25. தெளிவுபெற்ற மதியினாய் வா.. வா.. வா..!

25. தெளிவுபெற்ற மதியினாய் வா.. வா.. வா..!

clarity. இதனை பெரும்பாலும் விளக்கம் எனும் அளவில் புரிந்துகொண்டுள்ளனர் மாணவர்கள். ஆனால் அந்தச் சொல் விளக்கம் எனும் பொருளில் இருந்தாலும் அதன் ஆழ்ந்த உட்பொருள் தெளிவு

நம் தேசத்தின் மகாகவிஞன் பாரதி, இளைஞர்களைப் பார்த்து பாடும் பாடலைக் கேட்டிருப்பீர்கள். ஒளிபடைத்த கண்ணிணாய் வா! வா! வா! என அவன் அறைகூவல் விடும் பாடல் அது. அதிலே, தெளிவுபெற்ற மதியினாய் வா! வா! வா! என ஆனந்தமாய் அழைப்பு விடுப்பானல்லவா. அந்த தெளிவுபெறும் மதி என்பது என்ன என இந்த அத்தியாயத்தில் கவனிக்கலாம்.

சவால்களை எதிர்கொள்ளும் மனப்பாங்கினை வளர்த்துக்கொள்வது என்பதை கடந்த சில வாரங்களாகக் கவனித்து வருகிறோம். அதன் தொடர்ச்சிதான் தெளிவுபெற்ற மதி.

மாணவர்கள் எதிர்கொள்ளும் இரண்டாம் சவால்: தெளிவு இன்மை

ஆங்கிலத்தில் ஓர் அழகான ஆழமான சொல் clarity. இதனை பெரும்பாலும் விளக்கம் எனும் அளவில் புரிந்துகொண்டுள்ளனர் மாணவர்கள். ஆனால் அந்தச் சொல் விளக்கம் எனும் பொருளில் இருந்தாலும் அதன் ஆழ்ந்த உட்பொருள் தெளிவு என்பதாகும்.

மாணவர்களுக்கு கற்கும் பாடம் தவிர, கடைப்பிடிக்கும் பழக்கம், கடைப்பிடிக்கக் கூடாத பழக்கம், தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள், காலத்தே செய்ய வேண்டிய முயற்சிகள், அறிவை, தகவல் அறிவை வளர்த்தெடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமும் எப்போதும் இருக்கிறது. இந்த முயற்சிகளில் மாணவர்கள் ஈடுபடும்போது, அவர்களுக்கு தகவல்களும் விவரங்களும் பல இடங்களில் இருந்து கிடைக்கும். அவற்றில் எது சரி, எது பிழையானது எது நம்பத்தகுந்தது எது நம்பக் கூடாதது எனும் சரியான மதிப்பீடு அவசியம். இந்த சரியான மதிப்பீட்டின் வழியாகவே தெளிவினை அடையமுடியும். தெளிவினை அடைந்தால்தான் சரியான முடிவினை எடுக்கமுடியும். முடிவு சரியானதாக இருந்தால்தான், மகிழ்ச்சியும் நிறைவும் கொள்ள இயலும்.

தெளிவு பெறுதல் என்பது மாணவர்களுக்கு எப்போதெல்லாம் சவாலாக இருக்கிறது என்பதைக் கவனிக்கலாம்.

தங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக ஒரு பழக்கத்தைக் கடைப்பிடித்துக்கொண்டிருக்கலாம். அது தீயபழக்கமாக இருக்க வேண்டும் என்பது இல்லை; அது நல்ல பழக்கமாகக்கூட இருக்கலாம். சில சந்தர்ப்பங்களில் சில முக்கியமான முயற்சிகளுக்காக அந்த பழக்கத்தைத் தொடர இயலாது போகலாம். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் நீண்டகாலப் பயன் அளிக்கும்வண்ணம் எந்த முயற்சி அமைகிறதோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனும் தெளிவு மாணவர்களுக்கு வர வேண்டும்.

தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் தரும் தகவல்கள் எல்லாம் முற்றிலும் ஏற்கக்கூடியவை எனும் சிந்தனை, எண்ணம் மாணவர்களிடையே காணப்படும் மிகவும் கவனிக்கத்தக்க தெளிவின்மைத் தன்மையாகும். நாம் எந்த ஒருவர் மீதும் அன்பும், நம்பிக்கையும், அபிமானமும், மரியாதையும் கொண்டிருக்கலாம். அதற்கான காரணங்கள் வேறு வேறானவை. இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் நமக்கான முயற்சியில் தரும் அறிவுரைகள், தகவல்கள் நன்மையானவைதான், அவசியமானவைதான் என எந்தவித ஆராய்ச்சியும் இல்லாது ஏற்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்தப் பாடம் எடுத்துப் படி, இந்தத் தேர்வு நீ எழுதலாம், இந்தக் கல்லூரியில் நீ சேரலாம் என்பது போன்ற அறிவுரைகள் எல்லாம் நன்மைக்குச் சொல்லப்படுபவைதான். ஆனாலும் இதை நம் அறிவினைக் கொண்டும் சோதித்து அறிவது, தெளிவு பெற்ற மதியின் அடையாளம்.

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

இப்படி நாம் சோதித்து அறியும்போது, மேலோட்டமான ஆராய்ச்சியும் தகவல் சேகரிப்பும் நிகழும் சவாலும் உண்டு. ஆகவே அதனையும் தவிர்த்திட வேண்டும்.

அதுபோலவே நாம் தகவல் சேகரித்து, விவரங்களைக் கொண்டு வைத்திருக்கும் நம்பிக்கை, முயற்சி இவற்றைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளும்போது, நம் நம்பிக்கைக்கு முரணாக மாற்றாக கருத்துகளும் தகவல்களும் கிடைக்கக்கூடும். இப்படியான சூழலை மாணவர்கள் வரவேற்க வேண்டும். முரண்பட்ட கருத்துகளால்தான் ஓர் எண்ணம் ஆரோக்கியாமான கோட்பாடாக வடிவு எடுக்க இயலும். மிக முக்கியமாக பிறர் நம் மீது கொண்டிருக்கும் சரியான மதிப்பீடுகள் அவை நமக்கு பிரியமானதாக இல்லாதபோதும் அவை நன்மை பயக்கும் என்றால் ஏற்கத்தக்கவை எனும் தெளிவு வர வேண்டும். வள்ளுவர் சொன்ன மெய்ப்பொருள் என்பது இதுதான்.

தெளிவு பெறுதலில் இரண்டு வழிகள் உண்டு, முதலில் நம்பிக்கை கொண்டு பிறகு அதனை சந்தேகித்துச் சோதிப்பது இது முதல் வழி, பெரும்பாலும் இதுவே நிகழ்கிறது. இரண்டாவது வழி, நன்கு சந்தேகித்து, நன்கு சோதித்து ஒவ்வொரு சந்தேகமாக நீக்கி தெளிவு பெறுவது. இதுவே நல்ல வழி.

முதல் வழியைப் பெரும்பாலானவர்கள் பின்பற்றுவதற்குக் காரணம், தேவையான பொறுமை இல்லாத அவசரம். நாம் முடிவு செய்ய காலதாமதம் செய்யக் கூடாது என்பதாக வரவழைத்துக்கொண்ட அவசரம்.

சோதித்து, சந்தேகம் நீக்கித் தெளிவு பெறுவது எப்படி அவசியமோ, அதேபோல் சோதிக்கும்போது தகவல் சரிபார்த்தலில் நம் நினைவாற்றலை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் அவசியம். எப்போதும் ஒரு விஷயத்தை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

நம் நினைவுகள் பிழை செய்யக்கூடும். அதாவது, நாம் ஒரு தகவலை நம் நினைவிலிருந்து மட்டும் எடுத்துக்கொண்டு அதனை நம்பி செயல் செய்யும்போது விளையும் விளைவுகள் பாதகமாகக்கூட அமையலாம். ஆகவே, நம் நினைவில் இருக்கும் தகவலை ஒருமுறை சரிபார்த்துக்கொள்வதும் தெளிவு பெறும் மதியின் அடையாளமே.

தெளிவு என்பது, முற்றிலும் அறிந்துகொள்ளும் நிலையிலும் நிகழும், முற்றிலும் அறிந்துகொள்ள இயலாத நிலையில் நாம் கொண்டிருக்கும் பொறுமையிலும் அமையும்.

ஒரு செயலைச் செய்துவிட்டு அதன் விளைவுகளுக்காக அல்லது பதிலுக்காகக் காத்திருக்கும்போது தொடர்பு இல்லாத பல செயல்களைச் செய்ய தூண்டுதல் ஆழ்மனத்தில் நிகழும். இதனைக் கட்டுப்படுத்துவதும் தெளிவு பெற்ற மதியின் அடையாளம்.

அதுவும் ஒரே சமயத்தில் பல முயற்சிகளை எடுத்து, அதன் பலனுக்காகவும் பதிலுக்காகவும் காத்திருக்கும் சந்தர்ப்பங்கள் மாணவர்களுக்கு அதிகம் உண்டு. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மன அழுத்தம், பொறுமையின்மை, ஆர்வம், பயம், எதிர்பார்ப்பு, குழப்பம், எரிச்சல், கோபம் போன்ற உணர்ச்சிக் கலவையால் பாதிக்கப்படும் நிலை வரும். இதனை பொறுமை எனும் தெளிவுகொண்டே எதிர்கொள்ள வேண்டும்.

நம் சக மாணவன், மாணவி இவர்களுடன் நம்மை எந்த எந்த விஷயங்களில் ஒப்பீடு செய்துகொள்வது என்பதில் மாணவர்களுக்கு தெளிவு என்பது அவசியம். குடும்பச் சூழலில் ஒப்பீடு கூடாது. இயற்கையாக அமைந்துவிட்ட உடல் அமைப்பில் ஒப்பீடு கூடாது. இதுபோன்ற தெளிவு பெற்ற மதி அவசியம்.

தெளிவுபெற்ற மதி என்பதற்கான சுவாரசியமான சில சம்பவங்களை அடுத்த அத்தியாயத்திலும் வாசிக்கலாம்..

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com