அதிகாரம் - 11. செய்நன்றி அறிதல்

பிறர் நமக்கு செய்த துன்பத்தைவிட நன்மை சிறிது செய்திருந்தாலும் அதை எண்ணிப் பார்ப்பதே சிறந்தது. பிறர் செய்த உதவியை மறந்தவர், வாழ்வில் உயர் பெற முடியாது.
Published on
Updated on
2 min read

அதிகார விளக்கம்

உதவுகிறோம் என்ற நினைப்பு இல்லாமல் உதவுவதே ஆனந்தம். அது இந்த வானத்தையும், பூமியையும்விட மிகப் பெரியது. பிறர் நமக்கு செய்த துன்பத்தைவிட நன்மை சிறிது செய்திருந்தாலும் அதை எண்ணிப் பார்ப்பதே சிறந்தது. பிறர் செய்த உதவியை மறந்தவர், வாழ்வில் உயர் பெற முடியாது.

101. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

உதவி செய்கிறோம் என்று அறியாமலேயே செய்த உதவியானது, இந்தப் பூமியையும், வானத்தையும் விட மேலானது.

102. காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

சரியான நேரத்தில் செய்த உதவி சிறியதாக இருப்பினும், அதுவே இந்த உலகத்தைவிடவும் மிகப் பெரியது. 

103. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

எந்தப் பிரதி பலனும் கருதாமல் செய்த உதவியின் நன்மை, கடலைவிடவும் பெரியது.

104. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

ஒருவர் தினையளவு உதவி செய்திருந்தாலும், அந்த உதவியின் பயன் அறிந்தவர்கள், அந்த உதவியை பனையளவுக்கு உயர்த்திப் பார்ப்பார்கள்.

105. உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

ஒருவர் செய்த உதவியின் மதிப்பு, அந்த உதவியின் அளவைப் பொறுத்ததன்று; அந்த நபரின் பெருந்தன்மையைப் பொறுத்தே அமைகிறது.

106. மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு. 

மாசற்றவர்கள் உறவை மறக்கவும் வேண்டாம், துன்பத்தில் இருந்தபோது நம்மை விட்டு விலக நினைக்காதவர் நட்பை துறக்கவும் வேண்டாம்.

107. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.

உதவி செய்ததன் மூலம் தன்னுடைய துன்பத்தை நீக்கியவரின் நட்பை, தோன்றும் அடுத்தடுத்த பிறப்புகளில் நினைத்துப் போற்றுபவரே சான்றோர்.

108. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

நமக்குப் பிறர் செய்த உதவியை மறப்பது நல்லதல்ல; அதே நேரத்தில், நமக்கு ஒருவர் செய்த தீமையை உடனே மறப்பது நல்லது.

109. கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும். 

ஒருவர் கொல்வது போன்ற துன்பம் செய்தாலும், அவர் முன்னர் செய்த நன்மையை நினைத்தாலே அந்தத் துன்பம் மறைந்துவிடும்.

110. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. 

எந்த உதவியை மறந்தவருக்கும் முக்தி உண்டு. ஆனால், தனக்குப் பிறர் செய்த நன்றியை மறந்தவருக்கு முக்தி இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com