டெங்குவை ஒழிக்க கடலூரில் ஒரு மணி நேரம் துப்புரவுப் பணி: ஆட்சியர் நடவடிக்கை
டெங்கு காய்ச்சலை ஒழிக்க கடலூரில் ஒரு மணி நேரம் துப்புரவுப் பணி செய்ய வேண்டும் என்ற திட்டத்தை மாவட்ட ஆட்சியர் அறிமுகப்படுத்தியுள்ளார்.


டெங்கு காய்ச்சலை ஒழிக்க கடலூரில் ஒரு மணி நேரம் துப்புரவுப் பணி செய்ய வேண்டும் என்ற திட்டத்தை மாவட்ட ஆட்சியர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை முற்றிலும் ஒழிக்க வாரம் தோறும் வியாழக்கிழமை பகல் 11 முதல் 12 மணிவரையில் ஒரு மணி நேரம், அவரவர் இருக்கும் பகுதியில் நூறு மீட்டர் தூரத்தில் கழிவுப் பொருட்களில் தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும் என்ற புதிய திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தினார். இதன் செயல்பாடு வியாழக்கிழமை தொடங்கியது.
அண்மையில் பெய்த மழையால் சிறிய டப்பாக்கள், டயர்கள், மண்சட்டிகள் உள்ளிட்ட பொருட்களில் தேங்கியுள்ள நீரால் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி மனித உயிர்களை பலி வாங்குகிறது.கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருந்து மாவட்ட மக்களை பாதுகாக்கவும், டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களை அழிக்கவும், உற்பத்தியை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஒரு செயலை ஒரே நேரத்தில் அனைவரும் செய்தால் அதில் அதிக பலனுண்டு என்ற அடிப்படையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு வியாழன்தோரும், ஒரு மணி நேரம் அவரவர் பகுதியை சுத்தம் செய்து கொள்ளும் ஒரு புதிய அதிரடித் திட்டத்தை அறிவித்தார். அதன்படி, வியாழக்கிழமை காலை 11 மணிக்கு அதற்கான பணியை தானே முன்வந்து செய்து திட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஆட்சியர் அலுவலக மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் கொசு உற்பத்தி உள்ளதா என ஆய்வு செய்தார், கடலூர் நகரில் பல்வேறு இடங்களில் நடைபெறும் துப்புரவு பணிகளையும் மேற்பார்வை செய்த அவர் அப்பணியில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டார்.
ஆட்சியர் அலுவலகத்தை சுற்றியுள்ள குப்பைகள், கழிவு நீர் தேக்கங்கள், பயன்படுத்தப் படாமல் கிடக்கும் பொருட்களை அகற்றும் பணியை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் மேற்பார்வையில் 100 க்கும் மேற்பட்ட வருவாய்த் துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக ஆட்சியர் திடீரென சிறு கடைகள் அமைந்துள்ள பகுதிக்கு சென்று வியாபாரிகளை நேரில் சந்தித்து சுகாதார பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். கடைகளுக்கு முன்னால் கீழே கிடந்த டீ கப்புகள், குப்பைகள் என அனைத்தையும் மாவட்ட ஆட்சியரே எடுத்ததை பார்த்த ஒவ்வொரு வியாபாரியும் தங்கள் கடைகளை சுற்றியுள்ள குப்பைகளை உடனடியாக சுத்தம் செய்யத் தொடங்கினர். கடையை சுற்றிலும் குப்பைகளை போட்டு வைத்திருந்த ஒருசில கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களை மாவட்ட ஆட்சியர் கடுமையாக எச்சரிக்கை செய்தார்.
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கொட்டப்பட்டிருந்த தேங்காய் மட்டைகளை, உடனடியாக அகற்ற வேண்டும் என இளநீர் வியாபாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த மட்டைகள் லாரிகள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் ராஜேந்திர ரத்னு தெரிவித்ததாவது: இந்த ஒரு மணி நேரம் சுத்தம் செய்யும் பணி மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது. பள்ளிகளிலும் இப்பணி நடந்து வருகிறது. மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால், உடனடியாக தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் நகராட்சி: கடலூர் நகராட்சி அலுவலகத்தில் இப் பணியினை நகர்மன்ற தலைவர் சி.கே.சுப்பரமணியன் தலைமையில் அனைத்து ஊழியர்களும் பங்கேற்று துப்புரவு செய்தனர். ஆணையர் (பொறுப்பு) ரவி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து துறை: வட்டார போக்குவரத்து துறை சார்பில் தனியார் போக்குவரத்து டெப்போக்கள், ஆட்டோ நிறுத்துமிடம், கார், லாரி, வேன் நிறுத்துமிடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை அப்புரப்படுத்தியும், குப்பைகளை அகற்றியும் துப்புரவு பணியை மேற்கொண்டனர். வட்டார போக்குவரத்து அலுவலர் எம்.ஜெய்சங்கர், தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர்கள் வேலுமணி, ஜெய்சங்கர், பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் வேலவன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். டெங்கு நோய் குறித்த துண்டு பிரசுரத்தையும் பொதுமக்களிடம் வட்டார போக்குவரத்து அலுவலர் எம்.ஜெய்சங்கர் வினியோகித்தார்.
பண்ருட்டி நகராட்சி: பண்ருட்டி நகராட்சியில் நகர் மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம் தலைமையில், ஆணையர் க.உமாமகேஸ்வரி, பொறியாளர் ஆர்.ராதா மற்றும் சுகாதார அலுவலர் பி.குமார் முன்னிலையில் ஊழியர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டனர். பள்ளி மாணவர்கள் முகாமில் கலந்துக்கொண்டு துப்புரவு பணியில் ஈடுபட்டும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...