26. ஒழுங்கு எனும் பெரும் பண்பு

சுயக் கட்டுப்பாடு வர வேண்டுமென்றால், தற்காலிக சந்தோஷங்களுக்கும் நிரந்தர சந்தோஷங்களுக்கும் வித்தியாசம் தெரிய வேண்டும்.
26. ஒழுங்கு எனும் பெரும் பண்பு

தெளிவு பெற்ற மதி என்பது என்ன என வாசித்தோம். தெளிவினால் கிடைக்கும் ஒழுங்கு என்பதைத் தெரிந்துகொள்வதே தெளிவு பெற்ற மதி அடைந்த அடையாளம். ஒழுங்கு என்பது இரண்டு தன்மைகளைக் கொண்டது. ஒரு செயலை முறையுடன் செய்வது; அதற்கான தெளிவினைப் பெறுவது அவசியம்.

மாணவர்களுக்கு இருக்கும் பெரும் சவால் ஒழுங்கைக் கடைப்பிடிப்பதுதான். ஒழுங்கின் மூலமே உயர்வினை அடைய இயலும்.

பாடம் தொடர்பான முறையான பயிற்சியினை தினம் விடாது ஒழுங்குடன் கடைப்பிடிப்பது ஒழுங்கின் மேன்மையைப் புரியவைக்கும்.

விளையாட்டு வீரர்களைக் கவனியுங்கள். அவர்கள் போட்டிக்கு வருவதற்கு முன்பு தினம் தினம் விடாது ஒழுங்குடன் பயிற்சியை மேற்கொள்கின்றனர். அந்த ஒழுங்கே அவர்களுக்கு தெளிவைத் தருகிறது. ஒழுங்கு என்பது விளையாட்டு, கல்வி இதற்கு மட்டுமல்ல. வாழ்க்கையில் தெளிவு வேண்டுமெனில் சிறந்த குழப்பம் இல்லாத வாழ்வு நிலை வேண்டுமெனில் ஒழுங்கு அவசியம்.

ஆசேலா மெக்கார்ட்டி (Oseola McCarty) எனும் அமெரிக்கப் பெண்மணியின் வாழ்வைக் குறித்து தெரிந்துகொள்வது நன்மை தரும். அவர் தனது நாற்பதாவது வயதில் அமெரிக்காவில் ஒரு விடுதியில் துப்புரவுப் பணியாளராக வேலைக்குச் சேர்ந்தார். அவருக்கு தினக்கூலி வழங்கப்பட்டது.

அந்தப் பெண்மணி தனக்கு வழங்கப்பட்ட தினக்கூலியில் 10 டாலரை தினச் சேமிப்பாக வங்கியில் செலுத்தி வந்தார். இதனை அவர் ஒழுக்காகச் செய்து வந்தார். இதனை அவர் ஒன்றல்ல இரண்டல்ல, சுமார் 32 வருடங்கள் இடைவிடாது கடைப்பிடித்து வந்தார்.

அவரது முதுமையினைக் கணக்கில் கொண்டு ஒரு நாள் அந்த விடுதி நிர்வாகம் அவரை வேலையில் இருந்து நிறுத்தியது. அன்றைக்கான கூலியினைப் பெற்றுக்கொண்ட அந்தப் பெண்மணி அன்றும் தனது தின சேமிப்பு ஒழுங்கினை கடைப்பிடித்தார்.

தான் இன்றிலிருந்து வேலையில் இருக்கப்போவதில்லை என்றும் இன்று தான் செலுத்தும் 10 டாலரே இறுதிச் சேமிப்பு என்றும் ஆதங்கத்துடன் வங்கிப் பணியாளரிடம் தெரிவித்துவிட்டு, தன் சேமிப்புப் கணக்கில் சுமார் முப்பதாயிரம் அல்லது நாற்பதாயிரம் டாலர் சேமிப்பு இருக்குமா எனக் கேட்டார்.

வங்கிப் பணியாளரோ, ‘இல்லை அம்மா! உங்கள் கணக்கில் இரண்டு லட்சம் டாலர்கள் இருக்கின்றன. நீங்கள் இப்போது வேலையில் இல்லை! உங்களுக்குப் பணம் தேவைப்படலாம். மொத்த தொகையும் எடுத்துக் கொடுத்துவிடவா’ என்று கேட்டார்.

ஆனால் அந்தப் பெண்மணியின் பதில் ஆச்சரியமானது. ‘இல்லை இல்லை. எனக்கு நீங்கள் உதவிட வேண்டும். இந்த இரண்டு லட்சத்தில், ஒரு லட்சம் என் கணக்கில் இருக்கட்டும். மீதமுள்ள ஒரு லட்சம் டாலரைக் கொண்டு ஒரு அறக்கட்டளை உருவாக்க வேண்டும். அந்த நிதியினைக் கொண்டு, அதாவது அதில் வரும் வட்டியைக் கொண்டு, ஏழை மாணவர்களுக்கு அவர்கள் கல்வியைத் தொடர உதவ வேண்டும். பலர் ஏழ்மையின் காரணமாக படிப்பைத் தொடர் முடியாது போகிறது. அவர்களுக்கு உதவ வேண்டும்’.

அந்தப் பெண்மணியின் உயர்ந்த நோக்கத்தினை வியந்த வங்கி நிர்வாகம் அவருக்கு உதவியது. அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அதன் நற்பணி தொடர்ந்தது.

எட்டு ஆண்டுகள் கடந்தன. அந்தப் பெண்மணியை புற்றுநோய் தாக்கியது. கலிஃபோர்னியாவில் இருக்கும் புகழ்பெற்ற புற்றுநோய் சிகிச்சை மருத்துவரைக் கொண்டு அறுவை சிகிச்சை செய்தால் அவர் பிழைப்பார் என மருத்துவர்கள் கருத்துரைத்தனர். அதன்படி அவருக்கு அந்த சிறப்பு மருத்துவரைக் கொண்டு அறுவை சிகிச்சை நிகழ்ந்தது.

அந்த மருத்துவர் அந்தப் பெண்மணிக்கு ஆறுதல் தந்து பேசினார். ‘அம்மா இந்த சிகிச்சை உங்களுக்கு நல்ல பலனளிக்கும். புற்றுநோயின் தீவிர பாதிப்பில் இருந்து இன்னமும் சில ஆண்டுகள் நீங்கள் விலகியிருக்கலாம் என்பது உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் என நினைக்கின்றேன்’ என்றார்.

அந்தப் பெண்மணி அந்த மருத்துவருக்கு நன்றி சொல்லிப் பேசினார். ‘மகனே, நீ செய்த இந்த உதவி மறக்க இயலாது. உனக்கு எப்படி கைமாறு செய்வது. என்னிடம் ஒரு வங்கிக் கணக்கு இருக்கிறது. அதிலே ஒரு லட்சம் டாலர் இருக்கும். அதை என் மரணத்துக்குப் பின் உனக்கு தர வேண்டும் என வங்கிக்கு சொல்கிறேன். தவறாக நினைக்காதே! என்னால் இப்போது இவ்வளவுதான் உனக்குத் தர இருக்கிறது. தவறாக நினைக்காதே மகனே’.

‘அம்மா! உங்களுக்கு நினைவு இருக்குமா தெரியவில்லை. நீங்கள் நிறுவிய அறக்கட்டளையின் துணையில் படித்து மருத்துவன் ஆனேன். உங்களிடமிருந்து நான் ஏற்கெனவே பெற்றுக்கொண்டுவிட்டேன். எனக்கு வேண்டியதெல்லாம் உங்கள் ஆசிர்வாதங்கள் மட்டுமே’.

ஆசேலா மெக்கார்ட்டி எனும் அந்த உன்னதப் பெண்மணியை சிறந்த சமூகக் குடிமகன் என 2004-ம் ஆண்டு அறிவித்து அமெரிக்க அரசு கௌரவம் அளித்தது.

இது அந்தப் பெண்மணியின் நல்லெண்ணத்துக்கு கிடைத்த அங்கீகாரம் என்றாலும், ஒரு நல்லெண்ணத்தை செயல்படுத்த ஒழுங்கு தேவை என்பதை அவரது வாழ்க்கை புரியவைக்கிறது. அது மட்டுமல்ல அந்த ஒழுங்கு மூலம் அவருக்குக் கிடைத்த தெளிவும் மனதிடமும், ஒழுங்கைக் கடைப்பிடிக்க நமக்கெல்லாம் ஒரு பாடமாக இருக்கிறது அல்லவா.

ஒழுங்கின் முதல்படி சுயக் கட்டுப்பாடு (Self Discipline)

அவசியம் முடித்தாக வேண்டும் எனும் செயல்களைத் தள்ளிப்போடுவது கூடாது; சில செயல்களுக்கான பயன்கள் காலம் கடந்தே கிடைக்கும் என்பதை மிகவும் தீர்மானமாகப் புரிந்துகொண்டு அதைக் கடைப்பிடிப்பதில் ஒழுங்கு வேண்டும்.

Self Discipline வர வேண்டுமென்றால், தற்காலிக சந்தோஷங்களுக்கும் நிரந்தர சந்தோஷங்களுக்கும் வித்தியாசம் தெரிய வேண்டும். படிக்க வேண்டிய பாடம், முடிக்க வேண்டிய வேலை இதெல்லாம் கஷ்டமாக இருக்கிறது என்பதால், அதை செய்தாக வேண்டிய நேரத்தில் அதைத் தவிர்த்து easy pleasure எனும் தற்காலிக சந்தோஷம் தரும் அரட்டை மாதிரி காரியங்களில் ஈடுபவதில் லாபமில்லை என்பது தெரிய வேண்டும்.

Self Discipline என்பது நீண்ட கால, ஏன் நிரந்தர Investment. அதன் பலன்கள் மெதுவாகத்தான் புரியத் தொடங்கும். அதனை easy pleasure, dirty fun தரும் pleasure-களுடன் ஒப்பிடக் கூடாது.

Self Discipline என்பது திட்டமிடுதல், வழி முறைகளை, சவால்கல்களை எதிர்பார்த்து திட்டமிடுதல், நம்மை தயார் செய்துகொண்டே இருத்தல், தொடர்ச்சியாக கற்றுக்கொள்ளுதல் ஆகிய நான்கு முக்கிய நிலைகளை மனதில் கொள்ள வேண்டும்.

சுயக் கட்டுப்பாடு என்பது, கறாராக கண்டிப்பாக இருப்பது இல்லை. மாறாக எல்லோரும் விரும்பும் அளவுக்கு நற்பண்புகளைக் கொண்டு அடைய வேண்டிய தரம் என்பது முதல் நிலை. அந்த நிலையினை அடையவும், அந்த நிலையினை அடைந்து மேம்படவும் தேவையான உற்சாகமும், ஊக்குவிப்பினையும் தன்முனைப்பாக அடைய வேண்டும். பிறர் பாராட்ட வேண்டும், பிறரின் அங்கீகாரம்தான் முக்கியம் என கருதி எந்த பண்பான செயலையும் அடமானம் வைக்கக் கூடாது. இப்படியான சுயக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும்போது உருவாகும் சவால்களை முன்கூட்டியே அறிந்து அதற்கான வழிகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தரம் தாழாது சவால்களைச் சந்திக்க வேண்டும்.

சுயக் கட்டுப்பாட்டின் அஸ்திவாரம் மிகவும் ஆழமான திடசித்தம்தான். அது இருந்தால்தான் ஒழுங்கு எனும் பெரும் பண்பை அடைய முடியும்.

ஒழுங்கை அடைந்தால் நூற்றுக்கும் மேலும் கிடைக்குமே!

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com