38. பொதுச்சேவையில் ‘ஆதி’ மாதிரி..!

பொதுமக்களுக்குப் பயன்படும் அமைப்புகளை அரசாங்கத்தார் மட்டுமின்றி மக்களும் தனித்தனியாகவும் கூட்டாகவும் இணைந்து செயல்பட்டாலும் நிறைவேற்றிக்கொள்ள முடியும்
38. பொதுச்சேவையில் ‘ஆதி’ மாதிரி..!
Published on
Updated on
1 min read

மக்களுக்குப் பயன்படும் பொதுச்செயல்களை அரசு நிறைவேற்ற வேண்டும். ஆனால் அரசுக்கும் சில நிர்பந்தங்கள் உண்டு. எல்லாச் செயல்களையும் நிகழ்த்த நிதியும், அதற்கேற்றாற்போல ஆள்பலமும் தேவை. மெத்தனமும்கூட இத்தகைய பொதுச்செயல்களுக்குத் தடையாகலாம். இந்தச் சூழ்நிலையில், பொதுமக்களும் நிறுவனங்களும்கூட இத்தகைய செயலில் ஈடுபட்டு பொதுச்சேவை செய்யத் தயாராக வேண்டும். இத்தகைய தருணங்கள் சமீபகால வரலாற்றில் இருந்ததும் வண்ணமாகக் காட்டுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகிலுள்ள கல்லிடைகுறிச்சியில் உள்ள ஆற்றுப்பாலத்தில் ஒரு கல்வெட்டு அமைந்துள்ளது. இது பொ.நூ. 1877-ஆம் ஆண்டைச் சேர்ந்தது. இந்தக் கல்வெட்டு, ஆற்றுப்பாலத்தில் உள்ள ஸ்தூபியில் அமைந்துள்ளது. இது ஜனோபகாரத்துக்கு, அதாவது மக்களுக்கு உதவுவதற்கு ஆதி மாதிரியாக முதல் எடுத்துக்காட்டாக, துரைத்தனத்தார் அதாவது அரசாங்கத்தின் பொருளுதவியின்றி தனித்தனியாகவும் சங்கமாகவும் அளித்த நன்கொடையைக் கொண்டு ஆற்றுப்பாலத்தைக் கட்டிய செய்தியைத் தருகிறது. அவர்களுடைய செய்கை மனப்பூர்வமாக புகழத்தக்கது என்றும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. கீழே அதன் காலமாக 1877 என்ற ஆங்கில வருடமும் தரப்பெற்றுள்ளது.

இந்தியாவினிந்த பிரதேசத்தில் ஜனோபகாரத்திற்காதியான மாதிரியாக இதன் சமீபத்திலிருக்கிற பாலத்தைக் கட்டுகிறதற்குத் துரைத்தனத்தாருடைய பொருளுதவியின்றி தனித்தனியாகவுஞ் சங்கமாகவு மனப்பூர்வமாய் கொடுத்தவர்களுடைய புகழத்தக்க செய்கையைக் காட்டுகின்றன.

என்பது கல்வெட்டு வரிகள்.

இந்தியாவின் இந்தப் பகுதியில் மக்களுக்குப் பயன்படும் வகையில் முதல் எடுத்துக்காட்டாக அதன் அருகே இருக்கும் பாலத்தைக் கட்ட அரசாங்கத்தின் பொருளுதவியின்றி, தனித்தனியாகவும் கூட்டாகவும் கொடுத்தவர்களின் செய்கையைப் புகழ்ந்து அமைக்கப்பட்டதாக இந்தக் கல்வெட்டு திகழ்கிறது என்பது பொருள்.

ஆக, பொதுமக்களுக்குப் பயன்படும் அமைப்புகளை அரசாங்கத்தார் மட்டுமின்றி மக்களும் தனித்தனியாகவும் கூட்டாகவும் இணைந்து செயல்பட்டாலும் நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்பதற்கு முன்மாதிரியாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் தாங்களாகவே முன்வந்து இத்தகைய செய்கைகளில் ஈடுபட்டால், அரசாங்கத்தை மட்டும் எதிர்பாராமல் வேண்டுகோள்கள் நிறைவேறும்; நாடும் செழிக்கும். இதற்கு மக்கள் தனியாகவும் கூட்டாகவும் ஈடுபட முன்வர வேண்டும்.

முற்காலங்களில், புண்ணியம் நேரும் என்றெண்ணியே குளம் தூர்வாருதல், கிணறு முதலியன தோண்டுதல் ஆகியவற்றைச் செய்துவந்தனர். ஆனால், பிற்காலத்தில் இந்த நம்பிக்கைக் குறைவின் காரணமாக, பொதுச்சேவையெல்லாம் அரசாங்கத்தின் செயலே என்றே வாளாவிருக்கிறோம். இந்நிலை மாறி பிறருக்கு உதவிசெய்யும் முகமாகவாவது ஈடுபட்டால், நாடு செழிக்கும் என்பதில் ஐயமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com