன் பிறகு குடையை விட்டு குறிப்பிட்ட தொலைவு சென்றால் உடனே போனுக்கு ஒரு நினைவூட்டல் அனுப்பி வைக்கும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனுடன் இணைந்து செயல்படக்கூடிய ஆற்றல் கொண்டது. இதற்கான செயலியைத் தனியே தரவிறக்கம் செய்ய வேண்டும். இதுவே வானிலை விவரங்களையும் வழங்கும்.
குடை தானே என்று நாம் அலட்சியமாக நினைக்கலாம். ஆனால் ஆக்கத்திறன் கொண்டவர்கள் அதை அணுகும் விதங்களைப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. இந்த ஆக்கமே புதிய வடிவமைப்பாக உருவாகி கூடுதல் பலனை அளிக்கிறது. நிச்சயம் நாமும் கூட இப்படி யோசிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.