தமிழ் இலக்கியங்களில் நீர் மேலாண்மை

உலகம் செழிக்க அடிப்படையாய் விளங்குவது நீராகும். மனிதர்கள் உணவு உண்ணாமல் கூட இருந்திட இயலும். நீரினைப் பருகாமல் இருப்பது என்பது
தஞ்சாவூர் அருகே பள்ளியேரி கிராமத்தில் பேய்வாரி என்கிற காட்டுவாரியும், வடவாறும் ஓரிடத்தில் சந்திக்கின்றன.
தஞ்சாவூர் அருகே பள்ளியேரி கிராமத்தில் பேய்வாரி என்கிற காட்டுவாரியும், வடவாறும் ஓரிடத்தில் சந்திக்கின்றன.

உலகம் செழிக்க அடிப்படையாய் விளங்குவது நீராகும். மனிதர்கள் உணவு உண்ணாமல் கூட இருந்திட இயலும். நீரினைப் பருகாமல் இருப்பது என்பது எளிதான செயல் அல்ல. உலகம் உய்யவும், உயிர்கள் வாழவும் மிகமிக அவசியம் நல்ல தண்ணீர் தேவையாகும். 15,20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஆறு, ஏரி, வாய்க்கால் போன்ற நீர் நிலைகளில் கைகளாலேயே நீரினை அள்ளிக்குடிக்கக் கூடிய நிலை அப்பகுதி மக்களிடையே இருந்து வந்தது. இன்று நிலை அப்படியல்ல. பாட்டில்களில் அடைக்கப்பெற்ற தூய்மைப் படுத்தப்பட்ட நீரினை பாலின் விலையைவிடக் கூடுதலாக விலைகொடுத்து வாங்கி அருந்த வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.

நம் முன்னோர்களால் மிகவும் போற்றிப் பாதுகாக்கப்பெற்று பயன்படுத்தப்பட்டு வந்த நீரை நாம் மதிக்கத்தவறியதால் ஏற்பட்ட விளைவுதான் இன்றைய நிலை.

விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றுஆங்கே
பசும்புல் தாலைகாண்ப தரிது. (16)

என்கிறார் திருவள்ளுவர். வான்பொழியும் நீரே உயிர்ப்பு என்பதற்கு அடிப்படையாய் அமைகின்றது. அத்தகைய நீராதாரத்தை தமிழ் மக்கள் தொன்றுதொட்டு உயிரினும் மேலானதாகப் போற்றியுள்ளனர்.

மழைநீரைச் சேமித்து, சேமித்த நீரை திறம்படப் பயன்படுத்துவதன் மூலமே தமிழகத்தின் வேளாண்மை பெரிதும் நடைபெற்றது. இந்த மழை நீரினை ஏரிகள், குளங்களில் சேமித்து வைப்பது பற்றி இளங்கோவடிகள் தம் படைப்பான சிலம்பில் மிக அழகாகக் குறிப்பிடுகின்றார்.

இடியுடைப் பெருமழை எய்தா ஏகப்
பிழையா விளையுள் பெருவளம் சுரப்ப
மழைபிணித்(து) ஆண்ட மன்னவன்…
(காடுகாண் காதை. 27-29)

இப்பாடலடியில் மழை பிணித்து ஆண்ட மன்னவன் என்பதன் பொருள் முறையாகப் பெய்யும் மழை நீரினை ஏரி, குளங்களில் சேமித்து அவற்றை தக்கமுறையில் பயன்படுத்தி நாட்டை வளம்பெறச் செய்யும் மன்னன் இவன் என்பதாகும்.

தஞ்சாவூர் அருகே பள்ளியேரி கிராமத்தில் பேய்வாரி என்கிற காட்டுவாரியும், வடவாறும் ஓரிடத்தில் சந்திக்கின்றன. இந்த இடத்தில் அக்காலத்தில் இரு ஆறுகளின் நீரோட்டத்துக்குத் தடையில்லாத வகையில் கீழே பேய்வாரி என்கிற காட்டுவாரி செல்லும் நிலையில் மேலே பாலம் போன்ற கட்டுமானத்தில் செல்லும் வடவாறு.

இதே போல மழைநீரைச் சேமித்து வைப்பதற்கு ஏற்ற நீர் நிலைகளை அமைப்பது ஒரு மன்னனின் தலையாயக் கடமை என்று புறநானூற்றுப் பாடலில் புலவர் குடபுலவியனார், பாண்டியன் நெடுஞ்செழியனைப் பார்த்துப் பாடுகின்றார்.

நிலன் நெறிமருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோரம்ம இவண்தட் டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே. (18:28-30)

இதன் பொருள் நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கின்றதோ அங்கெல்லாம் நீர்நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் என்றென்றுமு; அழியாத புகழ்பெற்று விளங்குவர் என்பதாகும். மேலும் இனியவை நாற்பது, திரிகடுகம், பெரியபுராணம் போன்ற தமிழ் இலக்கியங்களில் குளம் வெட்டுவித்தல் என்பது மிகப்பெரும் அறச்செயல் என்று போற்றப்பெறுகின்றது. காவோடு அறக்குளம் தொட்டல் மிக இனிதே என்ற வரி இனியவை நாற்பது சுட்டுவதாகும்.

மழைப்பொழிவினைத் தேக்கி வைத்துப் பயன்படுத்த ஏரிகள், குளங்கள் வெட்டுவிக்க வேண்டும் என்று கூறும் தமிழ் நூல்கள் அவற்றோடு நில்லாமல் அவைகள் எந்த வடிவில் அமைந்தால் நல்லது என்ற அறிவியல் உண்மையையும் எடுத்துச் சொல்லுகின்றன.

புறநானூற்றுப் பாடலில் கபிலர்,
அறையும் பொறையும் மணந்த தலைய
எண்நாள் திங்கள் அனைய கொடுங்கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ (118:1-3)

எனக் குறிப்பிடுவதன் மூலம் ஏரி எந்த வடிவில் இருக்கவேண்டும் என்று பாடுகின்றார். ஏரிக்கரை நீளம் குறைவாகவும் ஆனால் அதிகநீர் கொள்ளளவு கொண்டதுமான அமைப்பு எட்டாம் பிறை வடிவில் ஏரி இருக்கும்போது ஏற்படும். இது ஏரி வடிவமைப்பில் மிகவும் சிக்கனமான வடிவமைப்பாகும்ட இன்றும் இத்தகு வடிவமைப்புடன் திகழும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கவிநாட்டுப் பேரேரியின் விண்கோள் படத்தினைக் கண்டு ஆய்வு மேற்கொண்டோம். அவ்வேரியின் அமைப்பு எட்டாம் திங்கள் போன்றே இருப்பது குறிப்படத்தக்கதாகும்.

இதேபோல் சிறுபஞ்சமூலத்தில் குளம் அமைக்கும் முறை பற்றிக் காரியாசான் கூறுகின்றார். அதில் பொதுக்கிணறு அமைத்தல், வரத்துக்கால், மதகுகள், மிகைநீர் வெளியேறும் கலிங்கு, தூம்பு போன்றவைகளை அமைப்பவர் சொர்க்கத்திற்குப் போவார் என்று குறிப்பிடுகின்றது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திரிகடுதத்தில் நீர் வரும் வரத்துக்கால் நன்கு அமையாத குளம் இருப்பின் அதனால் பயன் குறையும் என்ற செய்தியினை,

வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத்
தாய்முலை யுண்ணாக் குழவியும் சேய்மரபில்
கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர்
நல்குரவு சேரப்பட் டார். (84)

என்று தாய்ப்பால் அருந்தாத குழந்தையும், கல்வி அற்ற நிலையில் உள்ளவர்களும் எப்படி சிறக்க முடியாதோ அதுபோல் வாய் நன்கு அமையாத குளமும் இருக்கும் என்று குறிப்பிடுகின்றார்.

மிகுதியாக வரும் ஆற்று வெள்ளநீரை தம்முள் அடக்கிக் கொள்ளக்கூடிய பெரும் ஏரிகள் இருப்பது ஒரு நாட்டிற்குச் சிறப்பு தரும் என்பதை யாறுள் அடங்குங் குளமுள வீறுசால் என்று நான்மணிக்கடிகை குறிப்பிடுகின்றது. இப்பாடலில் குறிப்பிடப்பெறும் ஆறு உள் அடங்கும் குளம் என்ற சொற்றொடர் நீர் மேலாண்மைத் திறத்தின் ஒரு முக்கிய வெளிப்பாடாகும். பெரு வெள்ளம் ஏற்படும் காலங்களில் அந்நீரினை உரிய முறையில் சேமித்து நீர் இல்லாத காலங்களில் பயன்படுத்தக்கூடிய நிகழ்வை இச்சொற்றொடர் எடுத்துக்காட்டுகின்றது. ஆற்றின் மிகுதி நீரை உள்வாங்கிக் கொள்ளக்கூடிய பேரேரிகள் உரிய ஆழ அகலத்துடன் இருக்குமாயின் வெள்ளக்காலங்களில் வரும் அதிகப்படியான நீர் வீணாகக் கடலில் கலக்காமல் முழுவதையும் சேமித்துப் பயன்கொள்ள முடியும்.

காவிரியின் மிகுநீர் வடிகாலாக விளங்கும் கொள்ளிடப் பேராறு நீர்பெருக்கு எடுக்கும்போழுது அதனை சேமித்துப் பயன்படுத்தவே வீர நாராயணன் என்ற பட்டம் சூடிய பராந்தக சோழன், வீராணம் எனப்படும் வீர நாராயணப் பேரேரியை வெட்டுவித்து ஆறு உள் அடங்குமு; பெருங்குளமாக அமைத்தான். அப்பேரேரி ஏறத்தாழ 18 கி.மீ நீளமுடையது. இது காலப்போக்கில் பராமரிப்பு இன்றி தூர்ந்துவிட்டதால் மிகுநீரை சேமிக்க முடியாமல் போயிற்று. வீராணம் ஏரி, கவிநாட்டுப் பேரேரி போன்ற பெரும் ஏரிகளை ஆழப்படுத்தி அவைகளுக்கிடையே இணைப்புக் கால்வாய்கள் வெட்டி பெருகும் வெள்ளநீரை சேமித்தால நம் நாட்டிற்குப் பெரும்பயன் ஏற்படும்.

இத்தகு கண்மாய்களையும், குளங்களையும் காத்து நின்ற அதாவது முறையாகப் பராமரித்த செய்தியினை, நக்கண்ணையார் பாடிய அகநானூற்றுப் பாடல்,

பெருங்குளக் காவலன் போல
அருங்கடி அன்னையும் துயில் மறந்தனவே.  (252:13-14)

என்கின்றது. அதாவது பனியிலும், மழையிலும், அடர்ந்த இருள் சூழ்ந்த நள்ளிரவிலும் ஏரியைக் காக்கும் காவலன் போல, குழந்தையைப் பாதுகாக்க அன்னை தன் தூக்கத்தை மறந்தாள் என்பது இப்பாடலின் பொருளாகும். சிறு குழந்தையைத் தாயானவள் கண்ணினை இமை காப்பதுபோல் காத்த செயலும், நீர் நிலைகளைக் காக்கும் செயலும் ஒன்றாகவே எண்ணப்பட்டு வந்துள்ளது.

பழந்தமிழ் நூல்களில் இத்தகு நீரிநிலைகளிலிருந்து மிகுநீரை வெளியேற்ற கலிங்கு என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். இக்கலிங்கு குறித்த தகவல்கள் மிகுதியாக இலக்கியங்களில் சுட்டிக் காட்டப்பெற்றுள்ளன. ஏரியின் முழுக்கொள்ளளவு நீர்மட்டத்தைக் கணக்கிட்டு, இயற்கையாகவே பள்ளமாக உள்ள கரையின் ஒரு பகுதியில் அந்த உயர அளவில் சிறு வடிகால் அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் மிகும் நீரை வெளியேற்றி வந்தனர். இந்நீர் வெளியேற ஒரு கால்வாய் ஏற்படுத்தி அடுத்த ஏரியிலோ அல்லது ஆற்றிலோ கலந்துவிடும்படி செய்திருந்தனர். இதனால் நீர் வீணாவது தடுக்கப்படுவதோடு, எவ்வளவு வெள்ளம் வந்தாலும் ஏரியின் கொள்ளளவைத் தாண்டிய நீர் இக்கலிங்கு வழியே வெளியேற்றப்படுவதால் ஏரியின் கரை உடைப்பெடுப்பதும் தடுக்கப்பெற்றது. இத்தகு தொழில்நுட்பம் நம் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.

மேலும் ஏரிக்கரையின் உயரம், அகலம் ஆகியவை எவ்வளவு இருக்கவேண்டும். கரைக்கு வெளியே குறிப்பிட்ட தூரம் வரை உள்ள நிலத்தை யாரும் ஆக்கிரமிப்பு செய்தல் கூடாது. கரையில் மரங்களை நட்டுப் பராமரித்தல், அம்மரங்களை யாரும் வெட்டுதல் கூடாது போன்ற பல மேலாண்மைத் தொடர்பான செயல்களையும், ஏரிகளைப் பராமரிக்க ஒரு தனி நிருவாக அமைப்பாக ஏரி வாரியம் அமைக்கப்பட்டிருந்த செய்திகளையும் கல்வெட்டுக்களால் அறியமுடிகின்றது. தமிழகத்தில் பல ஆயிரக்கணக்கான எண்ணற்றப் பேரேரிகள் இருந்தன. அவற்றைப் பராமரிக்க குளப்பட்டி என்ற பெயரால் நிலமளித்து அதன் வருவாயிலிருந்து ஏரிகளைக் காக்க வகைசெய்தனர்.

ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையின் பன்னிரண்டாம் காதையான அறவணர் தொழுத காதை என்னும் பகுதியில் புத்ததேவன் தோற்றம் பற்றிக் கூறவரும் கூலவாணிகன் சாத்தனார்,

பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி
இரும்பெரு நீத்தம் புகுவது போல
அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்
உளமலி உவகையோடு உயிர்கொளப் புகூம். (79-82)

என்கிறார். சுருங்கை என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய் அதாவது பெருங்குளங்களாகிய பேரேரிகளின் ஒருபுறம் உள்ள சிறிய சுருங்கை வழியாக அங்கு தேக்கப்பட்ட நீர் வெளியேறி மக்களுக்கு அளவிட இயலாத வகையில் பயன்தரும். அதுபோல, செவித்துளை வழியே நல்ல அறக்கருத்துக்கள் உள்ளத்தைச் சென்றடையும் என்பதே இதன் பொருளாகும்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் ஏரிகளிலும், குளங்களிலும் இருந்து நீர் வெளியேற்றும் மதகு அமைப்பு சுருங்கைகளாக இருந்தன. இந்த மதகு அமைப்பே குமிழித்தூம்பு என்பதாகும். பழந்தமிழர்களின் நீர் மேலாண்மைச் செயல்பாட்டில் இந்த குமிழித்தூம்பு அறிவியல் சார்ந்த மிக நுட்பமான, நேர்த்தியான பயன்பாடுடைய படைப்பாகும். நீர வெளியேறுவதற்கான துளையையும், பக்கவாட்டில் வண்டல் படிந்த சேறு வெளியேறுவதற்கான சேறோடித்துளை என்ற மூன்று சிறிய துளைகளையும் அமைப்பர். கல்பெட்டியின் இருமருங்கும் ஏரியில் தேக்கப்படும் அதிகப்படியான நீரின் கொள்ளளவு உயரத்தைவிட சற்று உயரமான அளவில் கருங்கள் தூண்களை நிறுத்துவர். இரு குறுக்கு விட்ட கற்களை அத்தூண்களுடன் இணைப்பர். கல்பெட்டியின் நீரோடு துளைக்கு நேராக இரு குறிக்குவிட்ட கற்களிலும் துளையிடுவர். நீண்ட கம்பி அல்லது மரக்கழியினை அத்துளை வழியே செலுத்தி அதன் அடிமுனையில் கல்பெட்டியின் மதகு வாயில் (துளையில்) சரியாகப் பொருந்தும் அளவுக்குரிய அடைப்புக்கல் ஒன்றினை இணைப்பர். கம்பி அல்லது மரக்கழியினை மேலிருந்து இயக்குவதன் மூலம் நீர் செல்லும் தூம்புத் துளையினை மூடுவதும், திறப்பதம் இயலும், கல்பெட்டி மற்றும் தூண் அமைப்புகளை குமிழி என்றும், இவைகளுக்குக் கீழாகச் செல்லும் நீர் வெளியேறும் சுருங்கை வழியினை தூம்பு என்றும் குறிப்பிடுவர்.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே  கல்லணைக்கு முற்பட்ட காலத்தில் கட்டப்பட்ட கச்சமங்கலம் அணை.

இந்த மதகு அமைப்பில் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சமாக விளங்குவது சேறோடித்துளைகளே ஆகும். பெருவெள்ளப் பெருக்குகளால் ஏரியை வந்தடையும் நீரில் வண்டல் இருப்பதால் ஆண்டுதோறும் ஏரியின் தரைமட்டப் பகுதியில் வண்டல் அதிகமாகிக் கொண்டே இருக்கும். அவற்றை வெளியேற்றாமல் விட்டுவிட்டால் சில ஆண்டுகளில் ஏரி தூர் படிந்து மேடிட்டுவிடும். ஆண்டுதோறும் நீர் முழுவதையும் வெளியேற்றிவிட்டுத் தூர்வாருதல் என்பது இயலாத ஒன்று. மேலும் தூர்வாருவதற்கு செலவும் அதிகமாகும். இவ்வாறு இல்லாமல் அவ்வப்போது ஏரியின் தரை மட்டத்தில் சேகரமாகும் வண்டலை நீரோடு கலக்கி வெளியேற்றிவிட்டால் வண்டல் படிந்து மேடாகாது. இதற்கென தனிக்கருவிகள் ஏதும் தேவை இல்லை. இதனைச் செய்வதுதான் குமிழித்தூம்பின் வேலையாகும்.

நீர்பாசனத்துக்காக குமிழியின் அடைப்புக்கல் திறக்கப்படும்போது நீர் மிக வேகமாக சுழித்துக்கொண்டு கல்பெட்டி வழியே நீர்த்தூம்புக்குள் செல்லும். அதே நேரத்தில் நீர்ச்சுழல் மூலம் கலக்கப்படும் நீரில் வண்டல் கரைந்து சேறாகி வெளியேற்றப்படும். நீரின் வேகத்தால் சேறோடித்துளை மூலம் தரை மட்டத்தில கெட்டிப்பட்டு படிந்திருக்கும் சகதி உள்ளே இழுக்கப்பெற்று பாசன நீரோடு கலந்து சென்றுவிடும். இதனால் 90 விழுக்காடு நல்ல நீரோடு 10 விழுக்காடு சேறும் கலந்து வெளியேறுவதால் ஏரியின் தரைமட்டத்தில் வண்டலும் படியாது. அதே நேரத்தில் பாசன நீரில் வண்டல் கலப்பதால் வயல்களுக்கு நல்ல உரமாகி பயிர்களுக்கு படியாது. அதே நேரத்தில் பாசன நீரில் வண்டல் கலப்பதால் வயல்களுக்கு நல்ல உரமாகி பயிர்களுக்குப் பயன்படும். இத்தகைய தொழில் நுட்ப உத்தி மேலை நாட்டவர் அமைத்த திருகு மதகுகளில் இல்லை. அதனால்தான், பெரும்பாலான ஏரிகள் காலப்போக்கில் மேடிட்டு அழிந்தன. மேலும் அத்தகைய மதகுகளின் உதவியால் ஏரியின் முழுக்கொள்ளளவு நீரையும் சேமிக்க இயலாது.

தமிழ் இலக்கியங்கள் சுட்டும் நீர் மேலாண்மைச் செய்திகள் ஏதோ கற்பனையான ஒன்று என்று யாரும் எண்ணிட முடியாது. அதில் கூறப்படும் செய்திகள் அறிவியல் சார்ந்தவையாக இருப்பதை கல்வெட்டுச் சான்றுகள் கொண்டு உறுதி செய்ய முடிகின்றத. இநு;து அடிப்படையில் கள ஆய்வு மேற்கொள்ளும் பொழுது இன்றளவும் ஈராயிரம் ஆண்டுகள் கடந்தும் பழைய எச்சங்களுடன் சில அணைகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், கிணறுகள் ஆகியவற்றை காணமுடிவது வியப்பிற்குரிய ஒன்றாகும்.

யாரோ ஒரு கவிஞர் பாடியுள்ளார்,

என்தாத்தா ஆறுகுளங்களில்
தண்ணீரைப் பார்த்தார்….
என்தந்தை கிணறுகளில்
தண்ணீரைப் பார்த்தார்….
நான் பிளாஸடிக் பாட்டில்களில்
தண்ணீரைப் பார்க்கிறேன்….
என் குழந்தைகள்….?

என்று கேள்விக்குறியுடன் கவிதையினை முடித்துள்ளார். இத்தகு நிலை நம் எதிர்கால தலைமுறையினருக்கு ஏற்படாத வகையில் பழைய தொழில்நுட்பங்களுடன், புதியவைகளையும் இணைத்து நீரைச் சேமிப்போம், எதிர்காலத்தைக் காப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com