ப. சிங்காரம் - பகுதி 2

‘புயலிலே ஒரு தோணி’ கதை, இரண்டாவது உலகப் போர்க் காலத்தையொட்டி மலேயா - இந்தோனேசியா பிரதேசத்தில் நிகழ்வதாக உள்ள படைப்பு.


‘புயலிலே ஒரு தோணி’ கதை, இரண்டாவது உலகப் போர்க் காலத்தையொட்டி மலேயா - இந்தோனேசியா பிரதேசத்தில் நிகழ்வதாக உள்ள படைப்பு. யுத்த காலத்தை அந்தப் பிரதேசத்தில் கழித்த சிங்காரம் அதைத் தன்னுடைய நாவலுக்குக் களனாக அமைத்துக் கொண்டார். ‘புயலிலே ஒரு தோணி’யை நவீனத்துவத்துக்கும் பின்நவீனத்துவத்துக்கும் இடையில் ஊடாடும் ஒரு நாவலாகக் கொள்ளலாம். நவீனத்துவ நாவல் ஒரு மையப் புள்ளியைச் சுற்றி இயங்குகிறது. பின்நவீனத்துவ எழுத்து அந்த மையத்தை நிராகரிக்கிறது; கலைத்துப் போடுகிறது. பல்வேறு திசைகளிலிருந்தும் பல்வேறு குரல்கள் கிளம்பிப் பெருகி ஒருவித ‘கலகச்’ (anarchic) சூழலை உருவாக்குவதே பின்நவீனத்துவ எழுத்து. ‘புயலிலே ஒரு தோணி’யின் பிரதான பாத்திரமான பாண்டியனையும், அவனது எக்ஸிஸ்டென்ஷியல் தருணங்களையுமே இந்த நாவலின் மையமாகப் பார்த்து அதை ஒரு நவீனத்துவப் படைப்பாகக் கருதி விட்டது தமிழ் இலக்கிய உலகம். நவீனத்துவத்துக்கும் பின்நவீனத்துவத்துக்குமான ஒரு முக்கியமான வித்தியாசம், நவீனத்துவம் வாழ்வின் அவலங்களைக் கோபத்தோடும் துயரத்தோடும் நையாண்டி செய்கிறது என்றால் பின்நவீனத்துவம் அந்த அவலங்களைப் பகடி செய்கிறது. ஆங்கிலத்தில் முன்னதை satire என்றும், பின்னதை burlesque என்றும் சொல்லலாம். சார்லி சாப்ளினின் ‘க்ரேட் டிக்டேட்டர்’ படத்தை நையாண்டிக்கு உதாரணமாகச் சொல்லலாம். நையாண்டியின் நோக்கம், ஒரு விஷயத்தைக் கேலி செய்வதல்ல; விமரிசனம் செய்வது. ஆனால் burlesque, விமரிசனம் செய்வதில்லை; மாறாக, ஒரு மகத்தான படைப்பை எடுத்துக்கொண்டு கிண்டல் செய்கிறது. மகத்தானதென்றும் புனிதமானதென்றும் அது எதையும் விட்டு வைப்பதில்லை. Burlesque என்பதன் அர்த்தங்களில் ஒன்று, ஸ்ட்ரிப் டீஸ் நடனம். அதையும் இங்கே மனதில் கொள்ள வேண்டும். கிராமங்களில் ஒருத்தனை மற்றொருத்தன் கிண்டல் செய்து விட்டால் ‘டவுசரை அவுத்துட்டான்’ என்று பேச்சு வழக்கில் சொல்வார்கள். அதுதான் burlesque. சிங்காரம் ஏன் இதைச் செய்கிறார்? தனக்கு முன்னே தென்படும் எந்த ஒரு விஷயத்தையும் புனிதப்படுத்தி அதை வழிபடுவதுதான் பன்னெடுங் காலமாக தமிழ் மரபாக இருந்து வருகிறது. அதனால்தான் அந்தப் புனிதங்கள் அனைத்தின் ‘டவுசரையும்’ அவிழ்க்கிறார் சிங்காரம். நாவல் முழுவதுமே அதற்கு உதாரணம் என்றாலும், ஒரு கட்டத்தில் பாண்டியன் கடுமையான போதையில் இளங்கோ அடிகளை வம்புக்கு இழுக்கும் பகுதியிலிருந்து ஒன்றிரண்டு பத்திகளைத் தருகிறேன்:
‘ஆ, அதோ!... அடிகாள்! பூம்புகார்த் துறவிகாள்! உங்களைத்தான், உங்களையேதான் அழைக்கிறேன். இப்பொழுதுதான் தங்களை நினைத்தேன். தாங்களோ சட்டியும் கையுமாய்ச் சாலையோரம் நிற்கிறீர்கள். சட்டியில் ஒன்றையும் காணோமே, ஏன்?ஹெஹ் ஹெஹ் ‘இருக்குமிடந்தேடி’ வந்து ‘உருக்கமுடன்’ அன்னமிடுவார் யாரும் சிக்கவில்லையாக்கும்? ஏஞ்சாமி-சாமி, சின்னப்பயல் சொல்கிறானே என்று கோபித்துக் கொள்ளக் கூடாது - கலி காலத்தில் இந்த விரதமெல்லாம் கடைத்தேறுமா? தெருக்காட்டுக்குள் போய் ஆடிப் பாடி இரந்தால்தான் சோற்றைப் பார்க்கலாம். சோறு வேண்டுமாயின் தயவுசெய்து நான் சொல்கிறபடி செய்யுங்கள். முதலில் கெசாவனுக்குப் போய்ப் பூப்போட்ட சட்டை ஒன்று வாங்கிப் போட்டுக் கொள்ள வேண்டும். தாடி இருந்து விட்டுப் போகிறது. லேசாய் வெட்டி விட்டால் போதும். அரிதாரம் இல்லையோ? வேண்டாம். விபூதியை முகத்தில் அப்பிக் கோவணத்தால் தேய்த்து விடுங்கள். பவ்டர் பூசியது போலவே இருக்கும். சரி, என்னென்ன சினிமாப் பாட்டு தெரியும் உங்களுக்கு? என்ன, ‘பெண்ணே வா வா வா! இன்பம் தா தா தா!’ கூடத் தெரியாதா...? கதை-வசனம் பேசத் தெரியுமா? தெரியாது. பேடிக் கூத்து ஆடத் தெரியுமா? அதுதான் சாமி, குண்டியை ஆட்டிக் குதிப்பது... அதுவும் தெரியாது!... நிற்க. தங்களிடம் ஒரு சேதி கேட்க வேண்டுமென்று நினைத்தேன். அதாவது, பூம்புகாரில் மாவன்னாக் கோவன்னா மார்க்கா கோவலன் செட்டியார் பற்றித் தங்களுக்குத் தெரிந்திருக்குமே! அவர் வீட்டு வகையில் யாரேனும் இப்போது அங்கே தொழில் நடத்துகிறார்களா? இல்லையா? ஆ, எப்பேர்ப்பட்ட மார்க்கா! இருந்த இடம் தெரியாமலா போய் விட்டது! கோவன்னா அவர்கள், பெண்டாட்டி தாலியை விற்க மதுரைத் தெற்காவணி மூலவீதிக்குப் போயிருந்த இடத்தில் - இல்லையில்லை, தாலியில்லை, தண்டை, அதுதான் சிலம்பு, நகை வியாபாரிகளின் சூழ்ச்சியால் அநியாயமாய்க் கொலையுண்டாராமே, பிள்ளை வைக்கக் கூட கொள்ளி இல்லாமல் - மன்னிக்கவும், நாக்குழறுகிறது. பிள்... ம்ம்... கொள்ளி வைக்கக் கூடப் பிள்ளை இல்லாமல் கண்ணகியாத்தாளும் மலைக்காட்டில் போய் மாண்டு போனார்களாக்கும். ஐயோ, பாவம்! கணவனிடம் தண்டையைக் கழற்றிக் கொடுப்பானேன், விடாப்பிடியாய் அவனைப் பின்பற்றிப் போய் அறியாத் தேயத்தில் அநாதையாய்ச் சாவானேன்? ம்ஹ்ங்... கோவன்னா அவர்கள் எடுத்து வைத்திருந்த திருக்கடையூர் தாசி மாதவிக்கு ஒரு மகள் பிறந்திருந்ததாகவும் - அந்தத் தங்கச்சி பெயர் மணிமேகலை என்றார்கள் - அதுவும் பருவ வயதில் துறவறம் பூண்டு சாக்கிய மடத்தில் போய் ஒடுங்கி விட்டதாகவும் சொல்கிறார்களே, உண்மைதானா? ம்ஹ்ங்... கோவன்னா அவர்களின் மாமனார் எட்டி மாநாய்க்கன் வீடும் கொடியற்றுப் போனதாக்கும்... ஏஞ்சாமி, இதெல்லாம் ஏனிப்படி...? ஆ! அப்படியா? அது சரி, இன்னொரு சங்கதி. வீடு கசந்த பின் தாங்களும் திருக்கடையூருக்குத்தான் போனீர்களோ... என்ன பெயர்? திருவுடைநாயகி! நல்ல பெயர், மணியான பெயர்... ம்ம்? மூன்று மாதத்தில் புளித்து விட்டதாக்கும். பிறகு மாமல்லை, நாகை, கொற்கை... தொழிலைக் கவனிக்க நேரமில்லை. மேலாளும் அடுத்தாட்களும் சேர்ந்து பட்டை நாமம் போட்டார்கள். கடை நொடித்து விட்டது. உடுத்திய வேட்டியோடு, ‘ஊரும் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப் பெற்ற பேரும் சதமல்ல’ என்று பரதேசம் கிளம்பி விட்டீர்கள். இவ்வளவுக்கு ஆகியும் கூடப் பெண்ணாசை அடியோடு ஒழியவில்லையே. ஆமாம், சமயங்களில் நினைவு வரத்தான் செய்யும். அதற்குத்தான் ஒரு இக்கு வைத்துப் பாடியிருக்கிறீர்களே,
நினைவெழுந்தால் வீதிக்குள் நல்ல
விலை மாதருண்டிந்த மேதினியில்
என்று. அடிகாள், என்ன முன்யோசனை, என்ன நுட்ப புத்தி! ஏஞ்சாமி, விலைமாதர்தான் தங்களுக்குப் பிடிக்குமாக்கும்... கொல்லைப்புற மாங்கனிகளில் விருப்பம் இல்லையோ?’


இப்படியே நாவல் முழுவதும் கடவுள், மதம், தர்மம், மொழி, நிலம், தாய்மை, சாதி, கலாச்சாரம், மரபு, பண்பாடு, தேசம் என்று எல்லாவற்றையும் பகடி செய்கிறார். அவருடைய பகடியிலிருந்து எதுவுமே தப்பவில்லை. ஒருவேளை இது கூட தமிழ் இலக்கிய முன்னோடிகள் சிங்காரம் பற்றிப் பேசாததற்குக் காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. சிங்காரத்தை மற்ற எழுத்தாளர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துவது என்னவென்றால், அவர் எழுத்து வெறும் பகடி மட்டும் அல்ல; Raymond Federmen-ன் மொழியில் சொல்வதானால், gimmicks, playfulness, narcissism, self-indulgence போன்றவற்றோடு கலந்த self-reflexiveness-ஐத்தான் ‘புயலிலே ஒரு தோணி’யில் நாம் காண்கிறோம். அல்லது, ஜான் பொத்ரியாரின் (Jean Baudrillard) வார்த்தையில், 'simulacrum'. Simulacrum மற்றும் Self-reflexiveness பற்றி ஏற்கனவே இந்தத் தொடரில் நாம் பார்த்திருக்கிறோம். இந்த நாவலில் நமக்குக் கிடைக்கும் உப பிரதிகள் (sub-texts) யாவும் கடுமையான கிண்டலையும் பகடியையும் தன்னுள் கொண்டிருக்கின்றன. மேலே உள்ள இளங்கோவடிகள் பகுதியே அதற்கு உதாரணம். ‘புயலிலே ஒரு தோணி’யில் எடுத்தாளப்பட்டிருக்கும் பழந்தமிழ் இலக்கியப் பிரதிகள் பற்றி ஒரு பெரும் ஆய்வே செய்யலாம். ரேமண்ட் ஃபெடர்மன் அதை 'pla(y)giarism' என்கிறார். பழந்தமிழ்ப் பிரதிகளிலிருந்து உருவி எடுத்து அவற்றோடு விளையாடுதல். இந்த அளவுக்குப் பழந்தமிழ் இலக்கியப் பிரதிகளோடு விளையாடும் வேறொரு தமிழ் நாவலை நான் படித்ததில்லை. தமிழர்கள் பெருமை கொண்டாடும் பண்பாட்டு/கலாச்சார விழுமியங்களோடு நாவலின் நாயகன் பாண்டியன் புகுந்து விளையாடியிருக்கிறான். உண்மையில் இரண்டாம் உலக யுத்தத்தில் சிக்கிக் கொண்ட பாண்டியனின் அவல அனுபவங்களை வைத்து வாசகர்களைக் கண்ணீர் வெள்ளத்தில் ஆழ்த்தியிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் நாவல் எழுதப்பட்ட காலத்திலேயே பலராலும் சிலாகிக்கப்பட்டிருக்கும். ஆனால் சிங்காரம் அந்தப் பக்கமே போகவில்லை.

***

கதை நடக்கும் மெடான் நகரம் பற்றி சிங்காரம் சொல்கிறார்: ‘முன்னர் ‘டச்சு கிழக்கிந்தியத் தீவுகள்’ என்று அறியப்பட்ட இந்தோனேசியா பல தீவுகள், இனங்கள், மொழிகளைக் கொண்ட நாடு. அதன் ஓர் அங்கமான சுமத்ரா தீவு இலங்கையைபோல் ஏழு மடங்கு பெரியது. சுமத்ராவின் வட கிழக்குக் கரையையொட்டி மைடான் என்ற மெடான் நகரும், அதன் அருகே பிலவான் துறைமுகமும் இருக்கின்றன. அந்தப் பகுதியில் பேசப்படும் பாஷை மலாய். டச்சு ஆட்சியின் போது புழங்கிய நாணயம் கில்டர். அதன் அப்போதைய மதிப்பு ஏறத்தாழ ரூ.1.50. கில்டரைத் தமிழர்கள் ரூபாய் என்றும், இந்தோனேசியர் ருப்பியா என்றும் கூறுவர்.’

இன்றைய மெடான் பற்றி இந்த நாவலுக்கு முன்னுரை எழுதியுள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியரான சுனில் அம்ரித் இப்படிக் குறிப்பிடுகிறார்: ‘இன்றைய மெடானில் ஒரு சிறு தமிழ்க் குடியிருப்பு எஞ்சியுள்ளது. ‘கம்பொங் மெட்ராஸ்’ (சென்னை கிராமம்) என்று அதற்குப் பெயர். அதன் நடுவில் ஒரு மாரியம்மன் கோவில். 1881-ல் செட்டியார்கள் கட்டியது. இன்று சில தெருக்களை மட்டுமே கொண்ட பகுதி அது. சிங்காரம் நடமாடிய பகுதி இன்று குறுகி விட்டது. பல பதிற்றாண்டுகளுக்குப் பிறகு அவர் நினைவு கூர்ந்தது போல் சுதந்திர இந்தோனேசியா அரசாங்கம் தெருப் பெயர்கள் பலவற்றை மாற்றி விட்டது. இன்று அங்கு செல்லும் ஒரு பயணி பாண்டியன் கண்ட உலகத்தின் சில காட்சித் தெறிப்புகளையேனும் காணலாம்.’             

‘புயலிலே ஒரு தோணி’ கதை நடந்து அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு சிங்காரம் வாழ்ந்த பகுதிகளுக்குச் செல்லலாம் என்று முடிவு செய்து ஒரு பயணம் மேற்கொண்டேன். பயணத்தின் நோக்கங்களில் ஒன்று, சிங்காரம் பயன்படுத்தியிருக்கும் நூற்றுக்கணக்கான மலாய் வார்த்தைகளுக்குப் பொருள் காண வேண்டும் என்பது. நான் படித்த அப்போதைய பிரதியில் அந்த வார்த்தைகளுக்கு அடிக்குறிப்புகள் இல்லை. அந்த வார்த்தைகளெல்லாம் வேசிகள், செக்ஸ் தரகர்கள் போன்றவர்கள் பேசும் கொச்சை மொழி என்று தெரிந்த பிறகு ஒரு தரகரை அணுகினேன். அவர் என்னை மிக வயதான ஒரு பாலியல் தொழிலாளியிடம் அழைத்துச் சென்றார். அவர் அந்த வார்த்தைகளெல்லாம் ஆணும் பெண்ணும் கூடும் போது மட்டுமே பேசிக் கொள்பவை என்றும், அதெல்லாம் இப்போது வழக்கொழிந்து விட்டன என்றும் சொன்னார்.  

சிங்காரத்தின் எழுத்துக்கும், விளிம்பு நிலை மாந்தர் பற்றி எழுதிய மற்ற எழுத்தாளர்களுக்கும் (உதாரணமாக ஜி. நாகராஜன்) உள்ள மற்றொரு வித்தியாசம், சிங்காரத்திடம் கண்ணீர் இல்லை. கடவுளை நோக்கிய பிரார்த்தனை இல்லை. ஏனென்றால், சிங்காரத்தின் உலகில் கடவுளுக்கு இடமேயில்லை.  
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com