Enable Javscript for better performance
27. கிருமிகள் வாழ்க! - 4- Dinamani

சுடச்சுட

  

   

  நாம்தான் கிருமிகள்; கிருமிகள்தான் நாம்ஜொனாதன் எய்சன்

  லூயி பாஸ்டரும் கிருமிகளும்

  மனிதர்களுக்கு வரலாறு இருப்பதைப்போல கிருமிகளுக்கும் வரலாறு உண்டு! அதைக் கொடுத்தவர்களும் மனிதர்களே! மனிதர்களைப் பற்றிய வரலாற்றில் உண்மைகள் மறைக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் சொல்லப்பட்டிருப்பதைப்போல, கிருமிகளின் வரலாற்றிலும் இந்த அரசியல் உண்டு! அதற்கும் காரணம் மனிதர்களே! மனிதர்கள் இருந்தாலே அரசியல் வரத்தானே செய்யும்!

  கிருமிகளின் வரலாற்றில் கதாநாயகன் ஒரு ஃப்ரெஞ்சு வேதியியல் நிபுணர். அவர் பெயர் லூயி பாஸ்டர். இன்றைக்கு உலகெங்கிலும் உள்ள மைக்ரோபயாலஜி எனப்படும் நுண்ணியிரியல் பாடத்தின் கதாநாயகன் அவர்தான். ஏன்?

  லூயி பாஸ்டர்

  1860-64-ம் ஆண்டுகளில் லூயி பாஸ்டர் சிலபல பரிசோதனைகளைச் செய்தார். அதன் விளைவாக, கிருமிகள் காற்றின் மூலமாகப் பரவுகின்றன, அவற்றால் ஆரோக்கியம் கெட்டுப்போகிறது, அவை நோய்களை உண்டாக்குகின்றன என்ற கற்பனையை முதன்முதலாக உலகெங்கிலும் பரப்பிய பிதாமகர் அவர்தான்!

  அவர் காலத்தில் வாழ்ந்த ஃப்ரெஞ்சு விஞ்ஞானியான அந்துவான் பீச்சாம்ப் என்பவரின் கருத்துகளைத் திருடி தனதென்று வெளியிட்டார் என்றும் லூயி பாஸ்டர் குற்றம் சாட்டப்பட்டார். ஆனால், எல்லாவற்றையும் மீறி தனது பெயரை வரலாற்றில் தக்கவைத்துக்கொண்டார் லூயி பாஸ்டர். பீச்சாம்ப்பை ஓரங்கட்டிவிட்டு முதலிடத்திலேயே லூயி பாஸ்டர் இருக்க முடிந்தததற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருந்தன. ஒன்று, அந்தக் கால ஆங்கில மருத்துவம் செத்துக்கொண்டிருந்தது. ஏனெனில், இன்று அது கொழுத்துப் பிழைத்துக்கொண்டிருப்பதற்குக் காரணங்களாக உள்ள அறுவை சிகிச்சை, ஆண்ட்டிபயாடிக்ஸ் போன்ற சமாசாரங்களெல்லாம் அப்போது உருவாகி இருக்கவில்லை. அல்லது பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கவில்லை. எனவே, லூயி பாஸ்டரை அலோபதி பயன்படுத்திக்கொண்டது என்று சொல்லலாம். அலோபதியை லூயி பாஸ்டர் பயன்படுத்திக்கொண்டார் என்றும் சொல்லலாம்.

  இரண்டாவது காரணம், அவர் அன்றைய ஃப்ரான்ஸ் நாட்டு மன்னர் மூன்றாம் லூயி நெப்போலியனின் நண்பராக இருந்தார்! ஆஹா, இது ஒன்று போதாதா? மோசமான, அநீதியான ஆட்சியாளர்களின் ஆதரவில் இருந்தவர்களால் மனிதகுலம் பட்ட பாடு வரலாறு நெடுகிலும் கொட்டிக்கிடக்கிறதே!

  மூன்றாம் லூயி நெப்போலியன்

  ‘நுண்ணுயிரியலின் தந்தை’ என்றும் லூயி பாஸ்டர் கருதப்படுகிறார்! உணவுப் பொருள்கள் புளித்துப்போதல், நொதித்தல் போன்றவற்றுக்கு நுண்ணுயிரிகள்தான் காரணம் என்ற கோட்பாடும் இவரது பரிசோதனைகள் மூலம் உறுதியானது. (ஆனால் fermentation என்ற ஆங்கிலச் சொல்லால் குறிக்கப்படும் அது, மனிதர்களுக்கு நன்மை செய்வது என்பது அவர்களுக்குப் புரியவில்லை).

  போகட்டும், 1860-களில் அவர் அப்படி என்னதான் பரிசோதனை செய்தார்? ஒன்றுமில்லை, திறந்திருந்த ஒரு குடுவையில் இறைச்சித்துண்டுகளை வைத்தார். சில மணி நேரங்களுக்குப் பிறகு அது அழுகிப்போனது. அந்த இறைச்சி கெட்டுப்போவதற்குக் காரணம், காற்றின் வழியாக வந்த கிருமிகள்தான் என்று அவர் ‘கண்டுபிடித்துக்’ கூறினார்! அதை உலகுக்கு ஆணித்தரமாக அடித்துச் சொன்னார். அங்கேதான் பிரச்னை ஆரம்பமானது. உடனே இன்னின்ன கிருமிகளால் இன்னின்ன நோய்கள் உண்டாகின்றன என்ற பட்டியல், அட்டவணைகள் உருவாக, அவரது அறிவிப்பு உதவியது. பென்சிலின் போன்ற கிருமிக்கொல்லி மருந்துகள் (ஆண்ட்டிபயாடிக்ஸ்) உருவாக்கப்பட்டன. அவை பரவலான புழக்கத்துக்கும் வந்தன.

  உதாரணமாக, மலேரியா நோய்க்கு ப்ரோட்டோஸோவா என்ற வகைக் கிருமிகள் காரணம் என்றும், கொசு மற்றும் கொறித்துத் தின்னும் எலி போன்ற விலங்குகள் மூலமாக அது பரவுகிறது என்றும் கூறப்பட்டது.

  அலோபதியில் அடிப்படையே தவறாக உள்ளது என்று புரிந்துகொண்ட சாமுவேல் ஹானிமன், ஹோமியோபதியை உருவாக்கி சின்ங்கோனா என்ற மரத்தின் பட்டை மூலமாக மலேரியாவுக்கு மருந்து கண்டுபிடித்து 1795-லேயே வெற்றிக்கொடி நாட்டினார். ஆனால், லூயி பாஸ்டர் போன்றவர்களால் கிருமிக்கொள்கை உருவாக்கப்பட்டது 1880-களில்!

  கிருமிகளால்தான் நோய்கள் ஏற்படுகின்றன என்ற கருத்தை அல்லது கொள்கையை லூயி பாஸ்டர் 1881-ம் ஆண்டு வெளியிட்டார். அதை எதிர்த்து ஃப்ரான்ஸ் நாட்டு மருத்துவர்கள் கருத்து தெரிவித்தனர். உலகப் புகழ்பெற்ற மருத்துவ இதழான ‘லான்செட்’ (Lancet), லூயி பாஸ்டரின் கருத்துகளைக் கடுமையாக விமர்சித்தது. அவரது கருத்துகள் முன்னுக்குப்பின் முரணாகவும், பொருத்தமற்றதாகவும் இருப்பதாக அது வெளிப்படையாகவே சொன்னது.

  சாமுவேல் ஹானிமன்

  இவ்வளவு ட்ராமாவும் எதற்கு? ஏற்கெனவே மருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நோய்க்கு இதுதான் காரணம் என்று 70 ஆண்டுகள் கழித்து ஒருவர் சொன்னதற்கு என்ன காரணம்? எல்லாம் புகழ் மீதான போதையும், அரசியலும்தான் வேறென்ன?

  அந்துவான் பீச்சாம்ப்

  இருக்கட்டும், ஆனால் லூயி பாஸ்டர் சொன்னது உண்மையா? அதை நாம் அந்துவான் பீச்சாம்பிடம்தான் கேட்க வேண்டும். பீச்சாம்ப், லூயி பாஸ்டர் காலத்தில் வாழ்ந்த ஒரு ஃப்ரெஞ்சு விஞ்ஞானி, பேராசிரியர் மற்றும் மருத்துவர். ஃப்ரான்ஸில் இருந்த லில் நார்டு (Lille Nord) மருத்துவப் பல்கலைக் கழக ‘டீன்’ ஆக இருந்தவர். லூயி பாஸ்டர் சொல்வதெல்லாம் கற்பனை என்பதை நிரூபித்தவர். சபாஷ், சரியான போட்டி என்ற வசனத்துக்குப் பொருத்தமானவர். அவர் என்ன சொன்னார்?

  அந்துவான் பீச்சாம்ப்

  காற்றில் நுண்ணுயிர்கள் வளர்கின்றன. அவற்றை வளர்க்க காற்று பயன்படுகிறது. ஆனால், அவ்வுயிர்களை வேறு உயிர்களுக்குக் காற்று கடத்துவதில்லை என்று பீச்சாம்ப் கூறினார். கிருமிகளுக்கு அவர் வைத்த பெயர் மைக்ரோஸைமாஸ் (microzymas). இதில் ‘ஸைமாஸ்’ என்ற பகுதி ‘என்ஸைம்’ என்ற சொல்லில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. கண்ணுக்குப் புலப்படாத ‘குட்டி என்ஸைம்கள்’ என்று இதை அர்த்தப்படுத்தலாம். ‘என்ஸைம்’ எனப்படும் ப்ரோட்டீன்கள் நமக்கு நல்லது செய்பவை என்பது ஏற்கெனவே நிரூபணமாகிவிட்ட உண்மையாகும். இதை மனத்தில் கொண்டு இந்தப் பெயரைப் பார்த்தால், ‘கண்ணுக்குத் தெரியாத நன்மை செய்யும் குட்டி உயிர்கள்’ என்று கிருமிகளின் தன்மையை பீச்சாம்ப் விளக்கியிருப்பது புரியும்.

  இதுமட்டுமல்ல. லூயி பாஸ்டர் செய்த பரிசோதனையை தவறு என்று அவர் நிரூபித்தார். எப்படி? அதே பரிசோதனையைக் கொஞ்சம் மாற்றி அவர் செய்தார். அது என்ன? திறந்த குடுவைக்குப் பதிலாக காற்றுப் புகாத ஒரு குடுவைக்குள் மாமிசத்தை வைத்து பரிசோதித்தார். சில மணி நேரம் கழித்து அதுவும் கெட்டுப்போனது! அப்படியானால் என்ன அர்த்தம்? மாமிசம் கெட்டுப்போனதற்குக் காரணம் காற்றில் இருந்த கிருமிகள் என்று லூயி பாஸ்டர் சொன்னது தவறு என்பதுதானே! கிருமிகள்தான் மாமிசம் அழுகிப்போவதற்குக் காரணம் என்றால், காற்று புகாத இடத்தில் எப்படி கிருமிகள் வந்தன என்று அவர் கேட்டார். நியாயமான கேள்வி!

  தேங்குகின்ற கழிவுகளில் இருந்துதான் கிருமிகள் உண்டாகின்றன. அவற்றால் உருவாவதாகச் சொல்லப்படும் நோய்களின் ஆரம்ப கட்டத்தில் கிருமிகளே இருப்பதில்லை என்ற முக்கியமான உண்மையையும் அவர்தான் சொன்னார்.

  ஆனால், பீச்சாம்ப்பின் கண்டுபிடிப்புகள் வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்டன. உண்மையான ஹீரோ ஓரங்கட்டப்பட்டார். வில்லன் ஹீரோவாக்கப்பட்ட மாதிரி, லூயி பாஸ்டர் உருவானார். Bechamp or Pasteur: A Lost Chapter in the History of Biology என்று இருவரைப் பற்றியும் ஒரு புத்தகமே எழுதப்பட்டது. ஆனால் அதுவும் உலகுக்குத் தெரியாமல் அமுக்கப்பட்டது. பீச்சாம்ப் எழுதிய The Blood and Its Third Anatomical Element என்ற முக்கியமான நூலும் வரலாற்றில் முக்கியத்துவம் பெறவில்லை. ‘நோய்களின் தொடக்கமல்ல கிருமிகள்; நோய்களின் முடிவே அல்லது விளைவே கிருமிகள்’ என்ற அவரது மிகமுக்கியமான கண்டுபிடிப்பு, வரலாற்றில் கிடப்பில் போடப்பட்டது.

  ‘காற்றில் உள்ள கிருமிகளால் பாதிக்கப்படாவிட்டால், உயிருள்ள பொருள் எதுவுமே தானாக கெட்டுப்போகாது, அழுகாது என்ற பாஸ்டரின் தவறான கருத்து விஞ்ஞானத்தை மிகவும் கீழான நிலைக்குக் கொண்டு சென்றுவிட்டது’ என்று பீச்சாம்ப் மிகச்சரியாகச் சொன்னார்.

  டாக்டர் பெட்டின்காஃபர்

  பீச்சாம்ப் சொன்னது உண்மைதான் என்பதை பெட்டின்காஃபர் (Pettenkofer) என்ற இன்னொரு டாக்டர் ஒரு அதிரடி பரிசோதனை மூலம் நிரூபித்தார். அவர் ஒரு டாக்டர் மட்டுமல்ல, பவேரியா நாட்டைச் சேர்ந்த நுண்ணுயிரியல் விஞ்ஞானியும்கூட. அப்படி என்ன அதிரடி பரிசோதனையை அவர் செய்தார்?

  டாக்டர் பெட்டின்காஃபர்

  ஒன்றுமில்லை. தன் உயிரை பணயம் வைத்து ஒரு ஆய்வை அவர் மேற்கொண்டார்! ஆமாம். அவர் ஏன் அப்படிச் செய்தார்? அவருக்குத் தெரியும், அப்படிச் செய்வதன் மூலம் அவர் உயிர் போகாது என்று! பொதுமக்கள் முன்னிலையில் அவர் பரிசோதனை நிகழ்த்திய நாள் 1892, அக்டோபர் 07. ராபர்ட் கோச் என்ற நுண்ணியிரியல் நிபுணரிடமிருந்து காலராவை உண்டாக்கும் கிருமிகள் என்று சொல்லப்பட்ட கிருமிகள் அடங்கிய ஒரு டெஸ்ட் ட்யுப் அல்லது பாட்டிலைப் பெற்றுக்கொண்டார்! பொதுமக்கள் மற்றும் உலக விஞ்ஞானிகள் முன்னிலையில் அதை நீரில் கலந்து ஏதோ ஆப்பிள் ஜூஸ் குடிப்பது மாதிரி காலரா கிருமி ஜூஸ் குடித்தார்!

  படம் 11

  அந்த நேரம், காலரா தாக்கி மியூனிச் நகரிலும் இன்னும் பல ஊர்களிலும் மக்கள் ஆயிரக்கணக்கில் இறந்துகொண்டிருந்தனர். அந்த நேரத்தில் பெட்டின்காஃபர் அப்படியொரு பரிசோதனையைச் செய்தார். மனுஷனுக்கு ரொம்பத்தான் துணிச்சல். அவர் நிச்சயம் செத்துவிடுவார் என்று எல்லோரும் நினைத்தனர். ஏனெனில், காலரா கிருமிகள் உடலுக்குள் புகுந்தவுடன் தாமதமின்றி தங்கள் வேலையைத் துவக்கிவிடும் என்று அந்தக்கால விஞ்ஞானிகள் நம்பினர்! நவீன மருத்துவமும் அப்படித்தான் கூறுகிறது!

  ஆனால், அவர்களுக்கெல்லாம் ஏமாற்றம்தான் காத்திருந்தது. பெட்டின்காஃபருக்கு பல நாட்கள் ஆகியும் ஒன்றும் ஆகவில்லை! மனிதர் இன்னும் கொஞ்சம் தெம்பேறி இருந்தார்! கொஞ்ச நாள் கழித்து எந்தப் பாதிப்பும் இல்லாமல் வேறு ‘லொகேஷனில்’ அதே பரிசோதனையை நிகழ்த்தக் கிளம்பிவிட்டார் அவர்! கிருமிகள் உயிரைக் குடிக்கும் என்பது உண்மையானால், பெட்டின்காஃபரை ஏன் விட்டுவைத்தது? அவர் மீது மட்டும் ஏன் கிருமிகளுக்கு கருணை பிறந்தது?!

  உலகில் இருந்த ஊர் பேர் தெரியாத பல விஞ்ஞானிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், நம்ம ஊர் விஞ்ஞானி தமிழ்வாணன், இதுபற்றி ரொம்ப காலத்துக்கு முன்பே மிகச்சரியாக கிருமிகளின் தன்மை பற்றி ‘இயற்கை வைத்தியம்’ என்ற நூலில் எழுதியுள்ளார். நம்மில் எத்தனை பேருக்கு அது தெரியும்? அந்த நூல் இன்னும் கிடைக்கிறது. அவர் அதில் ஒரு அழகிய உதாரணம் தருகிறார். அது என்ன?

  நாய் கடித்துத் தெருவில் செத்துக்கிடக்கும் பெருச்சாளியின் அழுகிய உடலில் புழுக்கள் நெளிந்துகொண்டிருக்குமல்லவா? அந்தப் புழுக்கள்தான் பெருச்சாளியைக் கொன்றன என்று சொன்னால் அது எவ்வளவு அபத்தம்? அதைப்போன்றதுதான் நோய்க்கிருமிகளால் நோயாளி இறந்துவிட்டார் என்று ஒரு மருத்துவர் சொல்வதும் என்று அவர் கூறுகிறார்! சாதாரண மக்களுக்கும் புரியும்படி இந்த நூலை அவர் எழுதியது 1960-களில்! பெருச்சாளி என்பது மனித உடலையும், புழுக்கள் கிருமிகளையும் குறிக்கின்றன என்பதையும் நான் சொல்ல வேண்டுமா என்ன?

  இதுவரை கிருமிகளின் வரலாற்றைக் கொஞ்சம் பார்த்தோம். அவை மனிதனுக்கு நோயை ஏற்படுத்துகின்றன என்று சொன்னவர்களைப் பற்றியும், அப்படியில்லை என்று சொன்னவர்களைப் பற்றியும் பார்த்தோம். கிருமிகளால் மனிதனுக்குத் தீமை ஏற்படுவதில்லை, நன்மைதான் ஏற்படுகிறது என்பதைக் கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்பதற்கு முன், ஒரு முக்கியமான கேள்வியோடு இந்த அத்தியாயத்தை முடித்துக்கொள்ளலாம்.

  ஒருவருக்குக் காய்ச்சல் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். காய்ச்சல் வந்த முதல் நாள் ரத்தப் பரிசோதனை செய்தால் ரிசல்டில் ஒன்றும் தெரியாது. சாதாரண காய்ச்சல்தான், ரெண்டு மூணு நாள் மருந்து எடுத்தால் சரியாயிடும் என்று சொல்லி மருந்து மாத்திரைகளை மருத்துவர் கொடுப்பார். முதலில் காய்ச்சல் சரியாகிவிட்ட மாதிரி இருக்கும். இரண்டு மூன்று நாட்களில் திரும்ப வரும். அல்லது மாலை நேரங்களில் மறுபடியும் வந்துவிடும். காய்ச்சலுக்கு மாலை நேரம்தான் பிடிக்குமோ என்னவோ!

  மறுபடியும் டாக்டரிடம் ஓடுவோம். ஐந்து நாள் ஆகியிருக்கும். இப்போது மறுபடியும் ரத்தப் பரிசோதனை. ஆனால் இந்த முறை ரிசல்ட் சாதாரணமாக இருக்காது. அதைப் பார்த்துவிட்டு டாக்டர், ‘உங்களுக்கு டெங்கு வந்திருக்கிறது. உடனே அட்மிட் ஆகிவிடுங்கள். தினமும் ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று சொல்வார். டெங்கு என்பது DENV எனப்படும் வைரஸால் கொசு மூலம் பரவுகிறது / ஊடுருவுகிறது என்று நம்பப்படுகிறது, சொல்லப்படுகிறது.

  நான் சொன்ன முக்கியமான கேள்வியை இப்போதுதான் கேட்க வேண்டும். ஒரு வைரஸ் மூலமாக ஒரு நோய் வந்துவிட்டதாக டாக்டர் சொன்னால், அவரிடம் இந்தக் கேள்வியை நீங்கள் கேட்க வேண்டும். அது என்ன கேள்வி?

  வைரஸால் ஒரு நோய் வந்துவிட்டது என்றால், எது முதலில் வர வேண்டும்? வைரஸா அல்லது நோயா? இதுதான் கேள்வி. இதன் அறிவுப்பூர்வமான பதில் நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். இட்லி மாவு மூலம் இட்லி வந்தது என்றால் மாவு முதலில் இருக்க வேண்டுமா அல்லது இட்லியா? ஆரம்பம் எது என்று தெரிந்துகொள்வது ரொம்ப முக்கியம். காரணம், விளைவு என்பதில் காரணிதான் முதலில் இருக்க வேண்டும். அது இல்லாமல் எப்படி அதை ஏற்படுத்தும் விளைவு வரும்? இப்படி யோசிக்க நாம் ‘நோய் நாடி, நோய் முதல் நாடி’ என்று சொன்ன வள்ளுவர்போல பெரிய மேதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. படித்தவரும் படிக்காதவரும், யாரும் இதைப் புரிந்துகொள்ளலாம். புரிந்துதான் வைத்திருக்கிறோம். ஆனாலும் ஏமாற்றப்படுகிறோம். முக்கியமான நேரத்தில் கோட்டை விட்டுவிடுகிறோம். அங்கேதான் பிரச்னை ஆரம்பமாகிறது.

  குறிப்பிட்ட ஒரு நோயை குறிப்பிட்ட ஒரு வைரஸ் உருவாக்குகிறது என்றால், முதலில் நம் உடலுக்குள் அந்த வைரஸ்தானே வர வேண்டும்? தர்க்கரீதியாகவும், அறிவுப்பூர்வமாகவும் அதுதானே சரி? முதல் நாள் காய்ச்சல் சாதாரண காய்ச்சல் என்று ரிப்போர்ட் சொல்கிறது. ஆனால், ஐந்தாறு நாள் கழித்து அது டைஃபாய்டு என்றோ டெங்கு என்றோ சொல்கிறது. சாதாரண சளி என்ற சொன்ன டாக்டர் கொடுத்த இருமல் மருந்துகளையும் சளி மாத்திரைகளையும் சாப்பிட்ட பல நாட்களுக்குப் பிறகும் இருமலும் சளியும் குறையாமல் மீண்டும் பரிசோதிக்கும்போது அது சாதாரண சளியல்ல, காசநோய் என்று டாக்டர் ஏன் சொல்கிறார்? ஏன் அவருக்கு அது முதல் நாளே தெரியவில்லை? முதல் நாள் சளியில் ஏன் காச நோய்க் கிருமிகள் இல்லை? இப்படியான கேள்விகளை கேன்ஸர் வரை எல்லா நோய்களுக்கும் கேட்கலாம்.

  முதலில் தொந்தரவுகள் ஏற்படுகின்றன. சில நாட்களுக்குப் பிறகு, தொந்தரவுகள் நீடிக்கும்போது கிருமிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஏன் நோயை ஏற்படுத்தும் கிருமிகள் முதலில் உடலில் காணப்படுவதில்லை? ஒரு வாரத்துக்கு அவை ஒளிந்துபிடித்து உடலுக்குள் விளையாடிக்கொண்டிருக்குமா?

  கிருமி ஏன் முதலிலேயே வரவில்லை என்ற கேள்விக்கான பதிலில்தான் கிருமிகளின் தன்மை, சேவை பற்றிய எல்லா உண்மைகளும் மறைந்து கிடக்கின்றன. மனிதனைக் காப்பாற்ற அவை என்னென்ன செய்கின்றன என்று அறிந்துகொண்டால் ரொம்ப வியப்பாக இருக்கும். பார்க்கத்தானே போகிறோம்…

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai