மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூருக்கு விரைவில் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை: மத்திய அமைச்சர் கே.சி.வேணுகோபால்

மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய் மற்றும் சிங்கப்பூருக்கு நேரடி விமான போக்குவரத்து தொடங்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடு்க்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை
Updated on
2 min read

மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய் மற்றும் சிங்கப்பூருக்கு நேரடி விமான போக்குவரத்து தொடங்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடு்க்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.

அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில் விருதுநகர்-மானாமதுரை அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டுள்ள இருப்பு பாதையின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமை வகித்தார். தெற்கு ரெயில்வேயின் தலைமைக் கட்டுமான பொறியாளர் விஜயகுமரன் வரவேற்புரை வழங்கினார்.

இதில், சிறப்பு விருந்தினராக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் குத்துவிளக்கேற்றி பொதுமக்களின் உபயோகத்திற்காக இப்பாதையை தொடங்கி வைத்து பேசியதாவது: தற்போது ரயில்வே துறையில் பல்வேறு மீட்டர்கேஜ் இருப்பு பாதை அனைத்தும் அகல ரயில்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுவருகிறது. அந்த வகையில் விருதுநகர் மானாமதுரை இடையேயான மீட்டர்கேஜ் பாதையை அகல ரயில்பாதையாக மாற்றுவதற்கு 2007-08 திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில் ரூ.231 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.67 கி.மீ தூரம் உள்ள இப்பாதையில் விருதுநகர்-மானாமதுரை இடையே அருப்புக்கோட்டை, நரிக்குடி, திருச்சுழி ஆகிய ரயில் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், 5 பெரியளவிலான பாலங்கள், 145 சிறிய பாலங்கள், 5 ரயில் நிலையங்கள், 31 ரயில் கிராசிங்குகள் புதுப்பிக்கப்பட்டு மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

அகலப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ள மானாமதுரை-விருதுநகர் பிரிவு, திருச்சிராப்பள்ளி, மானாமதுரை பிரிவோடு சேர்ந்து போக்குவரத்து நெரிசலான திருச்சி- திண்டுக்கல், மதுரை-விருதுநகர் வழித்தடத்திற்கு மாற்றாக அமைந்திருக்கிறது. மேலும், இப்பாதை ஏற்றம் இறக்கம் இல்லாமல் சமதள பரப்பாக இருப்பதால் தரக்கு போக்குவரத்திற்கு ஏற்றதாகவும் விளங்கும். தற்போதைக்கு இப்பாதையில் அதிகபட்சமாக 80 கி.மீ வேகத்தில் இயக்கப்பட இருக்கிறது. அகலப்பாதையில் முதன் முதலாக மானாமதுரை-விருதுநகர் பிரிவின் வழியாக புதுச்சேரி-கன்னியாகுமரி வாராந்திர ரயில்கள் விரைவில் இயக்கப்படவுள்ளது.

மேலும், இந்தியன் ஏர்லைன்ஸ் மூலம் துபாய் மற்றும் சிங்கப்பூர் ஆகிய பகுதிகளுக்கு மதுரை விமான நிலையத்திலிருந்து நேரடியாக போக்குவரத்து சேவை விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் நிதி தட்டுப்பாடு மற்றும் போதுமான விமானிகள் இல்லாத நிலையிருக்கிறது.மேலும், மதுரை விமான நிலையத்தை தரம் உயர்த்தும் வகையில் 12 ஆயிரம் அடி வரையில் ஓடுதளம் அமைக்கும் திட்டம் உள்ளது. இதற்கு, தேவையான நிலத்தை மாநில அரசு எடுத்து தந்தால் உடனடியாக பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்றப்படும் எனவும் மத்திய விமான துறை இணை அமைச்சர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், விருதுநகர்-மானாமதுரை அகலரயில்பாதையில் போக்குவரத்தை மத்திய விமான போக்குவரத்து துறை அமைசச்ர் கே.சி.வேணுகோபால் மற்றும் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் கொடியசைத்து போக்குவரத்தை தொடங்கி வைத்தனர். இதில், பொறியாளர் ரவீந்திரபாபு, அருப்புக்கோட்டை ரயில் நிலைய மேலாளர் பிரைட்சிங், அருப்புக்கோட்டை நகராட்சி தலைவர் சிவப்பிரகாஷம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com