கீழடி ஸ்பெஷல்: தொல்லியல் நோக்கில் சங்ககாலம்-1

ஆதிகாலத்தைப் பற்றிய அறிவியல்' என்பது இதன் பொருளாகும். தொல்லியல் ஆய்வு என்பது பூமிக்குள் புதையுண்டு மறைந்து கிடக்கும்,
அவிநாசி அருகே 400 ஆண்டுகள் பழைமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு
அவிநாசி அருகே 400 ஆண்டுகள் பழைமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு

தொல்லியல் ஆய்வு

'ஆதிகாலத்தைப் பற்றிய அறிவியல்' என்பது இதன் பொருளாகும். தொல்லியல் ஆய்வு என்பது பூமிக்குள் புதையுண்டு மறைந்து கிடக்கும், அல்லது மேற்பரப்பிலே காணப்படும் மனித இனத்தோடு தொடர்புடைய பொருள்களையும், அவர்கள் நாள்தோறும் வாழ்க்கையில் பயன்படுத்தி விட்டுச்சென்ற பொருள்களையும் அகழ்ந்தெடுத்து ஆய்வுசெய்து அவர்களின் பழம்பண்பாடுகளைப் பற்றி உய்த்தறியும் ஓர் ஆய்வாகும்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் எடுத்த அரிய பல தொல்பொருட்கள் C14 எனப்படும் கரிப்பகுப்பாய்வு மூலம் அறிவியல் முறைப்படி காலநிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன் மூலம் அவற்றின் காலம் கி.மு. எட்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆய்வுகளில் சங்க இலக்கியங்களோடு தொடர்புடைய பல பெயர்கள் - பொருள்கள் கிடைத்துள்ளன. எனவே அந்தத் தொல்லியல் அகழாய்வுக் காலத்தைச் சங்ககாலம் என்று கொள்ளுவது தவறாகாது.

சங்ககால ஊர்கள்
சங்க இலக்கியம் குறிக்கும் தொன்மையான சில ஊர்களில் முறைப்படி அகழாய்வுகள் நடைபெற்றுள்ளன. அவற்றின் மூலம் அவ்வூர்கள் இருந்தமையும், அங்கு மக்கள் வாழ்ந்தமையும் அகழாய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளன.

அகழாய்வு நடைபெற்ற ஊர்கள் - அதன் சங்ககாலப் பெயர்
அரிக்கமேடு (வீராம்பட்டிணம்) - வீரை முன்துறை (அகம் 206)
அழகன்குளம் - மருங்கூர்ப்பட்டினம் (நற் 258)
உறையூர் - உறந்தை (புறம் 39)
கரூர் - கருவூர், வஞ்சி (புறம் 13,11)
காஞ்சிபுரம் - கச்சி (பெரும் 420)
காவிரிப்பூம்பட்டினம் - புகார் (பட்டின 173)
கொடுமணல் - கொடுமணம் (பதிற் 74)
கொற்கை - கொற்கை (அகம் 27)
தருமபுரி - தகடூர் (பதிற் 78)
திருக்கோவிலூர் - கோவல் (அகம் 35)
திருத்தங்கல் - தங்கால் (நற் 386)
மதுரை - மதுரை (பரி 11)
வல்லம் - வல்லம் (அகம் 336)
கொடுங்கலூர் - முசிறி (புறம் 343)


மத்திய அரசு, தமிழக அரசு, சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த தொல்லியல் துறைகள் இவ்வூர்களில் அகழாய்வை மேற்கொண்டன. அரிக்கமேட்டில் அமெரிக்கத் தொல்லியல் துறையினரும் அகழாய்வில் ஈடுபட்டனர். இரண்டாயிரம் ஆண்டுகளின் முன்னர் மேற்கண்ட ஊர்கள் சிறந்த நாகரிகத்துடன் விளங்கின என்பது அகழாய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வூர்களில் நடைபெற்ற அகழாய்வுகள் மூலம் சங்ககாலச் சிறப்பும் தொன்மையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பெருங்கற்படை
சங்ககாலத்திற்கு இணையான தமிழகத் தொல்லியல் ஆய்வில் மிகவும் சிறப்பாகக் குறிக்கப்பெறும் தன்மையுடையது பெருங்கற்படைச் சின்னங்களின் அகழாய்வாகும். தமிழகமெங்கும் பரவலாகவும். மிகுதியாகவும் காணப்பெறுவது இச்சின்னங்களேயாகும். இதனைத் தொல்லியலார் Megalithic என அழைப்பர். இக்கால ஈமக் குழிகள் மிகப் பெரிய கற்பலகைகளைக் கொண்டும், பெரிய கற்களைக் கொண்டும் அமைக்கப்பட்ட காரணத்தால் இதனைப் பெருங்கற்படைப் பண்பாடு என அழைப்பர். கல்அறை, கல்வட்டம், கல்படை, கல்குவை, கல்திட்டை, கற்கிடை எனப் பலவாறாக இவை காணப்படும். பெருங்கற்படைப் பண்பாடு 2500 ஆண்டுகட்கு முற்பட்ட பண்பாடாகும்.

பெருங்கற்படைச் சின்னங்களைச் சங்க இலக்கியங்கள் 'பதுக்கை' எனக் குறிப்பிடுகின்றன.

'செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்
அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை' (புறம் 3)
'வெண்நுனை அம்பின் விசைஇட வீழ்ந்தோர்
எண்ணுவரம்பு அறியா உவல்இடு பதுக்கை' (அகம் 109)
'இடுமுள் நெடுவேலி போலக் கொலைவர்
கொடுமரம் தேய்த்தார் பதுக்கை' (கலி 12)


என்பன 2500 ஆண்டுகட்கு முற்பட்ட பெருங்கற்படையைக் குறிக்கும் சங்க இலக்கியத் தொடர்கள். பூமிக்குள் பதுங்கியிருப்பது, பதுக்கப்பட்டிருப்பது பதுக்கை ஆயிற்று. இவை வீரம்காட்டி மாய்ந்த வீரர்கட்குப் புதிதாக எடுக்கப்பட்டது என்பதை 'வம்பப்பதுக்கை' என்பதன் மூலம் அறியலாம். வீரயுகமான சங்ககாலத்தில் பெரும்பாலும் வீரர்கட்கென்றே பெருங்கற்படைகள் அமைக்கப்பட்டன.

நெடுங்கல்
பெருங்கற்படைச் சின்னங்களான இப்பதுக்கைகளை அமைத்த பின்னர் அதன் அருகே நீண்டு உயர்ந்த குத்துக்கல்லை அடையாளமாக அமைத்தனர். இதனைத் தொல்லியலார் Menhir என அழைப்பர். இவை ஒன்றோ இரண்டோ பெருங்கற்படையின் அருகே இருக்கும். இதனைப் புறநானூறு

'பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி
இனி நட்டனரே கல்லும்'
என்று கூறும் (264). அகநானூற்றில் இவை
'சிலை ஏறட்ட கணைவீழ் வம்பலர்
உயர்பதுக்கு இவர்ந்த அதர்கொடி அதிரல்
நெடுநிலைநடுகல்' என்றும்.
'பிடிமடித் தன்ன குறும்பொறை மருங்கின்
நட்ட போலும் நடாஅ நெடுங்கல்'
(289, 269).


என்றும் குறிக்கப்படுகின்றன . இந்நெடுநிலைக் கற்களே பிற்காலத்தில் நடுகற்களாக (Hero Stones) மாறின என்பர்.

நடுகல்
Hero Stones (வீரன்கல் - வீரக்கல்) என வழங்கிய கற்கள் இப்பொழுது Memorial Stones (நினைவுக் கற்கள்) என வழங்கப்படுகின்றன. வரலாற்றின் ஊற்றுக் கண்ணாக விளங்கும் பழங்குடி மக்களின் பண்பாட்டை விளக்க நடுகற்களே காரணமாக அமைந்துள்ளன. மறவர், எயினர், மழவர், வேடர், கோவலர், வடுகர், கள்வர், பறையர், பாணர் ஆகிய குடிகளைச் சேர்ந்த சேவகன், இளமக்கள், இளையோர், ஆள், இளமகன், அடியாள், அடியார், மன்றாடி, தொறுவாளன் ஆகியோருக்கே பெரும்பாலும் நடுகற்கள் எடுக்கப்பட்டுள்ளன.

வடக்கிருந்து உயிர்நீத்த கோப்பெருஞ்சோழனுக்கும், போரில் வீரமரணம் அடைந்த அதியமானுக்கும் நடுகல் எடுக்கப்பட்டுள்ளது (புறம் 221,223,232). பிற்காலத்தில் இவை பள்ளிப்படையாக மாறியது. பெரும்பாலும் வீரர்களுக்கே நடுகல் நாட்டப்பட்டது. குறிப்பாக போருக்கு முதற்காரணமாக அமையும் ஆநிரைகவரும் வெட்சித்திணைக்கும், கவர்ந்த ஆநிரைகளை மீட்கும் கரந்தைத் திணைக்கும் உரிய நடுகற்களே மிகுதியாகும். கல் என்றாலே நடுகல்லையே குறிக்கும் பழக்கம் இருந்தது. 

'விடுவாய்ச் செங்கணைக் கொடுவில் ஆடவர்
நன்னிலை பொறித்த கல்' (அகம் 179)
'என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்ஐ
முன்நின்று கல்நின் றவர்' (குறள் 771)


இவ்விடங்களில் நடுகல் கல் என வழங்கப்பட்டுள்ளமையைக் காணுகிறோம். (கல் நடுவித்தார் மதியுளி - தருமபுரி நடுகல் கல்வெட்டு). ஒரு காலத்தில் நடுகல்லை மட்டுமே தெய்வமாக வணங்கியுள்ளனர்.

'ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறேந்து மருப்பில் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே' (புறம் 335)
என்பது மாங்குடிகிழார் பாடலாகும்.


இறந்த வீரனின் பெயரையும் பெருமையையும் கல்லில் பொறிப்பர் நடுகல்லுக்கு நீராட்டி நெய்பெய்து வாசனைப்புகை காட்டுவர். விளக்கேற்றுவர். பூக்களைச் சொரிவர். மாலை சூட்டுவர். மயிற்பீலி சாத்துவர். காப்புநூல் கட்டுவர். ஆட்டுக்கிடாய்களைப் பலியிடுவர். துடி, மணி ஒலிப்பர். எண்ணெய் பூசுவர். சிறு கலங்களில் கள் படைப்பர். துணிப்பந்தல் அமைப்பர். வில், வேல், வாளால் வேலி அமைப்பர். பெரும்பாலும் வழிகளில் நடுகல்லை நட்டனர். ஆழமாக நட்டனர். நடுகல்லை ஆள் என ஒரு யானை உதைத்தது. நடுகல் சாயவில்லை, யானையின் கால் நகம் உடைந்ததாம். போர்க்களத்தில் விழுப்புண் பட்டோர் நடுகல் அருகே வந்து புண்ணைக் கிழித்து உயிர் விடுவர். நடுகல்லை வணங்கினால் மழைவரும், அரசன் வெற்றி பெறுவான், பயிர் செழிக்கும், கால்நடை பெருகும், வீட்டுக்கு விருந்தினர் வருவர் என நம்பினர்.

தாழிகள்
தொல்லியல் ஆய்வில் மிகவும் சிறப்பிடம் பெறுவது தாழிகள் ஆகும் (Urns). தமிழ்நாட்டில் இவை பல வகைகளாகக் காணப்படுகின்றன. இவை கூர்முனைத் தாழிகள், கால்கள் உடைய தாழிகள், விலங்குருவத் தாழிகள் எனப் பலவகைப்படும்.

சங்க இலக்கியங்களில் இவை கலம், தாழி, கவிசெந்தாழி, ஈமத்தாழி, தாழியபெருங்காடு. முதுமக்கள் தாழி, மன்னர் மறைத்த தாழி எனப்பலவாறு அழைக்கப்பெறுகின்றன (அகம் 129, புறம் 228, 236, 256, 364, பதிற் 44). தாழிப்புதையல் 2500 ஆண்டுகட்கு முற்பட்ட ஒரு வழக்கமாகும், கி.பி. 2,3 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் அவ்வழக்கம் மறைந்து விட்டது - தாழிகள் பல மிகப் பெரியவையாக இருந்த காரணத்தால்

மா இருந்தாழி (நற் 271)
ஓங்குநிலைத்தாழி (அகம் 275)
கண்ணகன்தாழி (புறம் 228)

எனக் குறிக்கப்பட்டுள்ளன. இவை கைகளாலும் (Hand made), சக்கரங்களாலும் (Wheel made) செய்யப் பெற்றிருந்தன.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் இறந்தான். மிகப்பெரும் புகழ்கொண்ட இவனுக்கு மிகப் பெரிய தாழி அல்லவா வனைய வேண்டும். உலகையே சக்கரமாகக் கொண்டு, இமய மலையையே மண்ணாக வைத்துப் பெரிய தாழியைவனைய வேண்டும். அது உன்னால் முடியுமா? என்று வேட்கோவனைப் பார்த்து வினவுகிறார், ஐயூர் முடவனார் என்னும் புலவர் (புறம் 228).

'அன்னோன் கவிக்கும் கண்ணகன் தாழி
வனைதல் வேட்டனை யாயின் எனையதூஉம்
இருநிலம் திகிரியாப் பெருமலை
மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே'
என்பது ஐயூர் முடவனார் பாடலாகும்.

கணவன் மனைவி இருவரையும் ஒன்றாகத் தாழியுள் அடக்கம் செய்ய வேண்டும். அதனால்

'வியன்மலர் அகன்பொழில் ஈமத்தாழி
அகலிதாக வனைமோ'.
எனக் கூறுகின்றார் ஒரு புலவர் (புறம் 256).
தாழி வனைவோர் 'கலம்செய் கோ' எனப்பட்டனர்.


சங்ககாலச் சோழமன்னர்கள் தாழிப் புதையல் வழக்கத்தை ஏற்படுத்தினர் என்று மூவருலாக் கூறுகிறது.

'பதுமக் கடவுள் படைப்படையக் காத்த
முதுமக்கட் சாடி முதலோன்'

என்று பண்டைச் சோழன் ஒருவன் புகழப்படுகின்றான். (குலோ உலா 12).
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com