தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்கத் திட்டம்: ஜி. ராமகிருஷ்ணன்

ஒவ்வொரு மாநிலங்களிலும், மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து மக்களவைத் தேர்தலைச் சந்திக்க மார்க்சிஸ்ட் திட்டமிட்டுள்ளது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்

News image
Updated On :25 டிசம்பர் 2013, 1:24 pm

சங்கர்

ஒவ்வொரு மாநிலங்களிலும், மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து மக்களவைத் தேர்தலைச் சந்திக்க மார்க்சிஸ்ட் திட்டமிட்டுள்ளது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்.

நாகை மாவட்டம், வெண்மணியில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி : தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல்கள் மற்றும் சிறைப்பிடிப்பு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசின் அலட்சியப் போக்கே காரணம். தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்த தீர்வு காணும் வகையிலான பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் ஆண்டு தோறும் விவசாயம் குறைந்து வருகிறது. இதற்கு விவசாயிகள் சந்தித்து வரும் தொடர் நஷ்டங்களே காரணமாக உள்ளது. முதலாளித்துவ கமிட்டிகளின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தும் மத்திய அரசு, விவசாயிகளின் விளைப் பொருள்களுக்கான விலை நிர்ணயம் குறித்த எம்.எஸ்.  சுவாமிநாதனின் பரிந்துரைகளை கிடப்பில் போட்டுள்ளது. உடனடியாக அந்தப் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்.

விவசாயப் பணிகள் இயந்திர மயமானதன் காரணமாக, விவசாயத் தொழிலாளர்கள் வேலையிழப்புக்குள்ளாகி புலம் பெயரத் தொடங்கியுள்ளனர். விவசாயத் தொழிலாளர்களின் நலன் கருதி அமல்படுத்தப்பட்ட ஊரக வேலை உறுதித் திட்டத்தின் நோக்கம் நிறைவுப் பெறும் வகையில், இத்திட்டத்தில் பணி பெறும் தொழிலாளர்களுக்கு முழு கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாராளமய பொருளாதாரக் கொள்கை உள்பட பல்வேறு அம்சங்களில் பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் ஒரே கொள்கையை தான் பின்பற்றுகின்றன. எனவே, அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ், பாஜக இல்லாமல், மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திப்பது தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் என்றார் ஜி. ராமகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.