16. பயமில்லாத கணக்கு!

பயிற்சி நேரம், பாட நேரம், வகுப்பு நேரம் தவிர ஏனைய நேரங்களில், பல சந்தர்ப்பங்களில் கணக்குப் பாடம் குறித்த சந்தேகங்கள் அவ்வப்போது மனத்தில் வந்து போகும்.
16. பயமில்லாத கணக்கு!

கணக்குப் பாடத்தில் பயமில்லாமல் இருப்பது மிகவும் எளிமையானதுதான். இதற்கு பெற்றோர் தரப்பில் மிகவும் ஒத்துழைப்பு வேண்டும்.

சில நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவரின் வீட்டுக்குப் சென்றிருந்தேன். நான் சென்ற நேரம், நண்பரின் மகன் வெளியில் கிளம்பிக்கொண்டிருந்தான். ஞாயிற்றுக்கிழமை. கையில் புத்தகங்கள் நோட்டுப் புத்தகங்கள் எடுத்துக்கொண்டு எங்கே செல்கிறான் என நண்பரிடம் கேட்டேன். அவன் கணக்குல வீக். அதான் டியூஷன் வெச்சிருக்கேன் என பதில் சொன்னார்.

பெற்றோர்கள் சில விஷயங்களை மிக முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

பிள்ளைகளைக் கண்டிக்கும்போது, கண்டிப்பு இருக்கலாம் அதில் கடுமையும் கேலியும் இருக்கலாகாது. அவர்களை சிறுமை செய்யும் வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும். அதேபோலத்தான் பாராட்டும்போதும். பாராட்டு மட்டும் இருக்க வேண்டும். அதிலே உற்சாகம் இருக்கலாம், ஊக்குவிக்கும் வார்த்தைகள் இருக்கலாம். ஆனால், கர்வம் கொள்ள வைக்கும் சொற்கள் இருக்கக் கூடாது. உன்னை நினைத்துப் பெருமை கொள்கிறேன் எனச் சொல்வது வேறு; உன்னை நினைத்து கர்வம் கொள்கிறேன் எனச் சொல்வது வேறு.

ஒரு பாடத்தில் தன் மகள் / மகளுக்குப் பயம் இருக்கிறது எனில், அதை நேரடியாகச் சுட்டிக்காட்டும் உரையாடல்களைப் பெற்றோர் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். பெற்றோர் மட்டுமல்ல, ஆசிரியர்களும் அவசியம் இதனைத் தவிர்க்க வேண்டும்.

பிள்ளைகளின் மனநிலையைப் பெற்றோர்கள் புரிந்துகொள்வதில் மிக முக்கியமான அம்சம் உண்டு.

எந்த ஒரு செயலையும், எந்த ஒரு விஷயத்தையும், அல்லது எந்த ஒரு சொல்லையும் சிறிய வயதினர் பல மணி நேரங்கள் ஆராய்ந்து அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதில்லை. அவர்கள் ஒரு செயலைக் கவனித்தல் அல்லது ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டால் அல்லது ஒரு வார்த்தை அவர்கள் செவியில் விழுந்தால், அதனை சில விநாடிகளுக்கும் குறைவான நேரம் மட்டுமே யோசிக்கின்றனர். அந்த சொற்ப கால யோசனையை மட்டுமே வைத்துக்கொண்டு முடிவுக்கு வந்துவிடுகின்றனர்.

இதில் குறிப்பாக தங்கள் மீது பெற்றோர் அல்லது ஆசிரியர் கொண்டிருக்கும் எதிர்மறை விமரிசனம் குறித்த செயல்கள், அல்லது வார்த்தைகளை எதிர்கொள்ளும்போது, அவை குறித்து தீர்க்கமாகவும் ஆழமாகவும் யோசிப்பது இல்லை. இதனால் அப்படி சொல்லப்படும் வார்த்தைகளை அவர்கள் உள்மனம் அப்படியே ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை உருவாகினறது.

கணக்குப் பாடம் எளிமையாக இருக்க, கணக்குப் பரிட்சைகளை பயமின்றி எதிர்கொள்ள சில டிப்ஸ்களைக் கவனிக்கலாம்..

1. எந்த formula, equation, or derivation-ஐயும் மனப்பாடம் செய்ய முயற்சி செய்யாதீர்கள். சென்ற வாரம் கவனித்ததுபோல, கணக்குப் பாடம் என்பது மொழிப்பாடம் போன்றதல்ல. இதில் நேரடி விடையைச் சொல்லும் கேள்விகள் இல்லை. சில கோட்பாடுகளைப் புரிந்துகொண்டு அதன்படி கேள்விக்கு விடை எழுத வேண்டும் என்பதே நோக்கம். ஆகவே ஃபார்முலா, சமன்பாடுகளைப் புரிந்துகொண்டு படிக்கத் தொடங்குங்கள்.

2. பாடம் ஆங்கிலத்தில் இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் பாடத்தை தமிழில் புரிந்துகொண்டாலும், ஃபார்முலா, சமன்பாடுகள் மறக்காது.

உதாரணமாக ஒரு செங்கோண முக்கோணத்தின் பரப்பளவுக்கான ஃபார்முலாவை ½ x b x h என மனப்பாடம் செய்வதைக் காட்டிலும், முக்கோணத்தின் அடிப்பக்கத்தினையும் உயரத்தினையும் பெருக்கி வரும் அளவில் பாதி என தமிழில் சொல்லிப் பார்த்துக்கொண்டால், அந்த ஃபார்முலா உங்களுக்குப் புரிந்துவிடும்.

3. ஒவ்வொரு ஃபார்முலா, சமன்பாடுகளையும் எப்படி அவை வந்தன எனும் முறையை உங்களுக்குப் புரிந்த மொழியில் எளிமையாகச் சொல்லிப் பாருங்கள். அப்படியே, உங்களுக்குப் புரிந்த மொழியில் எழுதிப் பாருங்கள். அதன் பின்னர் அந்த ஃபார்முலா, சமன்பாட்டினைக் கவனித்தால் / படித்தால் அது நன்கு மனத்தில் பதியும். இதை விட்டுவிட்டு மனப்பாடம் செய்ய முயற்சி செய்தால், குழப்பம்தான் மிச்சமாகும். இந்த குழப்பத்தின் இன்னொரு பெயர்தான் பயம்.

4. கணக்குப் பாடத்தைப் பொறுத்தவரை, கண்ணுக்கும் மூளைக்கும் இருக்கும் தொடர்பைக் காட்டிலும், கைக்கும் கண்ணுக்கும் மூளைக்கும் இருக்கும் தொடர்பே அதிகம்.

நீங்கள் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டதை நினைத்துப் பாருங்கள். சைக்கிள் ஓட்டுவது முதலில் பார்க்க பயமாக இருக்கும். நண்பன் ஒருவன் ஓட்டுவதைப் பார்த்த பின்பு கொஞ்சம் தைரியம் வரும். பிறகு நீங்கள் அதே நண்பனின் உதவியுடன் சைக்கிள் ஓட்டப் பழகுவீர்கள். உங்களுக்கே சைக்கிள் லாகவமாக ஓட்டப் பழகிவிடும்.

கணக்குப் பாடமும் அப்படித்தான். ஆசிரியரோ அல்லது வகுப்புத் தோழனோ கஷ்டமான கணக்கைப் போட்டுக் காண்பித்தால், கவனிக்கும்போது புரிவதுபோல இருக்கும். ஆனால், நீங்களே அந்தக் கணக்குக்கு விடை கண்டுபிடிக்க முயற்சி செய்தால் மட்டும்தான் ஒவ்வொரு step-ஐயும் நீங்கள் எப்படி உள்வாங்கிக்கொண்டீர்கள் என்பது புரியும். நண்பன் சைக்கிள் ஓட்டினால், நீங்கள் ஓட்டியதாக ஆகாது.. அதேபோலத்தான்.

கணக்குப் பாடத்தின் மீது பயம் கொண்டிருக்கும் மாணவர்கள் பலருக்குத் தெரியாத ஒரு பெரிய ரகசியம் இருக்கிறது. ஆம், ரகசியம்தான். ஆனால் ரகசியமில்லை!

மற்றப் பாடங்களைப்போல அல்ல கணக்கு என்பது ஏன் தெரியுமா? ஏனைய பாடங்களில் கேள்வி மட்டும்தான் கேள்வியில் இருக்கும். கேள்விக்கான விடை நாம்தான் நம் நினைவில் இருந்து யோசித்து சரியாக எழுத வேண்டும்.

ஆனால் கணக்குப் பாடத்தில் அப்படி இல்லை! கேள்விக்கான விடையின் பாதி, கேள்வியிலேயே இருக்கும். கேள்வியில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு எண்ணும், ஒவ்வொரு விவரமும் விடைக்கான குறிப்புகளே! அந்தக் குறிப்புகளை வைத்துக்கொண்டு, எப்படி விடை கண்டுபிடிக்க வேண்டும் என தெரிந்திருக்க வேண்டும்.

விடை கண்டுபிடிக்கும் முறை என்பது சைக்கிள் ஓட்டுவது மாதிரிதானே. தொடக்கத்தில், சைக்கிள் ஓட்டும்போது, சைக்கிள் நம்மை ஒரு பக்கம் இழுக்கும். நாம் அதை இன்னொரு பக்கம் இழுப்போம். பழகப் பழக சரியாகும்.

யோசித்துப் பாருங்கள், நன்றாக சைக்கிள் ஓட்டவந்த பின்பு, சைக்கிளில் ஏறி அமர்வதற்கு முன்னால் நாம் நம் நினைவில் இருந்து யோசித்து யோசித்தா ஓட்டுகிறோம். நம் ஒவ்வொரு அசைவும் தானாகவும் சரியாகவும் வருகிறதல்லவா!

கணக்குப் பாடமும் அதுபோலத்தான். பழகிவிட்டால் போதும். கேள்விதான் சைக்கிள். கேள்வியிலேயே பதிலுக்கான குறிப்பு இருக்கும். பழக்கம்தான் முக்கியம். பழக்கம், பயிற்சியினால் வருகிறது.

கணக்குப் பாடத்தில் பயிற்சி எடுக்கும்போது சில அம்சங்களைக் கவனித்து செய்துவிட்டால், பரிட்சையின்போது பயம் இருக்காது.

1. பயிற்சிக்கு விடுமுறை கிடையாது. விடுமுறை நாட்களில் பயிற்சி நேரம் மாற்றிக்கொள்ளலாமே தவிர, பயிற்சி எடுக்காமல் இருக்கக் கூடாது.

2. பயிற்சியின்போது கேள்வித்தாள் முறைகளை அதிகம் பயத்தில் கொள்ளாமல், பாடத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டுவதுபோலத்தான். சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டுவிட்டால், எந்தச் சாலையிலும் எந்தப் போக்குவரத்து நெருக்கடியிலும் லாகவமாக ஓட்டமுடியும். கணக்குப் பாடத்தின் அடிப்படை புரிந்துவிட்டால் போதும். கஷ்டமான கணக்கு என ஒன்றும் இல்லை என்பது தெரிந்துவிடும்.

3. கேள்வித்தாள் குறித்து கவலை கொள்ளாமல் பயிற்சி எடுக்கும்போது, ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டை சரியாக ஆழமாகப் புரிந்துகொள்ளும் வகையில் பயிற்சி எடுக்க வேண்டும். முன்பு சொன்னதுபோல, கணக்குப் பாடம் என்பது விடை கண்டுபிடிப்பது இல்லை. எப்படி விடை கண்டுபிடிப்பது எனும் முறை தொடர்பானது. விடை கண்டுபிடிக்கும் முறை தெரிந்துவிட்டால், விடை கண்டுபிடிப்பது சுலபம்.

4. மாணவர்கள் பயிற்சி எடுக்கும்போது, பலமுறை விடை கிடைத்துவிடும்; சிலமுறை விடை கிடைக்காது. அதுபோன்ற வினாக்களை தனியே குறித்து வைத்துக்கொண்டு, அதற்கென நேரமும் நாளும் ஒதுக்கித் தனியே பயிற்சி எடுக்க வேண்டும். அதுபோன்ற கணக்குகளை எப்படி அணுகுவது என்பதை நண்பர்களிடமும், ஆசிரியர்களிடமும் கேட்டுக்கொண்டு பயிற்சி செய்வது பலமாக அமையும்.

பயிற்சி நேரம், பாட நேரம், வகுப்பு நேரம் தவிர ஏனைய நேரங்களில், பல சந்தர்ப்பங்களில் கணக்குப் பாடம் குறித்த சந்தேகங்கள் அவ்வப்போது மனத்தில் வந்து போகும். அப்படி வரும்போதெல்லாம், உடனே நோட்டுப் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு அந்தக் கணக்கை முயற்சிக்க வேண்டாம். அந்தச் சந்தேகத்தைக் குறித்து வைத்துக்கொண்டு, வழக்கமாகப் படிக்கும் நேரம், வழக்கமாகப் பயிற்சி எடுக்கும் நேரத்தில் விடை கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும்.

கணக்குப் பாடத்தைப் பொறுத்தவரை பயம் போக, குழப்பம் நீங்க, நூற்றுக்கு நூறு வாங்க, ஒரே ஃபார்முலா.. பயிற்சி.. பயிற்சி மட்டுமே! வேறு குறுக்கு வழிகள் பயன் தராது.

அடுத்த வாரம்.. அச்சமில்லா அறிவியல்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com