18. சஷ்டி தந்திரமும் சாங்கிய காரிகையும்

இந்தியத் தத்துவங்களிலும் வேதத்தின் ஷட்தரிசனங்களிலும் மிகப் பழைமையான சாங்கியம், கபில முனிவர் தொடங்கி அவரது சிஷ்ய பரம்பரையினர் மூலம் வழிவழியாகப் போதிக்கப்பட்டு வந்த தத்துவமாகும்.

இந்தியத் தத்துவங்களிலும் வேதத்தின் ஷட்தரிசனங்களிலும் மிகப் பழைமையான சாங்கியம், கபில முனிவர் தொடங்கி அவரது சிஷ்ய பரம்பரையினர் மூலம் வழிவழியாகப் போதிக்கப்பட்டு வந்த தத்துவமாகும். சாங்கியத்தின் கருத்துகள் ரிக் வேதத்திலேயே இடம்பெற்றுள்ளன. ரிக் வேதத்தில் உள்ள நாஸதீய சூக்தம் மற்றும் புருஷ சூக்தம் ஆகியவை சாங்கிய கருத்துகளின் மூலங்களாகக் கருதப்படுகின்றன.

சாங்கிய தத்துவத்தை மொழிந்த கபிலர், ரிக் வேத கால முனிவராகப் போற்றப்படுகிறார். மிகப் பழைமையான ஸ்வேதாஸ்வதர உபநிஷதத்தில் கபிலரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய குஜராத் மாநிலத்தில் உள்ள சித்தாபூர், இவர் பிறந்த இடம் என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த சித்தாபூர், ஒரு காலத்தில் பிரவாகமெடுத்து ஓடி பின்னர் வறண்டுபோன சரஸ்வதி நதி, இந்தியப் பெருங்கடலுக்குள்பட்ட அரபிக் கடலோடு கலந்த முகத்துவாரத்தில் அமைந்துள்ளது. இந்த சித்தாபூரில் கபிலரின் ஆஸ்ரமம் அமைந்திருந்ததாம். இதேபோல், மேற்கு வங்க மாநிலத்தில் ஹூக்ளி என்ற பெயரில் ஓடும் கங்கை நதி, வங்காள விரிகுடாவில் கலக்கும் கங்காசாகர் பகுதியில் கபிலரின் ஆசிரமம் இருந்ததாக வேறு சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நேபாளத்தில் புத்தர் பிறந்த இடமான கபிலவஸ்து, கபிலர் பிறந்த நகரமா என்ற ஐயப்பாடு உள்ளது. எவ்வாறு இருப்பினும் கபிலர் பெயரால் அமைந்த நகரம் அது என்பதில் சந்தேகமில்லை.

ஹிந்து மதத்தின் பல்வேறு தத்துவ இலக்கியங்களில் ஆதி வித்வான் என்றும், சாங்கியத்தை எதிர்க்கும் ஆதிசங்கரர் உள்ளிட்ட தத்துவ ஆசார்யர்களால்கூட பரமரிஷி என்றும் போற்றப்படுவர் கபிலர். பகவத் கீதையில் அனைத்தும் தாமே எனப் பிரகடனப்படுத்தும் ஸ்ரீகிருஷ்ணர், முனிவர்களில் (சித்தர்களில்) நான் கபிலராக இருக்கிறேன் என்று கூறுகின்ற அளவுக்குப் பெருமை படைத்தவர் கபில முனி. அவரது பெயரால் அவர் மொழிந்த சாங்கிய தத்துவம், கபில தரிசனம் என்ற சிறப்புப் பெயராலும் அழைக்கப்படுகிறது. ஆயினும், கபிலர் எதனையும் நேரடியாக எழுதவில்லை. சாங்கிய தத்துவ ஞானத்தை அவர் வாய்மொழியாக தனது பிரதம சீடரான ஆசுரிக்குச் சொன்னார். ஆசூரி, தனது பிரதம சீடரான பஞ்சசிகருக்குப் போதித்தார். இந்தப் பஞ்சசிகருக்குப் பராசர்யர் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்த பஞ்சசிகர்தான், முதன்முதலில் நூல் வடிவில் சாங்கிய தத்துவத்தைத் தொகுத்தார். இந்த நூலுக்கு சஷ்டி தந்திரம் என்று பெயர். சஷ்டி என்பதற்கு அறுபது என்று ஒரு பொருள் உண்டு. தந்திரம் என்பது உபாயம், வழிமுறை என்று பொருள் தரும். 60 விதமான விஷயங்களைப் பற்றி அறிவதற்கான வழிமுறைகளைக் கூறும் தத்துவ நூல் என்பதால் இதற்கு சஷ்டி தந்திரம் என்று பெயர்.

பஞ்சசிகரின் சீடர் கார்க்கியர். அவரைத் தொடர்ந்து வழிவழியே உலூகர், வர்ஷகன்யர், பஞ்சாதிகரணர், ஜெயகீஸவ்யர், பதஞ்சலி, தேவாளர், வோது, பத்தலி, சனந்தனர், மாதவர் என சீடர் பரம்பரை தொடர்கிறது. பஞ்சசிகர் இயற்றிய சஷ்டி தந்திர மூல நூல் தற்போது கிடைக்கப் பெறவில்லை. ஆனால் அதன் வழிநூல்கள் பல உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தகுந்தது, கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஈஸ்வர கிருஷ்ணர் இயற்றிய சாங்கிய காரிகை. அழிந்துபடாமல் தற்போது இருக்கின்ற சாங்கிய தத்துவ நூல்களில் மிகப் பழைமையானது இதுதான். இந்த நூலை எழுதிய ஈஸ்வர கிருஷ்ணர், சாகுந்தலம் இயற்றிய மகாகவி காளிதாசராக இருக்கலாம் என்று பிற்கால சாங்கிய தத்துவ ஞானி ஸ்வப்னேஸ்வரர் கருதுகிறார். இருப்பினும் இது உறுதி செய்யப்படவில்லை.

“ஞானங்களில் சாங்கிய தத்துவத்தைவிட மேலானது உலகில் இல்லை” என்று மகாபாரதம் புகழ்ந்துரைக்கிறது. அப்பேர்ப்பட்ட மிக உயர்ந்த சாங்கிய தத்துவத்தை எழுபத்திரெண்டே ஸ்லோகங்கள் (செய்யுள்கள்) கொண்ட எளிய, ஆனால் வலுவான நூலாக வடித்துள்ளார் ஈஸ்வர கிருஷ்ணர். அக்காலத்தில் பொதுவாக எந்த ஒரு இந்திய இலக்கியத்திலும் இடம்பெறும் கதைகளோ, விவாதங்களோ இன்றி, நேரடியாக சாங்கிய தத்துவத்தின் கருத்துகளைச் சொல்கிறது சாங்கிய காரிகை (சம்ஸ்கிருதத்தில் சாங்கிய காரிகா). அந்த வகையிலும் இந்த நூல், தனித்துவம் வாய்ந்தது. அக்காலத்தில் பிரபலமடைந்திருந்த சாங்கிய தத்துவத்தின் பல்வேறு உட்பிரிவுகளில், பஞ்சசிகர் எனப்படும் பராசர்யரின் பிரிவை, அதாவது சஷ்டி தந்திரத்தை ஆதாரமாகக் கொண்டு சாங்கிய காரிகையை ஈஸ்வர கிருஷ்ணர் படைத்துள்ளார்.

கடந்த 16-ம் நூற்றாண்டுவரை மிகப் பிரபலமாக இருந்த சாங்கிய காரிகைக்குப் பல காலகட்டங்களில் பல்வேறு விளக்கவுரைகள் (பாஷ்யங்கள்) எழுதப்பட்டுள்ளன. அவற்றில் பெயர் தெரியாத ஒரு தத்துவ ஞானியால் விளக்கவுரை எழுதப்பட்ட யுக்திதீபிகா; சங்கரர் (ஆதிசங்கரர் அல்லர்) என்பாரின் ஜெயமங்களா; மாதரர் என்பவரின் மாதரபாஷ்யம்; கௌடபாதரின் கௌடபாதபாஷ்யம் மற்றும் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வாசஸ்பதி மிஸ்ராவின் தத்துவ கௌமுதி ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை. இதில், யுக்திதீபிகா விளக்கவுரை, தற்போது மூல நூல்கள் கிடைக்கப்பெறாத பல்வேறு சாங்கிய தத்துவ ஞானிகளின் வேறுபட்ட கருத்துகளைத் தொகுத்துக் கூறுகின்ற மிக முக்கிய நூலாக விளங்குகிறது. வாசஸ்பதி மிஸ்ராவின் தத்துவ கௌமுதி, பாரம்பரிய இந்தியத் தத்துவ ஆராய்ச்சியாளர்களால் மிகவும் உயர் தரமான விளக்கவுரை நூலாக மதிக்கப்படுகிறது.

சாங்கிய தத்துவம், சடங்குகளுக்கு அன்றி ஆத்மவிசாரத்துக்கே முக்கியத்துவம் தருகிறது. முக்தியைத் தருவது, ஆத்மஞானமே என்று அடித்துச் சொல்கிறது. இந்த மையக் கருத்தை, தனது முதல் இரண்டு ஸ்லோகங்களிலேயே பொட்டில் அடித்தாற்போல் சொல்கிறது சாங்கிய காரிகை...

துக்கத்ரயாபிகாதாத் ஜிக்ஞாஸா ததபகாதகே ஹேதௌ/
த்ருஷ்டே ஸா()பார்த்தோ சேத் நைகாந்தாத்யந்ததோ()பாவாத்// 1

த்ருஷ்டவதானுஸ்ராவிக: ஸ ஹ்யவிசுத்திக்ஷய அதிசயயுக்த:/
தத்விபரீத: ஸ்ரேயான் வ்யக்தாவ்யக்த க்ஞவிக்ஞானாத்// 2

இந்த ஸ்லோகங்களுக்கான எனது கவிதை மொழிபெயர்ப்பு...

மூவகைத் துன்பம் முடிவுறு வழியாய்வோம்
முற்பட்ட வழிகள் நிச்சயமில நிரந்தரமில.

வேள்விவழி தென்படினும் தூய்மையில வீணானதே
வேறுபட்ட பகுத்தறி விஞ்ஞானம் மேலானதே.

இப்போது சற்று விளக்கமாகப் பார்ப்போம். ஆராய்ந்து பார்த்தால், இந்த உலகம் மூன்று வகையான துன்பங்களால் பீடிக்கப்பட்டுள்ளது. ஆதி ஆத்மீகம் (நமது உடல் குறைகளாலும், மனக் குறைகளாலும் வருவது), ஆதி பௌதீகம் (பிற மனிதர்கள், மிருகங்கள், தாவரங்கள் மற்றும் இதர பொருட்களால் ஏற்படக்கூடியவை), ஆதி தைவீகம் (மனிதருக்கு மேம்பட்ட அல்லது மனித சக்திக்கு அப்பாற்பட்ட தேவர்கள், தீய சக்திகள், கோள்களின் தாக்கம் போன்றவற்றால் ஏற்படுபவை) ஆகியவையே அம்மூன்றும். இவற்றைப் போக்குவதற்கான வழிமுறைகளை அலசி ஆராய்ந்தால், ஏற்கெனவே நம்மால் காணப்படுகின்ற வழிமுறைகள் (மருத்துவ சிகிச்சைகள், தற்காப்பு- பாதுகாப்பு ஏற்பாடுகள், வழிபாடுகள் போன்றவை) மிகத் துல்லியமானதாகவோ நிரந்தரமானதாகவோ இருப்பதில்லை. வேள்விச் சடங்குகளால் இவற்றுக்குத் தீர்வு காண முடியும் என்று கூறினாலும், அந்தச் சடங்குகள் பலி கொடுத்தல் போன்றவை காரணமாக தூய்மையற்றதாகவும், ஓரளவு தீமையானதாகவும் (வீணானதாகவும்) இருக்கின்றன. ஆகையால் இந்த மூவகைத் துன்பத்துக்கும் முடிவான, நிரந்தரமான தீர்வு காண்பதற்கு, இந்த அனைத்து வழிமுறைகளில் இருந்தும் வேறுபட்ட, வியக்த (வெளிப்பட்டது), அவ்யக்த (வெளிப்படாதது), க்ஞ (இவற்றை அறிந்துகொள்ளும் ஆன்மாவாகிய புருஷன்) ஆகிய மூன்றையும் பகுத்தறிந்து பார்க்கின்ற விஞ்ஞானமே (சிறந்த அல்லது விசேஷ ஞானமே) உயர்வானது என்று சாங்கிய காரிகை கூறுகிறது.

நம் கண் முன்னால் காணப்படுகின்ற உலகம், அதில் உள்ள பொருள்கள் யாவும் அதாவது பிரகிருதியானது வெளிப்பட்டது. இந்தப் பிரகிருதியின் தோற்றத்துக்குக் காரணமான மூலப் பிரகிருதி எனப்படும் பிரதானம் வெளிப்படாமல் மறைந்திருப்பது. வெளிப்படாத பிரதானத்தில் இருந்து பிரகிருதி, வேறொன்றின் அனுபவத்துக்காகவே வெளிப்படுகிறது. அவ்வாறாக அனுபவம் பெறுவது, அறிந்துகொள்வது அந்தப் பிரகிருதிக்கு உட்பட்டதாக இருக்க முடியாது. அதிலிருந்து வேறானதாக இருக்க வேண்டும். அவ்வாறாக, வெளிப்பட்டது, வெளிப்படாதது ஆகிய இரண்டில் இருந்தும் வேறுபட்டதும், வெளிப்பட்டதன் பரிணாம வளர்ச்சியையும் அதன் இயல்பையும் அறிந்துகொள்வதும், பிரகிருதியின் மாறுபாடுகளால் அனுபவத்தைப் பெறுவதும் எதுவோ அதுவே புருஷன் (ஆன்மா). இவ்வாறாக, பொருளில் இருந்து ஆன்மாவைப் பிரித்துப் பார்க்கும் பகுத்தறிவே எல்லாவற்றிலும் மேலானது என்கிறது சாங்கியம். இந்த வகையில், வேள்விச் சடங்குகளை வலியுறுத்தும் கர்ம காண்டத்துக்கு முற்றிலும் மாறாக, ஞான காண்டத்தை (அறிவுப் பாதையை) சாங்கியம் முன்னிறுத்துகிறது. இந்த ஞானம் வந்தால்தான், துன்பத்தில் இருந்து ஜீவன் முழுமையாகவும், நிரந்தரமாகவும் விடுபட முடியும் என்கிறது.

நேரடியாக உணர்தல் (திருஷ்டம்), ஊகம் (அனுமானம்), ஆன்றோர் உரை (ஆப்தவசனம்) ஆகிய மூன்றையும் தத்துவ அறிவை நிரூபிப்பதற்கான சான்றுகளாக ஏற்கலாம் என்கிறது சாங்கிய காரிகை. நேரடியாக உய்த்துணர்வதை ஏற்றால் போதாதா, எதற்கு ஊகமும், ஆன்றோர் உரையும் ஏற்கப்பட வேண்டும் என்பதற்கு அருமையான விளக்கம் தருகிறது. வெகு தூரத்தில் உள்ளவை, மிகவும் அருகில் உள்ளவை, நமது பொறிகளில் உள்ள பழுதுகள், மறதி, மிகவும் நுட்பமானவை, வேறொரு பொருளால் மறைக்கப்பட்டிருப்பவை, அழுந்திக் கிடப்பவை, வேறொன்றோடு கலந்து கிடப்பவை ஆகியவை காரணமாக ஒரு பொருளை நம்மால் நேரடியாகப் பார்த்து அறிந்துகொள்ள இயலாமல் போகிறது. அவை இல்லாததால் நமக்குத் தெரியாமல் போகவில்லை. அவை இருந்தும் மேற்கூறிய 8 வகைக் குறைபாடுகள் காரணமாக நம்மால் அவற்றைத் தெரிந்துகொள்ள முடியவில்லை என்பதே உண்மை. ஆகையால் ஊகம், ஆன்றோர் உரை ஆகியவற்றை ஏற்கவேண்டி உள்ளது. கண்ணுக்கு அகப்படாத பிரதானத்தில் இருந்து வெளிப்பட்ட பிரகிருதியின் மூலம் இதற்கு அடிப்படையான பிரதானத்தை, அதாவது காணப்படும் விளைவைக் கொண்டு அதற்குக் காரணமான பிரதானம் என்ற ஒன்று இருப்பதை நாம் ஊகித்து அறியலாம்.

இல்லாத ஒன்றுக்கு இருப்பு ஏற்பட்டுவிடாது. எந்தவொரு புதிய தோற்றத்துக்கும் விளைவுக்கும், அதற்குரிய மூலப்பொருள்கள் வேண்டும். எல்லா பொருள்களும் எல்லாவற்றில் இருந்தும் உண்டாகிவிட முடியாது. குறிப்பிட்ட பொருளுக்குள் (மேட்டர்) புதைந்துள்ள ஆற்றலின் (எனர்ஜி) அளவில்தான் புதிதாகத் தோன்றும் பொருட்களும் இருக்க முடியும். ஆகையால் தோன்றுகின்ற எல்லாமே ஏற்கெனவே உள்ள ஒன்றின் வெளிப்பாடுகளே அன்றி, இல்லாததில் இருந்து எதுவும் தோன்றிவிட முடியாது.

மூலப் பிரகிருதியின் சத்வ, ரஜோ, தமோ குணங்களின் சமநிலை தவறுவதால் இயக்கம் ஏற்பட்டு உலகமும், வாழ்வும் தோன்றுகிறது. பிரகிருதியில் ஏற்படும் இந்த மாறுதல்களை அறிவதும், அவற்றை அனுபவிப்பதும், பயன்படுத்துவதும், இவற்றில் இருந்து விடுபட வேண்டும் என்ற இலக்கை உடையதும் வேறு ஒன்றாக இருப்பதால் புருஷன் (ஆன்மா) உண்டாம். பிறப்பும், இறப்பும், எடுக்கின்ற உடல் அமைப்புகளும், செய்கின்ற வினைகளும் வேறு வேறாக இருப்பதால் ஆன்மா ஒன்றல்ல, பலவாகும்.

பொருள் மயமான பிரகிருதியில் இருந்து அறிவுமயமான புருஷன் வேறுபட்டது. பிரகிருதியால் ஆன உடலுக்குள் இருந்தாலும் தனித்திருப்பதுடன் அனுபவங்களின் சாட்சியாக, அறிந்துகொள்வதாக புருஷன் இருக்கிறது. அது உண்மையில் எந்தச் செயலிலும் ஈடுபடுவதில்லை. பிரகிருதியின் கூட்டே செயல்படுகிறது, அதற்கான வினைப்பயன்களையும் அனுபவிக்கிறது. ஆயினும், அறிவற்ற பொருட்கள் அறிவு படைத்தவை போன்றும், செயல்படாத நடுவனாகிய புருஷன் செயல்படுவது போன்றும் தோன்றுவதற்கு இரண்டுக்கும் உள்ள இணைப்பே காரணம். இயற்கையாகிய பிரகிருதி, புருஷனின் அனுபவத்துக்காகவும், அதன் மூலமான புருஷனின் விடுதலைக்காகவுமே செயல்படுகிறது என்று கபில தரிசனத்தை விளக்குகிறது சாங்கிய காரிகை.

முக்தி (விடுதலை) என்பது என்ன? அதனை அடைவது எது, பிரகிருதியா புருஷனா? பல பிறவிகள் தோன்றுவதற்கு என்ன காரணம்? முக்தி அடைவதற்கும் அடையாமல் போவதற்கும் என்னென்ன காரணங்கள்? ஆகிய நுட்பமான கேள்விகளுக்கெல்லாம் சாங்கிய காரிகை கூறுகின்ற பதில்களையும் விளக்கங்களையும் அடுத்த வாரம் காண்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com