வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அமைச்சர், எம்.எல்.ஏ, மீனவர்கள் கருத்து மோதல்: காரைக்காலில் கலகத்தில் முடிந்த மீனவர் தின விழா

முதல்வர் ரங்கசாமி என்று கூறியதும் மீனவர்கள் வெகுண்டெழுந்ததால் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ, ஆளும்கட்சி அமைச்சர் எம்.எல்.ஏ.க்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

News image
Updated On :21 நவம்பர் 2012, 7:52 am

செல்வ முத்துகுமாரசாமி

முதல்வர் ரங்கசாமி என்று கூறியதும் மீனவர்கள் வெகுண்டெழுந்ததால் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ, ஆளும்கட்சி அமைச்சர் எம்.எல்.ஏ.க்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டது. அமைச்சர் வெளிநடப்பு உள்ளிட்டவற்றால் மீனவர் தின விழா பரபரப்புடன் முடிவடைந்தது.

உலக மீனவர் தின விழா காரைக்காலில் புதுச்சேரி அரசு சார்பில் புதன்கிழமை நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு புதுச்சேரி வேளாண் அமைச்சர் மு.சந்திரகாசு தலைமை வகித்தார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.எம்.சி.சிவக்குமார், பி.ஆர்.சிவா, ஏ.எம்.எச்.நாஜிம், பி.ஆர்.என்.திருமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி தொடங்கியதும் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரான பி.ஆர்.என்.திருமுருகன் மீனவர்களிடையே பேசத் தொடங்கினார். அவர் பேசியது:  ரங்கசாமி அரசால் மீனவர்கள் எந்த பயனையும் அடையமுடியவில்லை. கடந்த காங்கிரஸ் அரசு, மீனவர்களுக்கு டீசல் மானியம் தந்ததை ரங்கசாமி அரசு நிறுத்திவிட்டது. சுனாமியின்போது காரைக்கால் மீனவர்களுக்கான மின் கட்டணம் ரூ.14 லட்சத்தை கட்டியே தீரவேண்டுமென வசூலித்துவிட்டது. காங்கிரஸ் ஆட்சியாக இருந்தால், மின் கட்டணத்தை ரத்து செய்திருக்கும் என பேசிக்கொண்டிருந்தார்.

இவரது இந்த பேச்சை வேளாண் அமைச்சர் மு.சந்திரகாசு மேடையில் எழுந்து நின்று எதிர்த்தார். அவரைத் தொடர்ந்து புதுச்சேரி மின்திறல் குழுமத் தலைவரும் பேரவை உறுப்பினருமான பி.ஆர்.சிவாவும் எதிர்ப்பு தெரிவித்தார். இது அரசியல் கட்சி மேடையல்ல என கூறிய அவர்கள், மீனவ பஞ்சாயத்தார்களையும், மீனவளர்த்துறையினரையும் பார்த்து இதற்காகவா விழா நடத்துகிறீர்கள் என்றனர். தொடர்ந்து திருமுருகன் பேசிக்கொண்டிருந்தபோது அரசுக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் பேரவை உறுப்பினரும், காரைக்கால் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான வி.எம்.சி.சிவக்குமார்,  பி.ஆர்.என்.திருமுருகன் பேசமுடியாதபடி வந்து மைக்கை நகர்த்தினார்.  மேடையில் திருமுருகன் எம்.எல்.ஏ.வுக்கு மூன்று ஆளும்கட்சி பேரவை உறுப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து, கடும் கோபத்தில் ஆவேசமாக பேசினர். திருமுருகனுக்கு ஆதரவாக விழாவில் பங்கேற்ற ஒரு பகுதி மீனவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் விழா அரங்கம் பரபரப்பானது.

அப்போது அமைச்சர் சந்திரகாசு விழாவிலிருந்து வெளிநடப்பு செய்தார். மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் அவரிடம் பேசி, மேடைக்கு அழைத்துச் சென்றனர். திட்டமிட்டவாறு பேரவை உறுப்பினர் திருமுருகன் மீனவர்களின் ஆதங்கத்தை பேசிவிட்டு, காங்கிரஸ் ஆட்சியில் மட்டுமே மீனவர்கள் நிம்மதியாக இருந்தனர் என கூறி அமர்ந்தார்.

 இதைத் தொடர்ந்து வி.எம்.சி.சிவக்குமார் பேசும்போது ரங்கசாமியை புகழ்ந்து பேசினார். திருமுருகன் அரசியல் பேசுகிறார் என கூறிவிட்டு, நீங்கள் பேசலாமா என மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரும் பேச்சை தொடராமல் நிறுத்தினார். தொடர்ந்து அமைச்சர் மு.சந்திரகாசு பேசும்போது அவரும் ரங்கசாமியால் மட்டுமே மீனவர்கள் வாழ்க்கை சிறப்பாகியுள்ளது என்றபோது, மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கலகம் செய்யும் நோக்கிலேயே இந்த விழா நடக்கிறது என கூறிவிட்டு அமைச்சர் பேச்சை தொடராமல் அமர்ந்தார்.

ஆளும்கட்சியினர் மீனவர்களுக்கு அரசு என்ன செய்யப்போகிறது, செய்துகொண்டிருப்பது என்ன என்பதை கூறாமல், ரங்கசாமியை புகழ்வதில் மட்டுமே குறியாக இருந்ததால், விழாவில் பிரச்னை ஏற்பட்டுவிட்டதென மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.