8. ஆஜீவகம் குறித்த வரலாற்று, இலக்கியச் சான்றுகள்

சாம்ராட் அசோகரது தந்தை பிந்துசாரர், ஆஜீவக மதத்தைச் சேர்ந்தவர் என சில வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.


சாம்ராட் அசோகரது தந்தை பிந்துசாரர், ஆஜீவக மதத்தைச் சேர்ந்தவர் என சில வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அசோகர் காலத்திலும் ஆஜீவகம் செல்வாக்குப் பெற்று திகழ்ந்திருக்கிறது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகரின் ஏழாவது ஸ்தூபி கல்வெட்டு மூலம், பௌத்தம், வைதீகம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக செல்வாக்கு மிகுந்த மூன்றாவது மதமாக ஆஜீவகம் திகழ்ந்ததாக அறிய முடிகிறது. இதற்கு அடுத்த இடத்தில்தான் அப்போது சமணம் இருந்திருக்கிறது. மேலும், ஆஜீவகத் துறவிகள் தங்குவதற்காகவும், தவம் செய்வதற்காகவும் பராபர் என்ற இடத்தில் உள்ள குன்றுகளையும் நாகார்ஜுனி குன்றுகளையும் (தற்போது பிகார் மாநிலம் ஜெகன்னாபாத் மாவட்டத்தில் புத்த கயா அருகே உள்ளவை) அசோக மன்னன் ஒதுக்கியதாக மற்றொரு கல்வெட்டு கூறுகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சிராவஸ்தி நகரம் (அயோத்தி அருகே உள்ளது) ஆஜீவகர்களின் செல்வாக்கு மிகுந்திருந்த நகரமாகக் கருதப்படுகிறது.

லாபம், நஷ்டம், இன்பம், துன்பம், வாழ்வு, சாவு ஆகிய ஆறும் இந்த உலகின் தவிர்க்க முடியாத அடிப்படைக் காரணிகள் என்பது மற்கலி கோசாலரின் கருத்து. ஆஜீவகம் ஏற்றுக்கொண்ட பக்குட காச்சாயனரின் சசஸ்தவாதம், இந்த உலகமானது மாற்றமில்லாத நிலைத்தன்மை (அவிசலித நித்யத்வம்) கொண்டது என்கிறது. ஆகையால், காலம் என்ற ஒன்று இல்லை என்று ஆஜீவகம் கூறுகின்றபோதிலும், காலத்தை வைத்து கணிக்கப்படும் ஆரூடத்தில் ஆஜீவக அறிஞர்கள் சிறந்து விளங்கினார்கள். அக்கால அரசர் அவையில் இருந்த சோதிடர்கள் நிமித்திகர்கள் என்றே அழைக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆஜீவகர்கள் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். (ஆஜீவக நூல்களின் தொகுப்புக்கு மகா நிமித்திகம் என்ற பெயர் இருந்தது இங்கே ஒப்புநோக்கத்தக்கது).

தமிழ்நாட்டிலும் கணியர்கள் என்ற பெயர் கொண்ட நிமித்திகர்கள், ஆசீவர்களாகக் கருதப்படுகின்றனர். இவர்களில் குறிப்பிடத்தகுந்தவர், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற உலக சமரசக் கவிதையைப் பாடிய கணியன் பூங்குன்றனார். இப்பாடலில், தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று இவர் பாடியிருப்பது ஆஜீவகத் தத்துவம் என்று கருதப்படுகிறது. ஆஜீவகக் கருத்துப்படி, “தீமையும் நன்மையும் உலகம் தோன்றியது முதலே நிலையாக இருப்பவை. அவை ஊழ்வினைப்படி நம்மை வந்து சேர்கின்றன. ஆகையால், மற்றவர்களின் செயல்கள் மூலம் நமக்கு நன்மை, தீமை வருவதாகக் கருத வேண்டாம்” என்று ஆஜீவகக் கோட்பாட்டின்படி இதற்கு விளக்கம் தரலாம்.

கணியன் பூங்குன்றனார் மட்டுமின்றி, பக்குடுக்கை நன்கணியனார், பிசிராந்தையார் ஆகிய சங்க காலப் புலவர்களும், கோப்பெருஞ்சோழன், கண்ணகியின் தந்தை மாநாய்கன் ஆகியோரும் ஆஜீவகர்களே. சமண காப்பியமான சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டம் நீர்படு காதையில் கோவலனும் கண்ணகியும் மறைந்தார்கள் என்று கேள்விப்பட்டதும், அவர்கள் இருவரது தந்தைமார்களும் துறவறம் பூண்ட செய்தி தெரிவிக்கப்படுகிறது. இதில் கண்ணகியின் தந்தை மாநாய்கன், ஆசீவக மதத் துறவியாவதை சிலப்பதிகாரம் இவ்வாறு வர்ணிக்கிறது - 

கண்ணகி தந்தை கடவுளர் கோலத்து
அண்ணலம் பெருந்தவத்து ஆசீ வகர்முன்
புண்ணிய தானம் புரிந்தறங் கொள்ளவும்.(97-100)

கடவுளர்போல மதிக்கத்தக்க கோலமுடைய பெருந்தவசீலர்களான ஆசீவக முனிவர்கள் முன்னிலையில், தனது செல்வப் பெருந்திரள் அனைத்தையும் புண்ணிய வழிகளிலே தானம் செய்து, கண்ணகியின் தந்தை துறவறம் பூண்டார் என்பது இதன் கருத்து. எனவே, பாவ - புண்ணியங்களில் நம்பிக்கையற்றவர்கள் என்றபோதிலும் தவம், தானம் ஆகிய நற்பண்புகளில் உறுதியாக இருந்தவர்கள் ஆஜீவகர்கள் என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

இதேபோல் சமணக் காப்பியமான நீலகேசியின் மூலம், ஆஜீவகம் அக்காலத்தில் தமிழகத்திலும் முக்கிய மதமாகத் திகழ்ந்ததை அறிய முடிகிறது. இக்காப்பியத்தின் நாயகி நீலகேசி, பல்வேறு மதத்தாருடன் விவாதம் புரிகையில், பூரணன் (பூரண காஸ்யபன் என்ற தத்துவ ஞானியைக் குறிக்கும் கதாபாத்திரம்) என்ற ஆஜீவகத் துறவியைச் சந்திக்கிறாள்.

பூரணன் உரை மூலம், மக்கலி (மக்கலி கோசாலர்) ஆஜீவகர்களால் வணங்கப்படும் தெய்வ நிலையை அடைந்துவிட்டதையும், ஒன்பது கதிர் எனப்படும் சமய நூல் அவர்களுக்கு இருந்ததையும் அறிய முடிகிறது. நிலம், நீர், தீ, காற்று, உயிர் ஆகிய ஐந்து அணுக்களின் சேர்க்கைதான் உலகின் தோற்றத்துக்குக் காரணம். காலம் என்ற எதுவும் கிடையாது ஆகியவை, பூரணன் கூற்றின் மூலம் ஆஜீவகக் கருத்துகளாக எடுத்துரைக்கப்படுகின்றன. இதில் ஒன்பது கதிர் என்பது மகா நிமித்திகம் எனப்படும் எட்டு நிமித்திக நூல்கள் மற்றும் பூர்வம் எனப்படும் ஒரு நூல் ஆகியவற்றைச் சேர்த்து இப்பெயரில் குறிப்பிடப்படுவதாகக் கருதலாம்.

தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் (பௌத்த காப்பியம்), பௌத்தத் துறவியான கதையின் நாயகி மணிமேகலை, பல்வேறு சமயத்தாரிடம் அவர்தம் கொள்கைகளைக் கேட்கிறாள். அப்போது, மற்கலிநூல் (மக்கலி கோசாலர் இயற்றிய நூல்) எனப்படும் ஆசீவக நூலை அறிந்த புராணன் (இதையும் பூரண காஸ்யபனைக் குறிக்கும் கதாபாத்திரமாகக் கொள்ளலாம்) என்ற ஞானியிடம் அவரது கொள்கைகளை மணிமேகலை வினவுகிறாள்.

நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கு அணுக்களுடன் உயிரும் சேர்ந்து உயிரினங்கள் தோன்றுகின்றன. முதல் நான்கு அணுக்கள் மலை, மரம், பல்வேறு உயிரினங்களின் உடல்கள் எனத் திரட்சி கொள்கின்றன. அந்த அணுக்கள் கூடிப் பிரிகின்றன. அதுவே வாழ்க்கை. இதனை அறிவது உயிர். நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கு அணுக்களும் ஆதியில் இருந்தே இருப்பவை. புதிதாகத் தோன்றுபவை அல்ல. இவை ஒவ்வொன்றும் தம் திறத்தில் இருந்து மற்றொன்றாக மாறாது. அழியாது. இவற்றின் திரட்சியால் பூதங்கள் தோன்றி அவை இணைந்து உயிரினங்கள் தோன்றுகின்றன. இந்த அணுவை தெய்வக்காட்சி (ஞானக்கண்) கொண்டவர்கள் மட்டுமே தனித்துக் காண முடியும். மற்றவர்கள், பூதக் கூட்டத்தின் உள்ளும் இதன் உண்மையை அறியமாட்டார்கள். நான்கு அணுக்கள், உயிர் ஆகியவற்றோடு இன்பம், துன்பம் ஆகிய இரண்டும் அணுக்களாக மதிக்கத்தகுந்தவை. பிறப்பும், இறப்பும் இன்ப துன்பங்களை அனுபவித்தலும் ஓர் உயிர் உண்டாகும்போதே அதன் கருவிலேயே அமைந்துவிடுகின்றன. முன்னுள்ள ஊழின் காரணமாக இவை அமைகின்றன. (இந்த நிலம், நீர், தீ, காற்று, உயிர், இன்பம், துன்பம் ஆகிய 7 அடிப்படை விஷயங்கள் சம்ஸ்கிருதத்தில் சப்த காயங்கள் அல்லது சப்த தாதுக்கள் என்று அழைக்கப்படுன்றன. இந்த சப்த தாதுக்கள்தாம் உலகின் தோற்றத்துக்கும் இயக்கத்துக்கும் காரணம் என்கிறது ஆஜீவகம்).

கருப்பு, கருநீலம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை ஆகிய ஆறு வகைப் பிறப்புகளை மனித உயிர்கள் எடுக்கின்றன. (கருப்பு என்பது ஆஜீவக ஞானம் குறைவாக இருப்பது, பிறகு படிப்படியாக இந்த ஞானம் வளர்ந்து தூய்மையான வெள்ளைப் பிறப்பை எடுக்கிறது என்பது ஆஜீவக நம்பிக்கை). பின்னர் கழிவெண்மை எனப்படும் மிகுந்த வெள்ளைப் பிறப்பிலே (மக்கலி கோசாலரைப்போல) மீண்டும் பிறவாத உயர்ந்த தன்மையை உயிர்கள் அடைகின்றன என்று ஆசீவகனான புராணன் கூறுவதாக மணிமேகலை உரைக்கிறது.

தொடக்கத்தில் சமணர்களும் ஆஜீவகர்களும் இணைந்தே இருந்துள்ளனர், அதன்பின்னர் அவர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக சில வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். பகவதி சூத்ரம் உள்ளிட்ட சமண (ஜைன) இலக்கியங்கள், மகாவீரரின் தோழரும் சீடருமாக இருந்தவர் மக்கலி கோசாலர் என்றும், அதன்பின் சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்து சென்றார் என்றும் கூறுகின்றன. அதேநேரத்தில் எளிமை, துறவு ஆகியவற்றின் உச்சகட்டமாகிய திகம்பரக் கோலம் (ஆடைகள் அணியாத நிர்வாணக் கோலம்), அஹிம்சையின் உயர்நிலையில் பேன் போன்ற நுண்ணுயிர்களுக்குக்கூட துன்பம் தரக்கூடாது என்ற எண்ணத்தில் தன் தலைமயிரை தானே பிடுங்கி எறிதல் ஆகியவை மக்கலியிடமிருந்து மகாவீரர் பெற்றவை என்றும் கூறப்படுகிறது. ஆகையால் ஜைனர்கள், ஆஜீவகர்கள் ஆகிய இருவரும் அமணர் என்ற பொதுப் பெயரால் அழைக்கப்பட்டனர். (சிலர் பௌத்தர்களையும் அமணர் பிரிவில் அடக்குவர்).

சித்தாந்த சைவ நூலாகிய சிவஞான சித்தியார் மூலம் ஆசீவகர்களின் உயர் துறவுக் கோலத்தை அறியலாம் -

என்உயிர் அதற்குப் போல எவர்க்கும்ஒத்திருப்பன் என்று
தன்னுயிர் வருந்தத் தானும் தலையினைப் பறித்துப் பார்மேல்
மன்னுயிர் எவற்றி னுக்கும் வருந்தவே அறங்கள் சொல்லும்
அன்னதோர் வாய்மை ஆசீ வகன் அமணர்களில் கூறும்.

என்னுயிருக்கு நான் எப்படி அன்பு செலுத்துகிறேனோ அதுபோல் எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துவேன் என்று வாழும் ஆசீவகன், இதன் காரணமாகவே தனது தலைமயிரை தன் உயிர் வருத்தப்பட, தானே பறித்துக்கொள்ளும் தன்மையுடையவன். உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் வருத்தம் உறுவதுவே இயல்பு என்று அறநெறிகள் கூறுகின்ற அத்தகு ஆசீவகன் என்னும் அமணர்களில் ஒரு பிரிவினரின் கொள்கைகளைக் கூறுகிறேன் என்பது இதன் பொருள்.

இனி சிவஞான சித்தியார் கூறும் ஆசீவகக் கருத்துகளை காண்போம்-

நிலம், நீர், தீ, காற்று ஆகியவற்றோடு உயிரும் ஐந்து அணுக்களாகும். இதில் உயிரானது, மற்ற நான்கு அணுக்களின் சேர்க்கையால் தோன்றும் உடலில் இணைந்து அதன் தன்மையைப் பெற்று நிற்கும். உயிரை (ஆன்மாவை) தவிர மற்ற நான்கு அணுக்களும் ஒன்றை ஒன்று அறியும் தன்மை பெறாதவை. இந்த அணுக்கள் ஒன்றில் ஒன்று புகாதவை. ஆதியில் இருந்தே இருப்பவை. ஒருக்காலும் அழிவு இல்லாதவை. உயிர் உள்ளிட்ட இந்த அணுக்களை ஒருவர் தோற்றுவிக்கவோ, வளர்க்கவோ, அழிக்கவோ, ஒன்றினுள் புகுத்தவோ, விடுவிக்கவோ முடியாது. இவை எக்காலத்தும் எங்கும் பரந்து இருக்கும் தன்மை கொண்டவை. உயிர்கள் அடைகின்ற பேறு (லாபம்), இழப்பு, இடையூறு, இன்பம், உடலோடு பிரியாது இருத்தல், வேறு நாட்டில் போய் (கூட்டில் போய்) சேருதல், மூப்பு அடைதல், இறத்தல் ஆகிய எட்டும் ஒரு கரு உருவாகும்போதே அதற்கு முன்பே உள்ள ஊழின் (இதற்கு கர்ம வினை என்று பிற்கால விளக்கங்கள் பொருள் கூறுகின்றபோதிலும், மாறாத நியதி என்ற விதியே ஊழ் என்பதே ஆஜீவகக் கோட்பாடு என்பதை முன்பே கண்டுள்ளோம்) காரணமாக தானாகவே அமைந்துவிடுகிறது. அதன்படியே இந்த உலகம் இயங்குகிறது என்பதே ஆசீவகக் கோட்பாடுகள் என சிவஞான சித்தியார் கூறுகிறது.

உலகமும் ஆன்மாவும் நிலைப்பேறு உடையவை என்பதால் இதைப் படைத்து, காத்து, அழிக்கும் கடவுள் இல்லை என்கிறது ஆஜீவகம். அதேநேரத்தில் ஊழ்வினையையும், ஆன்மாவின் இருப்பையும் வலியுறுத்துகிறது. தன் முயற்சியால் முக்தி அடைய முடியாது என்று கூறுகின்றபோதிலும், அஹிம்சை, கருணை, தவம் ஆகியவற்றை கடைப்பிடித்து போற்றத்தக்க முனிவர்களாக, தவசீலர்களாக ஆஜீவகர்கள் வாழ்ந்ததை மேற்கூறிய வரலாற்று, இலக்கியச் சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. இருப்பினும் பிற்காலத்தில் பிற மதங்களின் போட்டி, பொறாமையால் ஆஜீவகர்கள் கடும் கண்டனத்துக்கும் ஆளாகியிருக்கிறார்கள்.

ஆஜீவகம் என்றால் வாழும் வழிமுறை என்று பொருள் என ஏற்கெனவே கண்டோம். ஆனால், இதனை அ ஜீவகம் எனப் பிரித்துப் பொருள் உரைத்து வாழ் நெறியற்றவர்கள், வாழத் தெரியாமல் வாழ்பவர்கள் என்று ஏளனமும் செய்யப்பட்டுள்ளனர். 14-ம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஆஜீவகம் மெல்ல மறைந்துவிட்டபோதிலும், அதன் தாக்கங்கள் இன்றுள்ள பிற மதங்களில் இன்னமும் உள்ளன.

ஆசீவகத்தின் கடவுள் மறுப்பு இன்றைய நாத்திகத்திலும், லோகாயதத்திலும்; ஆன்ம ஏற்பு, அஹிம்சை, தவம், சித்திகள் ஆகியன பாசுபதம் உள்ளிட்ட சைவ மதப் பிரிவுகளிலும்; திகம்பரக் கோலம், நிமித்திகமாகிய ஜோதிடம், பாவ-புண்ணிய கர்மாக்களை மறுத்தல் உள்ளிட்டவை தாந்திரீகத்திலும்; அஹிம்சை, திகம்பரக் கோலம், ஆண்டவன் மறுப்பு ஆகியவை சமணத்திலும்; துன்பம் உயிர்களின் இயற்கை என்ற கோட்பாடு, அஹிம்சை ஆகியவை பௌத்தத்திலும்; உலகம் மாறாத தன்மை கொண்டது, ஆனால் மாறுவதுபோல் தோற்றம் கொள்கிறது என்ற மாயாவாதம், ஆன்ம இருப்பு ஆகியவை அத்வைதத்திலும்; ஆசார்யர்களை கடவுளாக மதித்தல், ஊழ் வினையில் இருந்து தப்பமுடியாது என்பதால் எழுந்த சரணாகதி தத்துவம், துன்பத்தை மறக்கச் செய்யும் பக்தி ஆகியவை வைணவத்திலும் கலந்துள்ளன.

அதேநேரத்தில், வேதத்தை மறுக்கும் ஆசீவகத்தின் அணுக் கோட்பாடு, வைதீகத்தின் ஷட்தர்சனங்களில் (ஆறு கண்ணோட்டங்களில்) ஒன்றான வைசேஷிகத்தில் போற்றப்படும் முக்கியக் கோட்பாடாகவே வளர்த்தெடுக்கப்பட்டது. இதுகுறித்து அடுத்த வாரம் காண்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com