ரோஜா மலரே! - 1

நாங்கள் இருந்தது ராமகிருஷ்ணா மடத்துக்கு அடுத்த வீடுதான். அதன் எண் 10. அப்போதும் இப்போதும் டெளனிங் தெருவில் உள்ள பத்தாம் எண் பங்களாதான் லண்டனில் பிரிட்டிஷ் பிரதம மந்திரியின் வீடு.
ரோஜா மலரே! - 1

நடிகை சச்சு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக உயர்ந்தவர். நடனம் கற்று தேர்ந்தவர், மேடை நாடகங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். பின்னர் நகைச்சுவை வேடத்தில் நடிக்க துவங்கி அதிலும் வெற்றிகரமாக வலம் வந்தார். தொடர்ந்து திரை உலகில் குணசித்திர வேடங்களிலும் நடித்துப் பெயர் பெற்றார்.

‘‘தானும் சிரித்துக்கொண்டு மக்களையும் சிரிக்கவைக்கும் நடிகர், நடிகைகள் இறைவனுக்கு நெருக்கமானவர்கள்’’ என்றார் ஒரு அறிஞர்.

அப்படிபட்ட பல கலைஞர்களை நாம் குறிப்பிடலாம். அதில் முதல்வராக (சொல்ல வந்தது முதல் நபராக என்றுதான்) இன்றும், என்றும் நிற்பவர் ஒருவர் உண்டு என்றால், அவர் வேறு யாருமில்லை நடிகை சச்சுதான். கலைஞர்களுக்கு எந்தப் பிரச்னை வந்தாலும், அது சிறிதாக இருந்தாலும் சரி, பெரிதாக இருந்தாலும் சரி, அவர்கள் நேராக செல்வது - சொல்வது இவரிடம்தான்.

பத்திரிகையாளர்களுக்கு ஒரு கலைஞரின் தொலைபேசி எண் தேவை என்றாலும் சரி, விலாசம் தேவை என்றாலும் இவரிடம்தான் செல்வார்கள். குழந்தையாக இருக்கும்போதே நடிக்க தொடங்கி, பின்னர் கதாநாயகியாகி, பிறகு நகைச்சுவை நட்சத்திரமாக மிளிர்ந்து, இன்றும் பல்வேறு படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்துவருபவர் சச்சு.

68 ஆண்டுகள், ஒவ்வொரு படத்திலும் பல்வேறு அனுபவங்கள், வரிசையாக கூறுங்கள் என்று சச்சுவிடம் கேட்டவுடன், அவர் சொன்னது என்ன தெரியுமா? ‘‘நான் பாரீஸில் பிறந்தேன்’’ என்றார்.

‘‘நான் சொன்ன பாரீஸ் இன்று எங்களைப் போன்ற கலைஞர்கள் எல்லோரும் பெருமையாகச் சொல்லும் எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ஸ்டேஷனை அடுத்து சென்னையில் உள்ள பாரீஸ்.

சென்னையில் உள்ள மண்ணடியில்தான் நான் பிறந்தேன். எங்க அப்பா சி.ஆர். சுந்தரேசன் ஒரு வக்கீல். தினமும் தன் வேலை நிமித்தம் கோர்ட்டுக்கு போக வேண்டும் இல்லையா, அதனால் வீட்டை பக்கத்திலேயே பார்த்துக்கொண்டார்.

என் அம்மா ஜெயா வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்தாலும் கர்நாடக சங்கீதம், நடனம் போன்ற கலைகளில் எல்லாம் ஈடுபாடு கொண்டவர். அன்றைய சூழ்நிலையில் பெண்கள் வேலைக்குப் போவது அவ்வளவாக இல்லாத நிலையில் இவரும் வீட்டிலேயேதான் இருந்தார். என் பெற்றோருக்கு 5 பெண்கள், 4 பையன்கள். இதில் நான் ஆறாவதாக பிறந்த குழந்தை. பெண்களில் நான்காவதாக பிறந்தவள்.

என் பெரிய அக்கா லஷ்மி பிற்காலத்தில் ‘மாடி’ லக்ஷ்மி என்ற பெயரில் பிரபலமானார். பல படங்களில் நடித்து பெயர் வாங்கிவர். நான் சினிமாவுக்கு வந்ததற்கு காரணமே என் பெரிய அக்கா மாடி லஷ்மியினால்தான் என்று கூற வேண்டும். நானும் எங்க பெரிய அக்காவும் மயிலாப்பூரில் இருந்தோம். காரணம் என் தாத்தாவும் பாட்டியும் அங்குதான் வசித்து வந்தார்கள். இவ்வளவு குழந்தைகளை பார்த்துக்கொள்ள என் பெற்றோர் கஷ்டப்பட்டார்கள். அதனால், என்னையும் என் அக்காவையும் பாட்டியிடம் அனுப்பிவைத்தார்கள்.

இன்று புகழ் பெற்ற ராமகிருஷ்ணா மடம் சாலைக்கு அன்று என்ன பெயர் தெரியுமா? பிராடீஸ் ரோடு (Brodies Road). இதற்கான பெயர்ப்பலகை இந்தச் சாலை முடியும் - அதாவது தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் எதிரே - இடது பக்கம் சுவரில் காணலாம். பிராடீயோ என்பவரின் முழு பெயர் ஜேம்ஸ் பிராடீயோ (James Brodieo) இவர் கிழக்கு இந்தியா கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அவருக்குச் சொந்தமான 11 ஏக்கர் நிலத்தில் ஒரு பெரிய அரண்மனை கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தார். இன்று மயிலாப்பூர் தெப்பக்குளம் உள்ள இடத்தில் இருந்து அடையார் நதிவரையில் அவரது இடம் இருந்ததாகவும் கூறுவார்கள். 1802-ம் ஆண்டு, தன் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள நதியில் இவர் படகு சவாரி செய்யும்போது நதியில் விழுந்து மூழ்கி மரணமடைந்தார் என்று மற்றவர்கள் சொல்ல, நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் அன்று மிகவும் பிரபலமானவராக இருந்ததனால் அவரது பெயரே அந்தச் சாலைக்குப் பெயராக மாறியது.

நாங்கள் இருந்தது ராமகிருஷ்ணா மடத்துக்கு அடுத்த வீடுதான். அதன் எண் 10. அப்போதும் இப்போதும் டெளனிங் தெருவில் உள்ள பத்தாம் எண் பங்களாதான் லண்டனில் பிரிட்டிஷ் பிரதம மந்திரியின் வீடு. நாங்கள் எல்லோரும் பெருமையாக எங்கள் வீட்டு விலாசத்தை கேட்டால், சென்னையின் 10 டெளனிங் தெரு என்று விளையாட்டாகவும், பெருமையாகவும் கூறுவோம். கேட்பவர்கள் முதலில் எங்களை ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள், பின்னர் குழந்தைகள் என்பதால் சிரித்துக்கொண்டே சென்றுவிடுவார்கள்.

என் பாட்டியின் சொந்த வீடான 10. டெளனிங் தெரு மன்னிக்கவும், 10. பிராடீஸ் தெரு மாடியில் நாங்கள் குடியிருந்தோம். கீழே ஒரு பெரிய ஹால் இருந்தது. அதை வாடகைக்கு விட, பாட்டி அன்று விரும்பவில்லை. அந்த ஹாலை ஒட்டி இரண்டு சிறிய அறைகளும் இருந்தன. அந்தச் சமயத்தில்தான் பிற்காலத்தில் பெரிய நடன ஆசிரியராக மாறிய கே.என். தண்டாயுதபாணி பிள்ளை தனது நடனப் பயிற்சியை கலாஷேத்ராவில் முடித்த கையோடு, ஒரு நடனப் பள்ளியை இங்கு ஆரம்பிக்க விரும்பினார்.

ஏன் மயிலாப்பூரில் நடனப் பள்ளி ஆரம்பிக்க தண்டாயுதபாணி பிள்ளை விரும்பினார் என்பதற்கும் காரணங்கள் இல்லாமல் இல்லை. இந்த மயிலாப்பூரில்தான் அன்றும் இன்றும் பல்வேறு கலை சம்பந்தமான ஜாம்பவான்கள், புகழ்பெற்ற நடிகர், நடிகையர்கள், பாடகர்கள், நடனமணிகள், இசைக் கருவியை இசைப்பவர்கள், இவர்கள் மட்டும் அல்ல, பல்வேறு விளையாட்டுத் துறை விற்பன்னர்களும் வசித்து வந்தார்கள். இன்னும் சொல்லப்போனால், உலகப் புகழ்பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வர் கோயில் சுற்று வட்டாரத்தில் இப்படி பல புகழ்பெற்றவர்களும் இருந்ததனால், இவரும் இங்கு தனது நடனப் பள்ளியை ஆரம்பிக்க நினைத்தாரோ என்னவோ?

இவை மட்டுமல்லாமல், நமக்கு உலகப் பொதுமறை தந்த வள்ளுவர்கூட இதே மயிலாப்பூரில் வசித்ததாக வரலாறு கூறுகிறது. ஆக, பல புகழ்பெற்றவர்கள் வாழ்ந்த இதே மயிலாப்பூரில்தான் நானும் வளர்ந்தேன். வாழ்ந்தேன் என்று சொல்வதை நான் பெருமையாக நினைக்கிறேன்.

எங்கள் வீட்டில் இடம் இருக்கு என்று தெரிந்தவுடன் என் பாட்டியிடம் வந்து வாடகைக்கு அந்த ஹாலை கேட்டார் கே.என். தண்டாயுதபாணி பிள்ளை. என் பாட்டிக்கு வாடகைக்கு அந்த இடத்தை விட முதலில் இருந்தே விருப்பமில்லை என்றாலும், பாட்டோ, நடனமோ கற்றுக்கொள்ள என்றுமே அவர் தடையாக இருந்ததில்லை. அதைத் தொழிலாக வைத்துக்கொள்ள வேண்டாம் என்றுதான் அவர் விரும்பினார்.

நடனப் பள்ளி வைத்துகொள்ள வாடகைக்கு கொடுத்த பிறகு தண்டாயுதபாணி பிள்ளை குடும்பத்துடன் அங்கேயே தங்கி இருந்தார். அவரது சகோதரர்களும் அவருடனேயே தங்கி இருந்தார்கள். நடனம் கற்றுக்கொடுக்கும் நேரம் போக, அந்த இடத்தை அவர் தனது வீடாகவும் மாற்றிக்கொண்டார்.

அப்பொழுது என் பெரிய அக்கா லக்ஷ்மி, லேடி சிவசாமி பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார். எனது அப்பா, வழி சொந்தங்கள் நடனம் கற்றுக்கொள்ள விரும்பினாலும், மேடையில் ஆடக் கூடாது என்று எண்ணமுடையவர்கள். என்னுடைய தாத்தா வட ஆற்காடு மாவட்டம் புதுப்பாடி என்ற கிராமத்தில் இருந்தார்கள். பிரிட்டிஷ் காலத்தில் இன்றுள்ள எஸ்.பி. என்ற பொறுப்பில் இருந்தார்கள். அதனால் அந்த தகுதியில் உள்ளவர்களின் குடும்பத்தில் ஒரு பெண் மேடையில் நடமானடுவது சரியாக இருக்காது என்று எண்ணத்தில் இருந்தார்கள்.

தினமும் பள்ளிவிட்டு மாலை வரும்பொழுது என் அக்கா, மாணவிகள் நடனம் ஆடுவதை பார்த்துப் பார்த்து, நடனம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார். இந்தப் பள்ளியில்தான் அன்றைய நடிக, நடிகையர்கள் பலர் நடனம் கற்றுக்கொண்டார்கள். அதில் ஒருவர் புகழ் பெற்ற பாடகர் மற்றும் நடிகர். அவர் யார் என்று அடுத்த வாரம் கூறுகிறேன்.

(தொடரும்)

சந்திப்பு: சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com