20. மதிப்பெண்ணும் அறிவும்!

மதிப்பெண் என்பது ஒரு பாடத்தில் ஆசிரியரால் கற்பிக்கப்பட்ட பகுதிகளைக் கொண்டு பாடத்திட்டத்தைக் கொண்டு, அவை ஒரு மாணவரால் எப்படி புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது என்பதை ஓரளவு அளவீடு செய்வதற்கான முறை மட்டுமே.
20. மதிப்பெண்ணும் அறிவும்!

பள்ளி கல்லூரி மாணவர்களிடமும், அவர்தம் ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடமும் அவர்கள் மிக முக்கியம் என்றும் அவசியம் என்றும் கருதுவது மதிப்பெண்கள் பெறுவதுதான். அதிக மதிப்பெண்கள் பெறுவதை அவசியமென நினைத்து அதனை நோக்கியே பாடம் படிக்கும் முறையை அமைத்துக்கொள்கின்றனர்.

மதிப்பெண்கள் மிக முக்கியம்தான். மறுக்க இயலாத உண்மை. ஆனால், அறிவு என்பது அனைத்திலும் மிக முக்கியமானது. அறிவைத் துறந்து பெறப்படும் மதிப்பெண், உயிரற்ற உடல் போன்றது.

ஒரு பாடத்தில் ஒரு மாணவன் பெறும் மதிப்பெண் அந்தப் பாடத்தில் அந்த மாணவனின் அறிவுத்திறனைக் குறிக்கிறதா என்றால், இந்த வினாவுக்கு ஆம் - இல்லை என திட்டவட்டமான பதிலைச் சொல்ல இயல்வில்லை.

காரணங்கள் இரண்டு

1. மதிப்பெண் அளவீட்டுக்கான கேள்விகளும் பாடம் நடத்தப்படும் முறைகளும் அறிவு சார்ந்திருந்தாலும், மதிப்பெண் பெறும் முறை அறிவு சார்ந்து மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை.

2. மதிப்பெண் பெறுவதற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் அறிவை வளர்த்துக்கொள்வதற்குக் கொடுக்கப்படுவதில்லை.

மதிப்பெண் என்பது ஒரு பாடத்தில் ஆசிரியரால் கற்பிக்கப்பட்ட பகுதிகளைக் கொண்டு பாடத்திட்டத்தைக் கொண்டு, அவை ஒரு மாணவரால் எப்படி புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது என்பதை ஓரளவு அளவீடு செய்வதற்கான முறை மட்டுமே.

ஆனால் அறிவு என்பது, பாடம் தொடர்பான பயன்பாடுகளை மாணவனின் புரிந்துகொள்ளும் திறன் எத்தனை அளவுக்கு அறிந்திருக்கிறது என்பதைச் சொல்வது.

மதிப்பெண் என்பது, ஒரு குறிப்பிட்ட ஆசிரியர் அல்லது ஆசிரியர் குழு அமைத்திருக்கும் கேள்விகளுக்கான பதிலை அல்லது தகவலை தெரிந்துவைத்திருப்பதன் அடையாளம் மட்டுமே. அந்தக் கேள்விகள் மாணவனின் புரிந்துகொள்ளும் திறனை அறிந்துகொள்ளும் தன்மை கொண்டவையா என்பதும் முக்கியம்.

நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவரால் ஒரு பாடத்தை புரிந்துகொள்ளாமல்போகவும் சந்தர்ப்பம் உண்டு. அதேபோல ஒரு பாடத்தை நன்கு புரிந்துகொண்ட மாணவரால், தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான விடை எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற இயலாமல் போகும் சந்தர்ப்பமும் உண்டு.

நல்ல மதிப்பெண் வாங்குகிற மாணவர் எல்லோரும் அறிவு கொண்ட மாணவர் இல்லை. நல்ல மதிப்பெண் பெறாத மாணவர்கள் எல்லோரும் அறிவிலிகளும் இல்லை.

மதிப்பெண் பெறுவதற்கு இப்படி வழி, இன்ன கேள்வி இன்ன பதில் இத்தனை வரிகளில் பதில் எழுத வேண்டும் என்பதெல்லாம் முறைகள் உண்டு.

இப்படி அறிவை எப்படி அளப்பது.. அல்லது அறிவு என்றால் என்ன?

இதை ஏன் ஒரு மாணவன் / மாணவி தெரிந்துகொள்ள வேண்டும் என்பது மிக முக்கியம். அறிவைக் கொண்டு சரியான மதிப்பெண் பெறுவதுதான் இலக்காக இருக்க வேண்டும்.

இதன் காரணமாக, அறிவு என்பது என்ன என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்!

கற்றுக்கொள்வது, புரிந்துகொள்வது, கருத்துகளை உருவாக்குவது, கோட்பாடுகளை உருவாக்குவது, கற்றுக்கொண்டதில் எதை எங்கே எப்படிப் பயன்படுத்துவது, தெரிந்திருக்கும் தகவல்களைக் கொண்டு சரியான காரணங்களைக் கண்டுபிடிப்பது, அந்தக் காரணங்களை ஆராய்வதன் மூலம் சரியான யூகங்களை அறிவது, யூகங்களைக் கொண்டு சரியான முடிவு எடுப்பது, தகவல்களை நினைவு வைத்திருப்பது, நாம் புரிந்துகொண்ட விஷயத்தை பிறருக்குப் புரியும்படி எடுத்துச் சொல்வது எனும் 12 ஆற்றலும் சேர்ந்ததே அறிவு எனப்படும்!

இவை ஒவ்வொன்றும் அவசியம்!. இவற்றின் கூட்டணியும் அவசியம். இந்தக் கூட்டணியில் இருக்கும் ஆற்றல்களை சரியான விகிதத்தில் சரியான அளவு பயன்படுத்துவதுதான் அறிவாற்றல். இது சரியாக இருந்தால் நூற்றுக்கு நூறு கிடைப்பது உறுதி.

கற்றுக்கொள்வது என்பதன் காரணம், கற்பதில் இருக்கும் நன்மை கருதி மட்டுமே இருப்பது அவசியம். மதிப்பெண்களுக்காகக் கற்பது, தேர்வு வருகிறது என்பதற்காகக் கற்பது, ஆசிரியரின் வற்புறுத்தலுக்காகக் கற்பது, பெற்றோருக்குக் கட்டுப்பட்டுக் கற்பது என்பவை கற்பதற்கான காரணங்களாக இருக்கக் கூடாது.

கற்பதைத் தூண்டுவது, உங்களின் உள்ளுணர்வாகவும், தன்னிச்சையான ஆர்வமாக இருந்தால் மட்டுமே அந்தத் தூண்டல் நிரந்தரமாக ஒரு மாணவனை ஊக்குவித்துக்கொண்டிருக்கும், கற்றலின் மீது இருக்கும் ஆர்வம் குறையாது இருக்கும். மாறாக மதிப்பெண் பெற வேண்டும், ஆசிரியர் கோபிப்பார் என்பவை தேய்ந்து மறையும் காரணங்கள். அவை முற்றிலும் தேய்ந்து மறைந்தால், கற்பதும் நின்றுபோகும்.

இவை ஒவ்வொன்றையும் கவனிக்கலாம். அதாவது, இவை ஒரு மாணவனுக்கு / மாணவிக்கு எத்தனை அவசியம் என்பதைக் கவனிக்கலாம்.

கற்றுக்கொள்வதற்கான காரணம் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கவனித்தோம். கற்றுக்கொள்வதன் நோக்கம் புரிந்துகொள்வதாக இருக்க வேண்டும். அதற்கு என்ன கற்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்வதும், ஏன் கற்கிறோம் என்பதை அறிந்துகொள்வதுமான இரண்டு நிலைகளைக் கொண்டது.

இந்த இரண்டு நிலைகள்தான் மேம்போக்காகப் புரிந்துகொண்டிருக்கிறோமா அல்லது நன்கு ஆழமாகத் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறோமா என்பதை முடிவு செய்கின்றன.

மனப்பாடம் செய்வதும் மனப்பாடம் செய்ததை ஒப்பித்துக் கூறுவதும் அல்லது மனப்பாடம் செய்ததை வரி பிறழாமல் எழுதி காண்பிப்பதும் புரிந்துகொள்வதில் சேர்க்க முடியாது. இரண்டு எண்களைப் பெருக்கி விடை சொல்வது என்பதை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். வாய்ப்பாடுகளை மனப்பாடம் செய்வது தொடக்க நிலை. இதில் புரிந்துகொள்ளும் முயற்சி எதுவும் இல்லை.

பெருக்கல் என்பது தொடர்ச்சியாக எண்களைக் கூட்டிக்கொண்டே வருவது என்பதைத் தெரிந்துகொள்வதுதான். பெருக்கல் எனும் கணித முறையைப் புரிந்துகொள்வது ஆகும்.

இந்த அளவில் கற்பதைப் புரிந்துகொண்டால்தான், கற்றதைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர இயலும்.

அறிவு ஆற்றல்கள் குறித்து அடுத்த வாரங்களில் மேலும் தெரிந்துகொள்வோமா?

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com