45. பண்டைய ஆவணங்கள்

ஊர்ப் பயன்பாடு என்று வந்துவிட்டால், ஆவணங்களைப் பாதுகாப்பது நூற்றாண்டுகள் கடந்தாலும் இன்றியமையாதது ஆகிறது.
45. பண்டைய ஆவணங்கள்
Published on
Updated on
1 min read

நம்மில் பண்டைய ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்று எத்தனை பேருக்குத் தோன்றும்? அவற்றை பழைய குப்பைகளென்றே எண்ணுவோம், அல்லது தேவையானவற்றை மட்டும் எடுத்து வைப்போம். ஆனால், ஊர்ப் பயன்பாடு என்று வந்துவிட்டால், ஆவணங்களைப் பாதுகாப்பது நூற்றாண்டுகள் கடந்தாலும் இன்றியமையாதது ஆகிறது. பூர்வராஜாக்கள் வைத்தபடி என்றும் முந்தைய அரசரின் பெயரைக் குறித்தும் வைத்த கொடைகள் பல பிற்கால கல்வெட்டுகளில் குறிப்பிடப்பெற்றிருக்கின்றன. அத்தகைய கொடையை ஆவணத்தைச் சரிபார்த்து மீண்டும் நிலை நிறுத்திய செய்தியும் வரலாற்றின் வண்ணத்தில் இருக்கிறது.

கோவை அவிநாசி அருகிலுள்ள ஆலத்தூரில் உள்ள சமணர் கோயிலில் ஒரு கல்வெட்டு அமைந்துள்ளது. இது மூன்றாம் வீரவல்லாளனின் காலத்தைச் சேர்ந்தது. இந்தக் கல்வெட்டு ஆலத்தூர் முழுமையையும் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு கோயில்களுக்கு அளிக்கப்பட்டமையையும் அதற்கான உரிமை கோரப்பட்டமையையும் காட்டுகிறது. அதற்கு முன்பிருந்த திரிபுவன சக்கரவர்த்தியான மன்னன்  அவிநாசி ஆளுடையார் கோயிலுக்குக் கொடுத்ததாகவும் சேரமான் சக்கரவர்த்தி அணியாதழகியார் என்னும் சமணர் கோயிலுக்குக் கொடுத்ததாகவும் இரண்டு கோயில் தானத்தாரும் நாட்டாரிடம் முறையிட்டனர். அப்போது அதற்கான ஆவணங்களையும் காட்டினர். இரண்டுமே பழமையான ஆவணங்களாக இருப்பதைப் பார்த்த நாட்டார், இரு கோயில்களுக்குமே உரிமை இருப்பதைப் பார்த்து இரண்டு கோயிலுக்கும் ஊரைப் பொதுவாக்கினர். தெற்கில் உள்ள தெருவையும் கீழைக்குடியையும் சமணர் கோயிலுக்கு வழங்கினர். இதற்கான ஆவணமாக இந்தக் கல்வெட்டு வெட்டப்பட்டது.

நாட்டார் முன்பு முறைப்பட்டு இரண்டு சாதனமும் காட்டுகையில் இரண்டு சாதனமும் பூர்வசாதனம் ஆனபடியாலே இரண்டு கோயிலுக்கும் பொதுவாக்கி இந்த ஊர் தெற்கில் தெருவும் இறைஇறுப்பு கீழைக்குடி சூழும் அமண தேவர்க்கு இம்மருவாதி பிறவும் திருமலையில் வெட்டுவித்து..

என்பது கல்வெட்டு வரிகள்.

ஆக, அரசர்களின் ஆட்சி மாற்றத்தில் ஒரே ஊர் இரண்டு கோயில்களுக்கு விடப்பட்டிருந்தாலும், அதன் ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டமையும் பின்னாளில் வீரவல்லாளனின் காலத்தில் நாட்டார் தகுந்த முடிவெடுத்து செயல்பட்ட தன்மையும் இன்றும் நமக்கு ஆவணத்தின் முக்கியத்துவத்தையும் இக்கட்டான சூழ்நிலையில் செய்ய வேண்டிய முறையையும் தெரிவிக்கின்றன.

இன்று அந்தக் கோயிலே பாழ்பட்டு நிற்பதுதான் வேதனையான செய்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com