எங்கள் கொங்குத் தமிழ்

தமிழ்நாடு முன்பு சேர, சோழ, பாண்டிய நாடுகளுடன் கொங்கு, தொண்டை நாடுகளையும் சேர்த்து ஐந்து பகுதியாக விளங்கியது. இதனை வியன்
எங்கள் கொங்குத் தமிழ்


தமிழ்நாடு முன்பு சேர, சோழ, பாண்டிய நாடுகளுடன் கொங்கு, தொண்டை நாடுகளையும் சேர்த்து ஐந்து பகுதியாக விளங்கியது. இதனை வியன் தமிழ்நாடு ஐந்து, தமிழ் மண்டலம் ஐந்து என இலக்கியமும் கூறுகிறது.

 தமிழ் கூறும் நல்லுலகம் என்று கூறினாலும், அவை கூறும் தமிழில் எத்தனை, எத்தனை வேறுபாடுகள். ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தனித்தன்மையுடைய சில சொற்கள் உண்டு. அவற்றில் பல சொற்கள் வேறு வட்டார மக்களுக்குப் புரியாது. இதற்குஓர் எடுத்துக்காட்டு கூறலாம்.

ஒரு பேருந்தில் நடத்துநர் ஒரு பயணியிடம் பயணச்சீட்டுக் கொடுத்துவிட்டு,"மீதி சில்லறை அப்புறம் தருகிறேன்" என்றார். பயணி அதனால் என்ன பையக் கொடுங்களேன் என்றார், நடத்துநர் ஏனையா 50 பைசா காசுக்குப் பையைக் கேட்கிறீரே என்று கோபித்து சத்தம் போட்டாராம். பைய என்றால் மெதுவாக என்று ஒரு வட்டாரச் சொல் என்பது நடத்துநருக்குப் புரியவில்லை.

 கொங்குச் சமுதாயம் ஒரு கிராமக் குடியாட்சிச் சமுதாயம் என்று கூறலாம். சமுதாய வாழ்விற்குப் பட்டக்காரர், ஊர் நிகழ்ச்சிகளுக்குக் கொத்துக்காரர், சமயம்சார் சடங்குகளுக்கு அருமைக்காரர், கோயில் நடைமுறைக்கு தருமகர்த்தா தலைமையேற்று நடத்துவர். ஊர் மக்கள் யாவரும் அவர்கள் வார்த்தைக்குக் கட்டுப்படுவர். ஊர்க்கட்டுப்பாடு, ஒற்றுமை இருந்தது. இன்று பல்வேறு அரசியல் கட்சிகள், திரையுலக ஆதிக்கத்தால் இது கலைந்து வருகிறது.

 கொங்குநாடு, உழவுசார் நாடு, உழவர்கள் விவசாயம், சமய, சமூக வாழ்விற்கு 18 வகையான மக்களை ஆதரித்துப் போற்றினர். நற்குடி என்று தங்களை அழைத்துக் கொங்கு சமுதாயம் உதவியாக உள்ள18 குடிமக்களைப் பசுங்குடி என்று அழைப்பர். இந்த 18 வகை மக்கள் "கட்டுக்கண்ணிகள்" என்றும் அழைக்கப் பெறுவர்.

 இந்த 18 குடிகளும் பொழங்கிற மக்கள், பொழங்காத மக்கள் என இருவகையாக அழைக்கப்பெறுவர். பொழங்குற மக்கள் வீட்டிற்குள் அனுமதிக்கப் பெறுபவர் ஆவர். திருமண வீடுகளில் மணவறை முன்பு இவர்கள் எல்லோருக்கும் பரிவட்டம் கொடுத்து மரியாதை செய்யப்படும். திருமணத்தில் மங்கல வாழ்த்துப்பாடும் நாவிதர் மங்கலன் சக்கரைக் கந்தி என்று அழைக்கப்படுவார்; குடிமகன் என்ற பெயரும் அவருக்கு உண்டு.

 இவர்கள் தவிர கொங்கு சமுதாய வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் காணிப்புலவர், குலகுரு இருவர் ஆவர். இல்லம் வந்து வாழ்த்துப்பாடும் புலவருக்கு தலை, தோள், இடுப்புக்கு 3 ஆடை கொடுத்துத் தாங்கள் உண்ணும் வட்டிலில் உணவிட்டு மகிழ்வர். திருமண வீட்டில் புலவர், பால், பழம் சாப்பிடும் சடங்கு உண்டு.

குலகுருவிற்குப் பாதகாணிக்கை அளிப்பர், குலகுரு வீட்டை மடாலயம் என்றே கூறுவர். வீட்டில் உள்ள மாங்கல்யத்திற்கு (திருமணம் ஆனவர்) ஏற்ப வரிகொடுப்பர். குருக்கள் ஊர்தோறும் சஞ்சாரம் சென்று தன் குடிமக்களை ஆசிர்வதிப்பார். அப்போது பாத காணிக்கையாக சஞ்சார வரி செலுத்துவர். வாரிசு இல்லாத சொத்து, குலகுருவைச் சேரும். இவ்வகையான காணிப்புலவர் குருகுல முறை தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லை.

 கிராமத்தில் உள்ள வீடுகளை வளுவு என்று கூறும் வழக்கம் உண்டு. தெக்கு வளுவு ராமசாமி வந்தார் என்பது ஒரு தொடர். இது தெற்கு வீட்டு ராமசாமியைக் குறிக்கும்.

 தந்தையை அப்பா என்று அழைப்பது பெரும்பான்மை வழக்கம். ஆனால் கொங்கு நாட்டில் பல பகுதிகளில் தந்தையை அண்ணன் என்றும், ஐயன் என்றும் கூறும் வழக்கம் உண்டு.  

 சொல்லுக்குச் சொல்ங்க என்னும் அடைமொழியைச் சேர்த்து மிகவும் மரியாதையாக பேசும் வழக்கம் கொங்குநாட்டில் உண்டு. மணியார ஐயன் வீட்டுக்குங்க, எப்படீங்க போறதுங்க என்று ஒருவர் கேட்டால், 'அதுங்களா இந்த இட்டாலியைப் பிடிச்சு 4 காடு போனீங்கன்னா ஒரு பாங்கெணம் வருமுங்க, பக்கத்தால ஒரு தொக்கடவு இருக்குமுங்க, அதைத்தாண்டுனீங்கன்னா, சங்கம் பொதர் வருமுங்க. அங்க பூச்சி இருக்குமுன்னு சொன்னாங்க, பார்த்துப்போங்க. பக்கத்துப் பாங்காடு வருமுங்க, எதுக்காப்புலேதாங்க மணியக்காரய்யன் ஊடு தெரியுமுங்க. ஏங்க கொஞ்சம் புளு தண்ணி தரேன் குடிச்சிட்டுப் போங்க' என்று பதில் வரும்.

 இதில் இட்டாலி என்பது இரண்டுவேலிகளுக்கு உள்பட்ட சிறு வழி. பாங்கெணம் என்பது தண்ணீர் இல்லாது வறண்ட கிணறு, தொக்கடவு வேலி என்பது ஒய் வடிவிலான வழி, பொதர் என்பது புதர், பூச்சி என்பது பாம்பு, பாத்து என்பது சாக்கிரதையாக,  பாங்காடு என்பது வறண்ட நிலம், ஊடு என்பது வீடு, புளுதண்ணி என்பது நீராகாரம்.

 தொளவு என்ற சொல், பகை விரோதம் என்ற பொருளைக் குறிக்கும். அண்ணன் தம்பிக்குள்ளே தொளவு ஏற்பட்டுப் போக்குவரத்தே இல்லிங்க என்பார் ஒருவர்.

கால்நடை மேய்ப்பவர் மாடுகளை குரால் என்றும், ஆடுகளை ஊத்தை என்றும் அழைப்பார். குரால் கம்முன்னு மேயுது, இந்த ஊத்தை அடுத்தவன் காட்டுக்குப் போயிருங்க என்பார்.  மக்கள் இறப்பைப் பெரிய காரியம் என்பர். பெரிய காரியம் போனேனுங்க, வீட்டுக்குள் வரக்கூடாதுங்க என்பார் ஒருவர்.

அண்ணன் மனைவி அண்ணியை நங்கை என்று அழைப்பது கொங்கு நாட்டு வழக்கம். கணவரின் அக்காவும் நங்கைதான்.  சண்டையிடும்போது ஏற்படும் பேரொலியை ரவுசு என்பர். பங்காளிக்குள் ஒரே ரவுசா கெடக்குதுங்க என்பது ஒரு தொடர்.

 அதிகாலையைக் கோழி கூப்பிடும் நேரம் என்பர், முன் இரவை நாய்ச் சோத்து நேரம் என்பர். மரியாதையை மருவாதி என்றும், வைகாசியை வய்யாசி என்றும், வியாழக்கிழமையை வெசாளக்கிழமை என்றும் பேச்சு வழக்கில் கூறுவர்.

பணங்கொடுக்கலன்னா மருவாதி கெட்டுப்போயிரும்,  வய்யாசி பொறந்தாபன்னண்டு வருஷம், வெசாளக்கிழமை ஈரோட்டுச் சந்தைக்குப் போகோனும் என்பன வழக்கமான தொடர்கள்.

 திருப்பூரைப் பேச்சு வழக்கில் திலுப்பூர் என்பது, கணவர் வீட்டில் கோபம் கொண்டு பெண் தாய் வீட்டில் தங்குவதைச் சீராட்டு என்பர். சுப்பாத்தா சீராட்டு வந்தாவொ இன்னும் புருஷ வீட்டுக்குப் போகலையே.  

 இடதுபுறத்தை ஒரட்டாங்கைப் பக்கம் என்றும், வலதுபுறத்தைச் சோத்தாங்கைப் பக்கம் என்றும் கூறுவர்.

திருமணப்பதிவு அலுவலகம் அன்று இல்லை. மணமகன், மணமகள் இருவீட்டாருக்கும் இணைப்பாக இருந்து திருமணம் முடிய உதவுபவர் தானாவதி எனப்படுவார். ஒரு வீட்டில் திருமணம் என்றால் தானாவதி யார் என்று கேட்பார்கள். 

 வளைகாப்பு நிகழ்வைக் கட்டுச்சோறு கட்டுதல் என்பர், கால்நடைகளுக்குரிய இடத்தைத் தொண்டுப்பட்டி என்பர், காலுக்குச் செருப்பு அணிவதைச் செருப்புத்தொடுதல் என்பர். சங்க இலக்கியம் செருப்பைத் தொடு தோல் என்று கூறும். இடைக்கால கல்வெட்டு செருப்பை பாதரட்சை என்று கூறுகிறது.

ஊருக்கொரு தமிழ், கொங்குக்குத் தனித் தமிழ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com