Enable Javscript for better performance
ancient tamil literature | ஒரு மணிக் குரல்- Dinamani

சுடச்சுட

  
  Andal

   

  மிழில் அற்புதமான பெண் எழுத்தாளர்கள், கவிஞர்கள் முக நூலில் எழுதவதைப் பார்க்க முடிகிறது. சமூக விஷயங்கள், காமெடி, அரசியல், ஆன்மிகம் என்று எல்லா கருத்துக்களிலும் எழுதிக் குவித்தாலும், பெண்களின் உறவுகள் மற்றும் உடல் சார்ந்த  சிக்கல்களை, உறவுகளில் தம் தேவைகளை இவர்கள் எழுதுவது குறைவே.

  இதைப் பற்றி பேச்சு வந்த போது, ஒரு பெண் எழுத்தாளர்  - 'நாங்கள் அதைப் பற்றி எல்லாம்  எழுதினால், முக நூலில் எங்களுக்கு வரும் ஹிம்சைகள்... கொடுமை சார்' என்று வருத்தப்பட்டார்.

  தி. ஜானகிராமனின் மரப்பசு அம்மணி மாதிரியோ, மோகமுள்ளின் வயோதிக குமாஸ்தாவின் இளம் மனைவி மாதிரியோ ஒரு கதாபாத்திரத்தை ஒரு பெண் எழுத்தாளர் படைப்பது மட்டுமல்ல, அவளுக்குப் பரிந்து கொண்டு எழுதுவது கூட தற்போதைய முகநூல் சூழலில் சிரமம்தான்.

  மிழ்ச் சங்க காலத்தில் அதிகமாக எழுதிக் குவித்த பெண் கவிஞர் ஔவையார்தான். சங்க காலத்தில் ஒருவரும், நீதி நூல் காலத்தில் ஒருவரும், தனிப் பாடல்கள் எழுதியவர் என்று மூன்று ஔவையார்கள் இருந்தனர் என்பார்கள். சிலர் ஆறு பேர் என்கிறார்கள். சங்க கால ஔவை ஒரு பன்முக ஆளுமை கொண்ட அதிசயப் பெண். அவருக்கு இந்த முகநூல் கஷ்டங்கள் இருக்கவில்லை. ஒரு இளம் பெண்ணின் உடல் சார்ந்த  தவிப்பை ஒரு அற்புதமான குறுந்தொகைப்பாடலில் எழுதி இருக்கிறார்.

  முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்?

    ஓரேன்! யானும் ஓர் பெற்றிமேலிட்டு

    ஆஅஒல்லெனக்கூவுவேன் கொல்,

    அலமரல் அசை வளி அலைப்ப, என்

  உயவு நோய் அறியாது துஞ்சும்ஊர்க்கே

  – ஔவையார் குறுந்தொகை

  'சுவற்றில் முட்டிக் கொள்ளட்டுமா? இல்லை கம்பெடுத்துப் பிறரை அடிக்கட்டுமா. ஆ வூவென்று கத்தட்டுமா! தென்றல் காற்று வீசி என்னை வருத்துகிறது. என் நிலை அறியாது இந்த ஊர் தூங்குகிறதே?' மோகமுள்ளின் கிழட்டு குமாஸ்தா மனைவியின் குரலாக ஒலிக்கவில்லை?

  அதே காலத்தின் இன்னொரு குரல். இன்னும் வெளிப்படையாக, அதே சமயத்தில், நுணுக்கமாகஒலிக்கும் குரல். பூதம்புல்லனார் என்ற ஆண் எழுதியது.

     நெறி இருங்கதுப்பொடுபெருந்தோள்நீவிச்

  செறி வளை நெகிழச் செய் பொருட்குஅகன்றோர்,

    அறிவர் கொல், வாழி தோழி, பொறி வரி

         வெஞ்சினஅரவின்பைந்தலைதுமிய

      உரவுரும்உரறும் அரை இருள் நடுநாள்

           நல் ஏறு இயங்குதொறுஇயம்பும்

     பல் ஆன்தொழுவத்து ஒரு மணிக்குரலே.

  குறுந்தொகை (190)

  என் கூந்தலை வருடி, தோள்களை நீவி, வளையல் உடைய அணைத்து ஆறுதல் பேசி, பொருள் சேர்க்க வெளிநாடு சென்று விட்டார். அவருக்குப் புரியுமா என் நிலை?

  இடி இடிக்கிறது. மழை பெய்கிறது. தொழுவத்தில் பசு மாடுகள் கட்டப்பட்டு இருக்கின்றன. அவற்றின் நடுவே, ஒரு நல்ல இளமையான எருது. அது அசையும் போதெல்லாம் அதன் கழுத்தில் இருக்கும் மணியின் ஓசை. அந்த ஒரு மணிக் குரலின் ஒலி அவருக்கு கேட்குமா?

  பசுக்களுக்கு கூட கிடைக்கும் இன்பத்தை, இவ்வளவு நுணுக்கமாகச சொல்லி, அது தனக்கு கிடைக்காத ஏக்கத்தை, தன் பிரிவுத் துயரத்தை பதிவு செய்யும் பெண்.

  ஔவையாருக்குப் பின், ஆண்டாள் வந்த பிறகு தான், நமக்கு அவர் போல் ஒரு பெண் எழுத்தாளர் கிடைக்கிறார்.

  காமத் தீயில் கவ்வப்பட்டு, உடலெங்கும் தென்றல் வருத்தும் நிலையை எழதும் ஆண்டாளின் பாடலில், ஔவையின் குரல் எதிரொலிக்கிறது. அவரின் தவிப்புகள், பெருமாளைச் சார்ந்ததாய் இருந்ததால், தப்பித்தார்; சமீபத்தில் ஒரு மெத்தப் படித்தவர் அவளை தாசி குலம் என்று சொல்லும் வரை.

     மாமுத்த நிதி சொரியும்மாமுகில்காள்வேங்கடத்துச்

  சாமத்தின்நிறங்கொண்டதாடாளன்வார்த்தையென்னே

       காமத்தீயுள்  புகுந்து கதுவப்பட்டுஇடைக்கங்குல்

    ஏமத்தோர்தென்றலுக்கிங்கிலக்காய்நானிருப்பேனே

  கதுவப்பட்டு – ஒரே வாயில் முழுங்காமல் கொஞ்சம், கொஞ்சமாய் விழுங்கப்படும் கொடிய நிலை.

  கோடை வெய்யிலில் தீய்ந்து, பாளம் பாளமாய் வெடித்து, மழை வேண்டி ஏங்கும் நிலத்தின் குரலாய் ஒலிக்கிறது இந்த பாசுரம். – 'மாமுத்த நிதி சொரியும் மாமுகில்காள்'

  ஔவையாருக்குப் பின் ஆயிரம் ஆண்டுகள் கழித்து திருமங்கையாழ்வாரிடம் இதே மணி ஒலிக்கிறது. சற்று வேகமாகவே.

  தொழுவத்தில் வெள்ளைப் பசுக்கள். கழுத்தில் கருமணி அணிந்த கறுத்த திமிழ் உடைய எருது அவற்றுடன் கூடிக் களிக்கிறது. 'அதன் கழுத்து மணி ஓசை என்னை தூங்க விடமால் படுத்துகிறதே.! என்னை எப்படியாவது திருக்குறுங்குடிக்கு கூட்டிக்  கொண்டு போய் விடுங்களேன்' – புரண்டு புலம்புகிறாள் இந்தப் பெண்.

  கரு மணி பூண்டு வெண்நாகு அணைந்து 

        கார் இமில் ஏற்று அணர் தாழ்ந்து உலாவும்

  ஒரு மணி ஓசை என் உள்ளம் தள்ள 

        ஓர் இரவும்உறங்காதிருப்பேன்-

  பெரு மணி வானவர் உச்சி வைத்த 

        பேர் அருளாளன் பெருமை பேசி 

  குரு மணி நீர் கொழிக்கும்புறவின் 

        குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்

  ஒரே மணியின் அதே குரல், ஆயிரம் ஆண்டு இடைவெளியில் எழுதப்பட்ட இரண்டு கவிதைகளில் ஒலிக்கிறது. திருமங்கையாழ்வார், அவர் மனைவி குமுதவல்லியிடம் சங்க இலக்கியம் படித்து இருக்க வேண்டும்.

  மிழ் இலக்கியம், வாழ்வையும், இறை வணக்கத்தையும் ஒன்றுக்கொன்று இணைத்துப் பக்தி இயக்கம் பெருக உதவியது. காதல் ரசம் சொட்டும் இந்தப் பாசுரங்களுக்குள் விசிட்டாத்வைதம் ஒளிந்து கொண்டிருக்கிறது. அதற்குப் பல ஆச்சார்யார்கள் அருமையான விளக்கங்களை அருளிச் செய்து இருக்கிறார்கள்.

  இந்த பாடலுக்கு ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்கியானம் : 'கரு மணியினுடைய நிறமும் ஸ்ம்ருதிவிஷயமாய் பாதகம் ஆகா நின்றது; கறுத்தககுத்தை உடைத்தாய் இருக்கிற ஒரு மணியாய்த்து–மற்று உள்ள பாதகபதார்த்தங்களில் இதுக்கு ஒப்பது ஓன்று இல்லையாயிற்று; அந்த மணி யோசையாகிறது -அல்லாதவை போல் அன்றிக்கே செவி வழியே புகுந்து பாதகம் ஆகா நின்றது; இது ஒழிந்தது அடைய உறங்கிற்று; தொட்டார் மேலே தோஷமாம் படி இருக்கிற ஹிருதயத்தை தள்ள ராத்ரியாக நித்தரை இன்றிக்கே நோவு படா நின்றேன்; அயர்வறும்அமரர்கள் தங்களுக்கு முடி மேலே மணியாக வைத்த சிரோபூஷணமாகவைக்கப்பட்ட..” என்று போகிறது.

  தேவர்களில் தலை மேலே இருக்கின்ற பெருமணியான பெருமாளை அடைய வேண்டுமானால் எருதின் கருத்த மணி போல் ஓசை செய்து தவிக்க வைக்கும், பாதகப் பதார்த்தங்களில் மேல் உள்ள ஆசையை விலக்க வேண்டும் என்றுதான் எனக்குப் புரிந்தது.

  தமிழ் நாகரிகத்தின் இந்த சங்கிலிக் கண்ணிகளை, பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் புரியும் மென்மையான உணர்வுகளைப் பாடும் வரிகளை  மேலும்   தேடுவோம். ஒரே ராகத்தில் அமைந்த பாடல்களைத் தேடுவது போல் இதுவும் சுகமானதே.

  தொடரும்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai