ஆசனம் 7. புஜங்காசனம்

அவளைப் பெண் பார்க்க வந்தபோது, காதருகே சென்று மாப்பிள்ளையின் தாயார் பங்கஜம் இப்படிக் கிசுகிசுத்தாள்.
Updated on
3 min read


இயமம்

கட்டுப்பாடு

(ஆர்வக் கோளாறு கூடாது)

மாமியார் கைப்பக்குவம்

ரம்யா வேலைக்குப் போகிறவள். அவளுக்குச் சமைக்கத் தெரியாது.

அவளைப் பெண் பார்க்க வந்தபோது, காதருகே சென்று மாப்பிள்ளையின் தாயார் பங்கஜம் இப்படிக் கிசுகிசுத்தாள்.

“பாரும்மா, எங்களுக்கு வசதிக்கு ஒண்ணும் குறையில்லை. நீ வந்து மகாராணியாட்டமா உட்கார்ந்தே சாப்பிடலாம். ஆனா என் பையனுக்கு வாய்க்கு ருசியா சமைச்சுப் போடணும். அதுதான் உன்கிட்ட கெஞ்சிக் கேட்டுக்கறது”.

“அத்தை, நான் உண்மையைச் சொல்லிடறேன். எனக்குச் சமைக்கவே தெரியாது” என்று செல்லமாக முகத்தைச் சுழித்தபோது, அந்த அழகில் மயங்கிப்போய் கன்னத்தில் ஒரு “இச்” கொடுத்து, “யூ டோன்ட் ஒர்ரி. அவன் என்னோட டேஸ்ட்டுக்கு பழகிப்போனவன். நான் சொல்றதை மட்டும் நீ செஞ்சா போதும். சரியா?” என்றாள் பங்கஜம்.

“இப்பத்தான் நிம்மதியா இருக்கு அத்தே”.

மலையைச் சாய்த்த மகாராணிபோல, பெருமிதத்தோடு சமையலறையிலிருந்து வெளியேறினாள் பங்கஜம்.

திருமணமாகி, சுற்றுலாக்கள் சலித்து, தேனிலவும் தேய்பிறையானது.

ஒரு சுபதினத்தில், சுபஹோரை பார்த்து அடுக்களைக்குள் அடியெடுத்து வைத்தாள் ரம்யா.

“அத்தை கொஞ்சம் உள்ள வர்றீங்களா?” என்று மரியாதையோடு குழைந்து அழைத்தாள்.

“நான் கூட இருந்தா உனக்குக் கூச்சமா இருக்கும்மா. ரெண்டு பேரும் முட்டி மோதிக்க நேரிடும். அதனால ஜன்னலுக்கு அந்தப் பக்கமா வராந்தாவுல உட்காந்துக்கறேன். நான் ஒவ்வொன்னா சொல்லச் சொல்ல, அதை மட்டும் நீ செஞ்சிட்டே வந்தா போதும். நான்தான் சமையல் பண்ணியிருக்கேன்னு நெனைச்சி, அவன் ஒரு பிடி பிடிச்சிடுவான். அப்பறமா உண்மைய சொல்லிக்கலாம்” என்றாள் பங்கஜம்.

பங்கஜம் குரல் கொடுத்தது போலவே, குக்கரில் அளவு மாறாமல் அரிசியும் தண்ணீரும் வைத்து சமையலை ஆரம்பித்தாள் ரம்யா.

மதியம், பசியோடு வந்து அமர்ந்தான் சுரேஷ்.

பங்கஜம், ரம்யாவைப் பரிமாறச் சொல்லிவிட்டு, தூரத்தில் உட்கார்ந்து ஓரக்கண்ணால் நோட்டம் விட்டாள்.

சாதத்தில் ஊற்றிய சாம்பாரை பார்த்தவுடனேயே முகத்தைச் சுளித்தான் சுரேஷ். அதைப் பிசைந்தெடுத்து வாயில் வைத்த மாத்திரத்தில் புரை ஏறியது. ரம்யா உச்சந்தலையைத் தட்டித் தடவினாள்.

“ஊர்ல இருக்கற அக்காதாண்டா நினைக்கிறா!” என்றாள் பங்கஜம்.

“அக்கா என்னை நினைக்கறதுக்கு இதுதான் நேரமாம்மா? சாப்பாட்டுல பயங்கர காரம்ம்மா…”

புடலங்காய் கூட்டை எடுத்து வாயில் வைத்தவன், அப்படியே துப்பினான்.

“என்னடா ஆச்சு உனக்கு?” என்றபடி எழுந்து வந்தாள் பங்கஜம்.

“சமையல் நீ பண்ணலையா?”

“நான்தான் பண்ணினேன்!”

“பொய் சொல்லாதே. நீ பண்ணவே இல்லை. உண்மையச் சொல்லு!”

“நானே என் கைப்பட பண்ணதுடா”.

“உன் கைச்சமையல் எனக்குத் தெரியாதாம்மா? ஏம்மா பொய் சொல்றே?”

“கோச்சிக்காதீங்க. அம்மா சொல்லச் சொல்ல நான்தான் செஞ்சேன்” என்றால் ரம்யா.

“அம்மா சொன்னபடி செஞ்சிருந்தா எப்படி ருசி மாறும்?”

சுரேஷ், தயிரை ஊற்றி ஊறுகாயைத் தொட்டுக்கொண்டான்.

“நான்தாண்டா அவளுக்கு சமையலையே பழக்கினேன். நான் சொல்லச் சொல்ல அப்படியேதான் செஞ்சிருக்கா. அப்புறம் எப்படிடா ருசி மாறும்” என்றபடி சாம்பாரை உள்ளங்கையில் விட்டு உறிஞ்சிய வேகத்தில் முகம் சுளித்தாள் பங்கஜம்.

கூட்டைச் சுவைத்துப் பார்த்துவிட்டு உதடுகளைக் கசப்புடன் நெளித்தாள்.

பொறியலை எடுத்தபோது எண்ணெய் வழிந்தோடியது!

ரம்யாவை முறைப்பதுபோலப் பார்த்தாள் பங்கஜம்.

“என்ன ரம்யா, நான் சொன்னதை எல்லாம் அப்படியே செஞ்சியா? அளந்து அளந்து சொன்னேனே. அதன்படி போட்டிருந்தா எப்படி டேஸ்ட் மாறும்?”

பங்கஜம் சாதத்தை எடுத்து நசுக்கிப் பார்த்தாள்.

சாதம் மட்டும்தான் நான் சொன்ன மாதிரி வந்திருக்கு. மத்த எல்லாமே மாறிப்போயிருக்கு. என்னதான் பண்ணே, சொல்லேன் ரம்யா. தெரிஞ்சுக்கலாம்ல?

“நீங்க சொன்னபடிதான் செஞ்சேன் அத்தை. ஆனா...” என்று மழுப்பினாள் ரம்யா.

“எனக்குத் தெரியாதாம்மா. நீயே சொல்லிட்டா சமத்து; இல்லேன்னா நானே சொல்லிடுவேன்”.

அத்தையின் கொடுமை ஆரம்பமாகிவிட்டது என்பதைப் புரிந்துகொண்டு கண் கலங்கினாள் ரம்யா.

“அப்படி என்னம்மா பண்ணிட்டா. அதை நீதான் சொல்லேன். புரிஞ்சுக்குவா இல்லியா?” என்றான் சுரேஷ்.

“அப்படிக் கேளு. உப்பு, மசாலா, எண்ணெய் எல்லாத்தையுமே சொன்னதைவிட கூடுதலா போட்டிருக்கா, சரியா?

“எப்படி அத்தை அவ்வளவு கரெக்ட்டா சொன்னீங்க. தப்பு என் மேலதான். நீங்கதான் வருஷம் பூராவும் பண்றீங்களே. இன்னிக்கு நான் பண்றேன். அதனால, இன்னும் கொஞ்சம் டேஸ்ட்டா இருக்கட்டுமேன்னுதான் உப்பு, புளி, காரம் எல்லாத்தையுமே கொஞ்சம் அதிகமாவே போட்டேன். இப்படி ஆகும்னு தெரியாது அத்தை. என்னை மன்னிச்சுடுங்க. இனிமேல் அப்படிப் பண்ணமாட்டேன்”.

ரம்யா இப்படிச் சொன்னதும், பங்கஜம் அருகே வந்து ரம்யாவின் கன்னங்களைச் செல்லமாகக் கிள்ளினான்.

எதையுமே அளவோடு பிரயோகிக்க வேண்டும், ஆர்வக் கோளாறு கூடாது என்பதே இயமம்.

7. புஜங்காசனம்

புஜங்களைக் கொண்டு செய்யும் ஆசனம் என்பதால் இது புஜங்காசனம் ஆயிற்று. இதற்கு சர்ப்பாசனம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. காரணம், சர்ப்பமாகிய பாம்பு ஊர்ந்து செல்லும்போதும், படம் எடுக்கும்போதும், தலையை மட்டும் உயர்த்திவைத்திருக்கும்.

இந்த புஜங்காசனம் செய்பவருடைய உடல் தோற்றமும் பாம்பின் வடிவைத்தைக் காட்டுவதால் இதற்கு சர்ப்பாசனம் என்ற பெயரும் உண்டு.

செய்முறை

  • குப்புறப் படுத்த நிலையில் நெற்றியை விரிப்பின் மீது வைக்கவும்.

  • பிறகு இரண்டு உள்ளங்கைகளையும் நெற்றிக்கு இணையாக பக்கவாட்டில் வைத்து, நெற்றியை விரிப்பின் படியுமாறு வைத்துக்கொள்ளவும்.

  • சுவாசத்தை உள்ளிழுத்தவாறு, முகத்தை உயர்த்திக்கொண்டே நிமிரவும். மார்புப் பகுதியை முடிந்த அளவு வயிறு வரை உயர்த்தி நிறுத்தவும். கைகளால் உடலைத் தாங்கி நிற்கவும். முகம் ஆகாயத்தைப் பார்த்தவாறு இருக்க வேண்டும். தொண்டைப் பகுதித் தசைகள் இழுத்துப் பிடித்தது போன்ற உணர்வைப் பெற வேண்டும்.

  • இந்த நிலையில் ஆறு முறை ஆழ்ந்து சுவாசிக்கவும்.

  • பிறகு, மெதுவாக தலையைத் தாழ்த்தியவாறு, மார்பை விரிப்பின் மீது வைத்து நெற்றியைப் படியச்செய்து, ஆரம்ப நிலைக்கு வரவும்.

  • இந்த ஆசனத்தை மூன்று முறை செய்யவும்.

</p><p align="JUSTIFY"><strong>பலன்கள்</strong></p><p align="JUSTIFY">இந்த ஆசனத்தால், தலைப் பகுதியிலிருந்து கால் பகுதிக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கிறது. கழுத்துப் பகுதியில் உள்ள வட்ட எழும்புகளுக்குச் சிறப்புப் பயிற்சிகள் கிடைப்பதால் “ஸ்பாண்டிலைஸிஸ்” (Spondilysis) என்ற பாதிப்பு வராமல் தடுக்கலாம்.</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com