கீழடி ஸ்பெஷல்: தமிழி எழுத்துக்கள்

கீழடி, பள்ளிச்சந்தை திடலில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்களிடையே சுமார் பதினெட்டு மட்பாண்டச்சில்லுகளில் தமிழ்-பிராமி எழுத்துருக்கள்
கீழடி அகழாய்வுகளில் கிடைத்த பொருள்கள்
கீழடி அகழாய்வுகளில் கிடைத்த பொருள்கள்

கீழடி, பள்ளிச்சந்தை திடலில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்களிடையே சுமார் பதினெட்டு மட்பாண்டச்சில்லுகளில் தமிழ்-பிராமி எழுத்துருக்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன. அச்சில்லுகளில் வேந்தன், சேந்தன் அவதி, திசன் , சந்தன், சாத்தன், மடைசி, எரவாதன், உத்திரை, ஆதன், முயன், இயனன்,  குவிரன், குலவன், உலசன், கோதை, வணிகப்பெருமூவர் உண்கலம், போன்ற தமிழ் மற்றும் பிறமொழிச் சொற்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

1. வேந்தன்
வேந்தன் என்பவன் சங்ககாலத் தமிழர்கள் வகுத்த ஐந்திணைகளில் மருத நிலத்தின் கடவுளாவான். பிற்காலத்தில் வேந்தன் என்ற பெயரை இந்திரன் என்று அழைத்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

“வேந்தன் மேய தீம்புணல் உலகமும் “என்கிறது தொல்காப்பியம்

2.மடைச்சி
கீழடியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பானையோடுகளில் பொறிக்கப்பட்ட பெரும்பாலான பெயர்கள் ஆண்பால் பெயர்களைத்தான் குறிக்கின்றன. ஆனால், இதிலிருந்து விலகிய ஒரு பெயர் மடைச்சி என்பது. இது ஒரு பெண்ணின் பெயரைக் குறித்ததாகவும் இருக்கிறது. அதிலும் எளிய குடிமக்களின் பெண் பெயராகவும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக வேளாண்மை உழவுக்குடிப் பெண்ணின் பெயராகவும் இருக்கிறது.

மடைச்சி என்னும் பெயர் வேளாண்மையோடு தொடர்பு கொண்ட ஒரு பெண்ணின் பெயர். வேளாண்மைக்கு மிக முக்கியமான ஆதாரம் நீர்தான். இந்த நீர் ஆதாரங்கள்தான் கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், ஊரணிகள், ஆறுகள் போன்றவை. இத்தகைய நீர் ஆதார வளங்களை முறைப்படுத்தியும் பாதுகாத்தும் புனரமைத்தும் வந்தவர்கள்தான் மடையர்கள். நீர் ஆதாரங்களில் உள்ள மடைகளின் வழியே நீர் நிர்வாகத்தைப் புரிகின்றவர்கள் எனும் அடிப்படையில், மடையர்கள் என்று அழைக்கப்பட்டவர்களே நீர் மேலாண்மையைச் செய்து வந்தவர்கள் ஆவார்கள். இத்தகைய நீர் மேலாண்மை எனப் பெறும் மடைத் தொழில் மரபினரையே மடையர்கள் என்று சமூகம் குறித்து வைத்திருக்கிறது. அத்தகைய மடையர் என்பதன் பெண்பால் பெயராகத்தான் இந்த மடைச்சி எனும் பெயர் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பழங்காலம் முதற்கொண்டு இக்காலம் வரையிலும் நீர் மேலாண்மை செய்து வருகின்ற வேளாண் குடிகள் மடைச்சி, மடையர், மடையளவக்கார், மடை வேலைக்காரர், நீராணிக்கர், நீராணியம் என்னும் பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். மேலும், அகழாய்வு நடைபெற்று வரும் நிலப்பகுதியை அவ்வட்டாரப் பெரியவர்கள் பள்ளுச் சந்தைத் திடல் என்றே அழைக்கின்றனர்.  பள்ளு என்பதும் வேளாண் குடிகளைக் குறிக்கும் சொல்லாகவே அமைந்திருக்கிறது.

அகழாய்வில் புதைபொருட்கள் நிறையக் கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே, அவ்வட்டாரப் பெரியவர்களிடமும் வாய்மொழி வழக்காற்றுத் தரவுகள் நிரம்பிக் கிடக்கின்றன.

3. குலவன்
உயர்குலத்தான் அல்லது தலைவன் 
பனிக்கதிர்க் குலவன்பயந்தருள் பாவையை (கல்லாடம். 10).  
4) சாத்தன் 
சாத்தன்  அறப்பெயர் சாத்தன்  என ஆசீவகச் சமயத்தார் மற்றும் வணிகர்கள் சூட்டிக் கொள்ளும் பெயர்.

சாத்தன் சாத்து என்னும் வணிகர் கூட்டத்தில் ஒருவனைச் சாத்தன் எனக் குறிப்பிடுவது தமிழ்நெறி. சாத்து என்பது சார்ந்து செல்லும் வணிகர் கூட்டம்.

பெரும்பெயர்ச் சாத்தன் எனப் போற்றப்படும் பாண்டியன் கீரஞ்சாத்தன் ஒரு வள்ளலாகவும், போர்வீரனாகவும் விளங்கினான். புறம் 178

வல்வேல் சாத்தன் எனப் போற்றப்பட்ட ஒல்லையூர் கிழர் மகன் பெருஞ்சாத்தன் ஒரு வள்ளல். புறம் 242

அறப்பெயர்ச் சாத்தன் எனப் போற்றப்பட்ட சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன் வானம் வறண்டுபோன காலத்தில் உதவிய வள்ளல் புறம் 395 சங்ககாலப் புலவர்களில் பலர் சாத்தன் என்னும் பெயர் பூண்டு வாழ்ந்தனர். சீத்தலைச் சாத்தனார், சாத்தனார், ஒக்கூர் மாசாத்தனார், பிரான் சாத்தனார்.

மோசிசாத்தனார், அரசன்கிழார் மகனார் பெருஞ்சாத்தன், பெருந்தோள் குறுஞ்சாத்தன், ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன், சோணாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன், பாண்டியன் கீரஞ்சாத்தன், சாத்தி , ஒக்கூர் மாசாத்தியார், அழிசி நச்சாத்தனார், ஆடுதுறை மாசாத்தனார், ஆலம்பேரி சாத்தனார், உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார், உறையூர் முதுகண்ணன் சாத்தனார், ஒக்கூர் மாசாத்தனார், கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார், கருவூர்ச் சேரமான் சாத்தன், கருவூர்ப் பூதஞ்சாத்தனார்சாத்தனார், சீத்தலைச் சாத்தனார், செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன் தொண்டி ஆமூர்ச் சாத்தனார், பிரான் சாத்தனார், பெருஞ்சாத்தனார், பெருந்தலைச் சாத்தனார், பெருந்தோள் குறுஞ்சாத்தன், பேரிசாத்தனார், மோசி சாத்தனார், ‘பெருந்தலைச் சாத்தனார்’,  ‘வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார்’,  ‘போன்ற பெயர்களைக் கொண்ட சங்ககாலப் புலவர்கள் வணிக சார் பெருமக்களே.

5) ஆதன்
அண்மையில் கீழடி அகழ்வாய்வின் பானையோடுகளில் எழுதிய பெயர்களில் ஆதன் என்பதும் ஒன்று. இப்பெயர் தமிழவை நூல்களில் பலவிடங்களிலுண்டு. பெரும்பாலும் சேரமரபினரின் பெயர்களே ஆதன் என்றுள்ளன. ஆனால், பாண்டி நாட்டில் கிடைத்த தொல்சான்றில் சேரப்பெயரான ஆதனெனும் பெயர் நம்முள் பலவினாக்களைத் தொடுக்கிறது. எது எவ்வாறோ இருக்கட்டும். 

இப்பெயர், சங்கநூல்களில் யாங்கெல்லாம் குறிப்பிட்டப்பட்டுள்ளது என்பதை எடுத்தியம்பும் சிறுபதிவே இது. நம்முடைய சங்கநூல்களும் இப்போது கிடைக்கும் தொல்சான்றுகளும் நூறு விழுக்காடு ஒத்தே காணப்படுகின்றன. இவ்வறிவிலியேனுக்குக் கிடைத்த சிலசான்றுகளை உமக்கும் அறிவிக்கிறேன். 

ஆதன் பெயர்க்காரணம் : 
மூச்சுக்காற்றில் உள்ளிழுக்கும் காற்று, வெளிவிடும் காற்று என்று இரண்டு வகையுண்டு. உள்ளிழுக்கும் காற்றிலுள்ள உயிர்வளி உடலில் ஊறிய சத்தை எரிக்க உதவுகிறது. உதவும் காற்று நமக்கு ஆகும் காற்று. ஆகும் காற்று ஆதல் காற்று. ஆதல் காற்றை ஆதன் என்பது தமிழ். ஆதன் என்பது உயிர்வளி. உயிர் என்றும் பொருளாகும்.

வெளிவிடும் காற்று அவிந்த காற்று. எரிந்தது அவிந்தால் கரி. அதனால் வெளிவிடும் காற்றைக் கரி+அமில வாயு என்பர். தமிழ் அவிந்த காற்றை அவினி என்று குறிப்பிடுகிறது. ஆதன், அவினி என்னும் பெயர்கள் இவ்வாறு தோன்றின. இவற்றை மக்களும் தமக்குப் பெயராக்கிக்கொண்டனர்.

ஆதன் பெயர்கள் 
1. சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்
2. சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன்
3. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்
4. பெருஞ்சேரலாதன்
5. ஆதன் அழிசி - ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியனின் 5 நண்பர்களுள் ஒருவன்
6. ஆதன் - ஓரியின் தந்தை
7. நெடுவேள் ஆதன் - போந்தைப்பட்டினம் என்னும் குறுநில மன்னன்
8. நல்லியாதன் - ஓய்மான் நல்லியக்கோடன்
9. ஓய்மான்வில்லியாதன் - இலங்கையரசன்
10. ஆதனுங்கன் - வேங்கடநாட்டு அரசன்
11. ஆதன் - வாட்டாற்று எழினியின் மகன்
12. ஆடுகோட்பாட்டுச்சேரலாதன்
13. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
14. முடங்கிக்கிடந்த நெடுஞ்சேரலாதன்
15. ஆதனூர் - "மேற்காநாட்டு ஆதனூர்" - திருத்தொண்டர் மாக்கதை.
ஆதன் அழிசி, ஆதன் எழினி, ஆதனுங்கன், ஆதன் ஓரி,  ஆதன் அவினி போன்ற பெயர்களைக் கொண்ட சங்ககால மன்னர்கள் பற்றி சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. மேலும் சங்ககாலப் பாடல்களில் நிறைய இடங்களில் ஆதன் என்னும் பெயர் இடம் பெறுகிறது.

6) சந்தன் 
மதுரை அழகர் மலையில் அமைந்துள்ள தமிழ்த் துறவியருக்கான குகைத் தளத்தில் கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் ‘கொழு வணிகன் எள சந்தன்’ என்னும் பெயர் குறிப்பிடப் பெற்றுள்ளது. அதே குகைத்தளத்தில் ‘தியன் சந்தன்’ என்னும் பெயரும் காணப்படுகின்றது.

மதுரை மேட்டுப்பட்டி சித்தர்மலையில் பஞ்சபாண்டவர் படுக்கை என வழங்கப்பெறும் தமிழ்த் துறவியருக்கான குகைத்தளத்திலும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச்சேர்ந்த ‘சந்தந்தை சந்தன்’ என்னும் பெயர் குறிப்பிடப்பெற்றுள்ளது.

சங்ககாலத்தில் தமிழ்த் துறவியருக்கானதாக இருந்த இக்குகைத்தளங்களில் காணப்பெறும் பெயர்கள் இவற்றை செம்மைப்படுத்திக் கொடுப்பித்த அடியவர்களின் பெயர்களாகவே அறியப்பெற்றிருக்கின்றன.

7) சேந்தன், எரவாதன் 
மதுரை மேட்டுப்பட்டியில் மேற்கண்ட அதே இடத்தில், ‘அந்தை சேந்தன் ஆதன்’ என்னும் பெயர் பொறிக்கப்பெற்ற கி.மு.இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று காணப்படுகிறது.

அவ்விடத்திலேயே, ‘அந்தை இரவாதன்’ என்னும் கல்வெட்டும்,
குவிர அந்தை சேய் ஆதன்’, ‘குவிரந்தை வேள் ஆதன்’ என்னும் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.

8) குவிரதன்
"குவி" என்பது வணிகத்தின் அடிப்படையில் பிறந்தது. அதாவது வணிகத் தொடர்பை மவன் தானியங்களை குவிப்பவன் (அல்லது) பொருள்களை குவித்து வணிகம் செய்பவன் என்ற பொருள் கொள்ளுதல் வேண்டும். கொடுப்பதில் மட்டும் நான்கு சில்லுகளில் இப்பெயர் உள்ளது ஒன்றில் குழியின் அத்தை என வருகிறது.

மதுரை விக்கிரமங்கலத்திலுள்ள கி.மு.இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த குகைக் கல்வெட்டுக்களில் முறையே, ‘பேதலை குவிரன்’, ‘செங்குவிரன்’, ‘குவிரதன்’ என்னும் பெயர்கள் காணப்படுகின்றன.

சேந்தன் ஆவதி= தலைவன்
திசன்=  தலைவன்
உதிரன்= உயிர்ப்பு உள்ளவன்
இயனன்= இறைவன்/ ஆக்குபவன்
குவிரன்= காடு ஆள்வோன்
கோதை= மாலை/ பூப் பெண்
இப்பெயர்கள் தூய தமிழிப் பெயர்கள் என நிறுவப்பட்டுள்ளது. பல சார்பு ஆய்வாளர்கள் தங்கள் வசம் திசை திருப்புவது, மடைமாற்றுவது முற்றிலும் தவறு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com