33. அம்மை அப்பன்

பெற்றோர் எனும் பொறுப்பைப் பெற்றோர், தம் கடமைகளை எளிமையாகப் புரிந்துகொள்ள வேண்டும். அந்தப் பொறுப்பு நிரந்தரமானது.
33. அம்மை அப்பன்

நாம் இந்தத் தொடரின் மிக முக்கியமான பகுதிக்கு வந்திருக்கிறோம். நூற்றுக்கு நூறு என்பது பிள்ளைகளின் கனவு, பெற்றோரின் உழைப்பின் பலன் என்று சொல்வது மிகச் சரியானதாகும். ஆனால் கனவை எப்படி நிறைவேற்றிக்கொள்வது என்பது குறித்து பிள்ளைகள் கோணத்திலிருந்து மட்டும் இதுவரை கவனித்தோம். அந்தக் கனவை செயலாக்க பெற்றோரின் தரப்பிலிருந்து பல கண்ணோட்டங்களைக் கவனிக்க வேண்டியது முக்கியம். ஆம், இனிவரும் அத்தியாயங்களில் பெற்றோரின் பங்களிப்புகள் குறித்து கவனிக்க இருக்கிறோம்.

பெற்றோர் என்பவர் பிள்ளைகளை உடல்ரீதியாகப் பெற்றவர் மட்டுமில்லை; பல கடமைகளைப் பெற்றவரே பெற்றோர். அந்தக் கடமைகள் குறித்து முதல் அளவில் அறிமுகக் குறிப்புகளைக் கண்டு பிறகு அதனை விரிவாக அலசலாம்.

1. பிள்ளைகளை எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்க முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டாம். இந்தக் கருத்தை படிக்கும் பெற்றோருக்கு இதில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் உளவியல்ரீதியாக அப்படி ஒரு பொறுப்பு பெற்றோருக்கு இருக்கக் கூடாது என்பதே சரியான அணுகுமுறை.

சிறுபிள்ளைப் பருவம் தொடங்கி மணமாகும் பருவம் வரை ஒவ்வொருவரும் அவரவர் வயதுக்கு ஏற்ப எடுக்கும் சிறிய, பெரிய, மிக முக்கியமான முடிவுகளால் மட்டுமே மகிழ்ச்சியோ துன்பமோ அடைகின்றனர். சங்க இலக்கியத்தில் ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பது இதைத்தான். பிள்ளைகள் அவர்கள் வயதுக்கு ஏற்ப முடிவு எடுக்கும் சுதந்திரத்தைத் தரவும். அந்த முடிவுகளை எடுக்க தேவையான உதவிகளை வேண்டுமானால் செய்யலாமே தவிர, அந்த முடிவை பெற்றோர் எடுக்க முயற்சி செய்ய அவசியம் இல்லை. இப்படிப் பழகினால், பிள்ளைகள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்வார்கள். அவர்களாகவே கற்றுக்கொண்ட வழியில் இதை அடைந்தால் மட்டுமே மகிழ்ச்சி நிலைக்கும்.

2. பெற்றோர் தாங்கள் எடுக்கும் சில முடிவுகளுக்கு முன்பு பலரைக் கலந்து ஆலோசிக்க அவசியம் இருக்கும். அது இயல்பானது. ஆனால் தங்கள் முடிவுகள் அனைத்துக்கும் வேறு யாரோ ஒருவர் சம்மதம், அனுமதி, அங்கீகாரம் தர வேண்டும் என்பதாக அமைத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மிக முக்கியமாக, பிள்ளைகளின் படிக்கும் திறமை குறித்து ஆசிரியர்களின் கருத்து முக்கியமானது. அதேசமயம் பிற பெற்றோரின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதைக்கொண்டு முடிவுகளை மாற்றிக்கொண்டே இருப்பது வேறு ஒருவரின் உடையை நாம் அணிந்துகொள்வதுபோல இருக்கும். பொருத்தமாகவும் இருக்காது; அழகாகவும் இருக்காது.

3. பிள்ளைகளின் ஒழுக்கம் என்பதும் கட்டுப்பாடு என்பதும் வேறு வேறானவை என்பதைப் பெற்றோர்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். ஒழுக்கத்தைக் காரணம் சொல்லி, அதற்காக பிள்ளைகளின் தினசரி நடவடிக்கைகள் உட்பட அனைத்தையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையைத் தவிர்க்க வேண்டும். கட்டுப்பாடு என்பது எப்போதும் பொறுப்புகளை உணர்த்தும் அளவில் மிகவும் கண்ணியத்துடனும், கவனமாகவும் கையாளப்பட வேண்டிய ஒன்றாகும். ஒரு செயலைச் செய்வதால் உண்டாகும் நன்மைகளைச் சொல்லித்தருவது நல்ல கட்டுப்பாட்டின் முதல்படி.

4. பிள்ளைகளால் தாமாகவே செய்து முடித்துக்கொள்ள முடிந்த செயல்களை பெற்றோர் வலிந்து சென்று செய்வதை அவசியம் தவிர்க்க வேண்டும். பிள்ளைகளின் இளம் வயது, அனுபவக் குறைவு இவற்றின் காரணமாகவும், இளமைக்கே உரித்தான ஆர்வத்தின் காரணமாக சில சமயம் செயல்களில் தவறுகள் ஏற்படலாம். ஆனால் அந்தத் தவறுகளை கருத்தில் கொண்டு, அப்படி ஒரு தவறே நிகழக் கூடாது என நினைத்துக்கொண்டு அந்தச் செயல்களை பிள்ளைகளுக்குப் பதில் செய்யத் தொடங்கினால், பிள்ளைகள் முற்றிலும் பொறுப்பற்றவர்களாக வளரும் நிலை உருவாகும்.

5. நடைமுறைச் சாத்தியம் இல்லாத இலக்குகளை பிள்ளைகளுக்குத் தராதீர்கள். மிகவும் பிரபலமானவராக உங்கள் மகனையோ அல்லது மகளையோ ஆக்குவதை உங்கள் வாழ்க்கை நோக்கமாக வைத்துக்கொண்டு, அதற்கு ஏற்ப பிள்ளைகளை நிர்பந்திக்காதீர்கள். பிரபலமாவதும், நல்ல மதிப்பெண் பெற்று கல்வியில் சிறந்த மாணவராக வருவதும் அவரது உழைப்பினால் தானாக அமைவதுதான் சிறந்த முயற்சி. நிர்பந்தத்தினால் அமைந்தால், வாழ்வின் பிற்பகுதியில் அந்தப் பிள்ளை தனது இயலாமையினால் வருந்த நேரிடும்.

6. தவறுகளே நிகழ்ந்துவிடக் கூடாது என்று பல பெற்றோர், ஒன்றுக்குப் பலவாறாக முயற்சிகள் செய்து தங்கள் பிள்ளைகளை போட்டியில், கல்வியில், விளையாட்டில் முன்னிறுத்த முயற்சி செய்கின்றனர். புலிகள் எப்படி தங்கள் குட்டிகளுக்கு வேட்டையாடப் பயிற்றுவிக்கின்றன என்பதை தொலைக்காட்சிகளில் அந்தப் பெற்றோர்கள் கவனித்திருப்பார்கள். ஆனால் அவை புலிகளுக்கானவை மட்டுமே என தவறாக நினைத்திருப்பார்கள். தவறுகள் மிகவும் ஆபத்தானவை என்றால் மட்டுமே கூடுதல் எச்சரிக்கையாக இருக்கலாம். ஆனால் தவறுகள் இயல்பானவை என்றால், அந்தத் தவறுகளைப்போல போதிக்கும் ஆசிரியர் யாருமில்லை என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும்

7. தவறுகள் செய்து அதன் வழியே கற்றுக்கொள்ளும் பிள்ளைகள், இரண்டு மிக முக்கிய அம்சங்களையும் கற்றுக்கொள்கிறார்கள். அதேபோன்ற தவறு அடுத்த செயலில் வராது தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும், வேறு தவறுகள் நிகழலாம் என்பதையும் கற்றுக்கொள்கிறார்கள். இதைவிட முக்கியம், பிறர் சொல்லி கற்றுக்கொள்பவர்களைக் காட்டிலும், தனது தவறுகள் மூலம் கற்றுக்கொண்டவர்கள் அதிகப் பொறுப்புணர்ச்சி உள்ளவர்களாக மாறுகின்றனர்.

பெற்றோர் எனும் பொறுப்பைப் பெற்றோர், தம் கடமைகளை எளிமையாகப் புரிந்துகொள்ள வேண்டும். அந்தப் பொறுப்பு நிரந்தரமானது. பிள்ளைகளின் ஒவ்வொரு பருவ காலத்திலும் வேறு வேறு வடிவங்களில் இருந்தாலும், அது நல்வாழ்வு, பிள்ளைகளின் சுதந்திரம், அவர்களின் சுய அடையாளம் எனும் மூன்று அம்சங்களைக் கருத்தில் கொண்டதாக அமைய வேண்டும் என்பதை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த மூன்றில் எந்த ஒன்றையும் மற்றொன்றுக்காக இழக்கவோ, வலு இழக்கவோ சம்மதிக்கக் கூடாது.

பிள்ளைகளின் வாழ்வு கல்வி மட்டும் சார்ந்ததில்லை. கல்வியோடு பல அடிப்படைப் பண்புகள், கல்வியின் பயன்பாட்டினால் வரும் திறன்கள், நற்பண்புகள், அந்த நற்பண்புகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் அனைத்தும் சேர்ந்ததுதான் பிள்ளைகளின் வாழ்வு. இதில் பெற்றோரின் பொறுப்பு ஒவ்வொருவிதமாக, பலமுறை தங்களை மாற்றிக்கொண்டு செய்து முடிக்க வேண்டிய நிலையிலும் இருக்கலாம். இந்த மாற்றத்தை பெற்றோர் தங்களுக்குள் கொண்டுவர வேண்டும்.

சமூக மாற்றங்களுக்கு ஏற்ப பிள்ளைகளின் வாழ்வுச் சூழலும் மாற்றம் அடைந்துகொண்டே இருக்கும் என்பதை பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். போட்டி நிறைந்த உலகம் என்ற சொற்றொடரைக் கொண்டு எதிர்காலத்தை பயத்துடன் அணுக பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பதை விடுத்து, வாய்ப்புகள் நிறைந்த உலகம் என அவர்களின் சிந்தனையை விரிவாக்கி, அதனுடன் பெற்றோர்கள் பயணிக்க வேண்டும்.

அம்மையும் அப்பனும் இன்றைய பொறுப்பினைப் பெற்ற பெற்றோர்; அவர் பிள்ளை நாளைய பொறுப்பினைப் பெற்ற பெற்றோரே!

வரும் வாரங்களில் இன்னமும் விரிவாகக் கவனிக்கலாம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com