31. தயாராக இரு!

நல்ல சாதனையாளர்களைக் கவனித்தால் ஒன்று நன்கு புலப்படும். அவர்கள் தங்களுக்கான ஓய்வு நேரத்தையும் சரியாகத் திட்டமிட்டு அதன்படி செயல்படுத்துவார்கள்.
31. தயாராக இரு!

சாரணர் இயக்கத்தில் Be Prepared என்று சொல்வார்கள். அப்படி எப்போதும் தயாராக இருப்பவரால்தான் நூற்றுக்கு நூறு பெறுவது சாத்தியமாகிறது. அதென்ன எப்போதும் தயாராக இருப்பது என்று கேட்பீர்கள். சில உதாரணங்களைக் கவனிக்கலாம்.

தீயணைப்பு நிலையத்துக்குச் சென்று பாருங்கள். அங்கே தீயணைப்பு வீரர்களும் சரி, தீயை அணைக்கப் பயன்படுத்தும் பொருட்களும், உபகரணங்களும் சரி, தீயணைப்பு வாகனமும் சரி, எப்போதும் தயார் நிலையில் இருக்கும். ஆபத்து என அழைப்பு வந்தவுடன் புறப்படத் தயாராக இருப்பார்கள். அழைப்புக்கும் அவர்கள் புறப்படுவதற்கும் இடையே சில நிமிஷங்கள்தான் இடைவெளி இருக்கும்.

அழைப்பு வந்தபின் அவர்கள் வரிசையாக சில வேலைகள் செய்துவிட்டு, தயாராக கிளம்புவார்கள். அவர்கள் ஓய்வு நேரத்தைக்கூட சரியாகப் பயன்படுத்திக்கொள்வார்கள்.

விளையாட்டு மைதானத்தில் கவனிக்கலாம். கால்பந்து விளையாட்டு அல்லது கிரிகெட் அல்லது ஹாக்கி விளையாட்டில் கவனிக்கலாம். பந்தைக் கையாண்டுகொண்டிருப்பவர் சில வீரர்கள்தான். ஆனால் ஏனைய வீரர்களும் எப்போது வேண்டுமானால் பந்து தம்மிடம் வரலாம் என்பதுபோல தயார் நிலையில் இருப்பார்கள்.

மாணவர்களுக்கு அவர்களின் பள்ளி கல்லூரி தேர்வுகள், பரிட்சைகள் மட்டுமில்லை; ஏனைய பிற வாய்ப்புகளும் உண்டு. அந்த வாய்ப்புகள் அவர்கள் கல்வி கற்கும்போதும் வரலாம், அல்லது படித்து முடித்த பின்பும் வரலாம். அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

சில சமயங்களில் அப்படியான வாய்ப்புகளை நாம் தேட வேண்டியதாகவும் இருக்கலாம். அதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே உண்மையான நூற்றுக்கு நூறு என்பது சாத்தியமாகும். இதை இன்னமும் சற்று விவரமாகப் பார்க்கலாம்

மாணவர்கள் என்று இல்லை, பிறருக்கும் வாழ்வு என்பது பெரும்பாலும் ஒரு நேர்க்கோட்டுப் பயணம்தான். கவனிக்கவும், பெரும்பாலும் நேர்க்கோடு. ஆனால் சில சந்தர்ப்பங்களில் அந்தப் பாதை வளைந்து நெளிந்தும் செல்வது உண்டு. நாம் எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்படும். அதற்கு நாம் தயாராக இருந்திருக்கமாட்டோம். எல்லா நிகழ்வுகளையும் யூகித்து தயாராவது சாத்தியம் இல்லை. ஆனால் நிகழ்வுகளில் நமது மனமும், சிந்தனையும், எதிர்கொள்ளும் திறனும் தயாராக இருந்தாலேபோதும். எந்த ஒரு எதிர்பாராத நிகழ்வினையும் அதன் விளைவுகளையும் சந்திக்க இயலும்.

பள்ளிப் பாடம், தேர்வுக்கான படிப்பு என்பதைத் தாண்டி வேறு சப்ஜெக்ட்களிலும் அறிவை வளர்த்துக்கொள்வது எதற்கும் தயாராக இருப்பதன் முதல் படி. இதைச் செய்வதால் நமது அறிவு மட்டும் விரிவடைவதில்லை, நிகழ்வுகளை எதிர்கொள்ளும் பக்குவமும் விரிவடைகிறது.

நல்ல மனிதர்களுடன் தொடர்புகளைப் பலப்படுத்திக்கொள்வது தயாராக இருப்பதன் இரண்டாம் படி. நம்மை சுற்றி இருப்பவர் மட்டுமில்லை, வெளியூரில், வெளிநாட்டில் இருப்பவர்கள்கூட நமக்கு எதிர்பாராது உருவாகும் சந்தர்ப்பங்களை எதிர்கொள்ள உதவிட இயலும் என்பதைத் தெரிந்துகொண்டு, சமூக ஊடகங்களின் வழியே மிகச் சரியான முறையில் சரியான நபர்களுடம் தொடர்புகளை உருவாக்கிக்கொள்வதும், அவர்கள் மூலம் பல தகவல்களைப் பெறுவதும் தயாராக இருப்பதன் அடுத்த படி. இந்த முயற்சியில் மிகவும் எச்சரிக்கையுடனும் சுயக்கட்டுப்பாடு கொண்டும் இயங்க வேண்டும்.

சமூக ஊடகம் என்பது ஒரு பொதுவெளி. அங்கே பலவிதமானவர்கள் இயங்குவார்கள். அவர்களின் நோக்கம் பலவிதமாக இருக்கும். ஒருவருக்கு பொழுதுபோக்கு நோக்கமாக இருக்கும், ஒருவருக்கு கல்வி நோக்கமாக இருக்கும், இன்னொருவருக்கு தனது வியாபாரம் நோக்கமாக இருக்கும். இதில் நமது நோக்கத்தோடு இசைந்து வருகின்றவர்களைத் தேர்வு செய்வதும் அவர்களும் நல்லவிதமாக தொடர்பினை உருவாக்கிப் பலப்படுத்திக்கொள்வதும் முக்கியம்.

தவறு செய்யாதவர் என எவரும் இல்லை எனும் பொறுப்புணர்சி அடுத்த நிலை. அதிலும் தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு மீண்டும் அந்த தவறு நிகழாதவாறு கவனித்து காரியம் செய்வதும் இதில் அடங்கும். நாம் நமது சாதனைகளைக் குறித்து வைப்போம். அதையெல்லாம் தேதி வாரியாகப் பட்டியல் போட்டு நம்மால் நினைவு கூற முடியும். ஆனால் யாரும் தவறுகளைக் குறித்து வைத்துக்கொள்வதில்லை. ஆனால் தவறுகளைக் குறித்து வைத்துக்கொள்ளும்போது மட்டுமே அதனை சரி செய்துகொள்ள நம்மால் முயற்சி எடுக்க முடிகின்றது. தவறுகளைக் குறித்து வைத்துக்கொள்வதும், அதனை சரி செய்ய எடுத்த முயற்சிகளையும் குறித்து வைத்துக்கொள்வதும், வளர்ச்சியின் ஒரு பகுதி, அது மட்டுமில்லை எப்போதும் தயாராக இருப்பதற்கான முயற்சியில் முக்கியமானதொரு படி.

நம் தேவைகள் தொடர்பான தகவல்களைத் திரட்டுதல் என்பது அடுத்த படி. இது தொடர்ச்சியானதும்கூட. கல்வி, மேற்கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் சார்ந்த புள்ளிவிவரங்கள், போட்டிகள், வாய்ப்புகள், நிகழ்வுகள் இது குறித்தெல்லாம் தகவல் திரட்டுதல். அந்த தகவல்களை ஆராய்ந்து விவரங்களை ஒருங்கிணைத்து சேமித்து வைத்துக்கொள்ளுதல் தயாராக இருப்பதன் முக்கியமான செயலாகும்.

நல்ல சாதனையாளர்களைக் கவனித்தால் ஒன்று நன்கு புலப்படும். அவர்கள் தங்களுக்கான ஓய்வு நேரத்தையும் சரியாகத் திட்டமிட்டு அதன்படி செயல்படுத்துவார்கள். அது மட்டுமல்ல தொழில் தவிர தனது சொந்த வேலைகளுக்காக நேரம் ஒதுக்குவதிலும் அவர்கள் ஓர் ஒழுங்கினைக் கடைப்பிடிப்பார்கள். இந்த ஒழுங்கு என்பது அவர்களுக்கு தங்களைத் தயார் செய்துகொள்வதில் பெரிய அளவில் உதவிடும் என்பதைப் பலமுறை பலர் பேட்டிகளின்போது சொல்லியிருக்கின்றனர். சாதனையாளர்கள் என்று மட்டுமில்லை, சாமானியர்களுக்கும் இந்த முறை அவசியம். நமக்கான சொந்த வேலைகளையும் மனதில் கொண்டு தயாராக இருப்பதுதான் அடுத்த படி.

தினம் முப்பது நிமிடங்கள் ஒதுக்குங்கள். இது தயாரிப்புக்காக என நினைத்துக்கொண்டு தீர்மானமாக ஒதுக்குங்கள். காலை பதினைந்து நிமிடம் இரவு பதினைந்து நிமிடம் என பிரித்துக்கொள்ளுங்கள். காலை எழுந்த பின்பு அன்றைய நாளுக்காக நீங்கள் தயாரவதற்கு முன்பு, அந்த பதினைந்து நிமிடத்தை செலவு செய்யுங்கள். உங்கள் வருங்காலத்துக்காக நீங்கள் என்ன எதில் எப்படியெல்லாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதை வரிசையாக நினைவுக்குக் கொண்டு வாருங்கள். அதில் எதிலெல்லாம் அன்றைய தினத்தில் சில மணி நேரம் செலவிட இயலும் என தீர்மானம் எடுங்கள். பின்னர் அதை நாட்காட்டிபோல எழுதுங்கள். உங்கள் தயாரிப்பு பணி எது குறித்து வேண்டுமானால் இருக்கலாம். சேமிப்பு, முதலீடு, வேலை வாய்ப்பு, கல்வி, மேற்கல்வி, ஆரோக்கியம் உடல் நலம், புதிய உணவு வகைகள் இப்படி எது வேண்டுமானாலும் இருக்கலாம்.. ஆனால் தினம் புதிதாக பதினைந்து நிமிடம் காலை அதைத் தவற விட வேண்டாம்.

நீங்கள் அன்றைய தினம் இப்படி தயாரிப்புக்காக எப்படி நேரம் முதலீடு செய்தீர்கள் என்பதையும். அதில் மேலும் எப்படி முன்னேற்றம் கொண்டுவருவது என்பது குறித்தும் இரவு ஒன்பது மணியளவில் 15 நிமிடங்கள் முதலீடு செய்யுங்கள்.

நாளொன்றுக்கு முப்பது நிமிடங்கள் நீங்கள் உங்களைக் குறித்த அக்கறையில் முதலீடு செய்கிறீர்கள் என்பதே மிகச் சிறந்த தயாரிப்புப் பணி.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com