ப. சிங்காரம் (1920 - 1997)

தமிழில் எதிரெதிர் ரசனைகளைக் கொண்ட பல எழுத்தாளர்களும் ஒருசேர ஒரே குரலில் சொல்லும் ஒரு விஷயம், தமிழின் தலைசிறந்த நாவல்

தமிழில் எதிரெதிர் ரசனைகளைக் கொண்ட பல எழுத்தாளர்களும் ஒருசேர ஒரே குரலில் சொல்லும் ஒரு விஷயம், தமிழின் தலைசிறந்த நாவல் ‘புயலிலே ஒரு தோணி’. அதை எழுதிய ப. சிங்காரம் டஜன் கணக்கில் நாவல் எழுதியவர் அல்ல. அவர் எழுதியது ஒரே நாவல். அதுதான் ‘புயலிலே ஒரு தோணி’. அதற்கு முன்னே அவர் எழுதிய ‘கடலுக்கு அப்பால்’ என்ற குறுநாவல் ‘புயலிலே ஒரு தோணி’க்காக எழுதப்பட்ட ஒரு முன்னுரை; அவ்வளவுதான். சரி, எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் ஒத்த கருத்து இல்லாத எல்லா எழுத்தாளர்களுமே தமிழின் தலைசிறந்த நாவல் என்று கொண்டாடும் ஒரு நாவலை எழுதிய சிங்காரம் அதற்குப் பிறகு ஏன் எதுவுமே எழுதவில்லை?

ப. சிங்காரம் உயிரோடு இருந்த வரை அந்தப் பெயரில் ஓர் எழுத்தாளர் இருக்கிறார் என்றே யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. சி.சு. செல்லப்பாவின் எழுத்து குழுவினருக்கும், க.நா.சு.வின் இலக்கிய வட்டம் குழுவினருக்கும் கூடத் தெரியவில்லை. அதற்குத் தகுந்தாற்போல் சிங்காரமும் ஒரு தனிமை விரும்பியாக இருந்தார். எந்த எழுத்தாளரோடும் அவர் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை. அவருடைய உறவினரோடு கூட அவருக்குத் தொடர்பு இல்லை.

ப. சிங்காரம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி என்ற ஊரில் கு. பழனிவேல் நாடார், உண்ணாமலை அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாக 12.8.1920 அன்று பிறந்தார். இவரது பாட்டனார் ப. குமாரசாமி நாடாரும், தந்தை பழனிவேல் நாடாரும் சிங்கம்புணரியில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர். சிங்கம்புணரி தொடக்கப்பள்ளியிலும், பிறகு மதுரை செயிண்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்ற ப. சிங்காரம், பதினெட்டு வயதில் (1938) இந்தோனேஷியாவில் உள்ள மெடான் நகருக்குக் கப்பல் ஏறினார். அங்கே செ.கா. சின்னமுத்துப் பிள்ளையின் அடகுக் கடையில் பெட்டியடிப் பையனாக வேலை செய்தார். அங்கே அவர் திருமணம் செய்து கொண்டார். (மனைவி மலாயா தேசத்துப் பெண் என்று கேள்விப்படுகிறேன். உறுதியாகத் தெரியவில்லை.) பிள்ளைப் பேறின் போது மனைவி இறந்து விட்டார். அதற்குப் பிறகு அவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே இருந்து விட்டார். ‘1940-ல் இந்தியா திரும்பிய அவர் மீண்டும் இந்தோனேஷியா சென்று அங்கே மராமத்துத் துறையில் பணியாற்றினார். அந்நேரம் தென்கிழக்காசியப் போர் மூண்டது. போர் முடிந்ததும் இந்தோனேஷிய ராணுவ அரசின் அனுமதி பெற்று, தமிழர் சிலருடன் சேர்ந்து பினாங்குக்குக் கப்பலில் சரக்குகளை ஏற்றி வியாபாரம் செய்தார்.’ (‘புயலிலே ஒரு தோணி’ காலச்சுவடு பதிப்பின் ஆசிரியர் குறிப்பில்).

பின்னர் 1946 செப்டம்பரில் இந்தியா திரும்பிய சிங்காரம் மதுரை தினத்தந்தியில் வேலையில் சேர்ந்தார். அப்போதும் அவர் எழுத்தாளர் என்று யாருக்கும் தெரியாது; அவரும் சொல்லிக் கொள்ளவில்லை. அப்போது அவர் வயது 27. அப்போதிருந்து 1987 வரை தினத்தந்தியிலேயே வேலை பார்த்து பின்னர் விருப்ப ஓய்வு பெற்றார். அதாவது, 40 ஆண்டுகள் மதுரை தினத்தந்தியில் வேலை பார்த்தார் சிங்காரம். அத்தனை காலமும் அவர் மதுரை ஒய்.எம்.சி.ஏ. ஹாஸ்டலில் ஓர் அறையிலேயே தனியாக வாழ்ந்தார். ஒருநாள் இரண்டு நாள் அல்ல; 50 ஆண்டுகள் ஒரே ஊரில் ஒரே அறையில் வசித்திருக்கிறார். 1997-ம் ஆண்டு, அவர் 50 ஆண்டுகளாகத் தங்கியிருந்த ஒய்.எம்.சி.ஏ. ஹாஸ்டல் அறையிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டார். அதற்குப் பிறகு மதுரை விளக்குத் தூண் அருகே உள்ள நாடார் மேன்ஷனில் (மதுரை நாடார் மஹாஜன சங்கம்) ஓர் அறையில் தங்கினார். அங்கே வந்த மூன்று மாதங்களில் இறந்து விட்டார். 1997 டிசம்பர் 30-ம் தேதி அவர் இறக்கும் போதும் அவர் அந்த அறையில்தான் இருந்தார். தனது மொத்த சேமிப்பான ஏழு லட்சத்தையும் நாடார் மஹாஜன சங்கத்துக்கு ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கி விட்டார். தனது இறப்பை யாருக்கும் தெரிவிக்க வேண்டியதில்லை என்றும் சொல்லி விட்டார். (புயலிலே ஒரு தோணி, காலச்சுவடு பதிப்பகம்).

வாழ்நாள் முழுவதுமே - அதாவது, மதுரை தினத்தந்தியில் பணி புரிந்து கொண்டு, ஒய்.சி.எம்.ஏ.வில் தங்கியிருந்த ஐம்பது ஆண்டுகளில் அவர் தன் உறவினர்களோடு தொடர்பே கொள்ளவில்லை. இப்படியாக உறவு, பந்தம், பாசம் எதுவுமில்லாத துறவியைப் போலவே வாழ்ந்திருக்கிறார் சிங்காரம். ‘கடலுக்கு அப்பால்’ குறுநாவலை அவர் 1950-ல் எழுதினார். ஆனால் அதை எந்தப் பதிப்பகமும் பதிப்பிக்கத் தயாராக இல்லை. ஒன்பது ஆண்டுகள் கழிந்தே 1959-ல் அது வெளிவந்தது. ‘புயலிலே ஒரு தோணி’யை 1962-ல் எழுதி முடித்தார். ஆனால் 1972 வரை அதைப் பதிப்பிக்க யாரும் முன் வரவில்லை. அதிலும் அதைக் கசாப்புக் கடையில் மாமிசம் வெட்டுவதைப் போல் வெட்டிக் குதறித்தான் பிரசுரித்தார்கள்; முழுமையாக அல்ல.

என் இலக்கிய வாழ்வின் தீராத துயரம் என்னவென்றால், ஒரு மகத்தான படைப்பாளி நம்மிடையே வாழ்ந்திருக்கிறார். ஆனால் நாம் அது பற்றிய எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் இருந்திருக்கிறோம். சாமானியர்களைப் பற்றிச் சொல்லவில்லை; எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்கிறேன். அதுவும் ப. சிங்காரம் எந்தக் காலகட்டத்தில் எழுதினார்? தமிழ் நவீன இலக்கியத்தின் பொற்காலத்தில் - அதாவது அறுபது, எழுபதுகளில் - எழுதினார்; அதிலும் தமிழின் சிகர சாதனை என்று சொல்லத்தக்க நாவலை எழுதியிருக்கிறார். அது பற்றி அந்தப் பொற்காலத்தில் வாழ்ந்த ஒரு படைப்பாளி கூட அறிந்திருக்கவில்லை. அவருடைய நாவலைப் பிரசுரம் செய்வதற்குக் கூட ஓர் ஆத்மா இல்லை; நாவல் எழுதப்பட்டு பத்தாண்டுகள் கழித்து வெளியிட்டவரும் நாவலைக் கொத்துப் பரோட்டா செய்து விட்டார். அந்த ஒரே காரணத்தினால்தான் அதற்குப் பிறகு அவர் எழுதவில்லை. இருபது ஆண்டுகள் கழித்து வரப் போகும் இரண்டாம் தலைமுறை எழுத்தாளர்களால் ‘நவீன தமிழின் சிகர சாதனை’ என்று கொண்டாடப்படப் போகும் நாவலை எழுதியும் அதைப் பிரசுரிக்கக் கூட ஆள் இல்லை என்பதால்தான் அவர் எழுதுவதையே நிறுத்தினார் என்று நினைக்கிறேன்.

அதன் பிறகு 1984-ல் அவர் வாழ்வில் ஒரு சிறிய சலனம் நிகழ்ந்தது. ந. முருகேச பாண்டியன் சிங்காரத்தை மதுரையில் சந்தித்தார். சிங்காரம் பற்றி ஒரு கட்டுரை எழுதினார். அதன் பிறகு பல ஆண்டுகளுக்கு சிங்காரம் பற்றித் தமிழில் கிடைத்த ஒரே கட்டுரை அதுவாகத்தான் இருந்தது. சிங்காரத்தின் வார்த்தைகள் இவை: ‘சொல்லுங்கள், புயலிலே ஒரு தோணியை இப்போது யார் பதிப்பிப்பார்கள்? யார் படிப்பார்கள்? சீரியஸான இலக்கிய நூல்களைப் படிக்க இங்கே யாருக்கும் ஆர்வம் இல்லை. எழுதுவதற்கு என்னிடம் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. உலகில் தமிழன் இல்லாத ஓர் இடம் இருக்கிறதா? ஆனால் அங்கெல்லாம் போகின்ற நம் மக்கள் அந்த ஊரையோ அந்த மக்களையோ பார்ப்பதில்லை. அப்படிச் செய்திருந்தால் தமிழ் இலக்கியம் எங்கேயோ போயிருக்குமே? என் நாவலில் ஒரு கப்பலில் செல்வது பற்றி எழுதியிருக்கிறேன். அது போர்க்காலத்தில் இந்தோனேஷியாவிலிருந்து மலேஷியாவுக்கு சென்ற சரக்குக் கப்பல். அப்போது நாங்கள் ஒரு புயலிலே மாட்டிக் கொண்டோம். கப்பலில் இருந்த சரக்குகளையெல்லாம் கடலில் விட்டெறிந்தோம். அந்தச் சம்பவத்தைப் பற்றி நாவலில் எழுதிக் கொண்டிருந்த போது எனக்குப் பல சந்தேகங்கள் ஏற்பட்டன. அதனால், அந்த சரக்குக் கப்பலில் என்னோடு பயணம் செய்த நண்பர்களிடம் கேட்டேன். ஆனால் அவர்கள், ‘ஆமாம், ஞாபகம் இருக்கிறது. சரக்குக் கப்பலில் போனோம். புயல் கூட வந்தது. ஆனால் நம்மோடு யார் இருந்தது என்று ஞாபகம் இல்லையே?’ என்கிறார்கள். வெள்ளைக்காரர்கள் நம் நாட்டில் முன்னூறு ஆண்டுகள்தான் இருந்தார்கள். ஆனால் அவர்கள் பார்த்த நம்மைப் பற்றி எத்தனையெத்தனை புத்தகங்களை எழுதிக் குவித்திருக்கிறார்கள்? மதுரை டவுன் ஹால் ரோட்டில் ஒரு மாலை நேரத்தில் நடந்திருக்கிறீர்களா? மூணு சீட்டு ஆடுபவர்கள், வம்பு பேசுபவர்கள், தரகர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள், விபச்சாரிகள், மாமாக்கள்... உங்கள் கண்ணெதிரில் எத்தனையெத்தனை கதைகள் இருக்கின்றன... அதேபோல் கீழ மாசி வீதியில் உள்ள ஹோல்சேல் மண்டிகள், கடைகள்... அதெல்லாம் ஒரு தனி உலகம். தங்களிடம் கொள்ளை கொள்ளையாய் கதைகளை வைத்துக் கொண்டு நமக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. மற்ற இடங்களுக்குப் போவானேன்? எழுதுவதற்கு எத்தனையோ இருக்கின்றன. ஆனால் அவற்றை நுணுக்கமாக ஆராய்ந்து அதை நாவலாக மாற்றும் திறன் நம்மிடம் இல்லை.

என்னுடைய ‘கடலுக்கு அப்பால்’ பற்றிப் பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் ‘புயலிலே ஒரு தோணி’ ஒரு நல்ல நாவல். ஆனால் அதற்கு எந்த எதிர்வினையும் வரவில்லை.’

எழுதிப் பத்தாண்டுகளுக்குப் பதிப்பாளரே கிடைக்காமல் இருந்த ‘புயலிலே ஒரு தோணி’ 1972-ல் சிதைக்கப்பட்டு வெளிவந்தது என்று குறிப்பிட்டேன். பதிப்பாளர் அதன் நுணுக்கங்களையெல்லாம் எடுத்துத் தூக்கியெறிந்து விட்டார். இன்னும் சரியாகச் சொன்னால், ப. சிங்காரம் உயிரோடு இருந்தவரை அவருடைய ‘புயலிலே ஒரு தோணி’ புத்தகமாக வெளிவரவில்லை. அவர் உயிரோடு இருந்தவரை அவர் எழுதிய ஒரே ஒரு நாவலை அவரால் பார்க்கமுடியவில்லை.

சிங்காரத்தை அப்போதைய இலக்கியச் சூழல் கூட அடையாளம் கண்டு கொள்ளாததற்குக் காரணம், ஒருவேளை அவர் அந்தச் சூழலோடு தன்னை இணைத்துக் கொள்ளவில்லை என்பதாகவும் இருக்கலாம். சிங்காரம் சொல்கிறார்: ‘இதுவரை நான் ஒரு நல்ல தமிழ் நாவலைப் படித்ததில்லை. நான் படித்ததெல்லாம் ஆங்கில நாவல்கள்தாம். இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பித்தவுடனேயே இந்தியாவுடனான கடல் போக்குவரத்து நின்று போனது. தமிழ்நாட்டிலிருந்து ஒரு பத்திரிகை கூட அங்கே வரவில்லை. நான் படித்தது பூராவும் பினாங் பொது நூலகத்தில்தான். ஹெமிங்வே, டால்ஸ்டாய், ஃபாக்னர், செக்காவ், தாஸ்தாவெஸ்கி, மற்றும் ஏகப்பட்ட பேர்.’

ஆக, சிங்காரத்துக்கு உலக மொழிகளில் உள்ள நவீன இலக்கியப் பரிச்சயம் கிடைத்து விட்டது. ஆனால் மொழி? நவீனத் தமிழ் இலக்கியமே தெரியாமல் நவீனமான தமிழ் மொழியை எப்படி எழுதுவது? அதற்கு அவருக்கு உதவியது பழந்தமிழ் இலக்கியம். ஆம், பாரதி எப்படி பழந்தமிழ் இலக்கியத்திலிருந்து நவீன தமிழுக்கு வந்தாரோ அதே போல் நவீன தமிழ் இலக்கியப் பொற்காலத்தின் விளைபொருட்கள் குறித்த அறிமுகம் இல்லாமலேயே தமிழின் மிகச் சிறந்த நாவலை எழுதினார் சிங்காரம். அந்த வகையில் சிங்காரத்துக்கு முன்னோடியே இல்லை எனலாம்.

இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். Testimony Literature என்று சொல்லப்படும் எழுத்து வகை தமிழில் ஓரளவுக்கு எழுதப்பட்டு வருகின்றன. முதன்முதலில் இது ஆஸ்கார் லூயிஸின் La Vida (வாழ்க்கை) என்ற நூலின் மூலம் உலக இலக்கியத்துக்கு அறிமுகம் ஆனது. தமிழில் இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. மலையாளத்தில் திருடன் மணியன் பிள்ளை நூலைச் சொல்லலாம். திருடனாக வாழ்ந்த மணியன் பிள்ளையின் கதையை அவரிடமே கேட்டு எழுதியிருக்கிறார் இந்து கோபன். பாலியல் தொழிலாளியாக வாழ்ந்த நளினி ஜமீலாவின் கதையும் இதே வகைதான். போர் அனுபவங்களை எழுதுபவர்களையும் இதே வகையில் சேர்க்கலாம். இவர்களின் கதைகளைக் கேட்டால் நம் இதயம் அதிரும். ஆனாலும் இவர்கள் எழுத்தாளர்கள் அல்ல; இவர்களிடம் இருப்பது ஒரே கதைதான். துரதிருஷ்டவசமாக, சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணியையும் தமிழ் புத்திஜீவிகள் ஓர் ‘அனுபவ’ நாவலாகக் கருதி விட்டனர். அந்த மாபெரும் பிழையைச் சரி செய்த பெருமை ந. முருகேச பாண்டியன், கோணங்கி, சி. மோகன், சாரு நிவேதிதா போன்ற இரண்டாம் தலைமுறை எழுத்தாளர்களையே சாரும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com