ந. முத்துசாமி - பகுதி 3

இன்றைய தினம் பதினைந்து வயதாகும் பாலகன் ஒருவனைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். ஆப்பிள் மடிக்கணினி,

இன்றைய தினம் பதினைந்து வயதாகும் பாலகன் ஒருவனைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். ஆப்பிள் மடிக்கணினி, ஆப்பிள் கைபேசி என்று பயன்படுத்திக் கொண்டிருக்கும் அவனைத் திடீரென்று கால எந்திரத்தின் மூலம் 1960களில் கொண்டு போய் விட்டால் எப்படி மருண்டு போவானோ அதே போன்றதொரு மருட்சி எனக்கு தமிழ் நாடகங்களைப் பார்த்தபோது ஏற்பட்டது. கொஞ்சம் விளக்கமாகச் சொல்லவேண்டும். 1978-லிருந்து 1990 வரை தில்லியில் இருந்த காலத்தில்தான் உலக இலக்கியமும், கலையும், சினிமாவும் பயின்றேன். கலைகளிலேயே ஆகத் தீவிரமானது நாடகம். ஏனென்றால், அது நம் கண் முன்னே நிகழ்த்தப்படுகிறது. எடுத்த எடுப்பில் அறிமுகமானது ஜான் ஜெனேயின் நாடகங்கள். (‘வேலைக்காரிகள்’, ‘டெத்வாட்ச்’) ‘டெத்வாட்ச்’ நாடகம் இரண்டு கைதிகளுக்குள் இன்னொரு கைதி மீதான தன்பாலினக் காதலால் ஏற்படும் போராட்டம் பற்றியது. பிறகு ஸ்பானிஷ் நாடகாசிரியர் கார்ஸியா லோர்க்கா. அதற்குப் பிறகு அறிமுகமானவர்கள்தான் சாமுவல் பெக்கட், ப்ரெக்‌ஷ்ட் எல்லாம்.

தில்லி மண்டி ஹவுஸிலேயே தேசிய நாடகப் பள்ளியும் அமைந்திருந்ததால் மாதம் ஒருமுறை உலகின் மிகச் சிறந்த நாடகாசிரியர்களின் நாடகங்களைப் பார்த்து விட முடிந்தது. இந்த தேசிய நாடகப் பள்ளியைச் சீரமைத்தவர் இப்ராஹீம் அல்காஷி. இப்போது தொண்ணூறு வயது நிரம்பிய அல்காஷி இந்திய நவீன நாடகத்தின் பிதாமகராகப் போற்றப்படுபவர். தில்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா கோட்டையில் அவர் அரங்கேற்றிய ‘அந்தா யுக்’ என்ற நாடகத்தைப் பற்றி 1980களில் கண்கள் விரியப் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் தில்லி சென்றபோது அவர் தில்லி நாடகப் பள்ளியிலிருந்து கிளம்பி விட்டார். நான் அங்கே இருந்த பன்னிரண்டு ஆண்டுகளிலும் பார்த்த நாடகங்கள் மட்டும் அப்படி அப்படியே காட்சி ரூபமாக என் ஞாபகத்தில் நிற்கின்றன. அதுதான் நாடகக் கலையின் விசேஷம் போலும்.

அல்காஷியை அடுத்து தில்லியில் மிகப் பெரிய நாடக அலையை உண்டாக்கியவர் ரத்தன் திய்யம். மணிப்புரியைச் சேர்ந்தவர். இந்தியாவின் மிகச் சிறிய மாநிலம். தேசிய அளவில் ஐரம் ஷர்மிளா தவிர வேறு வகையில் யாருடைய நினைவிலும் நிற்காத மாநிலம். அதிலும் எண்பதுகளில் மணிப்பூரில் ராணுவ அத்துமீறல்கள் இல்லை என்று நினைக்கிறேன். அநேகமாக மணிப்பூர் பற்றிய செய்தியே தினசரிகளில் இருக்காது. அப்படிப்பட்ட மணிப்பூரில் நாடகம் மட்டும் உலக நாடக அரங்கில் போட்டி போடும் அளவுக்கு வளர்ந்திருந்தது என்றால் அதற்கு முதன்மையான காரணம், ரத்தன் திய்யம். அவருடைய ‘இம்பால் இம்பால்’ என்ற நாடகத்தை 1982-ல் மண்டி ஹவுஸில் பார்த்தேன். 34 ஆண்டுகள் கழிந்தும் இன்னும் நினைவில் நிற்கிறது.

அந்தக் காலகட்டத்தில் மண்டி ஹவுஸில் நான் பார்த்த தமிழ் நாடகங்களில் முக்கியமானவை, மு. ராமசாமியின் இயக்கத்தில் அரங்கேறிய ‘துர்க்கிர அவலம்’ மற்றும் செ. ராமானுஜத்தின் ‘கறுத்த தெய்வத்தைத் தேடி’. அப்போது நான் பார்த்த மற்றொரு மறக்க முடியாத நாடகம், ‘பாகல் கானா’ (பைத்தியக்கார விடுதி). இந்த நாடகத்தை எண்பதுகளின் முற்பகுதியில் பார்த்தேன். சரியான ஆண்டு ஞாபகம் இல்லை. ஆனால் இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். ‘பாகல் கானா’ மண்டி ஹவுஸில் உள்ள கமானி ஹாலில் நிகழ்த்தப்பட்ட மறுநாள் இந்திரா காந்தி ஒரு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தார். அச்சட்டத்தின்படி நாடகம் போடும் அனைவரும் தங்கள் நாடகப் பிரதியை போலீஸ் கமிஷனரிடம் காண்பித்து ஒப்புதல் பெற்ற பிறகே நிகழ்த்த வேண்டும். அப்படி என்ன இருந்தது அந்த நாடகத்தில்?

‘The Persecution and Assassination of Jean-Paul Marat as Performed by the Inmates of the Asylum of Charenton Under the Direction of the Marquis de Sade’ என்ற நீண்ட தலைப்பு உடைய ஒரு நாடகத்தை எழுதினார் ஜெர்மன் நாடகாசிரியர் Peter Weiss. உடனே அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலகின் பல நாடுகளிலும் நிகழ்த்தப்பட்டது. Marat/Sade என்று சுருக்கமான தலைப்பால் அந்த நாடகம் அழைக்கப்பட்டது. இதை ‘பாகல் கானா’ என்று ஹிந்தியில் மொழியாக்கம் செய்து தில்லியில் நிகழ்த்தினார் அலிக் பதம்ஸீ (Alyque Padamsee). என் வாழ்வில் மறக்கவே முடியாத ஒரு நாடகம் இது. ஏனென்றால், நம் கண் முன்னே மேடையிலும், அரங்கத்தில் நம்முடைய இருக்கையின் அருகிலும் கூட ஒரு கலகமே (anarchy) நடந்து கொண்டிருந்தது. ஃப்ரெஞ்சுப் புரட்சி நடந்து கொண்டிருக்கும்போது, பைத்தியக்கார விடுதியில் அடைக்கப்பட்டிருந்த மார்க்கி தெ ஸாத் (Marquis de Sade) விடுதிக்குள்ளேயே ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறார். (ஸாத் பைத்தியக்கார விடுதியில் இருந்தது நிஜம்; ஆனால் அங்கே ஸாத் அரங்கேற்றும் நாடகம் நிஜம் அல்ல; அது நாடகத்துக்குள் வரும் நாடகம்.) ஃப்ரெஞ்சுப் புரட்சியை அறிந்தவர்களுக்கு ஜான் பால் மாரா பற்றித் தெரிந்திருக்கும். தோல் வியாதிக்காக ஒரு குளியல் தொட்டியில் அமர்ந்திருந்தபோது கொல்லப்பட்ட புரட்சிகரப் பத்திரிகையாளர். 13 ஜூலை 1793-ல் கொல்லப்பட்ட ஜான் பால் மாரா 13 ஜூலை 1808-ம் ஆண்டு நிகழ்ந்து கொண்டிருக்கும் அன்றைய நாடகத்தில் தோன்றுகிறார். பைத்தியக்கார விடுதியின் கண்காணிப்பாளர் தன் விடுதியில் உள்ளவர்களெல்லாம் மனநிலை சரியாக இருப்பவர்கள்தான் என்பதைப் பார்வையாளர்களுக்குப் புரிய வைப்பதற்காக அவர்களை ஒரு நாடகம் போடச் சொல்கிறார். நாடகத்தை அவர் மனைவியோடும் மகளோடும் பார்க்கிறார். (நாடக அரங்கின் உள்ளேயே). செவிலிகளும் விடுதிப் பணியாளர்களும் நாடக நடிகர்களிடையே ஏற்படும் கூச்சல் குழப்பங்களை அவ்வப்போது சரி பண்ணி விடுகிறார்கள். அந்த நாடகத்தை இயக்குபவர் மார்க்கி தெ ஸாத்.

மேடையில் நடக்கும் கூச்சல் குழப்பங்களையும் களேபரங்களையும் பார்த்து பயந்து போகும் எங்களை (பார்வையாளர்களை) நோக்கி, விடுதிக் காப்பாளர் தைரியம் சொல்கிறார்; ‘நீங்கள் யாரும் பயப்பட வேண்டாம்; அதோ பாருங்கள்’ என்று கை காண்பிக்கிறார். சுற்றிலும் கையில் லத்தியோடு காவலர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். மேடையில் சவுக்கடி வாங்கிக் கொண்டிருக்கும் ஒரு பைத்தியக்காரன் பார்வையாளர் பகுதியின் ஒரு பக்க ஓரத்தில் அமர்ந்திருந்த என்னை நோக்கி வந்து ‘என்னைக் காப்பாற்றுங்கள், என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கதறுகிறான். எனக்கோ ஒன்றும் புரியவில்லை. வெங்கட் சாமிநாதன் வேறொரு வரிசையில் அமர்ந்திருக்கிறார். அப்போது இரண்டு காவலாளிகள் ஓடி வந்து அவனை லத்தியால் அடி அடியென்று அடித்து இழுத்துக் கொண்டு போகிறார்கள். பைத்தியக்காரர்களின் கூச்சல் அரங்கத்தில் அதிர்கிறது. இடைவேளை. இடைவேளை முடிந்து நாங்கள் வந்து அமர்ந்தபோது மேடைக்கும் எங்களுக்கும் இடையே இரும்புக் கம்பிகள் அமைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தோம். அதற்குப் பிறகுதான் எங்களுக்கு நிம்மதி பிறந்தது. நாடகம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று நிஜப் பைத்தியங்களையே அழைத்துக் கொண்டு வந்து விட்டார்கள் போலிருக்கிறது, பாவிகள்.

இரண்டாம் அங்கம் தொடங்கியதும் விடுதிக் கண்காளிப்பாளர் தோன்றி மேடையிலிருந்து பைத்தியங்கள் யாரும் கீழே குதித்து எங்களை நோக்கி வந்து விடாமல் இருப்பதற்காகத்தான் இரும்புக் கம்பிகள் வைத்திருப்பதாகச் சொன்னார். நாடகம் முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. குளியல் தொட்டியில் கிடக்கும் மாராவை ஷார்லத் கொல்ல வேண்டும். (மாராவை நிஜ வாழ்வில் கொன்றவள் ஷார்லத்). இப்போது ஷார்லத் மாராவைக் கொல்வதற்குப் பதிலாக விடுதிக் கண்காணிப்பாளரைக் கொல்கிறாள். அவ்வளவுதான்; பைத்தியக்கார விடுதியில் கூச்சல் குழப்பம் உச்சத்தை அடைகிறது. ஒரு பைத்தியம் எங்கோ ஓடிப் போய் மின்சாரத்தை நிறுத்தி விடுகிறது. மேடையின் இருள் சூழ்ந்த வெளிச்சத்தில் பைத்தியங்கள் இரும்புக் கம்பிகளின் மேல் ஏறிக் குதித்து பார்வையாளர்களின் நடுவே புகுந்து ஆஸாதி ஆஸாதி என்று கத்திக் கொண்டே அரங்கத்தை விட்டு வெளியேறுகின்றன. பார்வையாளர்கள் அனைவரும் ஸ்தம்பித்து நிற்கிறோம்.

வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஒரு தருணம் அது. பிறகு கடைசியில்தான் தெரிந்தது, பைத்தியங்கள் அத்தனையும் நடிகர்கள் என்றும், அரங்கத்தில் லத்தியோடு நின்று கொண்டிருந்த காவலர்களும் நடிகர்களே என்றும்.

இது போன்ற நாடகங்களெல்லாம் ஃப்ரெஞ்சிலும் ஜெர்மனிலும் மட்டும் எப்படி எழுதப்பட்டன? அதற்கு அந்தோனின் ஆர்த்தோவின் (Antonin Artaud 1896 - 1948) Theatre of Cruelty என்ற கருத்தாக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். சரி, இதற்கும் ந. முத்துசாமிக்கும் என்ன சம்பந்தம்? நான் பல ஆண்டுகளாகச் சொல்லி வருகிறேன், எழுத்தாளர்களைத் தமிழ்ச் சமூகம் கொண்டாடுவதில்லை என்று. உதாரணம், ந. முத்துசாமி. இன்றைய தினம் உலக நாடக அரங்கில் இப்ராஹீம் அல்காஷி ஒரு legend-ஆகக் கருதப்படுபவர். ந. முத்துசாமியின் பெயர் அப்படித் தெரிந்திருக்கவில்லை என்றாலும் ரத்தன் திய்யம் அளவுக்காவது உலக அளவில் தெரிந்திருக்க வேண்டாமா? ரத்தன் திய்யத்தைத் தெரியாத ஒரு மணிப்பூர்க்காரரை நாம் பார்க்க முடியாது. இந்திய நாடகம் என்றால் அதில் முதல் ஐந்து பேரில் வரும் பெயர் ரத்தம் திய்யம். ஆனால் முத்துசாமியின் பெயர் சொல்ல இங்கே ஆள் இல்லை. நமக்குத் தெரிந்தால்தானே பக்கத்து வீட்டுக்காரருக்குத் தெரியும். இதுவாவது போகட்டும். தமிழ் சினிமாவில் உள்ள இன்றைய பிரபலங்கள் பலருமே ந. முத்துசாமியின் கூத்துப் பட்டறையில் நடிப்புக் கலை பயின்றவர்கள். முத்துசாமியை குருவாக நினைப்பவர்கள். ஆனால் பாவம், அவர்களுக்கும் முத்துசாமி என்றால் யார் என்று தெரியவில்லை. முத்தமிழ் என்று பெருமையுடன் சொல்கிறோமே, அதில் ஒன்றான நாடகத் தமிழுக்கு 2000 ஆண்டு வரலாற்றிலேயே முதல் முதலாக நவீன அடையாளத்தை அளித்தவர் ந. முத்துசாமி. தமிழ்நாடே கொண்டாட வேண்டிய ஒரு செயல் இது. ஆனால் நம் யாருக்குமே அது தெரியவில்லை.

எஸ். ராமகிருஷ்ணன் இது பற்றி ஒரு நல்ல கட்டுரை எழுதியிருக்கிறார். இணைப்பு: http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=521

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com