8. ஊக்க மருந்து தடைகள்

உங்கள் குழந்தை விளையாட ஆரம்பிக்கும் முன் அல்லது விளையாட்டுதான் அவர்கள் வாழ்க்கை
8. ஊக்க மருந்து தடைகள்

உங்கள் குழந்தை விளையாட ஆரம்பிக்கும் முன் அல்லது விளையாட்டுதான் அவர்கள் வாழ்க்கை எனத் தேர்ந்தெடுத்த பின், ஒரு பெற்றோராக நீங்கள் செய்ய வேண்டிய முதல் கடமை,அவர்களுக்கு ஊக்க மருந்து தடைகள் மற்றும் எந்தெந்த மருந்துகள் ‘WADA’ அமைப்பு மூலம் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை அறிவது. போலவே, இது போன்ற தடை  செய்யப்பட்ட மருந்துகளை உட்கொள்ளுவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். ஏனெனில், இவ்வகையான மருந்துகள் நாம் தினம் உட்கொள்ளும் வலி, காய்ச்சல், இருமல், சளி போன்றவற்றுக்கான மாதிரிகளிலும் உள்ளது. இது நம்மைப் போன்ற சாதாரண மக்களுக்கு, எவ்வித விளைவும் விளைவிக்காது. ஆனால்,ஒரு விளையாட்டு வீரருக்கு, இவ்வகையான மருந்துகளில் விளையாட்டு திறனை அதிகரிக்கும் பொருள் (Substance) உள்ளது. இது உங்கள் அளவில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேலே இருந்தால் அது உங்கள் விளையாட்டு திறனை ஊக்கப்படுத்தும் என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகிறது.

இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே, இதேபோன்று எத்தனையோ மருந்துகள் ‘WADA’ வால் தடை செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு ஒரு மிகப் பெரிய உதாரணம் தருகிறேன். ‘சைக்ளிங்’ விளையாட்டை அறிந்தவர்கள் 'Lance Armstrong' என்ற பெயரை அறிவார்கள். அது மட்டுமில்லாமல், விளையாட்டு உலகில் இவர் மிகவும் பிரசித்தம். இவர் சைக்ளிங் உலகில் '7' முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர். அந்த சைக்ளிங் போட்டிகள் 3000 கிலோமீட்டரை குறிப்பிட்ட நாட்களில் செய்ய வேண்டிய ஒன்று. இப்போட்டிகள் மிகவும் கடுமையான ஒன்று.இவருக்கு மட்டும் இவ்வளவு பெருமை எதற்கென்றால், இவர் ஒரு ‘Cancer" நோயாளி. ஆம், புற்று நோய் வந்தபிறகு, அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரபி சிகிச்சைகளுக்கு பின், மறுபடியும் ‘சைக்ளிங்’ போட்டிகள் கலந்து கொண்டு உலக சாம்பியன் பட்டங்களில் ஒன்றான ‘Tour De France’ஐ வென்றுள்ளார். இதுவே இவரின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்றது. இவர் கலந்து கொண்ட சைக்கிள் போட்டிகள் '14' நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டிய போட்டி.புற்றுநோய் மற்றும் அதற்கான மருத்துவங்களிலுருந்து வெளிவந்து ‘சைக்ளிங்’க்கான பயிச்சிகள் செய்து, விளையாட்டில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெறுவது என்பது மிக பெரிய விஷயம்.

ஆனால் அவர் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அது அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளை உட்கொண்டார் எனபது. இக்குற்றச்சாட்டை அவர் மறுத்து வந்தார். ஆனால்,கடைசியில், குற்றம் நிரூபிக்கப்பட்டு அவரின் '7' உலக சாம்பியன் பட்டங்களும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. ஆம்,இப்போது அவரிடம் ஒரேயொரு பட்டம் கூட இல்லை. இதில் ஒரு சாரார், Lance Armstrong இவ்வளவு கஷ்டங்களுக்குப் பிறகு செய்தது சாதனை எனக் கொண்டாடினாலும், இவர் கிரியா ஊக்க மருந்துகள் உபயோகித்து தவறு எனவே பெரும்பாலானோர் நினைக்கின்றனர். ஊக்க மருந்து உபயோகிப்பது என்பது, அந்த குறிப்பிட்ட சமயத்தில், உங்களுக்கு நியாயமாகவும், உற்சாகமானதாகவும் தோன்றும். அது மட்டுமில்லாமல், விளையாட்டில் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் மற்றும் பயிற்சிகளினால் உங்களின் உடலில் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கவும், நீங்கள் ஊக்க மருந்து எடுத்து கொள்வதை நியாயப்படுத்தலாம்.

ஆனால் அது ஒரு தடைபடுத்தப்பட்ட செயல் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் குழந்தைகளுக்கு அதை நீங்கள் எடுத்துரைக்க வேண்டும்.அதே போல், நீங்கள் புகழடைவதை விரும்பாமல், சிலர் இதை உங்களுக்கு அறிவுரைக்கக் கூடும். அதை நீங்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். முக்கியமாக, சிறுவயதில் இது போன்ற விஷயங்கள், பிறரின் உந்துதலால் நடக்கக் கூடும். அதை அறிந்து முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில்,அப்போது அவர்களுக்கு அவ்வளவு ‘முதிர்ச்சி’ இருக்காது. எனவே இந்த முதிர்ச்சியின்மை உங்களை தவறு செய்யாமல் பார்த்து கொள்ள வேண்டும். அதேபோல், இப்படி ஊக்க மருந்து உண்டதால், தடை செய்யப்பட்ட வீரர்கள், திரும்பவும் விளையாட்டுக்கு வந்து சாதிப்பது மிகக் குறைவே. உதாரணமாக,ரஷ்யா டென்னிஸ் வீராங்கனை 'மரியா ஷரபோவா' இப்படியான தடை செய்யப்பட்ட மருந்தை தவறாக உட்கொண்டதால் தடை செய்யப்பட்டார். அவர், இன்று வரை தன்னுடைய பழைய ஆட்டத்தை திரும்ப பெற முடியாமல் தடுமாறுகிறார்.

இக்கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது ஒரு செய்தி வந்தது. இந்திய கிரிக்கெட்டின் இளம் வீரர், நாளைய சச்சின் எனக் கொண்டப்பட்ட ‘ப்ரித்வி ஷா’ கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவதிலிருந்து 8 மாதங்களுக்கு தடை செய்யப் பட்டுள்ளார். இது அவர் அருந்திய 'இருமல்' மருந்தில் இருந்த தடைசெய்யப்பட்ட பொருள் (Substance) கண்டுபிடிக்கப்பட்டதால். ‘ப்ரித்வி ஷா’ என்னுடன் வேலை பார்த்திருக்கிறார். அவர் ஒரு திறமையான அதே சமயத்தில், மற்றவருக்கு மரியாதை கொடுக்கும் வீரர். இவர், மிகச் சிறிய வயதிலேயே டெஸ்ட் போட்டிகளில் 'சதமடித்த' ஒரு வீரர். ஆனால், இவர் தன் மூச்சுக்குழல் பிரச்னைக்காக, அருந்திய மருந்தில் தடை செய்யப்பட்ட பொருள்(Substance) கண்டறியப்பட்டதால் தடை செய்யப்பட்டுள்ளார். அதுவும் இதை அவர் உபயோகித்து பிப்ரவரி மாதத்தில். எனவே இது ஒரு சிறந்த கிரிக்கெட் வீரருக்கு ஏற்பட்டதென்றால், உங்கள்  குழந்தைகளுக்கும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆகவே, கிரியா ஊக்கி மருந்துகள் மற்றும் தடை செய்யப்பட்ட மருந்துகள் என்னென்ன என்ற லிஸ்ட் ‘WADA" இணைதளத்தில் உள்ளது.  இந்தப் பட்டியல் மாறிக் கொண்டே இருக்கும். எனவே அவை என்னென்ன என்பதை நாம் அறிந்து கொண்டே இருத்தல் அவசியம். ஊக்க மருந்துகள் இல்லாமல் விளையாட்டில் சிறந்த வீரராவதே நமக்கும், நம் நாட்டிற்கும் பெருமை.

தொடரும்…

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com