5000 பணியாளர்கள் தயாராக உள்ளனர்: கடலூர் ஆட்சியர்
நிலம் புயல் கடலூர் நோக்கி வருவதாகத் தகவல் கிடைத்திருப்பதாகவும், எவ்வித சூழ்நிலையையும் சமாளிக்க சுமார் 5000 பணியாளர்கள் தயாராக இருப்பதாகவும் கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


நிலம் புயல் கடலூர் நோக்கி வருவதாகத் தகவல் கிடைத்திருப்பதாகவும், எவ்வித சூழ்நிலையையும் சமாளிக்க சுமார் 5000 பணியாளர்கள் தயாராக இருப்பதாகவும் கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று மதியம் 2 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு, நிலம் புயல் காரணமாக, கடலூரில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. காற்றின் வேகமும் அதிகமாக உள்ளது. பொதுமக்கள் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்கும்படியும், மரத்தின் கீழ் யாரும் மழைக்கு ஒதுங்க வேண்டாம் என்றும், முதியவர்கள், குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.
மேலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்துத் துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வது மிகுந்த அவசியம்.
பலத்த மழை பெய்தாலும் கூட இதுவரை எப்பகுதியிலும் தண்ணீர் சூழவில்லை. அப்படியே சூழ்ந்தாலும், உடனடியாக விரைந்து சென்று மக்களை மீட்க மீட்புக் குழு தயாராக உள்ளது. எவ்வித சூழ்நிலையையும் சந்திக்க கடலூர் மாவட்ட பொதுத்துறை, விவகாரத் துறை, ஊரகத் துறைகளைச் சேர்ந்த 5000 பணியாளர்கள் தயாராக உள்ளனர். கடலூருக்கு தென்மேற்கே 140 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 150 கி.மீ. தொலைவில் தென் மேற்கு திசையிலும் நிலம் புயல் மையம் கொண்டுள்ளது. மேலும் அது முன்னோக்கி நகர்ந்து வருகிறது.
புயல் கரையைக் கடக்கும் போது 30 முதல் 35 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் கூறினார். புயல் காரணமாக கடலூரில் நாளையும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
முன்னதாக, விழுப்புரம் சர டிஐஜி சண்முகவேல் கடலூர் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளை பார்வையிட்டார்.
மேலும், மாவட்ட ஆட்சியரும், வெள்ளம் - புயல் கண்காணிப்புக் குழு அதிகாரி டாக்டர் செந்தில் குமார் ஆகியோரும் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளையும், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...