Enable Javscript for better performance
43. பார்வைகள் பலவிதம்- Dinamani

சுடச்சுட

  

   

  கௌதம புத்தரின் போதனை ஒருவகையில் அஸத்காரியவாதம் என்ற வகையைச் சார்ந்தது. அதாவது, ஏற்கெனவே இல்லாத ஒன்றே (அஸத்), உலகம், உயிர் உள்ளிட்ட விளைவுகளுக்கான காரணம் என்பதே அஸத்காரியவாதம். அனைத்தின் ஆதாரமாக இருப்பது வெறுமை என்று அவர் கூறியது இதன்பாற்பட்டதே. அதேநேரத்தில், நாம் காணுகின்ற உலகமும் உயிர்களும் நிரந்தரமான உண்மை அல்ல; மாறுபடுகின்ற உண்மை என்றும் அவர் மொழிந்தார். இதற்கு க்ஷணிகவாதம் என்று பெயர். ஸத் அல்லது ஸதம் என்றால் நிரந்தரமான உண்மை என்று பொருள். உடலும் ஸதமல்ல, உயிரும் ஸதமல்ல; அதாவது, நிரந்தரமற்றவை என்பதால் எல்லாமே அஸத் (உண்மையற்றவை) ஆகும் என்பதை க்ஷணிகவாதத்தின் விளக்கமாக எடுத்துக்கொள்ளலாம்.

  இவ்வாறாக, எதுவுமே நிரந்தரமான உண்மையல்ல என்ற எண்ணம், தத்துவம் பெரிய அறிவாளிகள் தொடங்கி, அடித்தட்டு பாமரர்கள் வரை பரவியது. அப்போதுதான் ஆதிசங்கரர் வந்தார். அவர், இந்தச் சிந்தனைப்போக்கில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தார். உலகில் உள்ள அனைத்துமே நிரந்தரமற்றவை, ஸத் இல்லாதவை என்றபோதிலும் இவற்றுக்கு அடிப்படையான ஒன்று நிரந்தமானதுதான், ஸத்தியமானதுதான் என்று அவர் வாதிட்டு, ஸ்தாபித்தார். எப்போதும் இருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பேரறிவுதான் இந்த உலக இயக்கத்தின் சாராம்சம் என்று அவர் கருதினார். வேத, உபநிஷதங்களில் பிரும்மம் என்று கூறப்படுவது அதுவே என்று அவர் பல்வேறு தத்துவ விளக்கங்களால் எடுத்துரைத்தார். அந்தப் பிரும்மம் மாத்திரமே நிரந்தரமான உண்மை (ஸத்) என்பது சங்கரரின் வாதம். ஆகையால், இது ஸத்காரியவாத வகையைச் சார்ந்தது.

  உண்மை என்பது என்ன... எப்போதும் எது மாறாமல் உள்ளதோ அதுவே உண்மை. ஆக, மாறக்கூடிய இயல்புடைய இந்த உலகமோ, உயிரினங்களோ எப்போதும் உள்ள உண்மை அல்ல. ஆகையால், அவற்றை உண்மைபோல் தோன்றி பொய்யாகக்கூடிய மாயை என்ற பெயரால் அழைத்தார். எப்போதும் இருக்கக்கூடிய தூய அறிவு என்ற பிரும்மம் மாத்திரமே உண்மை. மற்றவை எல்லாம் அதன் பிரதிபலிப்புகள், அறிவின் சலனங்கள் என்றார் ஆதிசங்கரர். அவரது அத்வைத தத்துவப்படி, ஆன்மாக்கள் பலவன்று என்பது மட்டுமல்ல, ஆன்மா என்று தனியாக ஏதுமில்லை, அதுவும் பிரும்மத்தின் பிரதிபலிப்பே. ஆகையால், சங்கரரின் அத்வைதம் மாயாவாத அத்வைதம் என்றும் அழைக்கப்படுகிறது. பிரும்மம் எனப்படும் தூய அறிவு மாத்திரமே உண்மை என்பதைத்தான், சுத்த அறிவே சிவம் என்று கூறும் சுருதிகள் கேளீரோ என்று மகாகவி பாரதியார் குறிப்பிடுகிறார். அனைத்தும் பிரும்மம் என்ற இந்தத் தத்துவம் பாரதிக்கு ஏற்புடையபோதிலும், சங்கரரின் மாயாவாதத்தில் அவருக்கு உடன்பாடில்லை. மாயையைப் பழித்தல் என்றே அவர் ஒரு கவிதை எழுதினார். நிற்பதுவே நடப்பதுவே நீங்கள் எல்லாம் சொப்பனந்தானா, வெறும் தோற்ற மயக்கங்களா என்று தொடங்கி பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார்.

  பேதாபேதவாதம்

  இதேபோல், அக்காலத்திலேயே சங்கரரின் மாயாவாதத்துக்கு எதிர்ப்பு, மாற்றுக் கருத்து எழுந்தது. அவ்வகையில், முக்கியமானதும் முதலில் தோன்றியதுமான வேதாந்தப் பிரிவு பேதாபேதவாதம், அதாவது பேத அபேதவாதம். ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம், மத்வரின் துவைதம் ஆகியவற்றுக்கெல்லாம் முன்னோடி இந்த பேதாபேதவாதம். இதனை அபேதபேதவாதம் என்றும் சிலர் அழைப்பர். இதனை மொழிந்தவர், கி.பி. 996 முதல் 1061 வரை வாழ்ந்த தத்துவ ஞானியான பாஸ்கரர். (இவர் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று சிலர் கருதுகின்றனர்). இவரும் ஆதிசங்கரரைப்போல உபநிஷதங்களுக்கும், பிரும்மசூத்திரங்களுக்கு மிகச் சிறந்த விளக்கவுரையும் (பாஷ்யம்) எழுதியுள்ளார்.

  உபநிஷதங்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கு நேரடியாகப் பொருள்கொள்ள வேண்டுமே அன்றி, அவற்றுக்கு வித்தியாசமான வியாக்யானங்களை (சிறப்பு விளக்கங்களை) தருவது கூடாது என்பது பாஸ்கரரின் வாதம். இனி அவரது கோட்பாட்டைப் பார்ப்போம் –

  பிரும்மம் என்பது எண்ணிலடங்காத மங்கள குணங்கள் கொண்டதும், குறிப்பிட்ட ஒரு வடிவம் இல்லாததும் ஆகும். அதாவது நாம, ரூப, குண வடிவில் பிரும்மத்தை வரையறுக்க முடியாது. பிரும்மத்துக்கு அனுபவிப்பவரின் ஆற்றல் எனப்படும் போக்த்ருசக்தி, அனுபவிக்கப்படும் ஆற்றல் எனப்படும் போக்யசக்தி ஆகிய இருவகை ஆற்றல்கள் உண்டு. இந்த இருவகை ஆற்றல்களைக் கொண்டு, அனுபவிக்கப்படுவதும் அறிவற்றதுமான (அசேதனம்) பிரகிருதியாகவும், அனுபவிப்பதும் அறிவுள்ளதுமான (சேதனம்) ஆத்மாக்களாகவும் பிரும்மம் உருமாற்றம் பெறுகிறது. இந்த உருமாற்றம் உண்மை என்றபோதிலும், அதற்கு அடிப்படையான பிரும்மம் எந்தப் பாதிப்பும் அடைவதில்லை.

  இந்த உலகமானது, பிரும்மத்தின் செயல்வடிவம் (கார்யரூபம்) ஆனபடியால், அதுவும் உண்மையே. ஆத்மாக்கள் அவற்றின் அடிப்படை இயல்பைப் பொருத்தவரையில், பிரும்மம் எனப்படும் பரமாத்மாவோடு ஒன்றாக இருக்கின்றபோதிலும், உடல், மனம் ஆகிய உபாதிகளால் (கட்டுப்படுத்தும் உறுப்புகளால்) ஏற்பட்ட பந்தம் (கட்டு) காரணமாக, பிரும்மத்தில் இருந்து வேறானவையாக இருக்கின்றன. இந்த உபாதிகள் உண்மையானவை என்றபோதிலும், அவை நிரந்தரமானவை அல்ல. அவை அனுபவிக்கப்படுகின்ற வரையில்தான் உண்மையானவை. உண்மை ஞானம் கிடைத்து முக்தி அடைந்த பின்னால், ஜீவாத்மாக்களோடு அவையும் பிரும்மத்துடன் ஒன்றிணைந்துவிடுகின்றன. பல்வேறு ஆறுகள், கடலுடன் சங்கமித்த பிறகு பேதமற்ற ஒன்றாகிவிடுவதைப்போல அவை ஒன்றாகி விடுகின்றன என்கிறார் பாஸ்கரர். ஆகையால், உடல்கள், உயிர்கள் ஆகிய பேதம் இருப்பதை ஏற்றுக்கொண்டு அவை அனைத்தும் பின்னர் பிரும்மத்துடன் பேதமின்றி ஒன்றிவிடுகின்றன என்ற தத்துவத்தைக் கூறுவதால், பாஸ்கரரின் கோட்பாடு பேதஅபேதவாதம் எனப்படுகிறது.

  எவ்வித பலனையும் எதிர்பார்க்காமல் வேதத்தில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளைச் செய்வதும், பிரும்மத்தோடு தனது ஆத்மாவை ஐக்கியப்படுத்தி தியானிப்பதுமே முக்திக்கான சாதனம் (வழிமுறை) என்கிறார் பாஸ்கரர். அதேநேரத்தில், உபாசனைக்கான (வழிபாட்டுக்கான) தனிப்பட்ட கடவுள் என்பதில் அவருக்கு உடன்பாடில்லை. அதாவது, பக்தியை முக்திக்கான சாதனமாக பாஸ்கரர் ஏற்கவில்லை. ஆனால், ஞானநிலையில் பிரும்மம் மாத்திரமே இருப்பதாகக் கூறுகின்ற சங்கரர், சாதகர்களின் முன்னேற்றம் கருதி, தனிப்பட்ட வழிபாட்டுக்காக ஷண்மதங்களையும், பஞ்சாயதன வழிபாட்டு முறையையும் ஏற்றுக்கொண்டு வழிமுறைப்படுத்தினார். பிற்காலத்தில் வந்த ராமானுஜர், மத்வர் ஆகியோர், பக்தியே முக்திக்கான வழி என்றும், மற்ற தெய்வ ரூபங்களை ஒதுக்கிவிட்டு விஷ்ணு ரூபத்தில் மாத்திரமே பக்தி செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். தத்துவ மதங்களைப் பொருத்தவரை ராமானுஜரும் மத்வரும் வேறுபட்டு இருந்தபோதிலும், வழிபடு மதத்தைப் பொருத்தவரை வைஷ்ணவர்களாகவே இருந்தனர்.

  துவைதாத்வைதம்

  இதனையொட்டியே, பிற்கால வேதாந்தப் பிரிவுகளை நிறுவியவர்களில் பெரும்பாலானோரும் வழிபாட்டு முறையில் வைஷ்ணவர்களாகவே திகழ்ந்தனர். அந்தவகையில் முக்கியமானவர் 13-ம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த நிம்பார்கர். இவர் ஆந்திரத்தில் பிறந்தவர் என்று சிலரும், கிழக்கு மகாராஷ்டிரத்தில் பிறந்தவர் என்று வேறு சிலரும் கூறுகின்றனர். பிரும்மசூத்திரங்களுக்கு வேதாந்த பாரிஜாத சௌரப என்ற பெயரில் அமைந்த விளக்க நூலை இவர் எழுதியுள்ளார். இவரது தத்துவம் துவைதாத்வைதம், அதாவது துவைதஅத்வைதம் எனப்படுகிறது. இவரும் பாஸ்கரரைப் போலவே பேதங்களை ஏற்றுக்கொண்டு, பின்பு அவை பிரும்மத்தில் ஒன்றுபடுவதாகக் கூறுகிறார். அதேநேரத்தில், பிரும்மம் குறிப்பிட்ட வடிவமும் குணநலன்களும் கொண்டது என்றும், பக்தியால் மாத்திரமே முக்தி பெற முடியும் என்றும் நிம்பார்கர் கூறுகிறார். அந்தவகையில், இவர் ராமானுஜரை ஒத்திருக்கிறார்.

  ராமானுஜர் பிரும்மத்தை விஷ்ணு என்றும் அவரது இணையான சக்தியை லக்ஷ்மி என்றும் கூறுவதைப்போல, நிம்பார்கர் பிரும்மத்தை கிருஷ்ணர் என்றும் அவரது இணையான சக்தியை ராதை (ராதா) என்றும் கூறுகிறார். ராமானுஜரைப் போலவே இவரும் பிரும்மம், சித், அசித் ஆகிய மூன்று உண்மைகள் இருப்பதாகத் தெரிவிக்கிறார். நிம்பார்கரின் கோட்பாடு - பிரும்மமானது எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகின்றவர் (நியந்த்ரு), அறிவுடைய (சித்) ஆன்மாக்களே அனுபவிக்கின்றவர்கள் (போக்த்ரு), அறிவற்ற (அசித்) பிரகிருதியாகிய உலகம் அனுபவிக்கப்படுவது (போக்யா).

  அசித் மூவகையானது. அவை - பொருள்மயமான பிரகிருதியில் இருந்து வெளிப்பட்டதான காணுகின்ற உலகம் எனப்படும் பிராக்ருதம், பிரும்மத்தின் பொருள்சாராத அம்சத்தில் இருந்து வெளிப்பட்டதும், பிரகிருதியில் இருந்து வெளிப்படாததுமான அப்ராக்ருதம் மற்றும் காலம். இவை மூன்றும் அவற்றின் இயல்பின் அடிப்படையில் வெவ்வேறானவை.

  சித் எனப்படும் ஜீவன்கள் அணு போன்ற நுண்ணியவை, கணக்கில் அடங்காதவை. அவை ஒவ்வொன்றும் உடலுக்கு முகவராகச் செயல்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் தங்களுக்கு உரிய உடலை இயக்கி, அறிபவராகவும் (ஞாத்ரு), செயல்புரிபவராகவும் (கர்த்ரு), அனுபவிப்பவராகவும் (போக்த்ரு) செயல்படுகின்றன. ஆத்மாக்களில் பாவம் செய்தவை நரகத்துக்கும், புண்ணியம் செய்தவை ஸ்வர்கத்துக்கும் செல்கின்றன. பக்தியாலும் ஞானத்தாலும் விடுதலை அடைந்த ஆன்மாக்கள் பிரும்மத்தோடு ஐக்கியமாகிவிடுகின்றன, மீண்டும் பிறப்பதில்லை. முக்திக்கு வேத விதிப்படியான கடமைகள், ஞானம், பக்தி, இறைவனைச் சரணடைதல் ஆகியவற்றுடன் குருவுக்குக் கீழ்படிதலும் அவசியம்.

  சித், அசித் ஆகிய இரண்டுமே உண்மை என்றபோதிலும் அவை பிரும்மத்தைச் சார்ந்திருப்பவை (பரதந்த்ர தத்வங்கள்). பிரும்மமானது அழகும், கருணையும் ஒருங்கே நிறைந்த வடிவம் கொண்டது. அதுவே கிருஷ்ணர். சித் (ஆத்மாக்கள்), அசித் (உலகம்) ஆகிய பேதங்கள், பிரும்மம் எனப்படும் பேதமின்மை ஆகிய இரண்டுமே உண்மைதான். அவை இணைந்திருக்கின்றனவே அன்றி முரண்படவில்லை. கடலும் அதன் அலைகளும்போல, சூரியனும் அதன் கதிர்களும்போல பிரும்மமும் சித், அசித்துகளும் இணைந்தே இருக்கின்றன. எந்த நிலையிலும் சித், அசித்துகள் பிரும்மத்தை விட்டுத் தனியாகப் பிரிவதில்லை என்கிறார் நிம்பார்கர். இவ்வாறு இருவகையாகப் பிரித்து (துவைதமாக) கூறி, பின்பு ஒன்றுபடுத்தி (அத்வைதமாக) கூறுவதால் நிம்பார்கரின் தத்துவம் துவைதஅத்வைதம் எனப்படுகிறது.

  சுத்தாத்வைதம்

  நிம்பார்கரைப் போலவே, 15-ம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றி, 16-ம் நூற்றாண்டின் முற்பாதி வரை வாழ்ந்த வல்லபர் என்ற ஆசார்யரும், கிருஷ்ணரை பிரும்மமாகக் கொண்ட புதிய வேதாந்த தத்துவத்தை முன்வைத்தார். இவர் சத்தீஸ்கர் மாநிலம் சம்பரன் என்ற இடத்தில் பிறந்தவர். இவரது கோட்பாட்டுக்கு சுத்தாத்வைதம், அதாவது சுத்தஅத்வைதம் என்று பெயர். உபநிஷதங்களில் கூறப்படும் பிரும்மம், மகாபாரத இதிகாச நாயகனான கிருஷ்ணர்தான் என்பது இவரது கொள்கை. உபநிஷதங்கள், பிரும்மசூத்திரங்கள், பகவத்கீதை ஆகிய பிரஸ்தான திரையங்களைப்போல, கிருஷ்ணரின் வரலாற்றையும், லீலைகளையும் கூறும் பாகவதமும் உயர்வானது என்பது இவரது கருத்து.

  பிரும்மசூத்திரங்களுக்கு பிருஹத்பாஷ்யம் என்ற பெரிய விளக்கவுரையையும், அனுபாஷ்யம் சிறு விளக்கவுரையையும் வல்லபர் எழுதியுள்ளார். இவற்றில் பிருஹத்பாஷ்யம் முழுவதும் மறைந்துவிட, அனுபாஷ்யத்தில் ஒரு பகுதி மட்டுமே தற்போது கிடைக்கப்பெறுகிறது. இந்த அனுபாஷ்யத்தையும் வல்லபரின் மகன் விட்டலநாதர் பூர்த்திசெய்ததாகக் கூறப்படுகிறது. பாகவதத்துக்கு வல்லபர் இயற்றிய சுபோதினி என்ற நூலும் முழுமைபெறாமல் உள்ளது.

  வல்லபரின் கோட்பாடு – கிருஷ்ணரே பிரும்மம், அவரைத் தவிர வேறு எவரும் அல்லர். அவர் ஸத் (இருப்பு), சித் (அறிவு), ஆனந்த (மகிழ்வு) மயமாகத் திகழ்கிறார். கிருஷ்ணர் மூன்று வடிவம் எடுத்துள்ளார். முதலாவது, பரப்ரும்மம் எனப்படும் புருஷோத்தமனான கிருஷ்ணர். இரண்டாவது, அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாகத் திகழும் அந்தர்யாமி. மூன்றாவது, கிருஷ்ணர் உறைகின்ற இடமாகத் திகழும் அக்ஷரப்ரும்மம். இந்த அக்ஷரம்தான் அறிவற்ற பிரகிருதியாகவும், அறிவுள்ள ஆன்மாக்களாகவும் (புருஷ) தோற்றம் அளிக்கிறது. இந்த அக்ஷரம், கிருஷ்ணரின் வெளிப்பாடே. இந்த அக்ஷரம், காலம் (நேரம்), கர்மம் (செயல்), ஸ்வபாவம் (இயற்கை) ஆகிய மேலும் மூன்று வடிவங்களையும் எடுக்கிறது.

  பிரும்மமாகிய கடவுள், நிர்குணம் (குணமற்றவர்), சகுணம் (நற்குணத்தவர்) ஆகிய இரண்டுமாகத் திகழ்கிறார். அவரது அருளால் அன்றி அவரை நாம் அறியமுடியாது. தமது மாயாசக்தியால் அந்த இறைவன், எந்த நேரத்திலும் எதுவாக வேண்டுமானாலும் மாறலாம். இந்த உலகுக்குப் பொருள் வகையிலும், செயலாற்றியவர் என்றவகையிலும் அவரே காரணமாகத் திகழ்கிறார். தனது இயல்பினாலேயே அவர் இந்த உலகத்தைத் தோற்றுவித்தார். சத், சித், ஆனந்தம் என்ற தனது மூவியல்பால் அந்த இறைவன் எல்லா இடங்களிலும் வியாபித்து இருக்கின்றபோதிலும், படைக்கப்பட்ட இந்த உலகில் அம்மூன்றின் பரிணாமங்கள் வெவ்வேறானவை. பொருள்கள் ஸத் எனப்படும் இருப்பை மாத்திரம் கொண்டிருக்க, ஆன்மாக்கள் இருப்போடு சித் எனப்படும் அறிவையும் கொண்டிருக்க, அந்த இரண்டுடன் ஆனந்தம் எனப்படும் மூன்றாவதையும் முழுமையாகக் கொண்டிருப்பவர் பிரும்மமாகிய இறைவனே.

  மாற்றமடையாததும், எங்கும் நிறைந்திருப்பதுமே இறைவனின் சுய இயல்பு என்றபோதிலும், தனது எண்ணத்தால் இந்த உலகை இறைவன் படைத்ததன் காரணமாக, அவர் பல்வேறு மாற்றங்களாகவும் அறிந்துகொள்ளக்கூடிய இலக்காகவும் திகழ்கிறார். பிரும்மமாகிய இறைவனிடமிருந்து தோன்றிய இந்த உலகம் அழிவதில்லை, அவரது சங்கல்பத்தால் மீண்டும் அவரிடமே ஒடுங்குகிறது.

  நெருப்பில் இருந்து கனல்கள் தோன்றுவதுபோல, அக்ஷரபிரும்மத்தில் இருந்து ஆன்மாக்கள் தோன்றியுள்ளன. பிரும்மத்தின் அழிவில்லா உறுப்புகளான அந்த ஆன்மாக்கள், அளவில் அணுவை ஒத்தவை. ஆன்மாக்களில் மூவகை உண்டு. அவை – புஷ்டி, மர்யாதா, பிரவாஹ. புஷ்டி வகையைச் சேர்ந்த ஆன்மாக்கள் கடவுளின் கருணையினால் எப்போதுமே அவர் மீது பக்தியுடன் திகழ்கின்றன. ஆகையால் அவருடனேயே இணைந்துள்ளன. இரண்டாவது வகையைச் சேர்ந்த மர்யாதா ஜீவன்கள், வேதத்தில் கூறப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றி, பக்தி மார்க்கத்திலும் செல்கின்றன. இவ்வகையைச் சார்ந்தவை குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு இறைவனை அடைகின்றன. மூன்றாவது வகையைச் சேர்ந்த பிரவாஹ ஜீவன்களுக்கு, உலகியல் இன்பங்களிலேயே நாட்டம் இருப்பதால் மீண்டும் மீண்டும் பிறவிச் சுழலில் அகப்பட்டு உழல்கின்றன. சத்சங்கம் எனப்படும் நல்லோர் தொடர்பு கிடைப்பதன் மூலம், இவ்வகை ஜீவன்களுக்கும் பின்னர் பக்தி ஏற்பட்டு இறைவனை அடைகின்றன.

  வெறும் ஞானத்தால் பிரும்மத்தை அறிகின்ற ஜீவன்கள், அக்ஷரப்ரும்மத்தில்தான் இணையமுடியும். பிறகு பக்தியின் மூலமே அவர்களும் இறைவனுடன் ஒன்றிணையமுடியும் என்கிறார் வல்லபர். அவரது கருத்துப்படி, மர்யாதா, புஷ்டி ஆகிய இருவகை பக்திகள் உண்டு. வேத சாஸ்திரங்களில் கூறியுள்ள முறைப்படி, கடமைகளை ஆற்றியபடி அதன் அடிப்படையில் தானாக வளர்த்துக்கொள்ளும் பக்தி மர்யாதா பக்தி ஆகும். அதேநேரத்தில், தனது சுயமுயற்சி ஏதுமின்றி இறைவனின் கருணையால் அவர் மீது ஒருவர் கொள்கின்ற பக்தியே புஷ்டி பக்தி ஆகும். இந்த புஷ்டி பக்தியே உயர்வானது என்கிறார் வல்லபர். ஆகையால், அவரது தத்துவ வழிமுறை புஷ்டி மார்க்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணர் வடிவில் இறைவனை வழிபடுகின்றனர்.

  அசிந்த்யபேதாபேதம்

  நிம்பார்கரின் வைஷ்ணவ வேதாந்தப் பிரிவான துவைதாத்வைதம், ராமானுஜரின் விசிஷ்டாத்வைதத்தையும், வல்லபரின் வைஷ்ணவ வேதாந்தப் பிரிவான சுத்தாத்வைதம், சங்கரரின் அத்வைதத்தையும் பெரிதும் ஒத்திருக்கிறது என்றால், மத்வரின் துவைதத்தை ஒத்த வைஷ்ணவ வேதாந்தப் பிரிவாக அசிந்த்யபேதாபேதம் திகழ்கிறது. இதனை உருவாக்கியவர் கி.பி. 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பலதேவர்.

  துவைத சிந்தனையால் ஈர்க்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ண சைதன்யர் (கி.பி. 1485-1533), வங்காளத்தில் கிருஷ்ண பக்தி கொண்ட மாபெரும் வைஷ்ணவ மார்க்கத்தை ஏற்படுத்தினார். இந்த மார்க்கத்தைச் சேர்ந்தவரான பலதேவர்தான் பின்னர் அசிந்த்ய பேதாபேதம் என்ற தத்துவத்தை முன்வைத்தார். பெரும்பாலும் துவைதத்தை ஒத்திருந்தாலும், சில அம்சங்களில் அதில் இருந்து வேறுபட்டதாக இந்தத் தத்துவம் உள்ளது. தனது தத்துவத்தை விளக்க பிரும்மசூத்திரங்களுக்கு கோவிந்தபாஷ்யம் என்ற பெயரிலான விளக்கவுரையை எழுதியுள்ள பலதேவர், சித்தாந்த ரத்னா என்ற மற்றொரு நூலையும் இயற்றியுள்ளார்.

  அசிந்த்ய என்றால் சிந்தனைக்கு அப்பாற்பட்டது என்று பொருள். பலதேவரின் தத்துவப்படி விஷ்ணு, ஹரி எனப்படும் கிருஷ்ணரே பிரும்மம். அவர் எண்ணற்ற, நமது சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட (அசிந்த்ய) நற்குணங்கள் கொண்டவர். அவரே நமது உபாசனைக்கு உரிய சகுண பிரும்மம். அவரை நிர்குணமாகக் கூறுவதன் பொருள், அவர் சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களையும் கடந்தவர் என்பதே. வேதத்தின் மூலமே அவரை அறியமுடியும்.

  பிரும்மத்திடம் (கடவுளிடம்) பராசக்தி (உயர்ந்த ஆற்றல்), அபராசக்தி (கீழான ஆற்றல்), அவித்யாசக்தி (அறியாமை ஆற்றல்) என்ற மூவகை ஆற்றல்கள் உண்டு. இதில் தனது உயர்ந்த ஆற்றலால், இந்த உலகை உருவாக்கிய (கருத்துமுதல்) காரணமாக அவர் திகழ்கிறார். மற்ற இரு ஆற்றல்களால் இவ்வுலகின் பொருள் சார்ந்த (பொருள்முதல்) காரணமாகவும் அவரே விளங்குகிறார். பிந்தைய இரு ஆற்றல்களின் காரணமாக பிரகிருதி எனப்படும் இயற்கையும், உயிர்களும் தோன்றின. படைப்பு என்பது இறைவனின் தன்னிச்சையான செயல். அதேநேரத்தில், தனிப்பட்ட ஆன்மாக்களின் கர்ம வினைகளைப் பொருத்தே அவர் இதனைப் படைக்கிறார்.

  ஆன்மாக்கள் பல. ஒவ்வோர் ஆன்மாவும் அணு அளவிலானது. ஆன்மா நிரந்தரமானது. அதுவே அறிவாகவும், அறிபவராகவும் திகழ்கிறது. இதேபோல் அனுபவிப்பவராகவும், உடலின் முகவராகவும் திகழ்ந்தாலும், ஆன்மா சுதந்தரமானது அல்ல. பக்தி மாத்திரமே முக்திக்கு வழி. தியானம், உபாசனை எனப்படும் வழிபாடு ஆகியவையும் பக்தியின் வடிவங்களாக உள்ளபோதிலும், இறைவன் மீதான பிரேமபக்தி (கனிந்த அன்பிலான பக்தி) மூலமே இறைவனை அறியமுடியும். வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளைச் செய்வதால் மனம் தூய்மை அடையும். வேதங்களைப் படிப்பது இறைவனை நாடுவதற்கான சாதனைக்கு உதவும். ஆனால், இறைவனின் கருணையால் மாத்திரமே எந்தவொரு ஆன்மாவும் முக்திபெற முடியும். முக்தி என்பது இறப்புக்குப் பிறகு இறைவனின் உலகில் (வைகுந்தத்தில்) அவருக்கு அருகே இருப்பதே. அந்த நிலையிலும் பரமாத்மாவோடு ஜீவாத்மா ஐக்கியமாகிவிடுவதில்லை, தனித்தே இருக்கும். அதேநேரத்தில் உயிருடன் இருக்கும்போதே விடுதலை அடைகின்ற ஜீவன்முக்தி என்பது கிடையாது என்பதே பலதேவரின் அசிந்த்ய பேதாபேத தத்துவம்.

  இவ்வாறாக, சங்கரருக்குப் பிறகு பாஸ்கரரைத் தவிர, ராமானுஜர், மத்வர், நிம்பார்கர், வல்லபர், பலதேவர் ஆகியோர் வைஷ்ணவமயமாகவே வேதாந்த தத்துவங்களை மொழிந்துள்ளனர். இவர்களுக்கு மாறாக, சிவபெருமானை பிரும்மமாகக் கொண்ட வேதாந்த தத்துவத்தை மொழிந்தவர் ஸ்ரீகண்டர். அவரது தத்துவம் குறித்து அடுத்த அத்தியாயத்தில் காண்போம்...

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai