கண்டது
(சென்னை பெரும்பாக்கத்தில் ஒரு தேநீர்க் கடையின் பெயர்)
'சிங்கிள் டீ!'
-வி.சி. கிருஷ்ணரத்னம், சென்னை.
(கரூர் மாவட்டத்தில் ஓர் ஊரின் பெயர்)
'மாடுவிழுந்தான் பாறை.'
-பெ.பார்வேந்தன், மௌலிவாக்கம்.
(அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகிலுள்ள கிராமத்தின் பெயர்)
'சூரிய மணல்.'
-து.காஞ்சனா, அரியலூர்.
கேட்டது
(சென்னை பெசன்ட் நகர், ஜூஸ் கடை ஒன்றில் இரு பெண்கள்...)
'அப்புறம் பார்த்து நாளாச்சு... எப்படி இருக்கே?'
'என்ன வாழ்க்கை இது? கல்யாணம், காது குத்து, செல்போன் டாப் அப், சீமந்தம், ஹாஸ்பிடல் செலவு, புள்ளைங்க ஸ்கூல் பீஸ் அது இதுன்னு...'
'சரி சரி அலுத்துக்காதே... உன் மாதுளம்பழ ஜூஸூக்கும் நானே காசு கொடுத்துடறேன்!'
'..........?'
-சசிபிரபு, சென்னை.
(திண்டுக்கல் மாவட்டம், குளத்தூரில் ஒரு வீட்டில் உறவினர்கள் இருவர்...)
'என் மகனுக்கு பப்ளிக் எக்ஸாம் நடக்கப் போறதால டி.வி. கனெக்ஷனை கட் பண்ணிட்டோம்.'
'நல்ல விஷயம்தான்... பையனை எங்கே காணோம்?'
'பக்கத்து வீட்டுல டி.வி. பார்க்கப்போயிருக்கான்!'
-வெ.கார்த்திகா, காளனம்பட்டி.
(திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் குளிர்பானக் கடை ஒன்றில்...)
'என் மனைவி பைக்கில் என்கூட வரும்போது என்னைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டுத்தான் வருவா !'
'அவ்வளவு பாசமா?'
'அட நீ வேற... தப்பித் தவறி கீழே விழுந்தா அவ மட்டும் விழாம என்னையும் சேர்த்து விழ வைக்கத்தான்!'
-வேல் அரவிந்த், திண்டுக்கல்.
யோசிக்கிறாங்கப்பா!
'கடும் உழைப்பாளிக்கு நேரம் போதாது...
கடும் சோம்பேறிக்கு நேரம் போகாது!'
-வசீகரன், தேனாம்பேட்டை.
மைக்ரோ கதை
இரு நண்பர்களும் உணவு விடுதியில் சாப்பிட்டு முடிய, பில் வந்தது. பாண்டியன் பணம்தர முன்வர தடுத்த சமுத்திரம், பில் தொகையுடன் டிப்ஸ் இருபது ரூபாய் சேர்த்துக் கொடுத்தார். வாயிற்காப்பாளன் ஒரு சல்யூட் அடிக்க, அவனுக்கும் பத்து ரூபாய் கொடுத்தார் சமுத்திரம்.
இருவரும் சிறிது தூரம் நடந்துவந்துகொண்டிருந்தபோது, பாண்டியனின் செருப்பு முன்வார் அறுந்துவிட்டது. சற்று தொலைவில் உட்கார்ந்திருந்த செறுப்பு தைக்கும் தொழிலாளியிடம் செருப்பைக் கொடுத்தார் பாண்டியன். தைத்துக்கொடுத்த தொழிலாளி, கூலியாக முப்பது ரூபாய் கேட்டார்.
'என்னப்பா... சின்ன தையல்தானே! ஒரு நிமிட வேலைக்கு இருபது ரூபாய் வாங்கிக் கொள்!' என்றார் சமுத்திரம்.
'இரு... இரு... தொழிலாளி தான் செய்த வேலைக்கு கூலி கேட்கிறார். ஹோட்டல் சர்வர் மாதிரி இனாம் எதிர்பார்க்கவில்லை. இந்த மாதிரி தொழிலாளிக்கு கேட்ட கூலியைக் கொடுக்கனும். ' என்று சமுத்திரம் காதில் மெதுவாகக் கூறினார் பாண்டியன்.
தவறை உணர்ந்த சமுத்திரம், 'உண்மைதான பாண்டியன். வெரி சாரி... அவர்கிட்ட கேட்டதைக் கொடுத்துடுறேன்' என்று முப்பது ரூபாயைக் கொடுத்தார்.
-நா.குழந்தைவேலு, மதுரை.
எஸ்.எம்.எஸ்.
'கண்ணாடி மட்டும்தான் உண்மையான நண்பன்...
நாம் அழும்போது சிரிக்காது!'
-சாத்தை மயில், நெல்லை.
அப்படீங்களா!
கூகுள் மேப்ஸூக்கு மாற்றாக இந்தியாவின் தயாரிப்பான மேப்பல்ஸ் செயலியில் புதிய வரவாக உள்நாட்டு பொதுப் போக்குவரத்தை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ளும் வசதி புதிதாக அறிமுகமாகி உள்ளது.
மெட்ரோ, ரயில், பேருந்து வழித்தடங்களின் தகவல்கள் இந்தச் செயலியில் இடம்பெற உள்ளது.
இதன் மூலம் அரசு மற்றும் தனியார் பொதுப் போக்குவரத்தை ஒரே செயலியின் கீழ் பயன்படுத்தலாம்.
பேருந்து நிறுத்தங்கள், மாற்றுப் பாதை, மெட்ரோவில் செல்லும் வழித்தடங்கள் ஆகியவற்றை இதில் காணலாம். இதனால் பெரும்பாலும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள், சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பயனடைவார்கள்.
இந்தச் சேவை தில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், சண்டீகர், புணே, கொல்கத்தா, அகமதாபாத் , நாகபுரி, பாட்னா, லக்னௌ, கான்பூர், ஆக்ரா, ஜெய்பூர், கொச்சி, போபால் ஆகிய பெருநகரங்களில் உள்ளது.
தற்போது இணையதளம் மற்றும் ஐஓஎஸ் பயன்பாட்டு கைப்பேசிகளில் மட்டும் இந்தச் சேவையை உபயோகப்படுத்தலாம்.
இதில் துல்லியமாக வழிகாட்டும் செயலியின் பயன்பாட்டால் வாகனப் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகள், பாதுகாப்பான பயணம் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
எந்தப் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் மெட்ரோ நிலையத்தை எளிதில் அடையலாம், எதுவரைக்கும் மெட்ரோவில் பயணம் செய்து பேருந்துக்கு மாற வேண்டும் போன்ற தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளது.
சுமார் 4 கோடி பேர் இந்தச் செயலியை உபயோகித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது மேப்பல்ஸில் அறிமுகமாகி உள்ள சேவைகள் மூலம் பயனாளர்களின் எண்ணிக்கையும் , பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-அ.சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.