28. நலிந்தவர்களிடம் மாமூல் பெற்றால்..

மாமூல் என்ற திசைச்சொல்லுக்கு வழக்கம் என்று பொருள். இப்போதைய சூழ்நிலையில், இந்தச் சொல் கையூட்டு என்னும் பொருளில் அமைந்து..
28. நலிந்தவர்களிடம் மாமூல் பெற்றால்..

மாமூல் என்ற திசைச்சொல்லுக்கு வழக்கம் என்று பொருள். இப்போதைய சூழ்நிலையில், இந்தச் சொல் கையூட்டு என்னும் பொருளில் அமைந்து, கையூட்டு பெறுவதே வழக்கமாகிவிட்டது. செல்வந்தர்கள் தங்கள் கைப்பொருளைக் கொண்டு தங்கள் செயல்களை விரைவாக முடித்துக்கொள்கின்றனர். ஆனால் ஏழைகளோ, கொடுப்பதற்கும் வழியின்றி செயல்களையும் முடிக்கமுடியாமல் துயருறுகின்றனர். இது நமது சமூகத்தைப் பீடித்திருக்கும் நோய் என்றால் அதில் மிகையில்லை. ஒரு கட்டத்தில், இப்படி வாங்குவது உரிமை என்றே ஆகிவிட்டது. ஏழையென்றும் நலிந்தோரென்றும் பாராமல் அனைவரிடமும் பெறுவது வழக்கமாக - மாமூலாக ஆகிவிட்டது. இதற்கும் பதில் வரலாற்றின் வண்ணப்பூச்சில் இல்லாமல் இல்லை.

கிருஷ்ணகிரி அருகில் உள்ள பெண்ணேஸ்வரமடம் என்னும் ஊரில் சிவாலயத்தில் ஒரு கல்வெட்டு அமைந்துள்ளது. இது போசள மன்னன் வீரசோமநாதனின் காலத்தைச் சேர்ந்தது. பொ.நூ. 1295-ஐ சேர்ந்தது என்று அதில் இருக்கும் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்தக் கல்வெட்டில், அரசன் பிறப்பித்த ஒரு மாறுபட்ட ஆணை பதிவாகியுள்ளது. பெண்ணை நாயனார் ஆலயத்துக்கு நிலத்தைத் தானமாக கொடுத்த அரசன், அதற்கு மேல் ஒரு ஆணையையும் பிறப்பித்துள்ளான். கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் வாழும் நலிந்த மக்களிடம் அதிகாரிகளோ அல்லது கணக்கர்களோ சென்று சோறு முதலியவற்றையோ அல்லது காசாகவோ பெற்றால் அவர்கள் தலையை அறுக்கலாம் என்ற மாறுபட்ட ஆணையை அரசன் பிறப்பித்தான். அங்கு குடியிருப்போரின் நலிந்த நிலை கண்டு, இத்தகையதோர் ஆணை பிறப்பிக்கப்பெற்றதாகத் தோன்றுகிறது.

பெண்ணை நாயனார் தேவதானமான ஊர்களிலும் ஒரு அதிகாரியாதல் கணக்கர் காரியஞ்செய்வார்களாதல் கூசராதல் ஆரேனுமொருவர் வந்து விட்டது விடாமல் சோறு வேண்டுதல் மற்றேதேனுமொரு நலிவுகள் செய்குதல் செய்தாருண்டாகில் தாங்களே அவர்களைத் தலையை அறுத்துவிடவும் அப்படி செய்திலர்களாதல் தங்கள் தலைகளோடே போமென்னும்படி றேயப்புத்தபண்ணி இதுவே சாதனமாகக் கொண்டு அங்கு வந்து நலிந்தவர்களை தாங்களே ஆஜ்ஞை பண்ணிக் கொள்ளவும்..

என்பது கல்வெட்டு வரிகள்.

ஆக, நலிந்தவர்கள் வாழிடத்தில் அதிகாரிகள் சோறு கேட்பது முதல் எத்தகைய நலிவு ஏற்படுத்தினாலும் அவர்களைத் தலையறுப்பதோ அல்லது தலையோடு விடுத்து தண்டனை அளிக்கவோ அரசன் அளித்த அனுமதி ஆணையாகப் பதிவாகியுள்ளது. இந்தத் தண்டனை திரைப்படத்தில் வருவதைப்போல அமைந்திருப்பது கொடுமையானதுதான். ஆனால், நலிந்தோரை வருத்துதல் அதைக்காட்டிலும் கொடிது என்றுணர்ந்தே அரசன் இத்தகைய முடிவை எடுத்திருக்க வேண்டும் என்பது திண்ணம்.

இன்றைய சூழ்நிலையில் இத்தகைய தண்டனை அளிக்க முடியாது; அளிக்கவும் கூடாது. ஆயினும், நலிந்தோரையும் வாட்டும் இத்தகைய மாமூல் பிரச்னைக்குக் கடுமையான தண்டனைகள் வேண்டும் என்பதுதான் வரலாறு காட்டும் உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com