குப்பையோடு சேர்ந்து கிடக்கும் ரூ.18 லட்சத்தில் வாங்கப்பட்ட குப்பை அள்ளும் இயந்திரம்
மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் தலா ரூ.18 லட்சத்தில் 2 குப்பை அள்ளும் இயந்திரம் வாங்கப்பட்டது, பயன்பாடின்றி குப்பையோடு சேர்ந்து கிடக்கிறது.


மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் தலா ரூ.18 லட்சத்தில் 2 குப்பை அள்ளும் இயந்திரம் வாங்கப்பட்டது, பயன்பாடின்றி குப்பையோடு சேர்ந்து கிடக்கிறது.
காரைக்காலில் தெருக்களில் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டிருந்தாலும், குப்பைத் தொட்டியை மீறி அந்த வட்டாரத்தில் குப்பைகள் கொட்டிக்கிடக்கிறது. இதனை மனிதர்கள் கையால் அள்ளும்போது ஏற்படும் அருவருப்பை போக்கும் வகையில், சிறிய வகை பொல்லைன் இயந்திர வடிவமைப்பில் பாப்காட் என்ற பெயர் கொண்ட குப்பை அள்ளும் இயந்திரம் காரைக்கால் நகராட்சிக்கு ஒன்றும், திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு ஒன்றும் வாங்கப்பட்டது.
புதுவை மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த எம்.ஓ.எச்.பாரூக், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து காரைக்காலுக்கு 2 இயந்திரத்தை தலா ரூ.18 லட்சத்தில் வாங்க அனுமதியளித்தார். தொடக்க காலத்தில் இவை நல்ல முறையில் இயக்கப்பட்டது. குப்பைகளை அள்ளி டிராக்டரில் கொட்டுவதற்கு வசதியாக இருந்தது. குப்பை அள்ளும் தொழிலாளர்களுக்கு இது வசதியான இயந்திரமாக இருந்தது.
ஆனால் இந்த இயந்திரங்களில் ஏற்பட்ட சிறிய பழுதுகளை போக்க நகராட்சி நிர்வாகம் ஆர்வம் காட்டாததால், அப்போதே இவை முடக்கப்பட்டுவிட்டன. இந்த இயந்திரங்கள் ரூ.18 லட்சத்தில் வாங்கப்பட்டது, வெறும் 18 நாள்களே இயக்கப்பட்டதாக பொதுமக்கள் தரப்பில் இன்றும் பேச்சு நிலவுகிறது.
காரைக்கால் நகராட்சிக்கு அளிக்கப்பட்ட இயந்திரத்தின் குறைபாட்டை அப்போதைய ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் போதிய அக்கறை செலுத்தி, சீர்படுத்தாததன் விளைவு இன்று பயன்படுத்தவே முடியாத நிலைக்கு உருமாறிவிட்டது.
இந்த இயந்திரத்தை காரைக்கால் பழைய பேருந்து நிலையத்தின் வளாகத்தில், குப்பையோடு குப்பையாக சேர்த்து வைத்துள்ளது நகராட்சி நிர்வாகம். இதுபோலவை திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்திற்குள்பட்ட பகுதியில் குப்பைகளை வீதியில் கொட்டிவைக்க போதுமான அளவு குப்பைத் தொட்டி இல்லாததால், பொதுமக்கள் தங்களது கொல்லைப்புறத்தில் கொட்டிவருகின்றனர். இங்கு வழங்கப்பட்ட இயந்திரமும் பயன்பாடற்று கிடப்பதாகவே பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இதுகுறித்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் தாமரைச்செல்வனிடம் கேட்டபோது, கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
நகராட்சி நிர்வாக அதிகாரி ஒருவர் கூறும்போது, இயந்திரம் சரிபார்த்து பயன்படுத்த நகாராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்றார். ஆனால் இந்த இயந்திரத்தை பயன்படுத்தியோர் கூறும்போது, ரூ.2 ஆயிரம் செலவு செய்தால் சீர்படுத்தக்கூடிய பிரச்னையாக இருந்தது. ஆனால் பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் போட்டுவிட்டதால் பல லட்சம் ரூபாய் செலவழித்தால்கூட இயந்திரம் செயல்படுமா என்ற கேள்விக்குறிதான் என்றனர்.
அதிகாரிகளின் அலட்சியத்தால், மக்களவைத் தொகுதி மேம்பாட்டுக்காக தரப்பட்ட நிதி எவ்வகையில் பாழாகிறது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...