7. ஊழ்வினையை வலியுறுத்தும் ஆஜீவகம்

நன்மை, தீமை ஆகிய நமது செயல்களின் அடிப்படையில் பாவ, புண்ணியங்கள் ஏற்பட்டு அதன் பலனை அனுபவிப்பதற்காக,


நன்மை, தீமை ஆகிய நமது செயல்களின் அடிப்படையில் பாவ, புண்ணியங்கள் ஏற்பட்டு அதன் பலனை அனுபவிப்பதற்காக, ஆன்மாவுக்கு மறுபிறவி ஏற்படுவதாகக் கூறுவது கர்மவினைக் கோட்பாடு. இதனை, ஹிந்து சமயத்தின் அனைத்து உட்பிரிவுகள் மட்டுமின்றி, சமணமும் தீவிரமாக வலியுறுத்துகிறது. ஆன்மாவுக்கு அத்தா என்ற பெயரில் புதுவித விளக்கம் அளித்தாலும்கூட, பிறவிச் சுழற்சிக்குக் காரணமாகும் கர்மவினைக் கோட்பாட்டை பௌத்தமும் ஏற்கிறது. ஆனால், இந்தக் கர்மவினைக் கோட்பாட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்டது, நியதி வாதம் எனப்படும் ஊழ்வினைக் கோட்பாடு. இந்தக் கோட்பாட்டை மையமாக வைத்து எழுந்ததே ஆஜீவகம்.

ஆஜீவகம் என்பது ஆஜிவிகம், அஜீவகம் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ் இலக்கிய நூல்கள் இதனை ஆசிவகம் எனக் குறிப்பிடுகின்றன. ஆஜீவகம் என்றால் ஒருவித வாழ்க்கை நெறிமுறையைப் பின்பற்றுதல் என்று பெயர். பொதுவாக, சுதந்தரச் சிந்தனையாளர்களாக ஆஜீவகர்கள் இருந்தபோதிலும், அவர்களது வாழ்முறையில் தாமே வரித்துக்கொண்ட ஒருவிதக் கட்டுப்பாடு இருந்தது. எளிமை, சொத்து சேர்க்காமை, புலால் உண்ணாமை, பிற உயிர்களுக்குத் தீங்கு இழைக்காமை ஆகிய உயர் வாழ்நெறிகளையும் தவத்தையும் கைக்கொண்டு வாழ்ந்தனர்.

ஆண்டவன் எனப்படும் படைப்புக் கடவுளை மறுக்கின்றபோதிலும், ஆன்மாவையும், தேவர்கள் போன்ற மனிதருக்கு மேம்பட்ட உயிரினங்களையும் ஏற்பவர்கள்; பாவ-புண்ணியங்களில் நம்பிக்கை இல்லாதபோதிலும் அஹிம்சை நெறியைக் கடைப்பிடிப்பவர்கள் ஆஜீவகர்கள். தனக்கென எந்த உடைமையையும் வைத்துக்கொள்ளாததால், பிச்சை எடுப்பதற்குத் திருவோடுகூட இன்றி, வெறும் கைகளிலேயே உணவு வாங்கிப் புசித்தனர் அஜீவகத் துறவிகள். மேலும், இதே காரணத்துக்காக உடை ஏதுமின்றி பிறந்தமேனியாக (திகம்பரராக) திரிந்தவர்கள்.

இன்றைக்கு ஏறத்தாழ வழக்கொழிந்துபோன இந்த மதம் அல்லது தத்துவம், ஒருகாலத்தில் இந்தியாவில் பெரும் செல்வாக்கு படைத்ததாகத் திகழந்துடன், கி.பி. 14-ம் நூற்றாண்டுவரை கணிசமான ஆதரவாளர்களைக் கொண்டிருந்தது. இந்த நியதி வாதத்தை உருவாக்கியவர் மக்கலி கோசாலர் எனப்படும் கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவ ஞானி. இவர், பௌத்தத்தை உருவாக்கிய கௌதம புத்தர், சமணத்தின் தலைசிறந்த தீர்த்தங்கரராகிய வர்த்தமான மகாவீரர் (இந்திய வரலாற்றை எழுதிவைத்த ஆங்கிலேயர்கள், இவர்தான் சமண சமயத்தைத் தோற்றுவித்ததாகக் கூறுகின்றபோதிலும், சமண மத புராண, வரலாற்றின் அடிப்படையில், மகாவீரர் 24-வது தீர்த்தங்கரர்) ஆகியோரின் சமகாலத்தவர். இருவரையும்விட வயதில் மூத்தவர்.

மக்கலி கோசாலர் என்பதை பிராகிருதத்தில் (பாலி) மக்கலிபுத்திர கோசாலர் என்றும் சம்ஸ்கிருதத்தில் மஸ்கரிபுத்திர கோசாலர் என்றும் குறிப்பிடுகிறார்கள். மக்கலி கோசாலர், மகத நாட்டில் (இன்றைய பிகார் மாநிலத்தில்) பிறந்தவராகக் கருதப்படுகிறது. மக்கலி என்பது மங்கலி என்பதன் திரிபு. மங்கலி, மஸ்கரி என்ற வார்த்தைகள், ஆண்டிப் பண்டாரத்தைப்போல ஒருவித துறவு வாழ்க்கை வாழும் இல்லறத்தாரைக் குறிக்கும். இவர்கள் தனக்கென எதுவும் வைத்துக்கொள்ளாமல் இரந்துண்டு (பிச்சையெடுத்து) வாழ்வார்கள். இப்படிப்பட்டவர்கள், தனக்கு வழித்துணையாக ஒரு மூங்கில் கம்பை (மஸ்கரம்) கையில் வைத்திருப்பார்கள். அதனால் இவர்களுக்கு மஸ்கரி என்றே பெயர் ஏற்பட்டது. அக்காலத்தில் பாசுபதர்கள், சமணர்கள் உள்ளிட்ட தத்துவங்களைப் பின்பற்றிய துறவிகள், இதுபோல் மஸ்கரியாக இருந்தார்கள். அதில் ஒரு மஸ்கரியின் மகன் என்பதால் மஸ்கரிபுத்திர (மக்கலிபுத்திர) என்று பெயர் வந்தது.

மாட்டுக் கொட்டகையில் பிறந்தவர் என்பதைக் குறிக்கும் கோசாலர் என்பது இவரது பெயரின் பின்பாதியாக அமைந்துள்ளது. புத்தரையும், மகாவீரரையும்போல அரசர் அல்லது ஆட்சியாளர் பரம்பரையில் அன்றி, எளிமையான குடும்பத்தில் பிறந்தவர் மக்கலி கோசாலர் என்பதை அவரது இப்பெயரே குறிக்கிறது. இனி, கோசாலரின் நியதி வாதத்துக்கு வருவோம்.

கர்ம வினைக் கோட்பாட்டின்படி, ஒவ்வொரு ஜீவனின் இன்ப – துன்பத்துக்கு அவை அவையின் நன்மை, தீமை ஆகிய செயல்களே காரணமாகின்றன. இந்தக் கர்ம வினை, ஜீவனின் செயல்களுக்கு ஏற்ப மாறுபடக்கூடியது. ஆனால் நியதி வாதம் கூறும் ஊழ்வினை, அப்படிப்பட்டதல்ல. நியதி என்றால் மாறாத ஒரு வழிமுறை, நிலையான ஒரு விதிமுறை என்று பொருள். அதனை வலியுறுத்துவதால் இது நியதி வாதம்.

பொதுவாக, எல்லாம் நம் தலைவிதி, தலையெழுத்து என்று நொந்துகொள்கிறோமே, அந்தச் சலிப்பில் குறிப்பிடப்படும் விதிதான் ஆஜீவகம் கூறுகின்ற நியதி. ஓர் ஆன்மா இப்படித்தான் பிறக்க வேண்டும், இன்னின்ன நல்லது - கெட்டதுகளை அனுபவிக்க வேண்டும் என்பது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. ஓர் ஆன்மா, 84 லட்சம் பிறவிகள் எடுத்து, பிறவிச் சுழலில் உழன்ற பிறகுதான் அதற்கு மோட்சம் (விடுதலை) கிடைக்குமேயன்றி, இடையில் அதற்கு விமோசனமே இல்லை. ஆகையால், பாவ - புண்ணியங்கள் எல்லாம் அந்த ஆன்மாவுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்கிறது நியதி வாதம்.

இந்த நியதி வாதத்தை, தமிழில் ஊழ்வினைக் கோட்பாடு என்று கூறலாம். ஆனால், சமண இலக்கியமாகிய சிலப்பதிகாரத்தில் ‘ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்’ என்று இளங்கோவடிகள் கூறியிருப்பது, கர்ம வினையைத்தான். நியதி வாதம் கூறும் ஊழ்வினையை அல்ல. எனினும், திருக்குறளில் குறிப்பிடப்படும் ‘ஊழில் பெருவலி யாவுள’ – ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட விதியாகிய ஊழைவிட வலிமையானது உலகில் என்ன இருக்கிறது - என்ற கருத்தை, நியதி வாதம் சார்ந்த ஊழ்வினைக் கோட்பாட்டுக் கருத்தாக எடுத்துக்கொள்ளலாம்.

அதேபோல், ‘அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்’ என்று திருக்குறள் கூறுவதையும் ஆஜீவகக் கருத்தாகக் கருதலாம். இந்தக் குறளின் பொருள் – “தீய மனம் படைத்தவனுக்கு ஆக்கங்கள் (நன்மைகள்) சேர்வதையும், நல்ல மனம் படைத்தவனுக்கு கேடுகள் (தீமைகள்) சூழ்வதையும் எதனால் இப்படி ஆகிறது? என்று நினைத்துத்தான் பார்க்க முடியுமே தவிர, விடை காண இயலாது” என்பதே. அவ்வாறு நினைத்துப் பார்க்கையில், ‘அது விதியே’ என்று நொந்துகொள்கிறோம் அல்லவா! அதுதான் ஆஜீவகம் காட்டும் ஊழ்வினை. ‘விதியை மதியால் வெல்லலாம்’, ‘நமது கர்மவினைகளுக்கு நாமே காரணம் என்பதால், புதிய நல்வினைகள் மூலம் அதனை மாற்றிக்கொள்ளலாம்’ என்பதை எல்லாம் நியதி வாதம் ஒப்புக்கொள்வதில்லை. ‘விதிப்படிதான் எல்லாம், முடிவும்(முக்தியும்)கூட விதிப்படிதான்’ என்பதில் திடமான நம்பிக்கை கொண்டதால், மனித முயற்சிகளை அது ஏற்பதில்லை.

மக்கலி கோசாலரின் இந்த நியதி வாதம் மட்டுமின்றி, அவரது நண்பர்களாகிய பூரண காஸ்யபரின் அக்கிரியா வாதம் (வினை மறுப்புக் கோட்பாடு), பக்குட காச்சாயனரின் சசஸ்த வாதம் (நிலைப்பேறு கோட்பாடு) ஆகிய மேலும் இரண்டு கோட்பாடுகளும் இணைந்தே ஆஜீவக மதம் உருவானதாகக் கருதப்படுகிறது. “நாம் எந்தக் கிரியைகளையும் (வினைகளையும்) செய்வதில்லை, ஆகையால் பாவ - புண்ணிய பலன்கள் என்று எதுவும் இல்லை” என்பதே அக்கிரியா வாதம். இந்தத் தத்துவப்படி, ‘ஒருவர் எதைச் செய்தாலும் அதற்குரிய நல்ல பலன், தீய பலன் என்று எதுவும் இல்லை. எனவே, ஒருவருக்கு ஏற்படும் நன்மைக்கும், தீமைக்கும் எந்தக் காரணமும் இல்லை. தீமை என்று உலகத்தார் சொல்வதைச் செய்வதால் பாவமோ, நன்மை என்று உலகத்தார் சொல்வதைச் செய்வதால் புண்ணியமோ ஏற்படுவதில்லை’ என்பதே அக்கிரியா வாதம்.

அக்கிரியா வாதத்தைப்போல் பாவ - புண்ணிய மறுப்பையும், நியதி வாதம்போல் மாறாத்தன்மையுடைய அடிப்படையையும் ஒருசேர வலியுறுத்துகிறது பக்குட காச்சாயனரின் சசஸ்த வாதம். “இந்த உலகின் இயக்கத்துக்கு நிலம், நீர், தீ, காற்று, உயிர், இன்பம், துன்பம் ஆகிய ஏழு கருப்பொருள்களே காரணம். இவை ஏழும் தாமாகவே இருப்பவை, உண்டாக்கப்பட முடியாதவை, அழிவற்றவை, மாற்றப்பட முடியாதவை, நிலையானவை. எனவே, ஒருவர் மற்றவரது இன்பத்துக்கோ, துன்பத்துக்கோ காரணமாக முடியாது. இதேபோல், கொலைகாரர் என்று கொலைக்குக் காரணமானவர் என்றோ யாரும் கிடையாது. உயிர் நிலையானது என்பதால், ஒருவர் மற்றொருவரின் தலையை வாளால் வெட்டினால், அவர் அடுத்தவரின் உயிரைப் பறித்ததாக அர்த்தம் இல்லை. ஏழு கருப்பொருள்களுக்கும் இடையே அந்த வாள் சென்றது என்றே பொருள்” என்கிறது சசஸ்த வாதம்.

மாறா விதி (நியதி வாதம்), வினை மறுப்பு (அக்கிரியா வாதம்), நிலைப் பேறு (சசஸ்த வாதம்) ஆகிய மூன்றும் இணைந்ததே ஆஜீவகம். இந்தக் கோட்பாட்டின்படி, எல்லாம் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு அதன்படியே நடைபெறுவதால், காலம் என்பதும் இல்லை.

அஜீவகத்தைத் தோற்றுவித்தவராக மக்கலி கோசாலர் கருதப்படுகின்றபோதிலும், அவருக்கு முன்பே கிஸ்ஸ சங்கீச்சர், நந்த வச்சர் ஆகிய ஆஜீவகத் தத்துவ ஞானிகள் இருந்ததாகச் சில பௌத்த மத நூல்கள் தெரிவிக்கின்றன.

பௌத்த (பாலி மொழி) இலக்கியமான சமண்ணபலசூத்தம், சமண (சம்ஸ்கிருத மொழி) இலக்கியமான பகவதிசூத்ரம் ஆகிய நூல்களில், ஆஜீவகர்களின் கோட்பாட்டு நூல்களாக மகாநிமித்தம் எனப்படும் எட்டு நூல்களும், பூர்வம் என்ற மற்றொரு நூலும் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. மேலும், தமிழ் இலக்கியங்களான சிலப்பதிகாரம், நீலகேசியிலும் அவற்றைவிட விரிவாக மணிமேகலையிலும் ஆஜீவகம் பற்றிக் கூறப்படுகிறது. ஆஜீவகம் தொடர்பான இதுபோன்ற வரலாற்று, இலக்கியச் சான்றுகளை அடுத்த வாரம் காண்போம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com