13. சவாலே சமாளி!

ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பதும் மாறப்போவதில்லை. இவ்வளவு மணி நேரம் பள்ளியில் இருக்க வேண்டும் என்பதும் மாறப்போவதில்லை. இந்தப் பாடத்தில் இவ்வளவு படிக்க வேண்டும் எனும் அளவும் மாறப்போவதில்லை..
13. சவாலே சமாளி!

முந்தைய அத்தியாயத்தில் சில சவால்கள் குறித்துப் பார்த்தோம். அந்தச் சவால்களை எப்படித் திறமையாகக் கையாள்வது என்பதை இப்போது நாம் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.

சவால்களைச் சந்திக்க வேண்டும் எனில்.. சவால்களைக் கடந்து அவற்றை முறியடித்து வெற்றிபெற வேண்டுமானால்.. சரியாகச் சொல்ல வேண்டுமானால், சவால்களில் வென்று நூற்றுக்கு நூறு பெற வேண்டுமானால், முதல் தேவை மனோபாவம்.

அதாவது, நிதர்சனத்தைப் புரிந்துகொள்ளும் மனோபாவம். இது இருந்தால் மட்டுமே சவால்களைக் சாமர்த்தியமாகக் கடந்து வெற்றிபெற முடியும்.

சவாலான தருணங்களால் மட்டுமே நாம் பலம் கொண்டவர்களாக மாற இயலும். சவால் என்பது சூழல் இல்லை; வாய்ப்பு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மாணவர்களுக்கான சவால் என்பது பாடம் கஷ்டமாக இருக்கிறது, தேர்வில் வினாத்தாள் கஷ்டமாக இருக்கிறது என்பதில் இல்லை. ஆனால், அப்படி நினைத்துக்கொள்வதால், மனத்தளவில் உருவாகும் அச்சம், தன் திறமை மீது நம்பிக்கை இல்லாத தன்மை, தோற்றுவிடுவோம் என்ற அச்சம் போன்றவையே மிக முக்கியமான சவால்கள். இதைத்தான் வென்று காட்ட வேண்டும்.

எளிமையாக யோசித்துப் பாருங்கள்! இன்று நீங்கள் தினமும் செல்லும் சாலை ஒரு காலத்தில் கல்லும் முள்ளும், மேடும் பள்ளமுமாக இருந்திருக்கும். அந்த இடத்தில் சாலை அமைத்து பலர் பயன்படுத்தக் காரணமாக இருந்தவர்கள், தங்கள் திறமை மீது நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அங்கே சாலை அமைக்கமுடியும் என்பதை நம்பி செயல்பட்டார்கள். அந்த நம்பிக்கைதான் அவர்களின் பலம். அதுதான் ஊக்க சக்தி.

உங்கள் திறமை மீது நம்பிக்கை வைக்காமல், அவசியமில்லாத அச்சமும், தோல்வி அடைவோம் என்பதால் முயற்சி செய்யாமல் இருக்கும் இடமே அல்லது இருக்கும் நிலையே வசதியானது என நினைத்துக்கொள்வதால் மட்டுமேதான், பாடம் கஷ்டமாக இருக்கிறது; தேர்வில் வினாத்தாள் கஷ்டமாக இருக்கிறது; தோல்வி என்பது அச்சமூட்டுகிறது.

ஆனால், நிஜத்தில் பாடம் கஷ்டமில்லை; வினாத்தாள் கஷ்டமில்லை. உங்கள் வகுப்புத் தோழனால், வகுப்புத் தோழியால் செய்து காட்ட முடிந்த விஷயம் உங்களாலும் செய்ய முடியும்.

கடந்த அத்தியாயத்தில் நாம் கவனித்த முதல் சவால், தேர்வு வரும்வரை நாம் வாசித்ததை, அல்லது நாம் கற்றுக்கொண்டதை சரிதானா என நாமே பரிசோதித்துப் பார்க்காமல் இருப்பது என கவனித்தோம்.

இப்படி இருப்பதால், நாம் படித்தது தேர்வின்போது நினைவுக்கு வரும். ஆனால், அந்த விவரங்களை கேள்விகளோடு பொருத்திப் பார்த்து நாம் பரிசோதித்துக்கொள்ளாத காரணத்தால், தேர்வில் சுமாரான பதிலாகத்தான் எழுதமுடியும் எனும் சவால் உருவாகிறது.

இந்தச் சவால் கொண்ட மாணவர்கள், தினமும் தாங்கள் வாசித்த பாடப் பகுதிகளுக்கான கேள்விகளை உருவாக்கி அவற்றுக்குப் பதில் எழுதி, பதில் சொல்லி சரிபார்த்துக்கொள்ளும் வழக்கத்தை உடனே கடைப்பிடிக்க வேண்டும். இந்த முறையால், கற்ற பாடத்தை கேள்வி பதில் வடிவில் revision செய்துகொள்ளும் வாடிக்கை உருவாகும். இதனால், தேர்வின்போது மனத்தளவில் உருவாகும் வாடிக்கையான பதற்றம் இருக்காது.. கவனச்சிதறல் இருக்காது.. கேள்வி முறை நன்கு பரிச்சயம் ஆனபடியால், பதில் எப்போதும் எளிமையாகவும் தோன்றும். மேலும், விடைகளைத் திருத்தும் ஆசிரியரின் எதிர்பார்ப்புக்கு ஈடுகொடுக்கும் பதில்களாகவும் அமைந்துவிடும்.

கேள்வி பதில் எழுதி கற்கும் முறையைக் கடைப்பிடிக்கத் தொடங்கிய சில நாள்களில், வேகமாக வாசித்துப் பழகும் முறை மெள்ள மெள்ள மாறி, ஆழமாகவும் நிதானமாகவும் கற்கும் முறைப் பழக்கத்துக்கு வந்துவிடும். ஆனால், தினம் கேள்வி பதில் வடிவில் கற்பது மிகவும் முக்கியம். இதன் காரணமாக, வேகமாகப் படிப்பதுதான் சிறந்தது எனும் தவறான நம்பிக்கை மெள்ள மெள்ள அகன்றுவிடும். அது மட்டுமல்ல, நிதானமாகவும் ஆழமாகவும் படிப்பதில் இருக்கும் அனுகூலமும் புரியத் தொடங்கிவிடும்.

தினசரி கேள்வி பதில் எழுதிக் கற்கும் முறையினால், அந்தப் பாடத்தில் இருக்கும் பல்வேறு தகவல்களும், கோட்பாடுகளின் ஒருங்கிணைப்பும்தான் தேவையான அறிவைக் கொடுக்கும் என்பதும் ஆழமாகப் புரியத் தொடங்கும். கேள்விகள் மூலம் வெவ்வேறு கோணங்களில் பாடத்தை அதன் கோட்பாடுகளை அணுகும்போது, ஒவ்வொரு விவரமும் தனித் தனியாகவும், ஒருங்கிணைந்தும் எவ்வளவு முக்கியம் என்பது புரியத் தொடங்கும். இதனால், மேம்போக்காக வாசிக்கும் பழக்கமும் மெள்ள மெள்ள மறையத் தொடங்கும்.

கேள்விக்குப் பதில் எழுதி தினமும் கற்கும் முறையினால், தன்னம்பிக்கை மெள்ள மெள்ள வளர்ந்து ஆழமாகப் பரவும். சில பாடங்கள் சிலருக்கு மட்டுமே சரியாகக் கற்க வரும் எனும் தவறான நம்பிக்கை மறையத் தொடங்கும். அதனால், நாமும் நல்ல மதிப்பெண்கள் பெறலாம், நூற்றுக்கு நூறு வாங்கலாம் எனும் திடமான நம்பிக்கையும் வளரத் தொடங்கும்.

வாசித்துப் படிப்பதைக் காட்டிலும், கேள்விகளுக்குப் பதில் எழுதிக் கற்கும் முறையில், கவனச் சிதறல்கள் மிகவும் குறைந்துபோகும். மேலும், வாசிக்கும்போது கருத்தும் கவனமும் பாடத்தில் இருக்கும்.

கற்பதற்கும், விளையாடுவதற்கும், கேளிக்கைக்கும், தூக்கத்துக்கும், உணவுக்கும் சரியான அளவு நேரம் ஒதுக்கி, அந்த அட்டவணைப்படி படிக்கத் தொடங்கினாலே, பாடம் குறித்த அச்சமும் தயக்கமும் பெருமளவில் போய்விடும்.

ஓ! அறிவியல் பாடமா.. அதில் நிறைய இருக்கு.. எப்படிப் படிப்பேன்..

ஐயோ! கணக்குப் பாடமா.. அதில் எக்கச்சக்கமா ஃபார்முலாஸ் இருக்குமே? என்னால் எப்படிப் படிக்கமுடியும்..

என அங்கலாய்க்கும் மாணவர்களும் சரி.. ஏன், நன்றாகப் படிக்கத் தெரிந்த மாணவர்களும் தடுமாறுவது, நேரத்தை நிர்வகிக்கத் தெரியாத காரணத்தால்தான்.

ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பதும் மாறப்போவதில்லை. இவ்வளவு மணி நேரம் பள்ளியில் இருக்க வேண்டும் என்பதும் மாறப்போவதில்லை. இந்தப் பாடத்தில் இவ்வளவு படிக்க வேண்டும் எனும் அளவும் மாறப்போவதில்லை..

இதெல்லாம் மாறாது.. ஆனால், இதையெல்லாம் ஒழுங்காகத் திட்டமிட்டுவிட்டால், இந்தப் பாடத்துக்கு இத்தனை நேரம், இன்று இத்தனை மணிக்கு இந்தப் பாடத்தில் இந்தப் பகுதி படிக்க வேண்டும்; இந்த நாளில் இவ்வளவு முடித்திருக்க வேண்டும்; இந்த நாளுக்குள் இத்தனை கேள்வி பதில்களில் இவ்வளவு தேர்ச்சி அளவுக்கு முன்னேறி இருக்க வேண்டும் எனும் அளவுக்குத் துல்லியமாகத் திட்டமிடத் தெரிந்திருக்க வேண்டும். இது குறித்து இன்னமும் விவரமாகப் பின்னர் கவனிக்க இருக்கிறோம்.

அதற்கு முன்னால், நாம் தெரிந்துகொள்ள வேண்டியது ஒன்று உள்ளது. ஆண்டுத் தொடக்கத்திலேயே நாம் கற்கும் அட்டவணை தயாராகிவிட வேண்டும் என்பதுதான்.

கற்கும் முறை என்பது ஒவ்வொரு பாடத்துக்கும் மாறும் என்பதை சென்ற வாரம் கவனித்தோம்.

மொழிப்பாடம் என்பது வாசித்துக்கொண்டே செல்லும்போது, நிகழ்வுகளையும் பெயர்களையும் நினைவில் கொண்டால் போதுமானது. வரலாறு புவியியல் பாடங்களிலும் இப்படித்தான். மொழிப்பாடத்தில் செய்யுளோ, பாடல் பகுதியோ அல்லது உரைநடையிலோ, கற்பனை வளம் நிறைந்த பகுதிகளிளோகூட அந்தக் கற்பனை வளத்தை ரசித்துக்கொண்டுவிட்டால், அந்த விஷயம் நினைவில் தங்கிவிடும்.

ஆனால், கணிதப் பாடமோ, வணிகக் கணக்குகள் கொண்ட பாடமோ, பொருளாதாரமோ, அல்லது அறிவியல் பாடங்களோ அப்படி அல்ல. இவற்றிலெல்லாம் ஒரு கோட்பாடு இன்னொரு கோட்பாட்டுடன் நெருங்கிய தொடர்பும் இயக்கமும் கொண்டிருக்கும். இந்த அடிப்படை புரிந்து கற்றுக்கொண்டால் மட்டுமே, அந்தப் பாடங்களில் நல்ல மதிப்பெண்களில் தேர்ச்சி பெற இயலும்.

இந்தப் பாடங்களில், ஒவ்வொரு கோட்பாட்டுக்கும் செயல்முறையில் சில நுணுக்கங்கள் இருக்கும். அவை கணக்குகளாகவோ, சமன்பாடுகளாகவோ அமைக்கப்பட்டிருக்கும். மொழிப்பாடங்களில், வரலாறு புவியியல் பாடங்களில் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்வதுபோல சமன்பாடுகளை, கோட்பாடுகளை மனப்பாடம் செய்து நினைவில் வைத்துக்கொள்வது இந்தப் பாடங்களில் பயன் தராது.

காரணம், கோட்பாடுகளை, சமன்பாடுகளைப் பயன்படுத்தி விடை அல்லது தீர்வு காண வேண்டிய அளவில் உதாரணங்களாகக் கேள்விகள் கேட்கப்படும்.

அந்தக் கோட்பாடுகள், சமன்பாடுகளை ஆழமாகக் கற்றிருந்தால் மட்டுமே அப்படியான கேள்விகளுக்குப் பதில் எழுத இயலும்.

இந்தப் பாடங்களில், சில சொற்கள் மிக முக்கியமானவை. அவற்றை துறைச் சொற்கள் எனலாம். ஆங்கிலத்தில் terminology எனச் சொல்வார்கள். அந்தக் குறிப்பிட்ட சொற்களை மட்டுமே பயன்படுத்துவது மிக அவசியம்.

இதுபோன்ற பாடங்களில் அர்த்தம் என்பது மிக முக்கியம். அர்த்தம், அதாவது பொருள் தெரிந்து படிக்க வேண்டும் என்பது மிக முக்கியம். அப்படி இல்லாமல் வாசித்தால், அதிகம் படித்ததுபோல் தெரியும்; நிறைய நேரம் படித்ததுபோலத் தெரியும்; ஆனால், தேர்வில் கேள்விகளுக்கு அந்தக் கேள்வியில் இருக்கும் நுணுக்கங்களுக்குப் பொருள் தெரியாமல் விடை அளிக்க இயலாமல், பொதுவான விடை ஒன்றை எழுதி, குறைந்த மதிப்பெண் மட்டுமே வாங்கும் நிலை உருவாகும்.

பாடங்களை சிரமம் இல்லாமல் கற்பது எப்படி என்று கவனித்தோம். அடுத்து, பயமுறுத்தும் தேர்வுகளைப் பயமில்லாமல் எப்படி அணுகுவது என்பதைப் பார்க்கலாம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com