161. சமாதிகளைக் காத்தல்

என் ரேகையே இல்லாமல் உலகெங்கும் என் கரங்களை நான் பதித்துக்கொண்டிருந்தேன். சிலரது கண்ணீரைத் துடைப்பதற்கும் சிலருக்குக் கண்ணீர் வரவழைக்கவும். என் கண்களில் இல்லாதது அது.

இரவு நானும் வினோத்தும் வீட்டின் வெளித் தாழ்வாரத்தில் படுத்துக்கொண்டோம். ‘நீங்கள் தூங்குங்கள், நான் பிறகு வந்து படுக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு வினய் கிணற்றடிக்குப் போனான். அவன் கங்காதரனைப் பார்த்துவிட்டு வந்ததில் இருந்து சரியாக இல்லாததுபோல எனக்குத் தோன்றியது. வினோத்திடம் இதனைச் சொன்னேன். ‘அவன் இத்தனை பதற்றமாக அவசியமே இல்லையே?’ என்று கேட்டான். அவன் பதற்றத்தில் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் இயல்பாக இல்லை, அவ்வளவுதான் என்று சொன்னேன். அதற்கு மேல் வினோத் ஒன்றும் பேசவில்லை. தூங்க ஆரம்பித்திருந்தான் என்று தோன்றியது.

எனக்கு உறக்கம் வரவில்லை. எல்லாமே நான் எண்ணிய விதமாகத்தான் நடக்கும் என்று தோன்றியது. அண்ணா வரமாட்டான் என்று திரும்பத் திரும்ப நினைத்தேன். அம்மாவும் ஒருவேளை அதை ஊகித்திருப்பாள். அல்லது அண்ணாவே அவளிடம் தெரிவித்திருக்கக்கூடும். ஒரு பாதுகாப்பு கருதியே அவள் கேசவன் மாமா கொள்ளி வைக்கட்டும் என்று எங்களிடம் சொன்னதாகத் தோன்றியது. மாமாவானாலும் சரி; நாங்களானாலும் சரி. ரத்த சொந்தம் இல்லாத பட்சத்தில் இத்தனைக் காலம் உடன் இருந்து பார்த்துக்கொண்டவருக்குத் தன்னால் கொடுக்க முடிந்த ஒரே அங்கீகாரம் என்று அவள் கருதியிருக்கலாம். பதிலுக்குக் கடைசியாக எங்களுக்கென ஒரு சொல்லை அவள் சேமித்து வைத்திருக்கலாம். அதை ஒரு பொக்கிஷம்போலப் பாதுகாக்கச் சொல்லி எங்களிடம் அளிக்கலாம்.

நான் சிரித்துக்கொண்டேன். எனக்கும் கடைசிச் சொற்களுக்கும் அத்தனை நல்ல உறவு இருந்ததில்லை. என் குருநாதரின் கடைசிச் சொல்லை நான் தவிர்த்துவிட்டுத் தப்பிச் சென்றது நினைவுக்கு வந்தது. ஒரு முழு வாழ்வு தராத செய்தியை ஒற்றைச் சொல் தருமா? எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. குருநாதர் ஒரு நினைவு. அண்ணா ஒரு நினைவு. அம்மா ஒரு நினைவு. நூலகத்தில் அடுக்கிய புத்தகங்களைப்போல நினைவின் வரிசைப் பலகையில் தன் இடத்தைத் தேர்ந்தெடுத்துப் பொருத்திக்கொள்ளும் நினைவுகள். ஆனால் அவை சுமை ஆவதற்கு இடம் கொடுப்பதில்லை என்பதில் நான் தெளிவாக இருந்தேன். என் சுதந்திரம் என்பதே நான் மூட்டை சுமப்பதில்லை என்பதுதான். என் அகங்காரமே அதில்தான் வாழ்ந்துகொண்டிருந்தது.

ஆனால் இப்போது எண்ணிப் பார்த்தேன். அம்மாவின் கண்ணீர் மட்டுமே என்னை வீட்டை விட்டு வெளியேற வைத்தது. அண்ணா விட்டுச் சென்றபோதும் வினய் விட்டுச் சென்றபோதும் அவள் அழுத அழுகை இப்போதும் என் நினைவில் உள்ளது. அதைப் போலி என்று என்னால் எண்ணவே முடியாது. பாசத்தின் ஸ்தூல வடிவம் கண்ணீர் என்று அன்றைக்குச் சொற்களற்று உணர்ந்தேன். அம்மாவின் மொத்தக் கண்ணீரையும் ஒரு பெரிய பனிப்பாறையாக உருமாற்றித் தூக்கிச் சென்று கடலில் எறிந்துவிட மாட்டோமா என்று ஏங்கினேன். அது சாத்தியமில்லை என்று அறிவு தெளிவுபடுத்தியபோதுதான், மிச்சக் கண்ணீரையும் மொத்தமாக இறக்கிவைக்க என்னை நான் வெளியேற்றிக் கொண்டேன்.

இதோ அம்மா இப்போது என்னருகே இருக்கிறாள். அறைக்குள் உறங்குகிறாள். அல்லது உறங்குவதுபோலக் கிடக்கிறாள். அருகே போய் உட்காரலாம். அம்மா என்று அழைத்து ஏதாவது பேசலாம். அவள் பதில் சொல்வதும் சொல்லாது போவதும் அவள் விருப்பம். ஆனால் எனக்கு இறக்கிவைக்க என்னவாவது இருந்தால், அதனைச் செய்யத் தடையேதுமில்லை. அப்படி ஏதாவது இருக்கிறதா?

யோசித்துப் பார்த்தேன். ஒன்றுமில்லை என்றுதான் தோன்றியது. இந்த அம்மா அல்ல; எந்த அம்மாவுமே விரும்பக்கூடிய ஒரு வாழ்வை நான் வாழவில்லை. ஆனால் என் வாழ்வு என் விருப்பம். என்னிடம் பொய் இல்லை. திருட்டுத்தனமில்லை. நான் பணக்காரன் இல்லை. நான் ஏழையுமில்லை. எனது ஒரே அடையாளம், நான் சுதந்திரமானவன் என்பது. எனது சுதந்திரம், பாரதத்தில் இன்னொரு பிரஜை அனுபவித்தறியாதது. இது நானே விரும்பி உருவாக்கியது. இதற்கு வடிவம் கொடுத்ததுதான் என் வாழ்நாள் பணி. வாழ்நாள் சாதனை. கண்ணீரற்ற ஒரு மனிதனை உங்களால் கற்பனையில்கூடக் கண்டெடுக்க முடியாது. ஆனால் நான் அதுதான். நான் அப்படித்தான். என்னை கார்ப்பரேட் சன்னியாசி என்றும் அரசியல் புரோக்கர் என்றும் பெண் பித்தன் என்றும் சொல்வோர் உண்டு. ஆனால் இவை எதுவுமே நானல்ல. எதையும் என்னால் நினைத்த கணத்தில் உதற முடியும் என்பதே, இத்தனைக் காலமாக நான் மேற்கொண்டு வந்த பயிற்சிகள் எனக்களித்த துணிவு.

ஒரு சமயம், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் என்னிடம் ஓர் உதவி கேட்டு வந்தார். பெல்லாரி தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான ஒரு சிறு குன்று தனக்கு வேண்டுமென்று கேட்டு. ஏற்கெனவே வேறு பலர் மூலம் முயற்சி செய்து தோற்ற பின்புதான் அவர் என்னிடம் வந்திருந்தார். அதை என்னிடம் சொல்லவும் செய்தார். ‘எப்படியாவது எனக்கு அந்தக் குன்று வேண்டும், உதவுங்கள்’ என்று கேட்டார். அங்கே அவர் என்ன செய்யப்போகிறார் என்று நான் கேட்டேன். ஒரு வீடு கட்டிக்கொண்டு வசிக்கப்போகிறேன் என்று சொன்னார். பெரும் பணக்காரர்களுக்கு இம்மாதிரி விநோதமான விருப்பங்கள் வருவது எளிய விஷயம். நிறையப் பார்த்திருக்கிறேன். அதனால் பெரிதாக வியப்பை வெளிப்படுத்தாமல், ‘முயற்சி செய்கிறேன்’ என்று சொல்லி அனுப்பிவைத்தேன்.

அந்த பெல்லாரி தொழிலதிபரை எனக்கு நேரடியாகத் தெரியாது. எனக்குத் தெரிந்த இன்னொரு கர்நாடக அரசியல் நண்பர் மூலம் அவரைத் தொடர்புகொண்டு விசாரித்தேன். பரம்பரைப் பணக்காரரான அந்த மனிதரின் மிக நெருங்கிய உறவுகள் சிலரின் சமாதி அந்தக் குன்றில் இருந்தது. அவர் அந்தக் குன்று முழுதும் பாத்தி கட்டி காப்பி பயிரிட்டிருந்தார். விளைச்சலைத் தனது தாயின் சமாதி முன் கொண்டு குவித்து ஒரு படையல் போட்டு அதன்பின் காப்பி போர்டுக்கு அனுப்பிவைப்பது தனது வழக்கம் என்று சொன்னார். நான் அவரிடம் ஒன்று மட்டும் கேட்டேன். ‘உங்களுக்குக் காப்பி பயிர் முக்கியமா? அல்லது அந்த சமாதி முக்கியமா?’

‘நான் தோட்டத்தை விற்கத் தயாராக இருக்கிறேன். அவர் சமாதிகளை அழிக்கமாட்டேன் என்று உத்தரவாதம் தர வேண்டும்’ என்று அவர் சொன்னார். அரசியல்வாதிகளுடன் முட்டல் மோதல் இல்லாதிருக்க வேண்டும் என்ற எளிய வியாபாரப் பாடம்கூட அறியாமலா அவரால் அத்தனை பெரிய தொழிலதிபராக விளங்க முடியும்?

எனக்கு அவர் கேட்டது நியாயமாகப் பட்டது. என்னைத் தொடர்புகொண்ட மகாராஷ்டிர அரசியல்வாதியிடம் விஷயத்தைச் சொல்லி, சம்மதமா என்று கேட்டேன்.

‘சமாதியாவது ஒன்றாவது? அவன் அங்கே கஞ்சா பயிரிட்டுக்கொண்டிருக்கிறான். விடுகிறானா இல்லையா கேளுங்கள். இல்லாவிட்டால் தீர்த்துவிடுகிறேன்’ என்று சொன்னார்.

நான் அமைதியாகத் திரும்பிச் சென்றேன். அந்தக் குன்றுக்கு விரைவில் ஒரு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒரு நாளெல்லாம் அங்கே சுற்றி வந்தேன். தொழிலதிபர் சொன்னது உண்மைதான். அங்கே ஆறு சமாதிகள் இருந்தன. ஆறும் அருகருகே இல்லை. வேறு வேறு இடங்களில் இருந்தன. ஒழுங்காகப் பராமரிக்கப்பட்டு வந்த சமாதிகள். அவருடைய தாயார் தந்தையார், பாட்டனார், இன்னும் ஒன்றிரண்டு உறவுகளின் சமாதிகள். அவற்றை நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஶ்ரீரங்கப்பட்டணத்தில் எனக்கு அறிமுகமான பழைய கன்னட நடிகரும் அரசியல்வாதியுமான நண்பர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். மெக்ஸிகோ ஆயுதத் தயாரிப்பு முதலீட்டின் மூலம் அந்த வருடம் அவருக்கு வந்திருந்த லாபப் பணம் இரண்டு பொதுத் தேர்தல்களுக்குப் போதுமானது என்று மிகவும் சந்தோஷமாகச் சொன்னார். எனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும்; என்ன வேண்டும் என்றும் கேட்டார்.

அதே மாதம் அதே தேதி, அதே திதியில் அடுத்த ஆண்டு அந்த மகாராஷ்டிர அரசியல்வாதிக்கு அவரது மகன் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு ஊர் போய்ச் சேர்ந்தேன். இது எனக்குத் தேவையா, எந்த விதத்தில் அவரது மரணம் எனக்கு அவசியம், இதன் பாவ புண்ணியம் என்ன, லாப நட்டங்கள் என்னென்ன - எதைப் பற்றியும் நான் சிறிதும் கவலை கொள்ளவில்லை. மீண்டும் அந்த பெல்லாரி தொழிலதிபரைச் சந்திக்கும் அவசியம்கூட எனக்கு ஏற்படவில்லை. இன்றுவரை சந்திக்கவும் இல்லை. ஆனாலும் அன்று நான் அதனைச் செய்தேன். அது அவருக்காகவா வேறு எதற்காக என்றால் என்னால் பதில் சொல்ல இயலாது. சொல்ல விரும்பமாட்டேன் என்று பொருள். ஆனால் நான் அதுதான். லாப நட்டங்களல்ல. எண்ணியது எண்ணிய விதமாக நடந்தேறுகிறதா என்பதே முக்கியம். என் ரேகையே இல்லாமல் உலகெங்கும் என் கரங்களை நான் பதித்துக்கொண்டிருந்தேன். சிலரது கண்ணீரைத் துடைப்பதற்கும் சிலருக்குக் கண்ணீர் வரவழைக்கவும். என் கண்களில் இல்லாதது அது.

நள்ளிரவு இரண்டு மணிக்கு, வினய் பின்புறக் கதவை சாத்திவிட்டு எழுந்து வந்தான். தாழ்வாரத்தில் வினோத் உறங்குவதையும் நான் உட்கார்ந்திருப்பதையும் கண்டவன், என்னருகே வந்து அமர்ந்தான். நான் புன்னகை செய்தேன்.

‘இன்னும் ஒரே நாள்’ என்று சொன்னேன்.

‘ஆம். நாளை இந்நேரம் அம்மாவைக் கிடத்திவிட்டு நாம் அருகே அமர்ந்துகொண்டிருப்போம்’.

‘மாமா அழுதுகொண்டிருப்பார்’.

‘ஆம். அதை நாம் சகித்துக்கொண்டுதான் தீர வேண்டும்’.

‘எனக்கு அழுகை வராது வினய். நீயும் அழமாட்டாய் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் வினோத் விஷயத்தில் என்னால் அவ்வளவு உறுதியாகச் சொல்ல முடியவில்லை’.

‘அழுகை ஒரு வியர்த்தம்’.

‘ஆனால் சித்தம் அதை சில சமயங்களில் மறந்துவிடுகிறது. பசியெடுப்பதாக நினைக்கிறதல்லவா? அதைப்போல’.

அவன் சிரித்தான். ‘ஒரு விஷயம் உன்னிடம் சொல்ல வேண்டும்’ என்று சொன்னான்.

‘சொல்’.

‘அந்த வைத்தியர் சாமி நம் நான்கு பேரில் யாரையோ கொலை செய்யத் தீர்மானித்திருக்கிறார் என்று நினைக்கிறேன்’.

‘அப்படியா?’

‘அப்படித்தான் தோன்றுகிறது’.

‘அவர் சொரிமுத்துவுக்குத் தெரிந்தவர் என்றாயே? சொரிமுத்து ஒன்றும் சொல்லவில்லையே’.

‘சொரிமுத்துவுக்குத் தெரியாமல் திட்டமிட்டிருக்கலாம். வேறு நோக்கம், வேறு காரணம் இருக்கலாம்’.

‘அவருக்கும் இந்த வீட்டுக்கும் என்ன சம்மந்தம்? அல்லது அவருக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்?’

‘நமக்கும் இந்த வீட்டுக்குமே சம்மந்தமில்லை. உனக்கும் எனக்குமே சம்மந்தமில்லை. இதையெல்லாம் யாருக்குச் சொல்வது? ஆனால் கிழவன் ஏதோ காரணம் வைத்திருக்கிறான் என்று தோன்றுகிறது. நான் சிறிது வெளியே போய்விட்டு வருகிறேன்’ என்று வினய் சொன்னான்.

‘நீலாங்கரைக்கா?’

‘இல்லை. இங்கேயேதான். கடற்கரைக்கு’.

‘எதற்கு?’

‘இப்போது நான் சித்ராவை சந்திக்க விரும்புகிறேன்’ என்று சொல்லிவிட்டு அவன் கிளம்பிச் சென்றான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com