Enable Javscript for better performance
கீழடி ஸ்பெஷல்: ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் | Keezhadi Special: Adhichanallur Excavations- Dinamani

சுடச்சுட

  

  கீழடி ஸ்பெஷல்: ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள்

  By C.P.சரவணன், வழக்குரைஞர்  |   Published on : 03rd December 2019 05:20 PM  |   அ+அ அ-   |    |  

  adhichanallur

  ஆதித்தநல்லூர் அகழாய்வுகள்

   

  ஆதிச்சநல்லூர் ஓர் இரும்புக்கால மற்றும் வரலாற்றுத் துவக்ககாலத் (பெருங்கற்காலம்) தொல்லியல் இடமாகும். இரும்புக்கால மக்கள் இறந்தவர்களைத் தாழிகளில் வைத்துப் புதைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். ஆதிச்சநல்லூரில் இரும்புக்காலத்தில் இறந்தவர்களைப் புதைத்த தாழிகள் ஆயிரக்கணக்கில் காணப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள பெருங்கற்கால இடங்களில் மிகப்பெரிய இடம் இதுவாகும். இது சுமார் 114 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்படுகின்றது. இது பாண்டியர்கால தொடர்புடையது என்கிறார் அலெக்சாண்டர் ரீ(Alexander Rea).

  அகழாய்வுகள்
  ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜாகோர் (Dr.Jagor) அறிஞர் ஆதிச்சநல்லூரில் புதையுண்டு கிடக்கும் பழம்பொருட்களைத் தோண்டி எடுக்க முடிவுசெய்தார். பெர்லின் நகரிலிருந்து கப்பலில் புறப்பட்டு, ரயிலில் நெல்லை வந்து, பின்னர் மாட்டுவண்டியில் நீண்ட பயணம் மேற்கொண்டு, ஆதிச்சநல்லூர் பரம்பிற்கு வந்து சேர்ந்தார். 

  உள்ளூர் மக்கள் யாரும் தடுத்துவிடக் கூடாது என்ற நோக்கில், வரும்போதே திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்த ஸ்டூவர்ட் (Stuart) மற்றும் மாவட்டப் பொறியாளரையும் உடன் அழைத்துக்கொண்டு வந்து, பறம்பில் உள்ள கல்லும் மண்ணும் கலந்த களர் நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்.

  உள்ளூர் மக்கள், ‘பேய் அடித்துவிடும்’ என்ற பயத்தோடு பார்த்துக்கொண்டிருக்க, நிலத்திலிருந்து பல முதுமக்கள் தாழிகள், எலும்புகள், மண்டை ஓடுகள், பழைய மட்பாண்டங்கள், இரும்பு மற்றும் வெண்கலப் பொருட்கள் புதையல்போல வெளிப்பட்டன. 

  நிலத்திலிருந்து பல முதுமக்கள் தாழிகள், எலும்புகள், மண்டை ஓடுகள், பழைய மட்பாண்டங்கள், இரும்பு மற்றும் வெண்கலப் பொருட்கள் புதையல்போல வெளிப்பட்டன. உட்கார்ந்த நிலையில் இருந்த எலும்புக்கூடுகளுடன், இறந்த மனிதர்களின் விருப்பமான உணவாக இருந்த சாமை, தினை, உமி போன்றவையும், இற்றுப்போன துணிகளும் இருந்தன. தொட்டவுடன் அவை பொலபொலவென உதிர்ந்துபோயின. தோண்டி எடுக்கப்பட்ட பொருட்களை எல்லாம் சாக்கு மூட்டைகளில் கட்டி மீண்டும் மாட்டு வண்டி, கப்பல் உதவியுடன் தனது நாட்டில் பெர்லின் நகரில் உள்ள, ஹாம்பர் நகர் இன அமைப்பியல் தொடர்பான அருங்காட்சியகத்திற்கு (Völkerkunde museum, Hamburg) எடுத்துச் சென்றுவிட்டார்.

  1903-ல், இதுபற்றிக் கேள்விப்பட்ட பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த லூயிஸ் லாப்பிக்யூ ( M Louis Lapicque) என்பவர் இந்தியா வந்து, ஆதிச்சநல்லூர் பறம்பில் தோண்டி, அவர் பங்குக்குச் சில பழம்பொருட்களை எடுத்துச் சென்று, பாரிஸ் நகர அருங்காட்சியகத்தில் கொண்டுபோய் வைத்தார். லூயிஸ் இவையெல்லாம் பழந்தமிழருக்கானவை என்றார்.

  இப்படித் திறந்த மடமாய், இந்தியா இருந்தது. யார் யாரோ வந்து இங்கே இருக்கும் பழம்பொருட்களை எடுத்துச் செல்வதும், தங்கள் நாடுகளில் காட்சிப் பொருட்களாய் வைப்பதும் தொடர்ந்தது.

  கிழக்கிந்திய கம்பெனி, அதிகாரபூர்வமாக அலெக்சாண்டர் ரீ என்பவரை, ஆதிச்சநல்லூர் அனுப்பி, ஆய்வு செய்யப்பணித்தது. அவர் தலைமையில் ஒரு குழு அகழாய்வு செய்து, பல்வேறு பொருட்களை எடுத்தது. இங்குள்ள புதைகுழிகளிலிருந்து மேலும் பல்வேறு எலும்புக்கூடுகள், இரும்புப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 30 வகை மட்பாண்டங்கள் நான்கு அடி உயரம் கொண்டவையாக இருந்தன. இரும்பால் செய்யப்பட்ட போர்க் கருவிகள், கத்திகள், குறுவாள்கள், கைக்கோடரிகள் போன்ற பொருட்களும் கிடைத்தன. இங்கு கிடைத்த பொருட்களை எல்லாம் அலெக்சாண்டர் ரீ, சென்னை அருங்காட்சியகத்தில் கொண்டுபோய்ச் சேர்த்தார். ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் பட்டியல் ஒன்றை 13 படங்களுடன் 1913-ல் வெளியிட்டார்.

  அவரைத் தொடர்ந்து, 1915–ம் ஆண்டு, இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் அதிகாரியாக இருந்த ஜே.ஆர். ஹென்டர்சன் (J.R.Hendeson) என்பவரும் ஆதிச்சநல்லூரில் ஆய்வு நடத்தினார்.

  நூறு ஆண்டுகளுக்கு பிறகு...
  2003 - இந்தியத் தொல்லியல் ஆராய்ச்சி கழகக் கண்காணிப்பாளர் சத்தியபாமா தலைமையில் 10 ஆராய்ச்சியாளர்கள் ஆதிச்சநல்லூரில் முகாமிட்டு அகழ்வாராய்ச்சி செய்தனர்.

  2004 - இந்திய அரசு தொல்லியல் துறையின் அறிஞர் சத்தியமூர்த்தி 2004-ம் ஆண்டு நடத்திய ஆய்வே முக்கியமானது. அதில், பல்வேறு எலும்புக்கூடுகள், உடையாத மண் பாண்டங்கள், பல்வேறு வடிவக் கிண்ணங்கள், பானைகள், குடுவைகள், ஜாடிகள், கழுத்து மாலைகள், மணிகள், மாவரைக்கும் கல், கழுத்தணிகள், காப்புகள், வளையல்கள், மோதிரங்கள் என நிறைய சான்றுகள் கிடைத்து உள்ளன.

  ஆதித்தநல்லூரில் கிடைத்த தாழி, பலுசிஸ்தானில் கிடைத்த தாழி, சிந்துசமவெளியில் கிடைத்த தாழி, செங்கல்பட்டில் கிடைத்த தாழிகள், தென்னிந்தியாவில் கிடைத்துள்ள தாழிகள் திராவிடர்களின் பண்பாட்டு தொடர்பை கொண்டுள்ளதாகவும், சங்கிலி பிணைப்புபோல உள்ளதாகவும் மேற்குவங்க தொல்லியல் ஆராய்சியாளர் ஆர்.டி. பானர்ஜி உறுதிபடுத்தியுள்ளார். 10 வருடங்கள் ஆகியும் ஆய்வு குறித்த அறிக்கையை இன்னும் தாக்கல் செய்யவில்லை.  
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai