Enable Javscript for better performance
28. கிருமிகள் வாழ்க! - 5- Dinamani

சுடச்சுட

  

   

  கிருமிகளால் நோய்கள் பரவுகின்றன என்ற அச்சத்தால் லாபமடைவது பன்னாட்டு மருந்து நிறுவனங்கள்தான்ஹீலர் உமர்

   

  கிருமிகள் பிறக்கும் இடமும் காலமும்

  கிருமிகளால் நோய் வருவதாகச் சொல்லப்பட்டாலும் ஒரு நோய் தாக்கிய சில நாட்களுக்குப் பிறகுதான் உடலில் கிருமிகள் இருப்பதை பரிசோதனைகள் சொல்கின்றன என்பதுவரை பார்த்தோம். அப்படியானால், கிருமிகள் நோயை உண்டாக்கி இருக்க முடியாதென்ற தர்க்கமும் நமக்குப் புரியத்தான் செய்கிறது. ஒரு காய்ச்சல் வந்த ஐந்தாறு நாள் கழித்து கிருமி வருவதன் காரணம் என்ன? அதுவரை அது எங்கிருந்தது? இப்போது ஏன் வந்தது? இதையெல்லாம் புரிந்துகொள்வது மிக முக்கியமானதாகும். ஆரோக்கிய வாழ்வினைக் காப்பது ‘லைஃப் பாய்’ என்று விளம்பரம் சொன்னாலும், ஆரோக்கிய வாழ்வினைக் காப்பது கிருமிகள்தான்! அதைத்தான் எப்படி என்று இப்போது சொல்லப்போகிறேன். அதற்காகத்தான் கிருமிகளின் பிறப்பிடத்தைப் பற்றிப் பேசவேண்டி உள்ளது.

  கிருமிகளின் பிறப்பிடம் நம் உடல்தான். அது எந்தப் பகுதியாக வேண்டுமானாலும் இருக்கலாம். இன்னும் சரியாகச் சொன்னால், உடலில் ஏற்படும் கழிவுகள். ஆமாம். கழிவுகள்தான் கிருமிகளின் பிறப்பிடம். நம் உடலில் ஏற்படும் கழிவுகளில் பல வகை உண்டு. அவற்றை உருவாக்குவது நாம்தான்! நமக்கே தெரியாமல்!

  முதலில் கழிவு என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா? சிறுநீர், மலம், வியர்வை, சளி, பொடுகு, அழுக்கு போன்றவை மட்டும் கழிவுகளல்ல. நம் கண்ணுக்குத் தெரியாமல் உடலுக்கு உள்ளேயே உருவாகும் கழிவுகள் பல வகை. அவை உடலுக்குள் உருவாவதற்கும் நாம்தான் காரணமாக இருக்கிறோம். நம்முடைய தவறான வாழ்முறை, தவறான உணவுகள் போன்றவைதான் காரணங்களாகின்றன.

  கழிவுகள் ஏன் தோன்றுகின்றன?

  நம்மால்தான் கழிவுகள் தோன்றுகின்றன. எப்படி? பசி, தாகம், ஓய்வு, தூக்கம் போன்றவற்றை முறையாகப் பேணாமல் இருந்தால் கழிவுகள் உருவாகும். இன்னும் கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேனே.

  நாம் பல நேரங்களில் பசிக்கும்போது சாப்பிடாமல் இருக்கிறோம். சீரியலில் முக்கியமான வில்லன் கதாநாயகி கையால் அறை வாங்குவதைப் பார்க்கும் ஆர்வத்தில் இருந்துவிடலாம். அல்லது டிவி பார்த்துக்கொண்டே என்ன சாப்பிடுகிறோம் என்றே தெரியாமல், எதையோ எடுத்து எப்படியோ வாய்க்குள் போட்டு விழுங்கலாம். அல்லது ஐயய்யோ ஆபீஸுக்கு நேரமாகிவிட்டது என்று பசிக்காதபோது அவசர அவசரமாக சிலபல இட்லிகளை விக்க விக்க விழுங்கிவிட்டுச் செல்லலாம். அல்லது நாக்குக்கு அடிமையாகி ருசிக்காக மட்டும் சாப்பிடலாம். ஆஹா, ஆம்பூர் பிரியாணின்னா பிரியாணிதான் என்று அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டுவிடலாம். பழக்கத்தின் காரணமாக கண்ட நேரத்திலும் எதையாவது கொரித்துக்கொண்டே இருக்கலாம்.

  நான் வேலை பார்த்த ஊரிலிருந்து பக்கத்து ஊருக்கு பஸ்ஸில் போகும்போது ரயில்வேகேட் போட்டிருந்தால் கொஞ்ச நேரம் பஸ் அங்கே நிற்கும். அப்போது ‘டைம் பாஸ், டைம் பாஸ்’ என்று சொல்லிக்கொண்டே நிலக்கடலையை ‘பாக்கெட்’ போட்டு விற்பார்கள். மக்களும் அதை வாங்கி பஸ் மீண்டும் நகரும் வரை கொரித்துக்கொண்டிருப்பார்கள். பசிக்கு உணவு உண்ட காலம் போய், நேரத்தைக் கடத்தக்கூட சாப்பிடுகின்ற மனநிலைக்கு மனிதர்கள் வந்துவிட்டது எனக்கு ஆச்சரியமாகவும் அருவருப்பாகவும் இருந்தது. கலிகாலம் என்பது அதுதானோ!

  தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடிக்க மாட்டோம். அல்லது தாகம் இல்லாவிட்டாலும் ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தாக வேண்டும் என்று தவறானதொரு நீர் ஆரோக்கியக் கோட்பாட்டை வைத்துக்கொண்டு, காலையில் வெறும் வயிற்றில் பாட்டில் பாட்டிலாக தண்ணீரை வயிற்றுக்குள் ஊற்றுபவர்கள் உண்டு. காய்ச்சல் வந்தால் சாப்பிடாமல் ஓய்வெடுத்தால் சீக்கிரம் குணமாகும். ஆனால், நம்ம வீட்டுப் பெரிசுகள் என்ன செய்யும்? ஐயய்யோ, வயிறு ஒட்டிப்போச்சே, வெறும் வயித்துல படுக்கக் கூடாதுப்பா, ஓட்ஸ் கஞ்சியாவது குடிப்பா, ரசம் சோறுதாம்ப்பா, கொஞ்சூண்டு சாப்பிடுப்பா, ரெண்டு தோசை சாப்ட்டு படு கண்ணு - இப்படியான பாச வசனங்களின் மூலம் உடல் நிலை சரியில்லாதபோதும் வயிற்றுக்குள் எதையாவது போட்டுக்கொண்டே இருப்பார்கள்.

  இப்படி பசி, தாகம், தூக்கம் போன்ற அத்தியாவசியமானவற்றை அவசியம் கருதி கொடுக்காமல், விருப்பத்துக்கு ஏற்றவகையில் மாற்றிக்கொண்டிருப்பதால் உடலில் கழிவுகள் தோன்றும்.

  கழிவுகள் தோன்றும்போது உடனே ரசாயனம் கலந்த மாத்திரைகளைக் கொடுத்து அவற்றை அடக்க முயல்கிறோம். உதாரணமாக இருமல், சளி, மூக்கொழுகல் போன்றவை நிகழும்போது உடனே மாத்திரைகள் விழுங்கி அவற்றை நிறுத்த முயற்சிக்கிறோம். இவ்வகையான தவறான காரியங்களால் அக்கழிவுகள் உள்ளேயே தங்கி, தேங்கி, தேக்கமுற்ற கழிவுகளாக தன்மை மாற்றம் அடைகின்றன.

  இப்படி உடலுக்குள் அடக்கி வைக்கப்படும் கழிவுகள் உடலை விட்டு வெளியேற முடியாத நிலையில், அவற்றை நீக்க அக்கழிவுகளில் இருந்து கிருமிகள் பிறக்கின்றன. அவை அக்கழிவுகளை உணவாக உண்டு அவற்றை நீக்குகின்றன. பின்னர் உணவு இல்லாமல் அவை இறந்துபோகின்றன. அதாவது, இல்லாமல் போகின்றன.

  உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதை சுருக்கமாகச் சொல்லிவிட்டேன். ஆனால் இதை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கவேண்டி உள்ளது.

  கழிவுகள்தான் தொந்தரவுகளாக வெளிப்படுகின்றன. காய்ச்சல் என்பது உஷ்ணமாக உடலை விட்டு வெளியேறும் கழிவு. ஆனால் நாம் அதை ஒரு தொந்தரவாக, நோயாகப் பார்க்கிறோம். மாத்திரை மருந்துகள் உட்கொள்கிறோம். அதனால் அக்கழிவு வேறு தன்மை அடைகிறது. சாதாரண காய்ச்சல் டைஃபாய்டு காய்ச்சலாக மாறுகிறது.

  அந்த நேரத்தில் அங்கே டைஃபாய்டு கிருமிகள் தோன்றி அதை குணப்படுத்துகிறது. ஆனால், நாம் அதை ஊசி அல்லது ஆன்ட்டிபயாடிக்ஸ் மருந்துகள் கொடுத்துக் கொன்றுவிடுகிறோம். அதனால் காய்ச்சல் இன்னும் தீவிரமடைகிறது. அல்லது வேறு நோயாகப் பரிணமிக்கிறது.

  உருவங்கள் மாறலாம்

  கழிவுகளில் இருந்து கிருமிகள் உருவாகும் என்றால், அவை ஒரே மாதிரியாகத்தானே இருக்க வேண்டும்? ஏன் டைஃபாய்டு கிருமி ஒரு மாதிரியாகவும், டெங்கு கிருமி வேறு மாதிரியாகவும், மஞ்சள்காமாலைக் கிருமி ஒரு மாதிரியாகவும் உள்ளது?

  இதற்கு நம் வீட்டில் தயாரிக்கும் மசாலாப் பொடி, மிளகாய்ப் பொடியை உதாரணம் காட்டுகிறார் ஹீலர் உமர். வீட்டில் தயாரிக்கப்பட்டு பாட்டிலில் அடைக்கப்பட்ட நீண்ட நாள் பயன்படுத்தப்படாத மிளகாய்ப் பொடியோ மசாலாப் பொடியோ கெட்டுப்போகும்போது அதில் வண்டுகள் அல்லது பூச்சிகள் உருவாகும். ஏன்? கெட்டுப்போன பொடிகளின் கழிவுகளை உண்டு அதை சுத்தப்படுத்த அவை உருவாகின்றன. அவற்றை உன்னிப்பாகப் பார்த்தால் ஒரு உண்மை புரியும். மசாலாப்பொடி வண்டு ஒரு மாதிரியாகவும், மிளகாய்ப்பொடி வண்டு வேறு மாதிரியாகவும் இருக்கும். ஒன்று அம்பியாக இருந்தால் இன்னொன்று அந்நியனாக இருக்கலாம்.

  கிருமிகளும் அதைப்போலத்தான். உடலில் உருவாகும் கழிவுகள் அல்லது நோய்களின் தன்மைக்கு ஏற்ப, அவை தன் உருவத்தை மாற்றிக்கொள்ளும். உருவங்களை மாற்றிக்கொள்வதில் எல்லா வைரஸ்களும் அந்நியனைவிடத் திறமையானவை. அதனால்தான் அவற்றை அழிக்க மருந்து கண்டுபிடிப்பதும் மருத்துவ உலகுக்கு சவாலாக உள்ளது!

  சூழலுக்கு ஏற்றவாறு மனிதனும் மிருகங்களும் தன்னை மாற்றிக்கொள்கின்றன. ஐஸ்லாந்து நாட்டில் மேயிலிருந்து ஜூலை வரை மூன்று மாதங்களுக்கு சூரியன் அஸ்தமிப்பதே இல்லை! மூன்று மாதங்களும் இரவே கிடையாது! அதேபோல ஸ்வீடனில் நள்ளிரவில்தான் சூரியன் அஸ்தமிக்குதாம்! மீண்டும் காலை நாலு மணிக்கெல்லாம் கிளம்பிவிடுமாம்! ஃபின்லாந்தில் கிட்டத்தட்ட 73 மணி நேரங்களுக்கு வெயிலடித்துக்கொண்டே இருக்கும்! அங்கெல்லாம் மனிதர்கள் வாழவில்லையா?

  எப்போதுமே வெயிலடிக்கும் வேலூரில் உள்ள நாயைக் கொண்டுபோய் மூணாறில் விட்டுவிட்டால் சீக்கிரமே அங்குள்ள குளிரைத் தாங்குவதற்காக அதன் உடம்பில் முடி வளர ஆரம்பித்துவிடும். கிருமிகள் சமாசாரமும் இப்படிப்பட்டதுதான். சூழலுக்கும் கழிவுக்கும் ஏற்றவாறு அவற்றின் உருவமும் மாறிக்கொண்டே இருக்கும்.

  கழிவுகள் பலவிதம்

  நாம் உண்ட உணவு செரித்தபின் நமக்குத் தேவையான சத்துகளையெல்லாம் அதிலிருந்து உடல் உருவாக்கிக்கொள்கிறது; உள்வாங்கிக்கொள்கிறது. தேவையில்லாத மீதி சமாசாரங்களையெல்லாம் அது தனியாகப் பிரித்து வைத்துவிடுகிறது. அவைதான் கழிவுகள்.

  இது அன்றாடம் இருபத்தி நாலு மணி நேரமும் நடப்பதுதான். (நாம்தான் இருபத்தி நாலு மணி நேரமும் எதையாவது வாயில் போட்டு அரைத்துக்கொண்டே இருக்கிறோமே)! நமது உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் சாப்பிடுகிறது, கொட்டாவி விடுகிறது, உச்சா போகிறது, கக்கா போகிறது - எல்லாம் செய்கிறது. அவற்றின் காரணமாகப் பிரித்தெடுக்கப்படும் தேவையற்ற சமாசாரங்களான கழிவுகள் உருவாகிக்கொண்டே இருக்கும்.

  இவை சாதாரண கழிவுகள். முதல் நிலைக் கழிவுகள். இவை தினமும் ஏற்பட்டுக்கொண்டேதான் இருக்கும். இவை பற்றி நாம் எந்தக் கவலையும் கொள்ளத் தேவையில்லை. இவற்றை சிறுநீர், மலம், வியர்வை - இப்படி உடலே வெளியேற்றிவிடும். இது முதல் நிலை.

  ஆனால், வெளியேற வேண்டிய ஒன்று வெளியேறாமல் தங்கிவிட்டால்? உதாரணமாக, ரெண்டு நாளாக ரெண்டுக்கே போகவில்லை என்றால்! மலச்சிக்கல் என்று சொல்வோம். அவை வெளியேறாத கழிவுகள். வெளியேறுவதில் ஏதோ பிரச்னையைச் சந்தித்த கழிவுகள். வெளியேறாமல் உடலிலேயே தேங்கிவிடும் கழிவுகள்.

  இப்படிக் கழிவுகள் உடலில் தேங்கிவிடும்போது அவை சில தொந்தரவுகளைக் கொடுக்க ஆரம்பிக்கின்றன. ஆனால், தொந்தரவு என்ற சொல்கூட சரியில்லை. ‘நம் உடலைச் சீர்படுத்துவதற்காகவும், தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றுவதற்காகவும் ஏற்படும் மாற்றங்கள்தான்’ அவை என்கிறார் ஹீலர் உமர். அந்த மாற்றங்களைத்தான் நாம் தொந்தரவுகள் அல்லது நோய்கள் என்று கருதுகிறோம்!

  நம்முடைய தவறான வாழ்முறையினால் கழிவுகள் நம் உயிரணுக்களிலேயே தேங்கியிருந்தாலும் அவற்றை எப்படியாவது வெளியேற்றவே அவை முயற்சி செய்கின்றன. அப்போதுதான் நாம் தொந்தரவுகளை உணர்கிறோம்.

  கண்ணிலிருந்து கழிவுகள் வெளியேறினால் கண்ணீர் வடியும். மூக்கிலிருந்து வெளியேறும்போது மூக்கிலிருந்து திரவமாக சளி வெளியேறும். நுரையீரலில் இருந்து கழிவுகள் வெளியேற்றப்படும்போது தும்மல், இருமல் எல்லாம் வரும். தோலில் இருந்து கழிவுகள் வெளியேறினால் அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படும். இப்படி எல்லாவிதமான உடல் ரீதியான தொந்தரவுகள் அனைத்துவே கழிவுகளின் வெளியேற்றம்தான்.

  ரசாயனக் கழிவுகள்

  இப்படி சாதாரண, முதல் நிலைக் கழிவுகள் வெளியேறி மறைந்துபோகும் தன்மை கொண்டவை. அவை வெளியேற நாம் துணை செய்தோமென்றால், அவை சீக்கிரமாகவும் எளிமையாகவும் வெளியேறும். ஆனால், அவற்றை நோய் என்று நினைத்து அவை வெளியேறுவதைத் தடை செய்யும் விதத்தில் நாம் ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கை’களில் ஈடுபட்டோமென்றால் - அப்படித்தான் செய்துகொண்டிருக்கிறோம் - சாதாரண கழிவுகள் தேக்கமுற்ற கழிவுகளாக மாறும். தொந்தரவுகள் அதிகமாகும்! அவற்றையும் நாம் மேலும் ‘அடக்க’ முயற்சிக்கும்போது, தேக்கமுற்ற இரண்டாம் நிலைக் கழிவுகள் மூன்றாம் நிலையில் ரசாயனக் கழிவுகளாக மாறிவிடும். ‘‘எல்லாப் பொருள்களையும் சேமிக்க விரும்புவதைப்போலவே கழிவுகளையும் சேமிக்கிறோம்’’ என்று குத்தலாகக் கூறுகிறார் உமர்! (பக்கம் 55).

  ஆனால், மூன்றாம் நிலைக் கழிவுகளான ரசாயனக் கழிவுகளையும் நமது செல்கள் வெளியேற்ற முயற்சி செய்யாமல் இருக்காது. அந்த முயற்சி ‘‘ஆங்கிலப் படத்தில் சண்டைக் காட்சிகளுக்கு இணையானது’’ என்கிறார் அவர் (பக்கம் 57)! நம் உடலின் அற்புதத் தன்மைகளில் ஒன்றை நாம் புரிந்துகொள்ள அது உதவும். அது என்ன அப்படி அற்புதமான செயல்?

  ரசாயனக் கழிவுகளை வெளியேற்றுவதில் நம் செல்களுக்கு ஒரு ‘டெக்னிகல்’ பிரச்னை உள்ளது. அவற்றை செல்லுக்கு உள்ளேயே வைத்திருந்தால், அது செல்லையே பாதித்துவிடும். செல்லுக்கு வெளியே தூக்கிப்போட்டால், அது மற்ற செல்களை பாதிக்கும்! அப்ப என்னதான்யா செய்வது? இங்கேதான் ஒரு அற்புதத்தை நம் செல்கள் நிகழ்த்துகின்றன. அது என்ன?

  The 36th Chamber of Shaolin என்று ஒரு படம். அதில் தற்காப்புக் கலை சொல்லித்தரும் ஒரு கல்லூரியில் ஒரு மாணவன் – கதாநாயகன் - சேருவான். அங்கே 35 அறைகள் அல்லது துறைகள் இருக்கும். ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு விதமான தற்காப்புக் கலை சொல்லித்தரப்படும். ஆனால், கதாநாயகன் புதிதாக தனக்கென ஒரு சிறப்புக் கலையை, மூன்று பிரிவாக மடியும் ஒரு கழியை அவனே வடிவமைத்து, அதில் அவனை யாரும் ஜெயிக்க முடியாதாபடி 36-வது அறையை உருவாக்குவான். அதேபோல, உள்ளேயும் ரசாயனக் கழிவை வைத்துக்கொள்ள முடியாமல், வெளியேயும் அனுப்ப முடியாமல் தவிக்கும் நம் செல்கள் ஒரு புதிய உத்தியைக் கையாள்கின்றன.

  லைசோசோம்கள்

  36-வது சேம்பர் ஆஃப் ஷாவோலின் படத்தில் 36-வது அறையை உருவாக்க உதவும் மூன்று மடிப்புகள் கொண்ட கழியைக் கதாநாகயன் உருவாக்குவதுபோல, ரசாயனக் கழிவுகளை அழிக்க நமது ‘செல்’ ஒரு புதிய தற்கொலைப்படையை உருவாக்குகிறது! ஆம். அந்த புதிய உயிரின் பெயர் லைசோசோம். ‘செல்’ சுவரின் அருகில் தூசி மாதிரி அவை ஒட்டிக்கொண்டிருக்கும். ரசாயனக் கழிவுகள் ‘செல்’ திரவத்தில் கலந்துவிடாதபடி ‘செல்’லில் கழிவுகள் இருக்குமிடத்தைச் சுற்றி ஒரு சவ்வு போன்ற ஒரு அமைப்பை அவை ஏற்படுத்துகின்றன. கழிவு ரசாயனம் செல் திரவத்தில் கலந்துவிடாமல் அந்த சவ்வு காப்பாற்றும். ஆனால், இது தாற்காலிக ஏற்பாடுதான்.

  கழிவுகளின் தன்மையையும் அளவையும் பொறுத்து இந்த லைசோசோம்கள் வளர்கின்றன. கழிவு ஒரு கோலியாத்தாக இருந்தால் லைசோசோம் டேவிட்டைப் போல் கவண் எறியாது. கோலியாத்தைவிட பெரிய கோலியாத்தாக வளர்ந்து கொல்லும்! ஆம், ‘செல்’லில் ஆரோக்கியமான சூழ்நிலை நிலவும்போது கழிவுகளைத் தாக்கிக் கொன்று தானும் அழிந்து போகும்!

  செல்லில் ஆரோக்கியமான சூழ்நிலையா? அப்படீன்னா என்ற கேள்வி எழுவது நியாயமே. நாம் விரதம் / நோன்பு பிடித்திருந்தால் அது ஆரோக்கியமான சூழ்நிலை. நாம் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தால் அதுவும் ஆரோக்கியமான சூழ்நிலைதான். இப்படிக் கழிவுகளைத் தாக்கி, தானும் அழிந்து போய்விடும் தியாகிகள் லைசோசோம்கள். ஒரு நுண்ணிய கழிவுத்துகள்கூட மிஞ்சாமல் அழித்துவிடுவார்கள். ஆமாம். லைசோசோம்களும் தனி உயிர்கள்தான். நாம் என்பது கோடிக்கணக்கான உயிர்களின் தொகுப்பு என்று ஹெக்டே கூறுகிறார். ‘எண்ணற்ற உயிர்களால் ஆனதுதான் மனித உடல்’ என்கிறார் ஹீலர் உமர். சத்தியமான வார்த்தைகள்.

  இதுவரை மூன்று வகையான கழிவுகளைப் பார்த்திருக்கிறோம். சாதாரணக் கழிவுகள், தேக்கமுற்ற கழிவுகள், ரசாயனக் கழிவுகள். இன்னும் முடிந்துவிடவில்லை. நான்காவது நிலைக் கழிவுகள்தான் கிருமிகள் உருவாவதற்குக் காரணமாக உள்ளது.

  அதையும் பார்க்கத்தானே போகிறோம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai