ஆசனம் 36. கந்தாராசனம்

சங்கர் பதிலுக்கு அவனுக்கு டாட்டா காட்டிவிட்டு, காரைத் தாண்டி பள்ளிக்கு நடைபோட்டான்.


அஷ்டாங்க யோகம்

சமாதி
யோக நீதிக் கதை


உலகம் ஒன்றுதான்


ஒரு காலைப் பொழுது -


சந்தோஷபுரம் முதல் தெருவில், தனது குடிசை வீட்டுக்கு முன்னால் மணலில் காலைப்பொழுதில் விளையாடிக்கொண்டிருந்தான் சங்கர். தெருவுக்குள் வந்த பென்ஸ் காரைப் பார்த்ததுமே வீட்டுக்குள் பதறி அடித்துக்கொண்டு ஓடினான்.
அம்மா பென்ஸ் வந்துடுச்சு, நான் கிளம்பறேன் என்றபடி காக்காய் குளியல் போட்டுவிட்டு, புத்தகப் பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.
வாசலை அடைத்துக்கொண்டு நின்ற கருப்பு நிற பென்ஸ் காரின் பெட்ரோல் மணத்துக்கொண்டிருந்தது.


டிரைவர் காரின் கதவைத் திறந்துவிட்டார்.


சங்கரைப் பார்த்து “ஹை” என்றபடி முன்பக்கக் கதவின் வழியாக காருக்குள் தாவினான் திலீப்.


சங்கர் பதிலுக்கு அவனுக்கு டாட்டா காட்டிவிட்டு, காரைத் தாண்டி பள்ளிக்கு நடைபோட்டான்.


வாசலுக்கு வந்த சங்கரின் தாய் எல்லம்மாள், பார்த்து போய்ட்டுவாப்பா. ஓரமா நடந்துபோ என்று எச்சரித்தாள்.


சங்கரும் எதிர்வீட்டு திலீபும் ஆறாம் வகுப்பு படிப்பவர்கள். பெருஞ்செல்வந்தர் தர்மலிங்கத்தின் வீட்டுச் செல்லப்பிள்ளையான திலீப், தனியார் பள்ளியில் படிப்பவன்.


கூலித் தொழிலாளி ராமையாவின் மகன் சங்கர், அரசுப் பள்ளியில் சத்துணவோடு படிப்பவன்.


ஆஸ்பெட்டாஸ் போட்ட சின்ன வீடு சங்கர் வீடு. எதிரில் இரும்புக் கதவுப் பங்களாதான் திலீபின் வீடு.


இரு வேறு உலகங்களையும் ஒரே தெருவில் காண சந்தோஷபுரம் முதல் தெருவுக்குள் வர வேண்டும்.


மாலையில் திலீப் அதே காரில் டியூஷன் போய்வருவான். அது முடிந்து கீபோர்டு வகுப்புக்குப் போவான்.


அவற்றுக்கெல்லாம் செல்ல சங்கருக்கு வசதி இல்லை. ஆனால், திலீப் போய்வருவதை வேடிக்கை பார்த்துக்கொண்டே தெருவில் விளையாடுவான்.
திலீபின் வீட்டில் தினமும் அறுசுவை விருந்துதான். செல்வந்தர்கள் வீட்டுச் சமையல் வாசம் தெருவையே கூப்பிடும். ஆனால், சோறு போடாது!
சங்கர், அந்தச் சமையல் வாசனை பிடித்து ஏங்குவான்.


சங்கரின் தந்தை ராமசாமி வாங்கும் சம்பளம் குடும்பத்தை நடத்துவதற்கே போதாது. தாய் எல்லம்மாள் தென்னங்கீற்றில் இருந்து தென்னந் துடைப்பம் தயாரித்து விற்பாள். சாதம், ரசம், சீசனுக்குக் கிடைக்கும் மலிவான காய்கறிப் பொரியல். இதுதான் சங்கர் வீட்டுச் சாப்பாடு.


வாய்க்கு ருசியான சாப்பாடு கேட்டாள்,
கொஞ்சம் பொறுப்பா. கடவுள் சீக்கிரம் கண்ணத் தொறப்பாரு. நல்ல காலம் நிச்சயம் பொறக்கும். நீ படிச்சி முடிச்சி நல்ல வேலைக்குப் போயிட்டா, நாமும் தினமும் வாய்க்குருசியா சாப்பிடலாம் என்பாள் எல்லம்மாள்.
ஆறாம் வகுப்பில் இருந்து ப்ளஸ் டூ வரை, எல்லாம்மாள் மாற்றிப் பேசியதே இல்லை. இதே பதில்தான்.


*
எதிர்வீட்டு திலீப், பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான். சங்கருக்கு கல்லூரியில் சேர வசதியில்லை.


சங்கர் ஒரு மருத்துவமனையில் வார்டுபாயாகச் சேர்ந்தான்.
ஆண்டுகள் ஓடின.


இன்ஜினீயர் ஆனதும் திலீப்புக்கு திருமணம் ஆனது.
ஏம்மா, நல்ல காலம் வரும் வரும்னு சொன்னியே. இனி எப்பதான் நல்ல காலம் வரும்?


சங்கரின் கேள்விக்கு எல்லம்மாள் பதில் சொன்னாள் -
பொறுடா. உனக்கு வரப்போற பெண்டாட்டியோட நேரம் நல்லா இருக்கும். அப்பறம் ஒனக்கு நல்ல காலம்தான்...


அம்மாவின் பேச்சை நம்பினான். விரைவிலேயே அவன் ஒரு ஏழைப்பெண்ணை திருமணம் செய்துகொண்டான்.


சங்கருக்கு, வார்டு பாயிலிருந்து கம்பவுண்டராக பிரமோஷன் கிடைத்தது.
திலீப், அமெரிக்காவில் வேலை கிடைத்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டான்.
சங்கரின் குடும்பமோ தொடர்ந்து வறுமையில் வாடியது.


குலதெய்வம் கோயிலுக்கு போனபோது, சங்கர் விரக்தியின் உச்சத்தில் இருந்தான்.


எதுக்கும்மா இந்தக் குலதெய்வ வழிபாடெல்லாம். எதிர்வீட்டு திலீப், சின்ன வயசுல இருந்தே வசதியா வாழ்றான். அவனை பார்த்து பார்த்து ஏங்கிக்கிட்டே இருக்கேன். நாம கும்பிடற சாமி நமக்கு மட்டும் கண்ணையே தொறக்கமாட்டேங்குது. திலீப் வீட்டுல, அவங்க குலதெய்வத்துக்குக் கெடா வெட்டி பொங்க வெக்கிறாங்க. அவங்களுக்கு மட்டும் பணக்கார சாமியாம்மா? ஆசைப்பட்ட கறி மீனகூடவா நாம தின்னக்கூடாது? அந்த அளவுக்கா நாம பாவம் செஞ்சிட்டோம். அடுத்தவங்க சாப்பிடறதையும், வசதியாக இருக்கறதையும் பார்த்து இன்னும் எத்தனை காலத்துக்குதான் ஏங்கறது…


எப்பதான் நமக்கு நல்ல காலம் வரும். நல்லா படிச்சிருந்தாலாவது திலீப் மாதிரி நல்ல வேலைக்குப் போயிருக்கலாம். அதுக்கும் வாய்ப்பு இல்ல. என்னம்மா அநீதி இது. நல்ல காலம் வரும் வரும்னு சொல்லிட்டே இருக்கே. சின்ன வயசுல இருந்தே கேட்டுக்கிட்டுத்தான் இருக்கேன். ஆனா, அது வந்தபாடில்லை. சாமியோட சேர்ந்து நீயும் என்னை ஏமாத்தறியே என்று வஞ்சனையோடு சொல்லவும், எல்லம்மா வாய் விட்டு அழுதாள். மகனுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் திகைத்தாள்.


அம்மாவ எதுவும் சொல்லாதப்பா… மகனைத் தேற்றினார் ராமையா.
வீட்டுக்கு வந்த பிறகும் விடவில்லை சங்கர்.


அம்மா… என்ன சாமி ஏமாத்தியிருந்தா கவலைப்படமாட்டேன். பெத்த தாய் நீதான் என்னை ஏமாத்திட்டே. அதை என்னால தாங்கிக்கவே முடியல. பாரு, நம்ம குடும்பத்துல எப்பவும் வறுமை, தரித்திரம் என்று சொன்ன சங்கரின் வாயை கையால் மூடினாள் எல்லம்மாள்.


மகன் தன்னை குற்றவாளி ஆக்கி கேள்வி கேட்டதை நினைத்து குமைந்தாள், குமுறினாள்.


சில தினங்கள் கழிந்தன.


எல்லம்மாவுக்கு திடீரென்று உடல்நிலை மோசமானது. டாக்டர்கள் வந்து பார்த்து உடம்புக்கு ஒன்னும் இல்லை, மனசுலதான் குறை இருக்கு என்று சொல்லிவிட்டும் போனார்கள்.


அம்மா, சொல்லும்மா. உனக்கு என்னம்மா குறை…


நீ சின்ன வயசில இருந்து மத்தவங்க வசதியாக வாழறத பார்த்து ஏங்கினியே. உன்னையும் அந்த மாதிரி வளர்க்க முடியாதவளாயிட்டேன்ற குறைதாம்ப்பா…
அதை விடும்மா. நீ உன் உடம்ப பார்த்துக்க. நீ போயிட்டா, அப்பறம் எங்களுக்கு யாரு இருக்கா…


ஒலித்த அலைபேசியை எடுத்துப் பேசினான். மருத்துவமனையிலிருந்து சங்கருக்கு அவசர அழைப்பு.


ஒரு வி.ஐ.பி. வர்றாரு. ஐ.சி.யூவுல சேர்க்கணும். ஏற்பாடெல்லாம் நீதான் பண்ணணும். ம், சீக்கிரம் கிளம்பி வா…


அம்மா நான் அவசரமா ஆஸ்பத்திரிக்கு போகணும். எதையும் மனசுல போட்டுக் குழப்பிக்காதே. நல்லா ரெஸ்ட் எடு என்று சொல்லிப் புறப்பட்ட சங்கரை கை பிடித்து நிறுத்தினாள் எல்லம்மா.


இதோ பாருப்பா. நல்ல வசதியா இருக்க முடியல, வாய்க்கு ருசியா சாப்பிட முடியலேன்னு ஏங்கினே. வசதி இல்லாததால, ஒரு ஏழைப் பொண்ண நீ கல்யாணம் பண்ணிக்கிட்டே. எல்லாம் நம்ம விதி. ஆனாலும், நீ பொறுமையா இருக்கனும். சின்ன வயசுல இருந்து நீ நேர்மையா, உண்மைய பேசி வளர்ந்திருக்கே. உன்னை ஒரு நல்லவனா நான் வளர்த்திருக்கேன். அதுல எனக்கு பெருமைதாம்ப்பா…


எப்பவும் சுகபோகமா இருக்கறது வாழ்க்கை இல்லப்பா. அது கொஞ்ச நாள்லயே சலிச்சிப் போயிடும். நிரந்தரமில்லாத வாழ்க்கை. ஆசைய தூண்டற அந்த வாழ்க்கை நமக்கு வேணாம்ப்பா. மனசுக்குள்ள ஆசை வந்துட்டா அது மனுஷனையே அழிச்சிடும். இருக்கற வெச்சி அதுல சந்தோஷமா வாழ்க்கைய நடத்தனும். அதுதான் நிம்மதி, சந்தோஷம். நீ வசதியா இல்லேன்னு நினைக்காத. உனக்கு அதுதான் பாதுகாப்பு.


குந்திதேவிகிட்ட, உனக்கு என்ன வரம் வேணும்னு பகவான் கேட்டப்போ, எப்பவும் கஷ்டப்பட்டுக்கிட்டே இருக்கற வரத்தைக் குடு. அப்பதான் உன்னை மறக்காம இருக்க முடியும்னு சொன்னாளாம். இதுவரைக்கும் இந்த விஷயத்தை உன்கிட்ட சொல்ல தைரியம் இல்லடா. இப்ப மனசவிட்டுச் சொல்லிட்டேன். இதை நீ ஒருநாள் நிச்சயம் உணருவே என்று சொல்லி கண்ணீர் விட்டாள் எல்லம்மாள்.


சிறிது நேரத்தில் மருத்துவமனைக்குப் புறப்பட்டுச் சென்றான் சங்கர். அவன் போய்ச் சேரவும், ஒரு ஆம்புலன்ஸ் வேகமாக வந்து நிற்கவும் சரியாக இருந்தது. ஸ்ட்ரெச்சரை எடுத்துக்கொண்டு பரபரப்போடு போய் ஆம்புலன்ஸில் இருந்த நோயாளியை இறக்கி ஐ.சி.யூ.வில் கொண்டுபோய் சேர்த்தபோதுதான் சங்கர் கவனித்தான். பார்த்த மாத்திரத்தில் அவன் முகத்தில் அதிர்ச்சி!


அது, எதிர்வீட்டு திலீப்! மயக்கத்தில் இருந்தான். அவனது பெற்றோர் காரில் இருந்து இறங்கி அழுதுகொண்டே வந்தனர். சங்கரைப் பார்த்து நலம் விசாரித்தார்கள்.


திலீபை செக் செய்த தலைமை மருத்துவர்,


இவருக்கு ஏகப்பட்ட பிரச்னை. மாஸிவ் அட்டாக் வந்திருக்கு. ஓவரா டிரக் எடுத்துக்கிட்டதால லிவர் டோட்டலா ஃபெயிலியர் ஆயிடுச்சு. நேரம் கெட்ட நேரத்துல சாப்பிட்டு பெப்டிக் அல்ஸரும் வந்திருக்கு. பயப்படாதீங்க. அவர குணப்படுத்திடலாம். ஆனா, குணப்படுத்த முடியாத ஒரு பிரச்னை வந்திருக்கு. அவருக்கு எச்ஐவி பாசிட்டிவ்னு ரிசல்ட் வந்திருக்கு.


டாக்டர் சொன்னதைக் கேட்டு திலீபின் அம்மா சாரதா ஓவென்று அழுதாள்.
இப்ப அழுது என்ன பண்றது என்று சாரதாவை அடக்கிய தர்மலிங்கம், எல்லாம் இவளாலதான் டாக்டர். ஒரே பையன் ஒரே பையன்னு சொல்லி செல்லம் குடுத்து, அவன கெடுத்துட்டா. கோடி கோடியா சொத்து இருக்கு. எல்லாம் இவனுக்குதான். எப்படியாவது இவன காப்பாத்துங்க டாக்டர் என்றார்.
எங்களால முடிஞ்சத செய்யறோம். எல்லாம் கடவுள்கிட்டதான் இருக்கு என்று கையை விரித்தார் டாக்டர்.


எல்லாவற்றையும் ஓரமாக நின்று கேட்ட சங்கர் மனத்தில் பளிச்சென்று மின்னியது. அம்மா சொன்னதை நினைத்துப் பார்த்தான்.


கண்கள் பனிக்க, அம்மா என்னை மன்னிச்சிடும்மா. நான் உன்னை தப்பா நெனச்சிட்டேன். வாழ்க்கைன்னா என்னன்னு எனக்கு புரிஞ்சிபோச்சிம்மா… என்று வேகமாக வீட்டுக்கு வந்து, கட்டிலில் இருந்த அம்மா எல்லம்மாளின் காலில் விழுந்தான்.


அவளது கால்கள் ஜில்லிட்டிருந்தன!


மரணம் - ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஒன்றுதான்!
அதுதான் சமாதி.
***

ஆசனம்

கந்தாராசனம்

பெயர்க் காரணம்
கந்தாரம் என்றால் தோள்பட்டை. தோள்பட்டைகளுக்குப் பலன் அளிக்கும் ஆசனம் என்பதால் இதறக்கு கந்தாராசனம் என்று பெயர்.


செய்முறை
விரிப்பின் மீது மல்லார்ந்து படுத்துக்கொள்ளவும்.
பின்னர் கால்களை மடக்கவும்.
இரண்டு கைகளாலும் இரண்டு கணுக்கால்களையும் இறுகப் பற்றிக்கொண்டு இடுப்பை நன்றாக உயர்த்தவும்.
அதே நிலையில் ஆழ்ந்த சுவாசங்கள் எடுக்கவும்.
பிறகு உடலைத் தளர்த்தி வைத்துவிடவும்.
மீண்டும் மீண்டும் இந்த ஆசனத்தைச் செய்யலாம்.


பலன்கள்
தோள்பட்டை வலிகள் குணமாகும். ஸ்பாண்டிலைசிஸ் எனப்படும் கழுத்து வலிகள் வராது.


பின்னந்தலைக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைப்பதால், பெருமூளை, சிறுமூளை இரண்டும் புத்துணர்ச்சி பெறுகின்றன.


தொண்டைப் பகுதி அழுத்தப்படுவதால், தைராய்டு சுரப்பி அழுத்தப்பட்டு தைராக்ஸி அமிலம் நன்றாகச் சுரக்கிறது. இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.


வீடியோ / புகைப்படம்: ப்ரியா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com