3. வானம் பார்த்த கால்கள்

அவர்கள் யாரும் யோகிகள் அல்லர். அடர்ந்த கானகத்தின் சில இயற்கையான குகை சௌகரியங்கள் அவர்களுக்கு வாடகையில்லாமல் ஒதுங்க ஒரு வழியமைத்துத் தந்திருந்தது.

ஒரு திருடனைப்போலக் கானகத்துக்குள் ஊடுருவிக்கொண்டிருந்தது வெளிச்சம். இரவெல்லாம் தூங்காதிருந்ததில், விடியும்போது கண்ணை அழுத்தியது. கம்பளத்தை இழுத்துப் போர்த்திக்கொண்டு சுருண்டுகொள்ளத் தோன்றிய நினைவைத் தவிர்க்க முடியவில்லை. இம்மாதிரித் தருணங்களில் வெளிச்சம் ஒரு சௌகரியம். தவிர, நம்மைச் சுற்றி நான்கு பேர் விழித்திருக்கிறார்கள் என்ற எண்ணம் இன்னொரு கம்பளம். இரண்டு மணி நேரம் தூங்குகிறேன், பிறகு எழுப்புங்கள் என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டுத் திரும்பிப் படுத்துவிடலாம். ஆனால் திட்டம் குலைந்துவிடும். பரிச்சயமற்ற வனத்தில் நான்கு நாள்களாக அலைந்து திரிந்துகொண்டிருந்தேன். இடம் தெரியாது. இலக்கு தெரியாது. திசை தெரியாது. அபூர்வமாக எங்காவது தொலைவில் ஒற்றை விளக்கு வெளிச்சம் தெரிந்தால், ‘அதோ கிராமம்!’ என்று வியப்புடன் அந்தப் பிராந்தியத்தை நோக்கி நடக்கத் தொடங்குவோம். ஆதி மனிதர்களிடம் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, விரிவான அபிநயங்களின் உதவியுடன் நாங்கள் வந்த நோக்கத்தை விளக்குவோம். ஒரு யோகி. பிராந்தியத்துக்கு அவர் புதியவர். ஆனால் இந்தப் பகுதியில் அவர் உலவிக்கொண்டிருப்பதாகப் பார்த்தவர்கள் சிலர் சொல்லியிருக்கிறார்கள். அவரை நீங்கள் பார்த்தீர்களா? எங்கே இருக்கிறார் என்று தெரியுமா?

நான்கு நாளும் எனக்கு இல்லை, தெரியாது என்ற பதில்களே கிடைத்தன. காட்டுவாசிகளுக்கு வேறு சில துறவிகளைத் தெரிந்திருந்தது. அவர்கள் அடையாளம் சொல்லி அழைத்துச் சென்றார்கள். அவர்கள் யாரும் யோகிகள் அல்லர். அடர்ந்த கானகத்தின் சில இயற்கையான குகை சௌகரியங்கள் அவர்களுக்கு வாடகையில்லாமல் ஒதுங்க ஒரு வழியமைத்துத் தந்திருந்தது. அனுபவத்தில், பழக்கத்தில், நீண்ட நாள் பரிச்சயத்தில் அவர்கள் மிருகங்களிடம் இருந்து தம்மைக் காத்துக்கொள்ளும் வழிகளை உருவாக்கிவைத்திருந்தார்கள். தண்டகாரண்யத்தில் நான் சந்தித்த சாதுக்களுள் ஒரு சிலரை என்னால் மறக்கவே முடியாது. சித்ரகூட அருவிக்கு வடக்கே முப்பத்தி ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் கிராமவாசி ஒருவன் எங்களை ஒரு குகைக்கு இட்டுச் சென்றான். சுற்றிலும் அடர்த்தியான செம்மரங்கள் நிறைந்த பகுதி அது. யானைகள் உலவும் பகுதி என்று அவன் சொன்னான். அதனாலேயே, அடித்துத் தின்னும் மிருகங்கள் அந்தப் பக்கம் அதிகம் வருவதில்லை என்பது அவன் சொன்ன தகவல். மிருகங்கள் இப்படியெல்லாம் எல்லை வகுத்துக்கொண்டு வாழக்கூடியவையா! எனக்குத் தெரியவில்லை. எனக்கு அந்த இயலில் அதிகப் பரிச்சயம் கிடையாது. ஆனால் தெரிந்துகொள்வதில் பிரச்னையில்லை. ஒருவேளை இந்தக் கானகத்தில் என் அண்ணாவை நான் சந்திக்க நேர்ந்தால் அவனிடம் கேட்கலாம். அவன் என்னைப்போல் சுக சமரசம் செய்ய விரும்பாதவனல்ல. சொல்லப்போனால், தன்னை வருத்திக்கொள்வதன் உச்ச இன்பத்தைத் தொடுவதே சிறு வயதில் அவன் இயல்பாக இருந்தது. நாங்கள் விழுந்து புரண்டு ஆடித் திரிந்த திருவிடந்தை சவுக்குக் காட்டில் அவன் புரியாத சாதனைகள் இல்லை. என் பன்னிரண்டாவது வயதில், அவன் ஒரு நரிக்குக் கட்டளையிட்டு, அது அவன் சொன்னதை நிறைவேற்றிய காட்சியை நேரில் பார்த்திருக்கிறேன்.

அந்நாளை என்னால் மறக்கவே முடியாது. கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பு வெறும் சத்தமாக மட்டுமே கேட்கும் தொலைவி,ல் சவுக்கு மரங்கள் அடர்ந்து நிறைந்த ஒரு பகுதிக்கு அவன் என்னை அழைத்துச்சென்றான். அப்போது வானம் நன்றாக இருட்டத் தொடங்கிவிட்டிருந்தது. இருளில் ஆடும் சவுக்கு மரங்களில் மோகினிகள் மறைந்திருப்பார்கள் என்று என் இரண்டாவது அண்ணா சொல்லியிருந்ததை எண்ணிக்கொண்டேன். அடிவயிற்றில் மெலிதாக ஓர் அச்சம் புறப்பட்டு நரம்புகளின் வழியே உடலெங்கும் பரவுவதுபோல் இருந்தது. சிலிர்த்தது. எனக்குள் நிகழ்ந்ததுதான். வாய்விட்டு நான் அதைச் சொல்லவேயில்லை. ஆனாலும் என் மனத்தைப் படித்தவன்போல அண்ணா என்னைப் பார்த்துச் சிரித்தான். ‘கிளைகளற்ற மரங்களில் மோகினிகளால் எதைப் பிடித்துக்கொண்டு தொங்கமுடியும்? அவன் சொன்னதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாதே’ என்றான்.

மேற்கொண்டு நான் என் அதிர்ச்சியையோ, வியப்பையோ தெரிவிப்பதற்கு அவன் இடம் தரவில்லை. அன்றைய சாதனைக்காக அவன் தேர்ந்தெடுத்த இடம் அதுதான்போலிருக்கிறது. சவுக்குத் தோப்புக்குள் தவறி விளைந்திருந்த ஒரு காட்டாமணக்கு புதரை நோக்கிச் சென்றான். தனக்கென அங்கே அவன் மறைத்துவைத்திருந்த ஒரு சிறு பாறையை உருட்டிவந்து ஒரு மரத்தின் அடியில் போட்டான்.

‘என்ன செய்யப் போகிறாய்?’ என்று நான் கேட்டேன்.

‘நீயே பார்’ என்று சொல்லிவிட்டு அந்தப் பாறையின் மீது ஏறி நின்றுகொண்டான். உச்சந்தலைக்கு மேலே கைகளைக் கூப்பி சிறிது நேரம் கண்மூடி இருந்தான். என்ன நினைத்தானோ, சட்டென்று இடது காலைத் தூக்கி மடித்து வலது முட்டிக்கு முட்டுக் கொடுப்பதுபோல வைத்தான். எனக்கு பயம் வந்துவிட்டது. அது உருண்டையான பாறை. அம்மா உருட்டி உருட்டிக் கையில் வைக்கும் குழம்பு சாதத்தின் நிறம்தான் அதற்கும் இருந்தது. இருட்டத் தொடங்கியிருந்த நேரம் என்பதால் இன்னமுமே மங்கலாகத்தான் தெரிந்தது. என்னதான் கீழே இருப்பது கடற்கரை மணல் என்றாலும் இப்படியெல்லாம் சர்க்கஸ் செய்யத் தகுந்த பீடம் அது இல்லை என்று தோன்றியது. கொஞ்சம் சரிந்தாலும் அண்ணா கீழே விழுந்துவிடுவான். இரண்டு கால்களை ஊன்றி அந்தப் பாறையின் மீது நிற்பதே எனக்கு சிரமம் என்றுதான் பட்டது. அவன் எப்படி ஒற்றைக் காலில் நிற்கிறான்? எனக்குப் புரியவேயில்லை. நான் வியப்போடு அவனையே பார்த்துக்கொண்டிருந்தபோது, அவன் கண்களைத் திறந்தான். என்னைப் பார்த்துச் சிரித்தான்.

‘விமல், பயப்படாமல் திரும்பிப் பார். நமது விருந்தினர் என்னைப் பார்க்க வரவில்லை. நீ இந்த இடத்துக்குப் புதியவனல்லவா? உன்னைப் பார்க்கத்தான் வந்திருக்கிறார்’ என்று சொன்னான்.

விருந்தினரா! இவன் யாரைச் சொல்கிறான்? நான் குழப்பத்துடன் திரும்பியபோது எனக்கு ஏழெட்டடி தொலைவில் கண்ணில் கற்பூரம் வைத்தாற்போல ஒரு நரி நின்றுகொண்டிருந்தது. ஐயோ என்று நான் வாய்விட்டு அலறத் தொடங்கியபோது, அண்ணா சட்டென்று பாறையைவிட்டுக் கீழிறங்கி என் வாயைப் பொத்தினான். ‘கத்தாதே. அவர் உன்னை என்ன செய்தார்? அல்லது என்ன செய்துவிடுவார்? நான்தான் இருக்கிறேன் அல்லவா?’

‘வேண்டாம். எனக்கு பயமாக இருக்கிறது. நான் போகிறேன்’ என்று சொன்னேன்.

‘உனக்கு இன்று ஒரு குறிப்பிட்ட யோக சாதனையை அறிமுகப்படுத்தலாம் என்று நினைத்தேன். நீ அதை விரும்பக்கூடும். உனக்கு அது என்றைக்காவது உதவவும் கூடும்.’

‘எனக்கு என் உயிர்தான் முக்கியம். நரி நாயைப்போல் கடிக்குமா என்று எனக்குத் தெரியாது. ஆனால் நாய்க்கடிக்கு வைத்தியம் உள்ளதுபோல நரிக்கடிக்கு இருக்குமா என்று தெரியவில்லை. கோவிந்தராஜ் டாக்டர் அதிலெல்லாம் தேர்ந்தவராக இருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை.’

அவன் மீண்டும் சிரித்தான். ‘என்னை நம்பு. அது உன்னை ஒன்றும் செய்யாது. நீ என்னைக் கவனி. என்னை மட்டும்.’

‘என்னால் முடியாது. நான் போகிறேன்’ என்று சொன்னேன்.

அவன் என்ன நினைத்தானோ. ‘சரி, இப்போது அது இங்கிருந்து போக வேண்டும். அவ்வளவுதானே?’

‘ஐயோ அதை அடித்துத் துரத்தப் பார்க்காதே. ஏதாவது செய்து வைத்துவிடும்.’

‘உயிர்களைத் துன்புறுத்துவது தவறு விமல். நான் அதைச் செய்யமாட்டேன்.’

‘ஆனால் அது என்னையே முறைக்கிறது. எனக்கு பயமாக இருக்கிறது.’

‘இப்போது போய்விடும். ஒரு நிமிடம் இரு’ என்று சொல்லிவிட்டு, மீண்டும் அந்த உருண்டைப் பாறையின் பின்புறம் போய் நின்றுகொண்டு குனிந்து தனதிரு கைகளாலும் பாறையை அழுத்திப் பிடித்துக்கொண்டான். ஒரு விநாடி. இரண்டு விநாடி. மூன்றாவது விநாடி பாறையை அழுத்திக்கொண்டு அவனது உடல் அப்படியே தலைகுப்புற மேலே எழுந்தது. என் கண்ணெதிரே என் அண்ணா பாறைக்குத் தலை கொடுத்து சிரசாசனம் செய்துகொண்டிருந்தான். ஆனால் சாய்மானம் கிடையாது. அவன் கையை ஊன்றிக்கொண்டிருந்த பாறை உருளும் தன்மை கொண்டது. அசைந்துகொண்டிருந்தது. எந்தக் கணமும் அது அவனைக் கவிழ்த்துவிடும் என்று தோன்றியது.

ஆனால் நல்லவேளை அப்படி எதுவும் நிகழவில்லை. அண்ணா சில விநாடிகளில் சாய்மானமில்லாத நிலையில், அசையாது தலைகீழாக நிற்கப் பழகியவன் என்பது புரிந்துவிட்டது.

நான் நம்பமுடியாத வியப்புடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கு அந்தக் கணம் நரி அங்கே நின்றுகொண்டிருந்ததே மறந்துவிட்டது. இவன் என்ன செய்கிறான்? இதையெல்லாம் யாரிடமிருந்து கற்றான்? அப்பா, அம்மாவிடமோ, தனது மற்ற இரு தம்பிகளிடமோ இதைப் பற்றியெல்லாம் மூச்சுக்கூட விடாதவன், என்னை மட்டும் எதற்காக அழைத்துவந்து இதையெல்லாம் காட்டுகிறான்?

‘விழுந்துடப் போறடா. இறங்கிடு!’ என்று நான் கத்தினேன்.

அடுத்தக் கணம் அவன் செய்ததுதான் உச்சம். மேலே உயர்த்திய தனதிரு கால்களில் ஒன்றை அப்படியே பக்கவாட்டில் விரித்தான். ஒரு திசைகாட்டிபோல நீண்ட காலில் இருந்து பாதம் மட்டும் கழட்டிவிடப்பட்டதுபோல சற்றே வளைந்து முன்புறமாக நீண்டது. அதை இரண்டு முறை அசைத்தான். பிறகு மெதுவாக அந்தக் காலை நேராக்கி மீண்டும் வானம் பார்த்து நிறுத்தினான். அப்படியே ஒரு உண்டிவில்லைப்போல் இரு கால்களையும் முன்புறம் வளைத்து மெல்ல மெல்லத் தரையை நோக்கி இறக்கினான். இப்போது கைகளைப் பாறையில் இருந்து விடுவித்துக்கொண்டு துள்ளி எழுந்து நின்றான்.

‘திரும்பிப் பார். நமது விருந்தாளி போய்விட்டார்.’

நான் அச்சத்துடன் திரும்பிப் பார்த்தேன். அவன் சொன்னது உண்மைதான். அதுவரை அங்கு நின்றிருந்த நரி அப்போது இல்லை. எப்போது போனது? எப்படிப் போனது?

‘கையை உயர்த்தினால் நாய் விலகும். காலை உயர்த்தினால்தான் நரி விலகும்’ என்று அண்ணா சொன்னான்.

அன்றைக்கு அவன் எனக்குச் சில யோகாசனங்களைச் செய்து காட்டினான். எப்படியும் ஒரு மாதத்துக்குள் தரையில் இருந்து ஓரடி உயரத்துக்கு எழும்பி, அந்தரத்தில் அமர்ந்துவிடும் வித்தை கைகூடிவிடும் என்று சொன்னான்.

‘எப்படி இதெல்லாம் செய்யற?’ என்று நான் திரும்பத் திரும்பக் கேட்டேன். அவன் அதற்கு பதில் சொல்லவில்லை. என்னைக் கையைப் பிடித்துக்கொண்டு கடலோரத்துக்கு அழைத்துச் சென்றான். இருளும் கடற்காற்றும் சவுக்குத் தோப்பின் லயம் பிசகாத அசைவும் யாருமற்ற பெருவெளியும் தனிமையும் அமைதியும் எனக்கு மிகவும் புதிதாக இருந்தது. பிறந்தது முதல் புழங்கும் கிராமம்தான். ஆனாலும் இருட்டிய பின்பு எந்நாளும் கடலோரத்துக்கு வந்ததில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் இருட்டத் தொடங்கும் நேரம் வீட்டில் அண்ணா காணாமல் போய்விடுவதை நினைத்துப் பார்த்தேன்.

‘இருட்டு ஒரு சௌகரியம். நிறையப் புதிர்களை அப்போதுதான் அவிழ்க்கமுடியும்’ என்று அண்ணா சொன்னான். ‘விமல், உன்னிடம் ஒன்று சொல்லுவேன். இதை எப்போதாவது சமயம் வாய்க்கும்போது அம்மாவிடம் நீ சொல்லிவைக்க வேண்டும்.’

‘என்னது?’ என்று கேட்டேன்.

‘நான் ரொம்ப நாள் இங்கே இருக்கமாட்டேன்.’

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் அவன் கையைப் பிடித்துக்கொண்டு கேட்டேன், ‘விட்டுட்டுப் போயிடப்போறியா? பசிச்சா என்ன பண்ணுவ?’

அவன் புன்னகையுடன் என் தலையை வருடிக் கொடுத்தான். ‘நீ குழந்தை. உனக்குப் புரியாது. ஆனால் உன் மூலமாகச் சொன்னால்தான் அம்மாவுக்கு இது புரியும்’ என்று சொன்னான்.

அன்றைக்கு இரவு முழுதும் நான் தூங்கவேயில்லை. அண்ணா ஓடிப்போய்விடப் போகிறானே என்ற அச்சத்தில் கொட்டக் கொட்ட விழித்துக்கொண்டு அவனையே பார்த்தபடிதான் படுத்திருந்தேன். ஆனால் அவன் காலைவரை அடித்துப் போட்டாற்போல நன்றாகத் தூங்கிக்கொண்டுதான் இருந்தான். அடுத்தடுத்த நாள்களும் அப்படியேதான் கழிந்தன. அவன் சொன்னதை அம்மாவிடம் எப்படிச் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. அம்மா அழத் தொடங்கிவிட்டால் அதை என்னால் தாங்கவே முடியாது. அப்பாவிடம் சொல்லலாம் என்றால் பயமாக இருந்தது. அப்பா கோபக்காரர். அண்ணனை நிற்கவைத்து பெல்ட்டால் விளாறிவிட்டால் பெரிய கஷ்டமாகிப் போய்விடும். அதையெல்லாம்விட எனக்குப் பெரிய குழப்பம், அவன் எதற்காக வீட்டை விட்டுப் போக முடிவு செய்திருக்கிறான் என்பது. இதை என் மற்ற இரு சகோதரர்களுடன் விவாதித்தால் ஒருவேளை விடை தெரிந்துவிடக்கூடும். ஆனால் யாருக்கும் தெரியவேண்டாம் என்று கேட்டுக்கொண்டு, என்னைத் தனியே அழைத்துச் சென்று சொன்ன வார்த்தைக்கு ஒரு மதிப்பில்லையா!

சிறிது காலம் நான் அதைப் பற்றியேதான் நினைத்துக்கொண்டிருந்தேன். அண்ணாவும் வழக்கம்போலப் பகல் பொழுதுகளில் பள்ளிக்கூடத்துக்குப் போய்வந்துகொண்டிருந்தான். மாலை வேளையில் விளையாடப் போவதாகச் சொல்லிவிட்டு எங்காவது காணாமல் போய்விடுவான். இருட்டி நெடுநேரம் கழித்து வீடு திரும்புவான். அப்பா திட்டுவார். கண்டுகொள்ளாமல் சாப்பிட்டுவிட்டுப் படுத்தால், அதோடு மறுநாள் காலைதான் கண் விழிப்பான். இப்படியே சில மாதங்கள் கடந்ததில், எப்போதோ அவன் சொன்னதை நான் முற்றிலும் மறந்தே போய்விட்டேன்.

அன்றைக்குப் பொழுது விடிந்து நான் எழுந்தபோது வீட்டில் அண்ணா இல்லை. அவன் எங்கே போனான் என்று அம்மா எல்லோரிடமும் கேட்டுக்கொண்டிருந்தாள். வாக்கிங் போய்விட்டு பஞ்சாயத்து ஆபீஸில் ரேடியோ செய்தி கேட்டுவிட்டு வீடு திரும்பிய அப்பாவின் முகம் உறைந்துபோயிருந்தது. என்ன ஆச்சு என்று அம்மா கவலையோடு கேட்டதற்கு, ‘சஞ்சய் காந்தி செத்துப்போயிட்டார். ப்ளேன் ஆக்ஸிடென்ட்’ என்று பதில் சொன்னார்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com