அத்தியாயம் - 3

இந்த தொடர், மிச்சமிருக்கும் உங்கள் கனவுகளை, இலட்சியமாக மாற்றும், போனதெல்லாம் போகட்டும், மிச்சமெல்லாம் உச்சம் தொட வைக்கும், தயாராகுங்கள்.
அத்தியாயம் - 3

செல்போன், இன்டெர்நெட், சமூக வலைத்தளங்கள், முகநூல், டிவிட்டர், யூ டியூப், இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்றவை நம்மை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தவும், செய்திகளைப் பகிரவும், நாம் பல நல்ல விடயங்களை அறிந்துகொள்ளும் அறிவையும் கொடுக்கிறது, நல்ல நட்புகளையும், நல்ல நண்பர்களையும் கொடுக்கிறது, உலகை அறிந்துகொள்ள வழியும் கொடுக்கிறது. அதே நேரத்தில் அதில் வரும் சில தவறான செய்திகளை உண்மை என நம்பி பகிரவும், தவறான நட்புகள் நம்மைத் தவறாக வழி நடத்த வழிவகையும் செய்கிறது. தங்களது அறிவை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்துவதற்கு, இது வழி செய்கிறது, அதே நேரத்தில் அதிகம் பேர் பார்க்க வேண்டும், நாம் பேர் எடுக்க வேண்டும், நம்மைப் பற்றி அதிகம் பேர் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலால், வரம்பு மீறி அடுத்தவர்களைத் தரக்குறைவாக விமர்சனம் செய்வதில் தொடங்கி, ஆபாச எல்லையை மீறும் சம்பவங்கள் நடந்து, காம இச்சைக்கு அடிமையாகி அது தனது குழந்தைகளைக் கொல்வதிலும் முடிகிறது. வாட்ஸ் ஆப்பில் வரும் தகவலை நம்பி, குழந்தைக்கு பிஸ்கெட் கொடுத்த தாயை, கடத்தல்காரர் என்று எண்ணி மக்கள் அராஜகத்தை கையில் எடுத்து கொலையும் செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதில் கனவுகளோடு படித்துவிட்டு, திருமணம் ஆன பின்பு, வீட்டு வேலை மட்டும் செய்யும் நிலையில் இருக்கும் பெண்கள் கனவுகளைத் தொலைத்துவிட்டு அவர்களது ஆற்றலை வெளிப்படுத்த வழியில்லாமல் துடித்துக்கொண்டிருப்பவர்கள் பல பேர்.

ஆனால் படித்த படிப்பு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்குதான் என்ற புரிதலோடு இருக்கும் சில பெண்கள், தங்கள் கணவரை, குழந்தைகளை, மாமனார், மாமியார் மற்றும் கணவன் வீட்டுச் சொந்தங்களை தங்கள் சொந்தங்களாகப் பாவித்து தனது தலைமைப் பண்பை வெளிப்படுத்துகிறார்கள். படித்த படிப்பு தனது தலைமைப்பண்பை வெளிப்படுத்தத்தான் என்று குடும்பத்தின் மதிப்பை சமூகத்தில் உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், தன் குழந்தைகளைப் படிப்பில் உயர்த்தி, வாழ்க்கையில் வழிகாட்டி, சாதனை செய்வதில் தோள் கொடுத்து, அவர்கள் வெற்றியில் மகிழ்ந்து, சமூக பழக்க வழக்கத்தில் மரியாதையைக் கற்றுக்கொடுத்து அனைவரையும் மதிக்கும் பண்புகளைக் கற்றுக்கொடுக்கிறார்கள்.

ஒரு நல்ஆசிரியராக, வழிகாட்டியாக, பயிற்சியாளராக, பண்பாளராக, ஆலோசர்களாக, சாணக்கியர்களாக, நல்ல மனைவியாக, நல்ல மருமகளாக, நல்ல அண்ணியாக இப்படி பல்வேறு வேலைகளில், எவ்வித பாராட்டுகளையும் கணவனிடமும், சொந்தங்களிடமும் பெறாமல், அதை பொருட்படுத்தாமல், எளிமையாக வாழ்ந்து வழிகாட்டும் பெண்கள் பல பேர். இவர்கள் தாங்கள் கண்ட ஒற்றைக் கனவை மீறி பலரது கனவை நனவாக்குபவர்களாக மாறுகிறார்கள் என்றால் இவர்கள்தான் தலைவர்களை உருவாக்கும் தலைவர்களாக மாறுகிறார்கள். ஆனால் இவர்களை மதிக்கக்கூட நம் சமுதாயம் பழகவில்லை. அவர்கள் இந்த தியாகங்களைச் செய்திருக்கிறார்கள் என்றுகூட அறியாமல் இருக்கிறது இன்றைய இளைய தலைமுறை. இதற்கு நேர்மாறாக வாழ்க்கையைத் தொலைத்து, தங்கள் கனவைத் தொலைத்து, தங்களையும் தொலைத்த ஆண்களும், பெண்களும் நம் சமுதாயத்தில் மிகவும் அதிகம்.

சில நேரங்களில் உங்கள் கனவு களவாடப்படும், சினிமாத் துறையில் கதைகள் களவாடப்படுவது என்பது இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. உழைப்பு களவாடப்படுவதும் சாதாரணமாகிவிட்டது. பல நேரங்களில் உங்கள் கனவு உங்களைச் சுற்றியுள்ள நபர்களாலேயே கசக்கி வீசப்படும். டாக்டர் ஆக வேண்டும் என்று கனவு கண்டு, விழித்திருந்து படித்து, டாக்டராக தேர்வு பெறும் கட்ஆப் மதிப்பெண் பெற்றும், மத்திய அரசு திணித்த நீட் தேர்வு என்ற ஒன்று தங்கை அனிதாவின் கனவைச் சிதைத்தது, வாழ்க்கையை காவு வாங்கியது. தனது தந்தை குடிப்பதை நிறுத்த தந்தைக்கு வேண்டுகோள் கடிதம் எழுதி வைத்துவிட்டு ஒரு பள்ளி மாணவன் பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு தனது எதிர்காலத்தைத் தொலைத்து, தன்னை இழந்தானே ஒரு மாணவன். அவன் கனவை மட்டுமல்ல தன்னையே இழந்தான். அந்த தந்தை குடியை நிறுத்தினாரா, யாருக்குத் தெரியும். வெளி மாநிலத்திற்குச் சென்றேனும் தனது மகன் நீட் தேர்வெழுதி வெற்றி பெற வேண்டும் என்று தனது உடல் நிலையைப் பொருட்படுத்தாமல் ஓடி, ஓடி தனது உயிரை விட்டு தனது கனவை தொலைத்த தந்தையின் கனவு கானல் நீரானது. சினிமா பார்க்க தந்தை காசு கொடுக்கவில்லை என்று தனது அட்டை கத்தி நாயகனை, கோடியில் புரளும் சினிமா கதாநாயகர்களை, பார்க்க தன்னைப் பெற்று, சீராட்டி பாராட்டி, அறிவூட்டிய தந்தையைக் கொன்றானே ஒருவன், அவன் தனது கனவு நாயகனின் படம் பார்க்க வேண்டும் என்பதற்காக தனது தந்தையைக் கொலைகூட செய்ய அவன் தயார். இப்படி பல நிகழ்வுகள், நம் கனவுகளை சிதைக்கிறது.

நம்மை ஆளும் அரசுகளின் கொள்கை முடிவுகளால், நமது உடன் பிறப்புகளால், நண்பர்களால், நமக்கு சம்பந்தமே இல்லாத பிற நபர்களால் நமது கனவுகளும், இலட்சியங்களும் தகர்க்கப்படுவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

கட்டாயக் கருக்கலைப்பு நடப்பதுபோல் கனவுக்கலைப்பும் நடக்கலாம். விழிப்போடு இருங்கள். உங்கள் கனவுகளைக் காப்பாற்றி வையுங்கள். என்றாவது ஒருநாள் அதற்கும் கை, கால் முளைக்கும், வீர நடை போடும், உங்கள் கனவு உயிர்தெழும், சரித்திர சாதனை படைக்கும், அதுவரை அந்த கனவு கானல் நீராகாமல் உள்ளத்திலிட்ட கனலாக நீங்கள் பாதுகாத்தால் இந்த உலகம் உங்களைத் திரும்பிப் பார்க்கும். இந்தத் தொடரை படிக்கும் சமயத்தில் உங்கள் கனவை பற்றியும் எனக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் கனவை பற்றியும் நான் பேசப் போகிறேன்.

ஒருவகையில் காதலும் கனவும் ஒன்றுதான். இரண்டும் மனம் சம்பந்தப்பட்டது. காதல் வயப்பட்டவனும், கனவு வயப்பட்டவனும் சும்மா இருக்க முடியாது. ஏற்றுக்கொள்ளப்பட்டால் மகிழும், நிராகரித்தால் வலிக்கும். சொல்லாத காதல் எல்லாம், சொர்க்கத்தில் சேராது என்றால், சொல்லாத கனவு சோகத்தில்தான் முடியும். ஒரு நாட்டுப்புறக் கலைஞருக்கு, அந்த கலையை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்வது கனவாக இருக்கும். அதே கலையை கற்றுக்கொள்வதற்கு சரியான கலைஞரை சில பேர் தேடிக்கொண்டிருப்பார்கள். ஒரு நல்ல மாணவனை உருவாக்க நினைக்கும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள், அதே வேளையில் ஒரு நல்ல ஆசிரியர் கிடைக்கமாட்டாரா என்று ஏங்கும் மாணவர்களும் இருக்கிறார்கள். சொன்னால் நிறைவேறும். உங்கள் கனவைச் சொல்லுங்கள், உங்களுக்கு தெரிந்த நபர்களின் கனவுக் கதையை சொல்லுங்கள். காலச் சூழ்நிலையால் மாற்று பாதையில் சென்றுவிட்டதாக எண்ணிக் கலங்க வேண்டாம். உங்களின் கனவு உங்களிடத்தில் இன்னும் மிச்சமிருக்கிறது. உங்களின் நம்பிக்கை இன்னும் குறையவில்லை. இந்த தேசத்தின் கோடிக்கணக்கான மக்களை கனவு காணச் சொன்ன, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமும் உங்களைப்போல் தனது கனவை, விமான ஓட்டியான பைலட் ஆக வேண்டும், விண்ணில் பறக்க வேண்டும் என்ற கனவைத் தொலைத்துவிட்டு, கண்கலங்கி நின்று மாற்றுப் பாதையில் சென்றவர் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் அவர் கண்ட கனவை நோக்கி தனது பயணத்தை அமைத்தார், உரமிட்டார், தன் சுயநலத்தை இழந்தார், குடும்ப வாழ்வைத் துறந்தார், பறக்க வேண்டும் என்று கனவு கண்டவர், பறக்கும் ராக்கெட்டை, ஏவுகணைகளை உருவாக்கினார், தனது கனவை நனவாக்கினார். இவ்வளவு தியாகம் செய்துதான் கனவை நனவாக்க வேண்டுமா, அது அவ்வளவு கடினமா என்றால், இல்லை. இந்தத் தொடரில் அதையும் சொல்லப்போகிறேன். வெறுமனே எழுதுவதோடு மட்டுமில்லாமல், உங்கள் கனவுகள் உயிர்த்தெழ வேண்டும், உச்சம் தொட வேண்டும் என்பதே என் கனவு. முடிந்த வரை இந்த தொடர் முடிவதற்குள் சிலரின் கனவுகள் மீண்டும் மலரும், நனவாகும். எல்லாரும் ஒன்றிணைந்தால் பலரின் கனவு நிறைவேறும்.

கனவும், இலட்சியமும் தன்னை விட்டு விலகிப் போக, போக, நம்மை வீழ்த்தும் தேவையற்ற நாலாந்திர ஈர்ப்பு, நம் மனதை மயங்க வைக்கும். ஊடக ஈர்ப்பு, நம்மை ஆக்கிரமிக்கிறது, அடிமைப்படுத்துகிறது. இலட்சியம் உடையவனை எவ்விதமான அற்பத்தனமான ஈர்ப்புகளாலும் அடிமைப்படுத்த முடியாது.

மூச்சு விட்டால் மட்டும் மரணமல்ல, முயற்சியை விட்டாலும் மரணம்தான்.

நம்பிக்கையற்றவன் தன்னை அற்ப காரியங்களுக்கு அடிமையாக்குவான், நம்பிக்கையுள்ளவன் முயற்சியைக் கைவிடாமல் இலட்சியத்தில் வெற்றி பெறுவான்.

இந்த தொடர், மிச்சமிருக்கும் உங்கள் கனவுகளை, இலட்சியமாக மாற்றும், போனதெல்லாம் போகட்டும், மிச்சமெல்லாம் உச்சம் தொட வைக்கும், தயாராகுங்கள்.

உங்கள் கனவுகளை, இலட்சியங்களைப் பகிர்ந்துகொள்ள தொடர்பு கொள்ளுங்கள் - ‌v‌p‌o‌n‌r​a‌j@‌g‌m​a‌i‌l.​c‌o‌m

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com