ஆசனம் 11. வக்ராசனம்

பொதுவாக, எந்த ஒரு ஆண்மகனுக்கும் தன் இறுதி நாள் வரையில் காதுகளுக்கு வரக்கூடாத செய்தி அது.
Updated on
4 min read

அஷ்டாங்க யோகம்

தியானம்

வார்த்தைக்குத் தடை

விஸ்வாவின் காதுகளுக்கு அந்தச் செய்தி வந்தபோது, அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீது விமானம் மோதியதுபோலத் தூள் தூளாகிப் போனான். தனது அன்பு மனைவி ஸ்ரீஜாவைப் பற்றி, அவனது காதுகளுக்கு வந்த செய்தி அதிபயங்கரமானது!

பொதுவாக, எந்த ஒரு ஆண்மகனுக்கும் தன் இறுதி நாள் வரையில் காதுகளுக்கு வரக்கூடாத செய்தி அது.

அவள், தன்னுடன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு நபருடன் காரில் ஊர் சுற்றுகிறாள் என்பதுதான் அந்தச் செய்தி.

ஸ்ரீஜா மீது விஸ்வா உயிரையே வைத்திருக்கிறான். அலாதியான நம்பிக்கையும் வைத்திருப்பவன். அந்த நம்பிக்கையைத்தான் அவள் துஷ்பிரயோகம் பண்ணிவிட்டாளோ என்று உள்ளுக்குள் அலறினான்.

நான் அவளுக்கு என்ன குறை வைத்தேன்... வயிற்றுக்கும் உடலுக்கும் ஒரு குறையும் வைக்கவில்லையே. பின் எதற்காக அப்படிப் போனாள்?

காலையில் அவள் தனது அலுவலகத் தோழனுடன் காரில் போவதைப் பார்த்த விஸ்வாவின் நண்பனுக்கு நண்பன், அவன் தன் நண்பனிடம் சொல்ல, அந்த நண்பன் விஸ்வாவிடம் சொன்னதால் வந்த வினை இது.

மாலையில் வீட்டுக்கு வந்ததும் மனைவியிடம் அதுபற்றிக் கேட்டுவிட வேண்டும் என்று மனது பரபரத்தது.

ஒருவேளை அது பொய்யா இருந்தால்?

மனைவி தன் மீது வைத்திருக்கும் மரியாதையிலிருந்து அன்பு வரை அத்தனையும் சுக்குநூறாகிவிடுமே, என்ன செய்வது?

மனைவி வீடு திரும்பும் நேரம் வரை அவனுக்கு இருப்புக்கொள்ளவில்லை.

மனைவியின் நடத்தை சரியில்லாமல் இருந்தால், அதற்குமேல் உயிருடன் இருந்து பிரயோஜனமும் இல்லை என்று ஒரு எண்ணம் அவனை தற்கொலைக்குத் தூண்டியது.

அவள் நடத்தை சரியில்லை என்றால் நாம் எதற்காகச் சாக வேண்டும்? அவளை விட்டுவிட்டு அடியோடு நீங்கிவிட வேண்டியதுதான்.

ஆனால், பிள்ளைகளை எப்படிப் பிரிவது?

அவன் ஓரக்கண்களால் தனது மகள் ரோகிணியைப் பார்த்தான். ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். முகத்தைக் கூர்மையாக்கிக்கொண்டு கணக்குப் பாடத்தில் விடை தேடிக்கொண்டிருந்தாள். தேடுதலுக்கு ஏற்ப, உடலை முன்னும் பின்னுமாக அசைத்துக்கொண்டிருந்தாள்.

மறுபக்கம் பார்வையைத் திருப்பினான்.

மகன் குணா, மூன்றாம் வகுப்பு படிப்பவன். அப்பாவியாக ஒரு செய்தித்தாளை எடுத்து, அதனை பட்டமாக்கிப் பறக்கவிடும் ஆர்வத்தில் மடித்துக்கொண்டிருந்தான்.

மனைவி தனக்குத் துரோகம் செய்துவிட்டாள் என்றால், அதை அவனால் ஜீரணித்துக்கொள்ளவே முடியாது.

அவள் அப்படிச் செய்யவில்லை என்றால், அவளைச் சந்தேகித்ததையும் தன்னால் ஜீரணித்துக்கொள்ள முடியாது.

ஆனால், அவனது நிலையில் எந்த ஒரு ஆண் மகனாலும் அப்படி இருக்க முடியாதே.

இப்போது இருதலைக்கொள்ளி எறும்பாகி, அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடைபோட்டுக்கொண்டிருந்தான்.

அவனது சந்தேகம் வலுத்ததற்குக் காரணம், அன்று வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. வானம் கொஞ்சம் மூடி இருந்தாலும் அவன் மனைவியை மூடிக்கொள்வான். அவளுக்கும் அது பிடிக்கும். ஏதோ நினைத்துப் பார்த்து, அருவருப்பால் உடல் நெளிந்தான்.

மகள் ரோகிணி நிமிர்ந்து பார்த்தாள்.

என்னப்பா ஆச்சு உங்களுக்கு? ஏன் இப்படி குறுக்கும் நெடுக்குமா நடந்துகிட்டிருக்கீங்க? காபி வெச்சித் தரட்டுமா? என்றாள் அக்கறையோடு.

அவள் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றான். மனைவி தடம்மாறிப்போய், அதனால் ஏற்படப்போகும் விளைவுகளில் அந்தப் பிஞ்சுமுகங்களின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்று பயந்துபோய் முகம் வெளிறினான். வியர்த்துக்கொட்டியது.

இப்படியே இந்த உயிர் போய்விட்டால் தேவலாம் போலிருந்தது அவனுக்கு.

இப்போது மகன் திரும்பிப் பார்த்தான்.

என்னப்பா குட்டி போட்ட பூனை மாதிரி நடந்துட்டே இருக்கீங்க? அம்மா வரலியேன்னு கோபமா. அம்மா எப்பவும் இந்நேரத்துக்கு வந்துடுவாங்க. இன்னிக்கு என்னமோ தெரியலை. இன்னும் ஆளைக் காணோம். இருங்க நான் ஃபோன் பண்றேன்... என்று ஓடிச்சென்று மொபைலை எடுத்து பிஞ்சு விரல்களால் எண்களை அழுத்தினான்.

குணா போனை வை. மூணு மணி நேரமா நானும் போட்டுப் போட்டுப் பார்த்துட்டேன். ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வெச்சிட்டா. அந்த அளவுக்கு யாரோட என்ன வேலையோ. கருமம் கருமம் என்றவாறு தலையில் அடித்துக்கொண்டே, வெளி வராந்தாவுக்குப் போனான் விஸ்வா.

மீண்டும் உள்ளே திரும்பியவன், வீட்டு லேண்ட்லைனில் இருந்து ஸ்ரீஜாவின் அலுவலகத்துக்கு போன் செய்தான். ரிங் போய்க்கொண்டே இருந்தது. சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தான்.

அலுவலகம் மூடி ஒருமணி நேரம் ஆகிவிட்டது. அது அநாதையாகக் கத்திக்கொண்டிருப்பதை விரும்பாதவனாக, ரிசீவரை வைத்துவிட்டு, வெளியில் பார்த்தான்.

ஜன்னல்கள் மழை நீரால் மங்கிக்கொண்டிருந்தன. சடசடவென்று கனமழையாக வலுத்தபோது, இதய நோயே வந்துவிட்டதுபோலப் பயந்துவிட்டான்.

ச்சே… என்ன சோதனை இது. இப்படியுமா பெண்கள் இருப்பார்கள். காலம் எப்படி மாறிவிட்டது. பச்சைத் துரோகி அவள்!

அம்மாவாவது ஒரு ஃபோன் பண்ணியிருக்கலாம் என்று எதார்த்தமாகக் கேட்டபடியே எழுதிக்கொண்டிருந்தாள் ரோகிணி.

அம்மாவுக்கு முக்கியமான வேலையா இருந்தா எப்படிடி ஃபோன் பண்ணுவாங்க என்று திருப்பிக் கேட்டான் குணா.

அதற்கு மேல் விஸ்வாவினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

அவன் எந்த ஒரு சின்னப் பிரச்னைக்கும் பூஜை அறைக்குள் சென்று கண்களை மூடி உட்கார்ந்து தியானித்து, கடவுளிடம் முறையிடுவது வழக்கம்.

இன்றோ பெரிய பிரச்னை. அதுவும் இதுவரையிலும் வராத பிரச்னை. குடும்பப் பிரச்னை, வாழ்க்கைப் பிரச்னை.

நினைவு வந்தவனாக பூஜை அறைக்கு ஓடினான். கடவுள் படங்களை வெறித்துப் பார்த்தபடி நின்றான்.

தனக்கு ஏற்பட்ட சோதனை குறித்து மனத்துக்குள்ளேயே முறையிட்டான். சிறிது நேரம் கண்கள் மூடி உட்காரலாம்போல் இருந்து. எதுவும் நினைக்கக்கூடாது என்று தீர்மானித்துக்கொண்டு, கண்களை மூடி உட்கார்ந்து தியானித்தான்.

அழுகை வந்தது. அழுது வடித்தான்.

கொந்தளித்தான்… கொதித்தான்… குமுறினான்.

எல்லாம் ஓய்ந்துபோன நேரத்தில், காலிங் பெல் அடித்தது.

பிள்ளைகள் ஓடிப்போய்க் கதவைத் திறந்தனர்.

வெளியே ஸ்ரீஜா.

அப்பா வந்துட்டாரா? – பிள்ளைகளைப் பார்த்தவுடன் அவள் கேட்ட முதல் வார்த்தை.

ஓ, எப்பவோ! உன்னை காணோம்னுதான் தவிச்சிட்டிருக்காரு. ஏம்மா உன் ஃபோன் என்னாச்சு? ஒரு ஃபோன்கூடப் பண்ணக்கூடாதா?

சரி, அப்படியே பின்பக்கக் கதவை திறங்க. அம்மா குளிக்கணும். அப்பாவை டிஸ்டர்ப் பண்ணாதீங்க.

இப்ப எதுக்கும்மா குளிக்கப்போறே?

ஷ்ஷ்ஷ்… என்று சொல்லிவிட்டு குளியல் அறைக்குள் சென்றாள் ஸ்ரீஜா.

மகன் கேட்டது, மனைவி சமாளித்ததைக் கேட்ட, விஸ்வா முடிவே கட்டிவிட்டான்.

இனி உயிரோடு இருந்து பயனில்லை. எவனோ ஒருத்தனோட கூத்தடிச்சிட்டு வந்திருக்கா. ச்சே, என்ன ஜென்மம்.

அதற்குள், ஸ்ரீஜா குளித்துவிட்டு மாற்றுச் சேலையோடு ஈரத்தலையைத் துவட்டியபடி பூஜை அறைக்குள் வந்தாள்.

சாரிங்க. எங்க எம்.டி. திடீர்னு செத்துட்டாரு. வீட்டுக்கு கெளம்பற நேரத்துலதான் தெரிஞ்சுது. உடனே, நானும் மேனேஜரும் அவரோட காருலதான் எம்.டி. வீட்டுக்கு போனோம்.

பெரிய அரசியல்வாதிங்கறதால, கட்சிக்காரங்க கூட்டம். கூட்டத்தை விலக்கிக்கிட்டு உள்ள போனோம். எம்.டி.யோட மனைவி அழுதுக்கிட்டு இருந்தாங்க. பார்க்க பாவமா இருந்துச்சு. சரி, உங்களுக்கு போன் பண்ணலாம்னு செல்போன தேடினேன். கூட்டத்துக்குள்ள நுழைஞ்சி போனதுல கீழே விழுந்திட்டிருக்கு. சரி, இப்ப தேட முடியாதுன்னு விட்டுட்டேன். இருந்தாலும், வீட்டுல நீங்களும் பசங்களும் எனக்காக காத்துகிட்டிருப்பீங்கன்னு நெனச்சி, எம்.டி. மனைவிகிட்ட சொல்லிட்டு வந்துட்டேன். சரியான மழை வேற. அதான் லேட் ஆய்டுச்சி… இருங்க உங்களுக்கு காப்பி எடுத்துட்ட வரேன். சீக்கிரமா டிபன் பண்ணிடறேன் என்றவாறு அடுக்களை நோக்கி ஸ்ரீஜா ஓடியபோது, விஸ்வா தன்னை நினைத்து மனத்துக்குள் வெட்கத்தால் அழுதுகொண்டிருந்தான்.

கொஞ்சம் நிதானம் தவறியிருந்தாலும் நிலைமை சிக்கலாகியிருக்கும். மனத்தைக் கட்டுப்படுத்தி பூஜை அறைக்குள் சென்று அமர்ந்தது நல்லதாகப் பட்டது. தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான்.

ஆக, ஒவ்வொரு மனிதனுக்கும் தியானம் மிகவும் அவசியம். மனதோ உடலோ இயல்பு நிலையில் இல்லாதபோது, சிறிது நேரம் கண்களை மூடி உட்கார்ந்து தியானித்தால், எந்தப் பிரச்னையில் இருந்தும் மீண்டு வந்துவிட முடியும்.

ஆசனம் 11

வக்ராசனம்

முதுகுத் தண்டுவடத்தை இடவலமாகத் திருகி முறுக்கும் ஆசனம்.

செய்முறை

• விரிப்பின் மீது கால்களை நீட்டி அமரவும்.

• வலது காலை, இடது காலுக்கு வெளிப்பக்கம் வைக்கவும்.

• இடது கையை மடக்கி வலது முழங்காலுக்கு வெளிப்பக்கமாக வைத்துத் தடுத்து, கணுக்காலைப் பிடித்துக்கொள்ளவும்.

• வலது கையை முதுகுக்குப் பின்பக்கமாக, புட்டத்துக்கு நடுவாகத் தள்ளிவைத்து, வலப்பக்கமாக நன்றாகத் திரும்பவும்.

• நீண்ட சுவாசங்கள் எடுக்கவும்.

• பின்னர் மெதுவாகக் கைகால்களைத் தளர்த்தி இயல்பு நிலைக்கு வரவும்.

• அடுத்த கட்டமாக, இடது காலை எடுத்து வலது காலுக்கு அடுத்து வைக்கவும்.

• வலது கையை இடது முழங்காலுக்கு வெளிப்பக்கமாக வைத்துத் தடுத்து கணுக்காலைப் பிடித்துக்கொள்ளவும்.

• இடது கையை முதுகுக்குப் பின்பக்கமாகப் புட்டத்துக்கு நடுவாகத் தள்ளிவைத்து, இடப்பக்கமாக நன்றாகத் திரும்பவும்.

• நீண்ட சுவாசங்கள் எடுக்கவும்.

• பின்னர், மெதுவாகக் கைகால்களைத் தளர்த்தி இயல்பு நிலைக்கு வரவும்.

பலன்கள்

முதுகுத் தண்டுவடம் இடமும் வலமுமாகத் திருகி முறுக்கப்படுவதால், கல்லீரல் மண்ணீரல் போன்ற உள் உறுப்புகள் இழுக்கப்பட்டு, அவற்றில் ரத்த ஓட்டம் நன்றாகப் பாய்ந்து, பித்த நீர் மற்றும் இன்சுலின் சுரக்க ஏதுவாகிறது.

இதனால், செரிமானம் அதிகரிக்கிறது.

சர்க்கரை நோய் குணமாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com