107. வழியனுப்பல்

அண்ணாவைக் குறித்துத் தவம் இருந்ததாக வினய் சொன்னது திரும்பத் திரும்ப என்னைத் தொந்தரவு செய்துகொண்டே இருந்தது. அவனை நினைத்தேன்; அவன் என்னோடு பேசினான் என்று சொல்லியிருந்தால்..

அண்ணாவைக் குறித்துத் தவம் இருந்ததாக வினய் சொன்னது திரும்பத் திரும்ப என்னைத் தொந்தரவு செய்துகொண்டே இருந்தது. அவனை நினைத்தேன்; அவன் என்னோடு பேசினான் என்று சொல்லியிருந்தால் எனக்கு அத்தனை பாதிப்பு இருந்திருக்காது. தவம் என்ற சொல் தடுக்கிச் சற்று எரிச்சலானேன். என் குருநாதர் மூலம் எனக்கு அறிமுகமான பிருத்வி பாபாவைப் பற்றிச் சொன்னேன் அல்லவா? அவர் மடிகேரியில் தங்கியிருந்த நாள்களில் ஒரு சம்பவம் நடந்தது. அதைத்தான் நினைத்துக்கொண்டேன்.

மடிகேரியில் அப்போது ருத்ரம்மா என்றொரு மூதாட்டி வசித்து வந்தாள். அவளுக்குக் குடும்பம் குழந்தை குட்டியெல்லாம் கிடையாது. புனித மார்க் தேவாலயத்துக்கு அருகே ஒரு இடிந்துபோன கட்டடத்தின் பின்புறம் மிச்சமிருந்த மூடிய பகுதியைத் தனது வசிப்பிடமாக வைத்திருந்தாள். அந்த இடத்தில் எப்போதும் இரண்டு கோணிப் பைகளைத் திரைச் சீலையாகத் தொங்கவிட்டிருப்பாள். இன்னொரு கோணிப்பையைத் தரையில் விரித்துப் படுத்திருப்பாள். அவளுக்கு என்னவோ ஒரு வியாதி இருந்தது. அது என்ன என்று யாருக்கும் தெரியாது. பொதுவாக ருத்ரம்மா யாருடனும் பேசுவதில்லை என்பதால் அவளை நினைப்பதற்கு யாருக்கும் அங்கே நியாயம் இருந்ததில்லை. பசிக்கும்போது தேவாலயத்தின் வாசலுக்குப் போய் நிற்பாள். யாராவது பாதிரி அவளுக்கு இரண்டு ரொட்டிகளைக் கொடுத்துவிட்டுப் போவார்கள். அவளுக்கு அது போதும். எப்போதாவது நினைத்துக்கொண்டு ஊரைச் சுற்றி வருவாள். வழியில் விழுந்து கிடக்கும் பேரிக்காய், ப்ளம் போன்ற பழங்களைப் பொறுக்கி மடியில் கட்டிக்கொண்டு போவாள். உணவுத்தேவை என்ற ஒன்று இல்லாவிட்டால் நடமாட்டமே அவசியமில்லை என்று நினைப்பவளாக இருந்தாள்.

எங்கள் ஆசிரமம் இருந்த பகுதிக்கு ஒருநாள் அவள் வந்தபோது, குருநாதர் அவளை உள்ளே வந்து சாப்பிட்டுவிட்டுப் போகச் சொன்னார். அவளுக்கு அது புரியவில்லையா அல்லது விருப்பமில்லையா என்று தெரியவில்லை. ஆசிரமத்துக்கு வெளியிலேயே உட்கார்ந்து விட்டாள். திரும்பத் திரும்ப உள்ளே வரச் சொல்லிக் கூப்பிட்டும் அவள் அதைக் கண்டுகொள்ளவேயில்லை. 'சரி அவளுக்கு அங்கேயே சாப்பிட ஏதாவது கொடுங்கள்' என்று குருநாதர் சொன்னார். நாங்கள் அவளுக்கு அன்று ஒரு தட்டு நிறைய எலுமிச்சை சாதமும் சுட்ட அப்பளமும் வைத்துக் கொடுத்தோம். அவள் அந்த சாதத்தையும் அப்படியே இடுப்புத் துணியில் கொட்டி முடிந்துகொண்டு கிளம்பிவிட்டாள்.

வேறொரு சமயம் குருநாதரோடு காலை நடைக்குச் சென்றபோதும் வழியில் அவளைச் சந்தித்தேன். அம்முறை அவள் ஒரு மூங்கிலில் துளை போடும் முயற்சியில் இருந்தாள். ஆணி போல் எதையோ ஒன்றை வைத்து ஒரு மூங்கில் கழியைத் துருவிக்கொண்டிருந்தவளிடம் நெருங்கி, 'உனக்கு என்ன பிரச்னை?' என்று குருநாதர் கேட்டார். அவள் நிமிர்ந்து பார்த்தாள். சட்டென்று சிரித்தாள். மரியாதை கருதி எழுந்து நிற்கவும் செய்தாள். அவள் பைத்தியமில்லை என்று அப்போதுதான் எனக்குத் தெரிந்தது.

‘சொல்லம்மா. உனக்கு என்ன பிரச்னை?’ என்று குரு மீண்டும் கேட்டார்.

‘உடம்பு சரியில்லை’ என்று அவள் சொன்னாள்.

‘என்ன உடம்புக்கு?’

‘தெரியவில்லை. ஆனால் சாகவிடாமல் எதுவோ தடுத்துக்கொண்டிருக்கிறது’ என்று சொன்னாள். அந்தப் பதில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. சாவை எதிர்நோக்கி இருக்கிறோம் என்பதைத்தான் அவள் அப்படிச் சொல்கிறாளோ என்று நினைத்தேன். மேற்கொண்டு நாங்கள் எதுவும் பேசவில்லை. குருநாதர் அவளுக்கு ஆசி கூறிவிட்டு மேற்கொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டபடியால் நானும் அவரோடு போய்விட்டேன்.

பிருத்வி பாபா மடிகேரிக்கு வந்தபோது குருநாதர் சரியாக ஞாபகம் வைத்திருந்து, ருத்ரம்மாவை அழைத்து வரச் சொல்லி என்னை அனுப்பினார்.

அவள் தங்கியிருந்த இடத்துக்குச் சென்று நான் குரு சொன்னதைத் தெரிவித்தபோது அவள் மறுப்பு சொல்லவில்லை. என்ன விஷயம் என்று கேட்கவில்லை. குருநாதர் அழைத்து வரச் சொன்னார் என்றதுமே எழுந்து, ‘வா போகலாம்’ என்று சொன்னாள்.

பிருத்வி பாபா தங்கியிருந்த ஆதிவாசிக் குடியிருப்புக்கு நாங்கள் சென்று சேர்ந்தபோது அபூர்வமாக வெயில் அடிக்க ஆரம்பித்திருந்தது. அது நல்ல குளிர்காலம். அநேகமாக நாங்கள் வெயிலைப் பார்த்தே பல நாள்களாகியிருந்தன. எனவே பாபா தங்கியிருந்த குடிசைக்கு வெளியிலேயே நாங்கள் தரையில் ஒரு கோரைப் பாய் விரித்து அமர்ந்துகொண்டோம். குருநாதர் மட்டும் ருத்ரம்மாவை அழைத்துக்கொண்டு பாபாவைப் பார்க்க வீட்டுக்குள் சென்றார்.

இருபது நிமிடங்கள் அவர்கள் உள்ளே இருந்தார்கள். அதன்பின் ருத்ரம்மா மட்டும் வெளியே வந்தாள். என்னைப் பார்த்ததும் சிரித்தாள்.

‘என்ன சொன்னார்?’ என்று கேட்டேன்.

‘பத்து நாளில் அனுப்பிவைத்துவிடுவதாகச் சொன்னார்’ என்று சொல்லிவிட்டு அவள் மகிழ்ச்சியுடன் போய்விட்டாள்.

எனக்கு அது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. உடனே எழுந்து குடிசைக்குள் சென்றேன். ‘அவளைப் பத்து நாளில் அனுப்பிவைப்பதாகச் சொன்னீர்களாமே?’ என்று கேட்டேன்.

‘ஆம்’ என்று பாபா தலையசைத்தார்.

‘அவளுக்கு என்ன வியாதி? அதைக் குணப்படுத்த உங்களால் முடியாதா?’

‘அவள் அதைக் கேட்கவில்லையே. போக வேண்டும் என்றுதான் சொன்னாள்’.

‘இதென்ன மடத்தனம்? நோயின் தீவிரத்தில் வருடக்கணக்காக அவதிப்படுபவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். அதைத் தீர்த்து வைக்க முடிந்தால் அதைச் செய்வதை விடுத்து, அனுப்பிவைக்கிறேன் என்று சொல்வது எப்படிச் சரி?’

‘அட என்னப்பா நீ. அவளது நோயே உயிரோடு இருப்பதுதான். அதுவும் காலம் முடிந்த பின்பும் இருப்பது எத்தனைக் கொடுமை தெரியுமா? நியாயமாக அவள் ஏழு வருடங்களுக்கு முன்பே இறந்திருக்க வேண்டும்’.

எனக்கு அவர் பேசியது புரியவேயில்லை. ஆனால் அவர் செய்வது தவறு என்று நிச்சயமாகத் தோன்றியது. எனது அதிருப்தியை பகிரங்கமாக அவரிடம் தெரிவித்தேன். ‘நீங்கள் ஒன்றும் செய்யாமல் இருந்தாலே போதும். விதித்தபடி அவள் இருந்துவிட்டுப் போகட்டும்’ என்று சொன்னேன்.

‘ஏன் இத்தனை உணர்ச்சிவசப்படுகிறாய்? பாபாவுக்குத் தெரியும் விமல்’ என்று குருநாதர் சொன்னார்.

‘என்ன தெரியும்? பார்சல் செய்து அனுப்பத் தெரிவதெல்லாம் ஒரு மகானின் சிறப்பியல்பு ஆகுமா? முடிந்தால் அவளைச் சிறிது காலமாவது மகிழ்ச்சியுடன் வாழ வைக்கச் சொல்லுங்கள்’.

‘ஆம். நீ சொல்வது சரி. இந்தப் பத்து நாளும் அவள் மகிழ்ச்சியுடன் இருப்பாள்’ என்று பிருத்வி பாபா சொன்னார். அந்தப் பத்து நாளும் குருநாதரை மட்டும் தன்னோடு தங்கியிருக்கச் சொல்லிவிட்டு எங்களை மட்டும் ஆசிரமத்துக்குத் திருப்பி அனுப்பிவிட்டார்.

அதன்பின் நடந்ததுதான் வியப்புக்குரியது. மடிகேரிக்குச் சுற்றுலா வந்திருந்த யாரோ ஒரு வங்காளத் தம்பதி தற்செயலாக ருத்ரம்மாவைச் சந்தித்திருக்கிறார்கள். என்ன காரணத்தாலோ அவர்களுக்கு அவளைப் பிடித்துப் போக, ருத்ரம்மாவைத் தாங்கள் தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் சென்று அங்கேயே தங்க வைத்தார்கள். மூன்று வேளையும் ராஜ போஜனம். வெந்நீர்க் குளியல். கணப்புச் சட்டிக் கதகதப்புடன் கூடிய படுக்கை வசதி. தவிர அவர்கள் கார் வைத்துக்கொண்டு ஊர் சுற்றியபோதெல்லாம் ருத்ரம்மாவை உடன் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவளுக்குப் பிடித்தமான புடைவைகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். அவள் விரும்பிய கழுத்தணிகள், செருப்பு, ஒரு கைக்கடிகாரம் என்று அவள் ஆசைப்பட்டுக் கேட்ட அனைத்தையும் சற்றும் யோசிக்காமல் செய்து தந்திருக்கிறார்கள். ஒருநாள் ருத்ரம்மா, மைசூருக்குப் போய் அரண்மனையைச் சுற்றிப் பார்க்க விரும்புவதாகச் சொல்லப் போக, ஏற்கெனவே மைசூர் அரண்மனையைப் பார்த்துவிட்டு மடிகேரிக்கு வந்திருந்தாலும் அவர்கள் சற்றும் முகம் சுளிக்காமல் அவளுக்காக கார் வைத்துக்கொண்டு இன்னொரு முறை மைசூருக்குப் போய்விட்டு வந்திருக்கிறார்கள்.

சரியாகப் பத்து நாள். வாழ்வில் அதற்குமுன் எதற்கெல்லாம் அவள் ஆசைப்பட்டிருக்கிறாளோ, அவை அனைத்துமே அவளுக்குக் கிடைத்துவிட்டன. அந்த வங்காளத் தம்பதி யார், அவர்களுக்கு ஏன் ருத்ரம்மாவை அவ்வளவு பிடித்துப் போனது என்றெல்லாம் எனக்குத் தெரியாது. அந்தப் பத்தாம் நாள் காலை நான் ருத்ரம்மாவைச் சந்தித்தபோது, எதிர்பாராவிதமாக அவளே என்னுடன் பேசினாள். ‘இவ்வளவு திருப்தியாக நான் என்றுமே இருந்ததில்லை தம்பி. என்னை அவர்கள் சொந்தத் தாயைப் போலப் பார்த்துக்கொண்டார்கள். யாரோ என்னமோ. எங்கிருந்தாலும் அவர்கள் நன்றாக இருக்கட்டும்’ என்று சொன்னாள்.

மறுநாள் காலை விடிந்தபோதே செய்தி தெரிந்துவிட்டது. இரவு மாரடைப்பால் அவள் மரணமடைந்திருந்தாள். புனித மார்க் தேவாலயத்துப் பாதிரிகள் ஏற்பாட்டின் பேரில் அவளது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அன்று மாலை குருநாதர் ஆசிரமத்துக்குத் திரும்பி வந்தார். ருத்ரம்மா காலமாகிவிட்ட விவரத்தை நாங்கள் தெரிவித்தபோது, ‘எதிர்பார்த்தேன்’ என்று மட்டும் சொன்னார்.

‘குரூரமான பாபா பத்து நாள் அவளுக்கு சந்தோஷத்தைக் காட்டிவிட்டு சாகடித்துவிட்டார்’ என்று நான் குற்றம் சாட்டினேன். குருநாதர் சிரித்தார்.

‘ஏன் சிரிக்கிறீர்கள்?’

‘இந்தப் பத்து தினங்களும் பாபா உண்ணவில்லை. தண்ணீர் அருந்தவில்லை. உறங்கவில்லை. பேசவில்லை. இருநூற்று நாற்பது மணி நேரங்கள் முள் பலகையின் மீது நின்று தவம் புரிந்துகொண்டிருந்தார். அவளை அனுப்பிவைப்பதற்காக மட்டும்’ என்று சொன்னார்.

‘என்ன?’

‘ஆம் விமல். ஒரு பலகையின் மீது முட்களைப் பரப்பி அதன் மீது நின்று அவர் தவம் புரிந்தார். வாழ்ந்தது போதும் என்று அவள் திருப்தியடையும் வரை அவரது தவம் நீடித்தது. திருப்தியை அவள் மனம் உணர்ந்த மறுகணமே அவளை அனுப்பிவைத்துவிட்டார்’ என்று சொன்னார்.

எனக்குப் பேச்சே இல்லாமல் போனது. நெடு நேரம் தனியே போய் அமைதியாக அமர்ந்திருந்தேன். எப்படி யோசித்தாலும் அந்தச் செயல்பாட்டின் நியாயம் எனக்குப் புரியாதிருந்தது. குருநாதரிடமே கேட்டேன். ‘அப்படியென்ன அவள் முக்கியம்?’

‘அவள் முக்கியம் என்று யார் சொன்னது? அவர் முன்னால் அவள் வந்து நின்றுவிட்டாள் அல்லவா? தன் பிரச்னையைத் தெரியப்படுத்திவிட்டாள் அல்லவா? கேட்டதைச் செய்துகொடுப்பது அவரது தருமம். நீ கேட்டாலும் அவர் இதைத்தான் செய்வார்’ என்று சொன்னார்.

அதற்குமேல் என்னால் அங்கு இருக்க முடியவில்லை. பிருத்வி பாபா தங்கியிருந்த இடத்துக்கு ஓட்டமாய் ஓடினேன். பாபா அப்போது குடிசைக்கு வெளியே ஒரு கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார். அவரது கால்களில் முள் குத்தி ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. அவர் அதைப் பொருட்படுத்தாமல் வானத்தில் நகர்ந்துகொண்டிருந்த மேகங்களையே பார்த்தவாறு மல்லாக்கக் கிடந்தார்.

அருகே சென்று நான் அவரை வணங்கினேன்.

‘என்ன?’ என்று கேட்டார்.

‘எனக்கும் ஒரு பிரார்த்தனை உண்டு. நிறைவேற்றி வைப்பீர்களா?’

அவர் சிரித்தார்.

‘நீங்கள் இன்றே மடிகேரியை விட்டுப் போய்விட வேண்டும். இம்மாதிரி அற்புதங்கள் நிகழாதிருப்பதே உலகுக்கு நல்லது’ என்று சொல்லிவிட்டு திரும்பிப் பாராமல் போய்விட்டேன்.

இதைப் பற்றி குருநாதரிடமோ என் நண்பர்களிடமோ நான் சொல்லவில்லை. அது அவசியம் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால் மறுநாள் பிருத்வி பாபா அந்த ஆதிவாசிக் குடியிருப்பில் இல்லை என்று தெரிந்தது. நிம்மதியாக இருந்தது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com