

நாட்டிலேயே பெண்களுக்கான முதல் பள்ளியைத் திறந்தவர், இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை என பன்முகம் கொண்ட சாவித்ரிபாய் புலேவின் 195-வது பிறந்தநாள் இன்று.
பெண்களுக்குக் கல்வி கற்பித்தார் என்ற ஒரே காரணத்துக்காக அவர் மீது பழமைத்துவவாதிகள் கல்லையும் சேற்றையும் வாரி வீசினர். ஆனால், அவர் அதற்கு மாறாக அவர்களது அடுத்த தலைமுறைக்கு கல்வி கற்ற பெண் சமுதாயத்தைப் பரிசாகக் கொடுத்தார்.
1931, ஜனவரி 3ஆம் தேதி மகாராஷ்டிரத்தில் பிறந்தவர். இன்று இந்திய கல்வியாளர், சமூக புரட்சிக்கு வித்திட்டவர், கவிஞர், இந்தியாவின் முதல் ஆசிரியை என்ற பல பட்டங்களுக்குச் சொந்தக்காரர். ஆனால், அவருக்கு இவை அனைத்தும் எளிதாகக் கிடைக்கவில்லை.
படிப்பறிவில்லாத சாவித்ரிபாய் புலே, 9 அல்லது 10 வயதிலேயே ஜோதிராவ் புலே (12 வயது) என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். ஆனால், திருமணத்துக்குப் பின், ஜோதிராவ், வீட்டிலேயே தன்னுடைய மனைவிக்கு கல்வி கற்பித்தார். பிறகு சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்றுவிக்கப்பட்டு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பட்டம் பெற்று நாட்டின் முதல் பயிற்சிபெற்ற பட்டதாரி ஆசிரியர் ஆனார் சாவித்ரி.
1848ஆம் ஆண்டு தன்னுடைய கணவருடன் இணைந்து பெண்களுக்கான முதல் பள்ளியை புணேவின் பிடேவாடாவில் தொடங்கினார். இதற்கு சமுதாயத்தில் கடும் எதிர்ப்பு. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்பதுதான் அது. ஒரு எதிர்ப்பு வரும்போதுதானே பிடிப்பு பலமாகும். 1951ஆம் ஆண்டு மகளிர் பள்ளி மூன்று என மாறியது. இங்கு 150 பெண்களுக்கும் மேல் படித்தனர்.
இதெல்லாம் படிக்க படிக்க.. முன்னணி கதாநாயகர்களின் திரைப்படத்தில் ஒரு பாட்டிலேயே பணக்காரர் ஆகிவிடுவது போல இருக்கலாம். ஆனால் உண்மையில் இந்த முன்னேற்றங்கள் அவ்வளவு எளிதாகக் கிட்டவில்லை, அதன் பின்னணியில் அவர்கள் அனுபவித்த துயரங்கள் சொல்லில் மாளாது.
சாவித்திரி, நாள்தோறும் வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும்போது அப்பகுதியில் இருக்கும் மக்கள், அவர் மீது கல்லையும் சேற்றையும் வாரி வீசுவார்களாம். பெண்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதை பாவமாகப் பார்த்த சமுதாயமாக அது இருந்துள்ளது. ஆனால், சாவித்ரியோ படித்தவராயிற்றே, பள்ளிக்குக் கிளம்பும்போது மாற்று புடவையை பையில் எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவார். பள்ளிக்குச் சென்றதும் சேற்றுப் புடவையை களைந்து, மாற்று புடவையை அணிந்துகொண்டு புன்னகை மாறாமல் பாடம் சொல்லிக் கொடுப்பாராம்.
ஜோதிராவ் புலேவின் தந்தைக்குச் சொந்தமான வீட்டில்தான் தம்பதி தங்கியிருந்துள்ளனர். 1849ஆம் ஆண்டு, அவர்களை வீட்டை விட்டு வெளியேறுமாறு தந்தை கூறியிருக்கிறார். காரணம், தங்களது சமுதாய வழக்கத்தில், பெண்களுக்கு கல்வி கற்பிப்பது பாவம் என்று கூறப்பட்டிருப்பதால், அந்த கொடுமையான தண்டனையை ஜோதிராவ் தந்தை கொடுத்திருக்கிறார்.
பள்ளியைத் திறந்துவிட்டால் போதுமா, கல்வி கற்பிப்பதையே பாவம் என கருதும் மக்கள் தங்கள் பெண் பிள்ளைகளை படிக்க அனுப்பியிருப்பார்களா? ஒவ்வொரு பெற்றோரையும் அணுகி பேசி மனம் மாற்றத்தை ஏற்படுத்தி ஒவ்வொரு பெண்ணாக பள்ளிக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.
பிறகு பெண் கல்வியை ஊக்குவிக்க மகிளா சேவா மண்டலை நிறுவியதோடு, இவர்களது மகளிர் பள்ளிகளின் எண்ணிக்கை 18 ஆகவும் உயர்ந்தது.
பள்ளிகளைத் தொடர்ந்து நடத்தவும் பல இடையூறுகள். அப்போதுதான் தம்பதி எடுத்த முடிவு மிகப்பெரியது. 1863ஆம் ஆண்டு நெருங்கிய நண்பர் சதாசிவத்துடன் இணைந்து கருவுற்ற கணவரை இழந்த பெண்களுக்காக, சிசுக் கொலை தடுப்பு மையத்தைத் தொடங்கினர். அதற்கான விளம்பரம் இவ்வாறு இருந்தது... கணவரை இழந்த பெண்களே, இங்கே வாருங்கள். குழந்தையை பாதுகாப்பாக ரகசியமாக பெற்றெடுங்கள். ஒருவேளை உங்கள் குழந்தையை இங்கே விட்டுச் செல்வதாக இருந்தாலும் இந்த மையம் குழந்தையை பராமரிக்கும். அது உங்கள் விருப்பம் என்பதே அது. இந்த வகையில், ஒரு ஆதரவற்றோர் மையத்தை இந்த தம்பதி 1880 வரை நடத்தி வந்துள்ளது. இவர்களுக்கு பிள்ளை இல்லை, இந்த மையத்தில் ஒரு பிள்ளையை இவர்கள் தத்தெடுத்து வளர்த்துள்ளனர்.
பிளேக் பரவிய காலத்தில், மகனுடன் இணைந்து சாவித்ரி மருத்துவமனை நடத்தி, மக்களுக்கு சிகிச்சை அளித்துள்ளார். இந்தக் காலத்தில்தான் சாவித்ரிபாய் புலேவுக்கும் பிளேக் பரவியது. அவர் 1897ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி உலகை விட்டு மறைந்தார். ஆனால், நவீன இந்தியாவின் கல்வித் தாய் என இன்றளவிலும் அவர் அறியப்படுகிறார்.
சாவித்ரிபாய் புலே பல நூல்களை இயற்றியிருக்கிறார். பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக போராடிய தலைவர்களில் முக்கியமானவராகவும் போற்றப்படுகிறார். மகாராஷ்டித்தில் ஜனவரி மூன்றாம் தேதி பெண் குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.